Wednesday, October 19, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 4இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம் - 4

பிற்பகல் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் கிடைத்தது பெருத்த ஏமாற்றமேயாகும். தலைமை வகித்த பேராசிரியர் தி.மு அப்துல் காதர் அவர்களே தனது தலைமையுரையில் பெருமளவு நேரத்தை எடுத்துக் கொண்டார். அவரது பேச்சு கேட்கக் கேட்க இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் திகட்டிப் போகும் அல்லவா? பிற்கல் துவங்கிய தனது தலைமைப் பேச்சை மஃரிப் வரை தொடர்ந்தார். அதற்குப் பிறகாவது பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பேச விடுவார் என்று பார்த்தால் அதற்குப் பிறகும் 20 நிமிடங்கள் அளவில் பேசினார்.


“இன்றை சூழலில் இஸ்லாமியரின் நிலை வாழ்த்தும்படியா? வருந்தும்படியா?” என்பது தலைப்பு. சும்மா பொறி பறக்கும் என்று எதிர் பார்த்தேன். ‘வாழ்த்தும்படியே’ என்று பேச வந்த முதல் பேச்சாளரே ஒரு நெடும் பாட்டை ஆரம்பித்தார். வெறுத்துப் போய் உட்கார்ந்து இருந்தபோது ‘வருத்தும் படியே’ என்ற அணியின் முதல் பேச்சாளர் பேராசிரியர் அப்துல் சமது ஓரளவு பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை வரவழைத்தார். தமது எதிர்பார்ப்பை பட்டி மன்றம் நிறைவு செய்யவில்லை என்ற கருத்தை சில இந்திய நண்பர்களும் இலங்கை அன்பர்களும் நம்முடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார்கள்.


இந்த அரங்கில் பலந்து கொண்டு பேசிய புதுக்கல்லூரிப் பேராசிரியர் லிவிங்ஸ்டன் தனது பேச்சின் இறுதியில் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகப் பிரகடனப்படுத்தினார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டவரும் கவியரங்கில் பங்கு கொண்டவருமான இணையான்குடி சண்முகம் என்பவரும் 17.07.2011ல் இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்திருக்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் தனது பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்ட அவர் “ஒரு கரையோர நாணல் கலிமாச் சொல்கிறது” என்ற தலைப்பில் இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

“ஆற்றில் வெள்ளப் பெருக்கு.நுரைப் பூக்களைச் சூடிக்கொண்டு தண்ணீர் பயணிக்கிறது. அந்தத் தண்ணீருக்கென்ன தாகமோ?

எங்கே பயணிக்கிறது? கடலோடுதான் சங்கமிக்கப்போகிறது? இதை ஒரு கரையோர நாணல் கவனித்தக் கொண்டிருக்கிறது. தாமும் அந்த நதியோடு பயணிக்கலாமே என்ற தாகம்! இது அந்தக் கரையோர நாணலின் நெடுநாள் தாகம்!

இஸ்லாமிய நதி நீரோட்டத்தை, அதன் அழகை, அருமையை கரையிலி இருந்தே பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தேன். கவிதைகளால், உரையால், கட்டுரைகளால் இஸ்லாமிய விழுமியங்களைச் சொல்லிச் சொல்லிப் பூரித்தேன். என் படைப்பைப் படித்தவர்களெல்லாம் பாராட்டினார்கள். தமது அன்பினாலும் பாசத்தாலும் அதிகமாகவே நனைத்தார்கள். .....இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஒரு முழுமையான ஈடுபாட்டைத் தந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பேன். அதற்கான வாய்ப்பின் வாசல்களைத் திறந்தவன் அவனே. அதனால் ஒரு சண்முகம் அண்ணல் நம் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு பிள்ளைத் தமிழ் நூல் எழுத முடிந்தது. அதுவும் முதன் முதலாய்!”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் இணையான்குடி சண்முகம்........ மன்னிக்கவும் ஹதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 முதல் நிகழ்வுகள் இரண்டு இடங்களில் நடைபெற்றன. மாநாட்டுப் பந்தலில் ‘இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சிலம்பொலி செல்லப்பனாரும் உரையாற்றுவோரில் பெயரிடப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல்லாஹ்வும் (பெரியார்தாசன்), பேரா. டாக்டர் சே.மு.முகம்மதலியும் மாநாட்டுக்கு வருகை தந்திருக்கவில்லை. இந்த அரங்கில்தான் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலர் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்களின் சகோதரத்துவம் என்ற தலைப்பிலான அற்புதமான உரை இடம்பெற்றது.இதே வேளை சதுக்கைத் தெருவிலுள்ள ஜலாலியாஹ் நிகாஹ் மஜ்லிஸ் கட்டடத்தில் ‘முன்னேற்றப் பாதையில் முஸ்லிம் பெண்கள்’ என்ற தலைப்பிலான மகளிர் அரங்கம் பேராசிரியை சா.நசீமா பானு தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த அரங்கில் நமது நாட்டைச் சேர்ந்த விரிவுரையாளர் பவுஸியாவும் ஒலிபரப்பாளரும் படைப்பாளியுமான புர்கான் பீ இப்திகாரும் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் அனுமதி என்ற சொல்லப்படாத வரையறையின் கீழ்தான் இந்த அரங்கு நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. எனவே ஆண்கள் அங்கு என்ன பேசப்பட்டது என்பதை அறியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

காயல்பட்டின சமூக வரைமுறை ஒன்று இருந்த போதும் இவ்வாறான வரலாற்றுப் பதிவு நிகழ்வுகளின் போதாவது அது தளர்த்தப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கல்வியிலும் சமூகச் செற்பாடுகளிலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கும் நமது பெண்களின் கருத்துக்களை ஆண்களும் கேட்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனைய நிகழ்வுகளின் போது மாநாட்டுப் பந்தலில் ஒரு புறமாகப் பெண்களும் வந்து கலந்து கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். அவ்வாறு பொதுப்பந்தலுக்கு அவர்கள் வரும் போது அவர்கள் நடத்தும் மகளிர் அரங்கையும் எல்லோரும் காணவும் கேட்கவும் வழி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மாநாட்டின் உச்ச நிகழ்வு பி.ப. 4.30க்கு ஆரம்பமாயிற்று. இந்த நிகழ்வுக்கு வரவேற்புக் குழுவின் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். வாழ்நாள் சானையாளர் விருது கீழக்கரை ஹாஜி முனைவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் இரண்டு சிறப்பு விருதுகளும் பொற்கிழியும் இருவருக்கு வழங்கப்பட்டன.


நாச்சிக் குளத்தூர் முகம்மது யூஸ_ப் அவர்களுக்கு விருது

அவர்களில் ஒருவர் கவியோகி நாச்சிக் குளத்தூர் முகம்மது யூஸ_ப் அவர்கள். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதிக் குவித்துள்ளார் மனிதர் என்று கேள்விப்பட்டதும் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. மேடையில் சீனா தானா என அறியப்பட்ட பிரபல வர்த்தகரான கீழக்கரை செய்யது அப்துல் காதர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர் சொல்ல வந்த இலக்கியப் பாடலில் தடங்கல் ஏற்பட்ட போது மேடையிலிருந்த புலவர் யூஸ_ப் மீதி அடிகளை ஞாபகப் படுத்தி எடுத்துக் கொடுத்தார்.

இறுதி நாள் இறுதி அரங்கிலேயே புலவர் பெருந்தகையைக் காணும் நிலை ஏற்பட்டது நமது துர்ப்பாக்கியமே. இருந்த போதும் நமது இளவல்களும் முக்கியஸ்தர்கள் சிலரும் அவருடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தேன். மாநாடு முடிந்ததும் நாச்சியாதீவு பர்வீனும் அகமட் எம். நசீரும் அவரைச் சந்திக்கும் நோக்குடன் அவரது ஊருக்கும் செல்வது என்று புறப்பட்டுச் சென்ற போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் முடியாமல் போனதாகக் கவலையுடன் எனக்குச் சொன்னார்கள்.

நாச்சிக் குளத்தூர் முகம்மது யூஸ_ப் அவர்கள்

புலவர் யூஸ_ப் அவர்களுக்கு “சேதுகவி சவ்வாதுப் புலவர் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. “இந்த மனிதருக்கு முன்னால் நாமெல்லாம் தூசுகள்”என்று என்னிடம் சொன்னார் டாக்டர் ஜின்னாஹ். தோற்றத்தில் வெகு சாதாரணமாக இருக்கும் இந்தக் கவிதைக் கடலுடன் பட்டுச் சால்வைகளில் இலக்கியப் படம் காட்டும் நம்மவரை ஒப்பிட்டுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

“வள்ளல் ஜமால் முகம்மது விருது” இசையருவி குமரி அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. குமரி அபூபக்கர் தமிழகம் முழுக்க அறியப்பட்ட இலக்கியப் பாடகர். அனைத்து மாநாடுகளிலும் அவர் பழம் புலவர்களின் பாடல்களைப் பாடுவார். காசிம் திருப்புகழை அவர் பாட நாம் மெய்மறந்து ரசிக்க முடியும். 1999ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநாட்டில்தான் முதன் முதலாகக் குமரி அவர்களைச் சந்தித்தேன். அன்று அவர் பாடிய ‘நபியுல்லாஹ் வாழ்ந்திருப்பது மதீனத்தோ... நல்லோர்கள் இதயத்தோ....’ என்ற பாடலை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.

குமரி அபுபக்கர் அவர்களுடன்

தக்கலை பீர்முகம்மது வலியுல்லாஹ்வின் பாடல்கள் சிலவற்றைக் குமரி அப+பக்கர் அவர்கள் பாட ‘தன்னைப் பிழிந்த தவம்’ என்ற தலைப்பில் ஓர் ஒலித்தகடாக வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் தக்கலை ஹலீமா, துளசி வயக்கல், தக்கலை தாஹிர், குமரி அபூபக்கர் ஆகியோரின் கூட்டு முயற்சி இது. இரண்டோ மூன்றோ பாடல்களை ஏற்கனவே எனது வலைத்தளத்திலும் இட்டிருக்கிறேன்.
 


குமரி அபுபக்கருக்கு விருது


மேடையில் ஒளி வெள்ளம். மின் விளக்குகளின் வெப்பம் தாங்க முடியாமல் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. அன்றைய பிரதம பேச்சாளர்களால் குறிப்பாக முஸ்லிம் லீக் தலைவர் பேரா. கே.எம். காதர் மொஹிதீன் மற்றும் கத்தீப் எச்.ஏ. அப்துல் காதர் மஹ்லரி ஆகியோரின் ஆழமும் அர்த்தமும் தமிழ் சொல்லாட்சியும் மிகுந்தவையுமான பேச்சுக்களால் அந்த வெப்பம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

மஃரிப் தொழுகைக்காக நிகழ்வு இடை நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பித்த போது முதல் நிகழ்வாக நமது அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் கே. ரஹ்மான் எழுதிய பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.
 

 ‘மீண்டும் ஒரு நான் மக்கா வருவேன்’ என்ற தலைப்பிலான இந்த ஒலித்தகட்டில் உள்ள பாடல்களைப் பாடியிருப்பவர் தீன் முரசு ஆள்வை எம்.ஏ. உஸ்மான் அவர்கள். இந்திய இலங்கைக் கலைஞர்களிடையேயான ஒரு கலைப் பாலம் அமைக்கும் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் முயற்சியின் பேறுதான் இந்த ஒலித் தகடு என்று யூனுஸ் கே. ரஹ்மான் எனக்குச் சொன்னார். இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கவிஞர் ஏ.எம்.எம். அலி தனது நூல் ஒன்றை மேடைக்கு எடுத்து வந்து வெளியிடச் செய்தார். இவற்றை நமது புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார்.
---------------------------------------------------------------------------------------- தொடரும்
 
நன்றி - எங்கள் தேசம் இதழ் 207 (ஒக்டோபர் 15 - 31)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

அருமையான பதிவு/பகிர்வு. இன்னும் வரட்டும். வாழ்த்துக்கள்!