Tuesday, April 3, 2012

எனது குளியற் கோப்பை


அது ஒரு பெரிய அலுமினியக் கோப்பை. காலையில் குளியல றைக்குள் நுழைந்ததும் அந்தக் கோப்பை எனது சிந்தனையைப் பல்வேறு கோணங்களுக்கு இழுத்துக் கொண்டு செல்லும்.

பெரிய பிளாஸ்டிக் வாளியில் நீர் நிறைத்து அள்ளிக் குளிப்பது எனது வழக்கம். அந்தக் காலத்தில் ஊரில் கிணற்று நீரைத் துலாவில் உள்ள வாளியினால் இறைத்துக் குளித்துப் பழகியவன் நான். என் வய தொத்த கிராமப்புறங்களில் பிறந்த ஜீவன்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். என்னதான் ‘மழைப் பைப்பு’ (shower)வில் மிருதுவாக நீர் உடலில் இறங்கினாலும் அள்ளிக் குளிக்கும் சுகத்தை அது தருவதில்லை. இளைய வயதில் இறைத்துக் குளித்துப் பழகியவர்கள் அந்த சிலிர்ப்பு மிக்க அனுபவங்களை இன்னும் வாயோயாமல் கதைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அந்தக் கோப்பையில் நீர் அள்ளி ஒற்றைக் கையினால் தூக்க முடியாது. பாரம் ஒரு காரணமாக இருந்த போதும் அந்தக் கோப்பையின் விளிம்பில் சுற்றி வரப் பத்து இடங்களில் உடைந்து அடிப்பகுதி நோக்கி அரை அங்குலம் , ஒரு அங்கும், ஒன்றை அங்குலம் எனக் கிழிந்து போயிருக்கிறது. மிக மென்மையான கனம் கொண்டதாகத் தயாரிக் கப்பட்டுள்ள அந்தக் கோப்பையை இருகரங்களாலும் பிடித்து நீரை அள்ளி ஒரு சிறு வயதுப் பிள்ளை குளிப்பது போல் நான் குளிப்பேன். அந்தக் கோப்பையின் கிழிசல்களின் நீளம் அதிகரித்தால் கோப்பை ஒரு கணத்தில் இரண்டு துண்டுகளாகி விடும்.

எனவே குனிந்து குனிந்து வாளிக்குள் இருக்கும் நீரை அள்ளுவேன். குனிந்து நிமிரவேண்டியேற்படுவதால் அது ஒரு நல்ல பயிற்சி என்று நினைப்பேன். தவிரக் குனிந்து பழகாவிட்டால் இக்காலத் தில் பிழைப்பதும் கஷ்டமாகி விடும். குனிய மறுப்பதால்தான் நாட்டில் நிறையப் பிரச்சினைகள். குனிந்து நடக்கத் தெரிந்தவர்கள் மிகப் பெரும் வெற்றி பெற்றவர்களாகவும் செயற்றிறன் மிக்கவர்களாகவும் உலா வருகிறார்கள். குனிந்து நடந்து பழகி அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமக்கு முன்னால் மற்றவர்கள் குனிந்து நடக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் என்ன தப்பு இருக்கிறது?

அந்தக் கோப்பையை மாற்ற வேண்டும் என்று நீர் அள்ளிக் குளிக்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. ஆனால் குளியலறை யிலிருந்து வெளியே வந்தால் அந்த விடயம் மறந்து போய்விடுகிது. இந்த மறதி பொல்லாதது. கூடிய விரைவில் அந்தக் கோப்பையைப் பத்திரப்படுத்தும் ஏற்பாட்டை நான் மேற்கொள்ள வேண்டும். அப்படி வேறு ஒரு கோப்பையைக் குளிப்பதற்கு நான் பயன்படுத்தினாலும் இந்த அலுமினியக் கோப்பையைப் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இப்படி நான் எழுதியிருப்பதை வாசிக்கும் நண்பர்கள் எனது வீட்டுக்கு வந்து ‘ஒன்றுக்குப் போக வேண்டும்’ என்று சொல்லிக் குளியலறைக்குள் நுழைந்து இக்கோப்பையைப் பார்க்கத் திட்டமிடக் கூடும். எனது வீட்டுக்கு வந்து அப்படி யாராவது சொன்னால் வெளியே உள்ள கழிவறையைக் காட்டுவதுதான் எனது வழக்கம். அதற்குள் இந்தக் கோப்பையைப் பார்க்க முடியாது. எனவே அவர்கள் திட்டத்தைக் கைவிடுவது நல்லது.

அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏராளமான பாவனைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண் சட்டி, பானைகளோடு மாரடித்துக்;கொண்டிருந்த பெண்களுக்கு அலுமினியம் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பாரங்குறைந்த உலோகமாகவும் இலகுவில் வெப்பமடையக் கூடியதுமாக இருப்பதால் அலுமினியத்தில் உருவான பாத்திரங்களுக்கு மவுசு ஏற்பட்டது. ஆயினும் அமிலங்களில் கரைந்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்ட பி;ன்னர் சமையலில் இருந்து மெதுவாக அகற்றப்பட்டு வருகிறது. மார்புப் புற்று, மூளை மற்றும் சமிபாட்டு வழிகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது என்று வைத்திய ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நீர் அள்ளுவதற்கு இன்னும் பயன்பாட்டில் உள்ளது.


கப்பல் கட்டுவது முதற்கொண்டு பல்வேறு நோக்கங்களுக்காக அலுமினியம் உபயோகிக்கப்படுகிறது. உலோகங்களில் பெறுமதி குறைந்தது என்று அலுமினியம் கணிக்கப்பட்டிருந்த போதும் நானூற் றுக்கும் அதிகமான மக்களையும் அவர்களது பொருட்களையும் ஏற்றிக் கொண்டு ஆகாயத்தில் பறக்கும் விமானம் அலுமினியத்தைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. அலுமினியத்தோடு தைத்தேனியமும் கலக்கப் படுகிறது. அவ்வளவுதான்!

1951ல் Austin "A40 Sports" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட காரின் வெளிப்புறப் பகுதி முழுக்கவும் அலுமினியத்தினால் தயாரிக்கப் பட்டது. ஒரு காலத்தில் அலுமினியமும் வெள்ளியும் ஒரே விலைக் குரியனவாக இருந்தன.

நான் பயன்படுத்திய அலுமினியக் கோப்பையைப் போலவே இந்த நாட்டின் படைப்பாளிகள் அவர்கள் பயன்படுத்திய உடைந்த மூக்குக் கண்ணாடி பிரேம், பழுதடைந்த கம்பியூட்டர் மௌஸ், பிடி உடைந்து கறைபடிந்திருக்கும் தேனீர்க் குவளை, பொருத்துக் கழன்ற இடுப்புப் பட்டி, ஒரு போதும் வெய்யிலில் வைக்காததால் தூக்கும் போதே நாற்றமெடுக்கும் ஹெல்மட், கம்பியுடைந்த குடை, புகையிலைக் கட்டுப்போல் இருக்கும் குறிப்புப் புத்தகம் போன்றவற்றைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

உயில் ஒன்றை எழுதி வைக்கும் அளவு எந்தச் சொத்துக்களும் என்னிடம் கிடையாது. ஆனால் எனது குளியல் கோப்பைக்காக ஓர் உயில் தயார் பண்ண எண்ணியிருக்கிறேன். நானும் இலக்கியம் செய்தேன் என்ற நன்றியோடு நான் இல்லாத காலத்தில் நன்றியுள்ள நண்பர்கள் ஒரு விழாவை வைத்தால் யாராவது ஒரு வளர்ந்து வரும் முதிய எழுத்தாளருக்கு எனது பெயரில் அந்தக் கோப்பையை விருதாகக் கொடுக்கலாம்.

‘நான் இவ்வளவு செய்து விட்டேன், என்னை யாரும் கௌரவிக்கவில்லை’ என்ற ஏக்கத்திலிருக்கின்ற தமிழ் எழுத்தாளர்கள,; விருது என்றால் அலுமினியக் கோப்பை என்ன, அரைஞாண் கயிறு என்றாலும் பெற்றுக் கொள்ள மறுக்கவா போகிறார்கள்?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

RoshaNi said...

ஐயோ ஐயோ எங்க வீட்டிலையும் இப்படி ஒரு கோப்பை இருக்கு......

#### உடைந்த மூக்குக் கண்ணாடி பிரேம், பழுதடைந்த கம்பியூட்டர் மௌஸ், பிடி உடைந்து கறைபடிந்திருக்கும் தேனீர்க் குவளை, பொருத்துக் கழன்ற இடுப்புப் பட்டி, ஒரு போதும் வெய்யிலில் வைக்காததால் தூக்கும் போதே நாற்றமெடுக்கும் ஹெல்மட், கம்பியுடைந்த குடை, புகையிலைக் கட்டுப்போல் இருக்கும் குறிப்புப் புத்தகம்####

எஸ்.மதி said...

நல்லாதான் இருக்கு ..எனக்குதான் விருது தர ஒருத்தரும் இல்லை ...

Shaifa Begum said...

ஆஹா.............. இவ்வளவு சொல்லிட்டு கடைசியில விருதுக்கு கொண்டு வந்து முடிச்சு
போட்டுடீங்களே சேர்...அந்த அலுமினியக் கோப்பை என்ன அநியாயம் செய்தது.....?

இப்படி நான் எழுதியிருப்பதை வாசிக்கும் நண்பர்கள் எனது வீட்டுக்கு வந்து ‘ஒன்றுக்குப் போக வேண்டும்’ என்று சொல்லிக் குளியலறைக்குள் நுழைந்து இக்கோப்பையைப் பார்க்கத் திட்டமிடக் கூடும். எனது வீட்டுக்கு வந்து அப்படி யாராவது சொன்னால் வெளியே உள்ள கழிவறையைக் காட்டுவதுதான் எனது வழக்கம். அதற்குள் இந்தக் கோப்பையைப் பார்க்க முடியாது. எனவே அவர்கள் திட்டத்தைக் கைவிடுவது நல்லது.............. ஹா...ஹா.. ஐயோ