Monday, April 23, 2012

“யாத்ரா” ஒன்றுகூடல் - கொழும்பு


ஏ.பி. மதன்
ஆசிரியர் - தமிழ் மிரர்

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் பற்றி மும்முரமாக பேசப்படுகின்ற இத்தருணத்திலே, யாத்ரா - 20 கவிதை, இலக்கிய சஞ்சிகை பற்றிப் பேசக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இலக்கிய உலகின் ஜாம்பவான்களினால் வெளியிடப்படுகின்ற சில சஞ்சிகைகள் உலகளாவியில் குறிப்பிட்ட சில வாசகர் மட்டத்தில் மட்டும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே.

இருப்பினும், இலக்கிய முன்னோடிகளின் வழிகாட்டல்களுடன் இலக்கிய நுகர்வோர்க்கு வழிகாட்டியாக இருக்கின்ற சில சஞ்சிகைகளும் பல வாசகர்களின் இலக்கியப் பசி ஆற்றி வருகின்றமை சிறப்பானதாகும்.

யாத்ரா சஞ்சிகை, இவ்வளவு காலமும் பல்வேறுபட்ட கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகையூடாக கவியாற்றலுள்ள பல கவிஞர்களின் கைவண்ணங்களுக்கு களம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

கவி உணர்வுள்ள வரிகளை யாத்ராவின் ஆசிரியர் குழாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற போது தேர்ச்சிமிக்க கவிஞர்களால் அக்கவிதை புடம்போடப்பட்டு புத்துயிர் பெறுகின்றபோது கவியாத்த கவிஞர்களெல்லாம் மனங்குளிர்ந்து மகிழ்ந்ததினை மறந்துவிட முடியாது.

அஷ்ரப் சிகாப்தீனை நான் ஊடகப் பணிக்கு வந்த ஆரம்பக் காலங்களிலேயே அறிவேன். இலக்கிய பாண்டித்தியம் இல்லாத போதிலும் இலக்கிய நுகர்வோர் என்ற ரீதியில் அஷ்ரப் சிகாப்தீனின் படைப்புகளின் உயிரோட்டம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அப்படிப்பட்ட மொழியை வசப்படுத்தும் ஆற்றல்மிக்க ஓர் எழுத்தாளனால் யாத்ரா செதுக்கியெடுக்கப்பட்டமை சிறப்பானது.

கவிதைச் சஞ்சிகையாக மட்டும் இருந்த யாத்ரா இப்பொழுது இலக்கியச் சுவையுள்ள பல விடயங்களையும் உள்தாங்கி மீள்வருகை தந்திருக்கின்றமை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

பல சஞ்சிகைகளுடன்; சம்பந்தப்பட்டிருந்தவன் என்ற ரீதியில் ஒரு சஞ்சிகையின் பிரசவ வலி எனக்கும் நன்கு தெரியும். முதலீட்டு முதலாளிகள் முன்வரிசையில் காத்திருந்த போதிலும் முழுமையாக சஞ்சிகைகள் வெளிவராமல் போன வரலாறும் நன்கறிவேன்.

சுவையுள்ள சஞ்சிகை ஒன்று வருகின்ற சந்தோஷத்திலும் பார்க்க அச்சஞ்சிகை தொடர்ந்து வெளிவராமல் நிற்கின்ற போது சந்தோஷப்படுபவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் யாத்ரா சஞ்சிகை மீள் பிரசவமடைந்திருக்கின்றமை மன மகிழ்வைத் தருகின்றது. எனக்கு மட்டுமல்ல, இலக்கிய நுகர்வுக்காய் நொந்துபோய் காத்திருக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் இது இனிப்பான ஒரு விடயமே.

யாத்ரா 20 சஞ்சிகையின் உள்ளோட்டங்களை பார்க்கின்ற போது இந்நாட்டில் மேலும் பல இலக்கியவாதிகள் உருவாவது நிச்சயம் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது. தங்களுடைய புலமைகளை வெளிக்காட்டுவதிலும் பார்க்கப் பொத்திவைத்த ஆசைகளை கொட்டித் தீர்க்க இடமின்றி புழுங்கித் தவிக்கின்ற ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு யாத்ரா சஞ்சிகையின் மீள் வருகை நிச்சயமாய் புண்ணியமாகும்.

எழுத்து நுகர்வாளர்களை எழுத்துலகில் எழுந்துநிற்கத் தூண்டுபவர் கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன். அவரோடு கைகோர்த்திருக்கின்ற இளம் கவிஞர்களும் புது யுகத்தில் புன்னகைப் பூக்களாய்த் திகழுபவர்கள். அதிகரித்த தொழில்நுட்ப அவசரத் தேவையில் ஆற அமர்ந்து அலாதியாய்ப் பயணிக்கும் ஆற்றல்மிக்க இளைஞர் கூட்டம் இப்போது யாத்ராவோடு கைகோர்த்துள்ளது.

எனவே இம்முயற்சி, இலங்கை இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடமொன்றினை வகுத்துக்கொள்ளுமென்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கிருக்கின்றது. திறமையுள்ளவர்களை இனங்கண்டு அத்திறமைகளுக்கு களம் கொடுத்து அவர்கள் ஆழ்மனதின் அழுத்தங்களை நிவர்த்திசெய்து பக்குவமடைந்த இலக்கியவாதிகளால் மிளிருவதற்கு அழகான, உறுதியான அச்சாரமாக யாத்ரா விளங்கியிருக்கின்றது, விளங்கும்.

நன்றி,

இப்படிக்கு என்றென்றும் அன்புடன்,
ஏ.பி.மதன்

“யாத்ரா” ஒன்றுகூடற் காட்சிகள்”


“யாத்ரா” இதழை பிரதம அதிதி வழங்க புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத், அறிமுக உரை திரு. அந்தனி ஜீவாபிரதம அதிதி உரை - நீதிபதி எம்.எம்.ஏ. கபூர், கருத்துரை - மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்கருத்துரைகள் - தெ.மதுசூதனன், மேமன் கவிகருத்துரைகள் - டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், சட்டத்தரணி மர்ஸூம் மௌலானாபிரதம அதிதியிடம் சிறப்புப் பிரதி பெறும் முஹமட் ஹிமாஸ்சிறப்புப் பிரதி பெறும் கவிஞர் ரவூப் ஹஸீர்பிரதி பெறும் - “ஞானம்” ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன்மல்லியப்பூ சந்தி திலகர்கவிஞர் யாழ். அஸீம்கவிஞர் மௌவி காத்தான்குடி பௌஸ்கவிஞர் நியாஸ் ஏ. சமத்கலைஞர் கலைச்செல்வன் ரவூப்எழுத்தாளர் தம்புசிவாதிருமதி ராஹிலா ஹலாம் (ஆஷிக்கா)செல்வி மேனகாப.க. மகாதேவாகவித்தோழன் பஸ்லி ஹமீத்ஆள்வாப்பிள்ளை கந்தசாமிஒலிபரப்பாளர் தனபாலசிங்கம்கவிஞர் நஜ்முல் ஹூஸைன்பத்திரிகையாளர் எம்.ஏ.எம். நிலாம்மௌலவி முபாறக் அப்துல் மஜீத்ஊடகவியலாளர் எம்.சி.நஜிமுதீன்கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீன்
ஏற்புரை - ஆசிரியர்  அஷ்ரஃப் சிஹாப்தீன்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

Shaifa Begum said...

இம்முயற்சி, இலங்கை இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடமொன்றினை வகுத்துக்கொள்ளுமென்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கிருக்கின்றது. திறமையுள்ளவர்களை இனங்கண்டு அத்திறமைகளுக்கு களம் கொடுத்து அவர்கள் ஆழ்மனதின் அழுத்தங்களை நிவர்த்திசெய்து பக்குவமடைந்த இலக்கியவாதிகளால் மிளிருவதற்கு அழகான, உறுதியான அச்சாரமாக யாத்ரா விளங்கியிருக்கின்றது, விளங்கும். ”
A.P மதன் அவர்களின் பேச்சு சும்மா நச் என்று இருக்கிறது.......
”யாத்ரா” வெளியீட்டில் எல்லாரையும் புகைப்படங்களாகவாவது
பார்க்கக் கிடைத்ததில் மிக்க சந்தோசம்.... சேர் பதிவேற்றியதற்கு நன்றிகள்...

பி.அமல்ராஜ் said...

இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தாலும் படங்களைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.. என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகப்பெரிய துர்வதிஷ்டவசம். இருந்தும், யாத்ரா தொடர்ந்து வெற்றி நடை போட எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்.

Lareena said...

அருமையான குறிப்பு.

படங்கள் விழாவின் அமோக வெற்றியைப் பறைசாற்றுகின்றன.

பகிர்வுக்கு நன்றி.

Kalaimahan said...

கவிதை இதழாக மலர்ந்து பின் பல்சுவை இதழாக இன்று துளிர்விட்டுள்ள “யாத்ரா“ ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறும் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. “யாத்ரா“ கவிதை இதழாக வெளிவந்தக் காலையும், அதில் எழுதிய கவிஞர்கள் பலராலும் பேசப்பட்டவர்கள். இன்றும் மின்னிநிற்பவர்கள். “யாத்ரா“ 20 இலிருந்து அடுத்துவரும் இதழ்களும் காத்திரமான - மிக மிகக் காத்திரமான ஆக்கங்களுடன் கூடி வரும் என்பதில் மாற்றுக்கருத்துக் கொள்ள முடியாது. நாட்ட விழிகளை நெய்யும் ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்தீனின் எழுத்துக்களின்பால் எனக்கு அலாதி நம்பிக்கையுள்ளது. அவரிலும்... தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள் சொலும் அதேகணம், சீரியதொரு கருத்துரையை வழங்கியுள்ள என் “இடி“ நண்பன் ஏ.பீ. மதனுக்கும் எனது வாழ்த்துக்கள். -தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்