Sunday, October 23, 2011

ஒரு புறாக் கதை


ராஜசேகரனுக்கு ‘புறா’ என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு.

செல்லப் பெயர் என்று நான் சொன்ன போதும் அது பட்டப் பெயர் என்று நீங்கள் சொல்லக் கூடும்.

சுமார் 200 மீற்றர் தூரத்தில் நிற்பவனை அழைக்கும் உச்சச் சத்தத்தில் “டேய் புறா...!” என்றோ “மச்சான் புறா...!” என்றோ கூப்பிட்டால் 50 அடிகளுக்கு அப்பால் நிற்கும் ராஜசேகரன் “என்ன மச்சான்” என்று பதிலுக்குக் கேட்பான். எனவே அது செல்லப் பெயராகவே ஆயிற்று அவனுக்கு என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

ஆயிரத்துச் சொச்சம் பேர் படிக்கின்ற, நூற்றுச் சொச்சம் பேர் வேலை செய்கின்ற கலாசாலையில் ஒரே நாளில் அனைவருக்கும் “புறா”வாகப் பிரபல்யம் பெறும் வாய்ப்புப் பெற்றவன் ராஜசேகரன். ஆனால் அது ஒன்றும் சுவையான கதை அல்ல.

விடுதியில் தங்கியிருந்த நூற்றுச் சொச்சம் பேரில் நான்கு பேருடன் ‘புறா’ பிடிப்பதற்காக உயரமான மோட்டு வளை ஏறிய ராஜசேகரன் பலன்ஸ் தவறிக் கீழே விழுந்தான். கால்களில் அஸ்பெஸ்டஸ் சீற் கிழித்த இரண்டு காயங்களும் மண்டையில் அடிபட்;ட இரத்தக் காயத்துடனும் அவனை அள்ளிக் கொண்டு இரவோடு இரவாக டாக்டரிடம் கொண்டு போகவேண்டி வந்தது. ஆனால் அடுத்த நாளே தலையில் பெரிய கட்டுடன் வகுப்புக்கு வந்து விட்டான்.

கூட்டமாய் நின்றிருந்தவர்களுள் ஒருவன் “டேய் .... புறா...!” என்று அவனைக் கூப்பிட அன்றிலிருந்து அவன் “புறா”வாகப் பதவியுயர்வு பெற்றான். இரண்டு வருடங்கள் பயிற்சி முடியும் வரை விரிவுரையாளர்களையும் கலாசாலை ஊழியர்களில் ஒரு சிலரையும் தவிர ஏனைய அனைவருக்கும் அவன் “புறா”வாகவே இருந்தான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் அவனை விலாவாரியாகப் பேட்டி கண்டேன்.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து மாதத்துக்கு ஒரு முறை இவ்வாறு புறா பிடித்துக் கறி சமைத்து உண்பதாகச் சொன்ன அவன் அதன் அலாதிச் சுவையையும் சேர்த்தே சொன்னான்.

நான் அதுவரை புறாக் கறி உண்டதில்லை. சாப்பிடும் ஆசை மனதில் துளிர் விட்டது. அவன் சொன்ன விதம் அப்படி.

இயல்பில் தடித்த உடல் வாகு கொண்டவனான புறா அதாவது ராஜ சேகரன் அஸபெஸ்டஸ் சீற் பொருத்தில் கால் வைக்க அந்தச் சிலாகை முறிந்திருக்கிறது. அதனால்தான் அன்று அவன் விழ நேர்ந்தது.

“உன்ன மாதிரி ஒல்லியான ஆள் ஏறினா நிறையப் புறா பிடிக்கலாம். சனிக்கிழமை ஏறுவோமா?” என்று கேட்டான்.

'சரி' என்றேன்.

சனிக்கிழமை ராஜேந்திரன் குழுவில் நால்வர், என்னையும் சேர்த்து எனது குழுவில் நால்வராக மொத்தம் எட்டுப் பேர் புறா பிடிக்கச் சென்றோம். ராஜேந்திரன் கையோடு ஓர் உரப் பையையும் கொண்டு வந்திருந்தான்.

“இதை இடுப்பில் கட்டிக்கொள். புறாக்களைப் பிடித்து இதற்குள்தான் போட வேண்டும்” என்றான்.

இரண்டு மேசைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் ஒரு கதிரையை வைத்தால் ஏறிவிடலாம். அவ்வேளை மிகவும் ஒல்லியான தோற்றமும் காற்றைப் போல் நடக்கும் வேகமும் கொண்ட எனக்கு மேலே தாவுவது ஒரு சின்ன விசயம்.

மோட்டு வளையில் நூற்றுக் கணக்கான புறாக்கள்!

புறாக்கள் உண்மையிலேயே மிகவும் மென்மையானவை. அப்பாவிகள்! இதனால்தான் புறா சமாதானத்தின் குறியீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் பிடித்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதனால்தான் சண்டை பிடிப்பவர்கள், யுத்தம் செய்பவர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் புறாவைப் பிடித்துக் கூட்டில் வைத்திருந்து பொதுவிடத்தில் நின்று அவற்றைப் பறக்க விட்டுப் படம் எடுத்துப் பத்திரிகைகளில் போட்டுக் கொண்டு நமக்குப் ‘படம்’ காட்டுகிறார்கள்.

யுத்தத்திலும் சண்டையிலும் சீரழிபவர்கள் அப்பாவிகள்தானே! அந்தக் குறியீடுதான் அது!


புறாக்களின் ஒரு நல்ல குணம் என்னவென்றால் நீங்கள் அதைக் கொஞ்ச நாள் வைத்துப் பரிபாலித்தீர்கள் என்றால் எந்தச் சீமையில் விட்டு விட்டு வந்தாலும் உங்களிடம் திரும்பி வந்து விடும். கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு மைல்கள் பறந்து வந்து உரிய இடத்துக்கு வரக்கூடியவை என்று கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தலை நகரத்தில் சில இடங்களில் இளைஞர்கள் புறாக்களைப் பறக்க விடுவதைப் பார்த்திருப்பீர்கள். அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. புறாவின் கால்களையும் இறக்கைகளையும் கைக்குள் இறுக்கிப் பிடித்து ஆகாயத்தில் ஓங்கி வீச, அது பறந்து போகும். ஆனால் சற்று நேரத்தில் திரும்பி வந்து விடும். அப்படி வீசும் போது அதன் சிறிய உடற் சிறகுகள் சில கழன்று விடும். கால்களையும் இறக்கைகளையும் சேர்த்து இறுக்கிப் பிடிக்கும் போது புறாவுக்கு வலிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆயினும் கூட அவை தமது விசுவாசத்தைத் தவற விட்டு விடுவதில்லை.

யுத்தமும் சண்டையும் நடக்கும் இடங்களில் வாழும் மக்களின் கதியும் இதுதானே!

கையை வைத்தால் இரண்டு இரண்டு புறாக்களாக அகப்பட்டன. சிலவேளை மூன்று புறாக்கள் கூட. வரிசையாக இருந்த சில சிதறிப் பறந்தன.

அப்போதுதான் ராஜசேகரன் சொன்னான் “மச்சான்... சில நேரம் புறாப் பிடிக்க வந்த பாம்புகள் இருக்கும் பத்திரம்!”

பாம்பென்றால் படையே நடுங்கும் போது நான் எம்மாத்திரம்.

எனக்குப் பயம் வந்தது. பயத்தின் பெயரால் புறா பிடிப்பதைக் கைவிட்டு விட்டுக் கீழே இறங்கினால் அவமானம். மட்டுமல்ல கலாசாலைக் காலம் முடியும் வரை அதையே சொல்லிச் சொல்லி என்னைக் கேலி பண்ணத் தொடங்குவார்கள். இல்லையென்றால் என்னைக் காணும் போதெல்லாம் “காலுக்குக்கிட்ட பாம்புடா!” என்று சத்தமிட்டுச் சொல்லிக் கலாய்க்க ஆரம்பிப்பார்கள்.

எனவே மள மளவென்று முன்னேறி இருபது, முப்பது புறாக்களைப் பிடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழேயிறங்கினேன்.

ஒரு வெற்றிப் பெருமிதத்தோடு இறங்கி நடந்து போகையில் எனது குழுவில் வந்த ஒரு நண்பன் சொன்னான். “பார்த்தாய்தானே... புறாக்கள் எப்போதும் சோடி சோடியாகவே இருக்கும். பிடித்தால் இரண்டையும் பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் விடுபட்டது முனியும்!”

அவ்வளவுதான்!

ராஜசேகரன் சொன்ன பாம்பு எச்சரிக்கை கூட ஏற்படுத்தாத ஒரு பயத்தை அவனது வார்த்தைகள் என் மனதில் விதைத்தன. அது விஷம் போல் என் மனசு, உடலெங்கும் சட்டெனப் பரவிற்று!

இறைவன் எல்லாவற்றுக்கும் மேலான தீர்ப்பாளன் என்ற நம்பிக்கை சிறுவயது முதல் எனக்குண்டு. நான் சில புறாக்களைத் தனிமைப்படுத்தி விட்டேனே என்கிற பயமும் கவலையும் என்னை அந்தக் கணத்திலேயே குறுக வைத்தன.

புறாக்கறியைச் சமைத்து விட்டு ராஜசேகரன் எவ்வளவு வலிந்து அழைத்தும் நான் அந்தப் பக்கமே போகவில்லை! “நீ சரியான லூசுடா!” என்று எனக்கு ஏசி விட்டுப் போனான் அவன்.

தொடர்ந்து மூன்று இரவுகளாக எனக்குத் தூக்கம் சரியாக இல்லை. நான் பிடிக்கும் போது நழுவியும் பதறியும் சிதறியும் பறந்து இணையிழந்த புறாக்கள் ஞாபகம் வந்தன... அவை ‘பக்கும்.... பக்கும்....’ என்று என்னைத் திட்டுவது போல் ஒரு பிரமை!

அப்புறம்!

அப்புறமென்ன, இந்தச் சம்பவம் நடந்து ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு ஒரு கவிதை எழுதவேண்டி வந்தது!

அந்த நினைவு


பின்னிராவில் எழும்
தன்னிரக்கப் பாடல் போல்

இனிய கவிதையொன்றில்
இடறுகின்ற சொல்லைப் போல்

இளவயதுப் பாலகனின்
இழப்புச் செய்தியைப் போல்

பிள்ளைப் பருவத்தின்
பின்னாள் ஞாபகம் போல்

முதற்பாட்ட மழையில் எழும்
மண்ணின் வாசம் போல்

ஊசி முனையொன்று
உள் நகத்துள் புகுந்தது போல்

அவ்வப்போது வரும் -

யாருடையவளாகவோ ஆகிவிட்ட
உன் நினைவு!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: