கழுதை மனிதன்
சிறுகதை
முகம்மட் நஸ்ருல்லாஹ் கான் - (பாக்கிஸ்தான்)
இரண்டு வாரங்களாக இரவில் நான் சரியாக உறங்கவில்லை. ஒரு கழுதையின் கண்கள் என்னைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கின்றன.
இருளில், நான் வீட்டுக்கு வரும் ஓய்ந்து போன தெருவில், முன்னங்கால்களில் ஒன்று உடைந்த நிலையில் கழுதையொன்றை நான் பார்த்தேன். என்னை நோக்கிய அதன் பார்வையைத் தவிர்க்க நான் முயன்றேன். தலையை உயர்த்தி தன் மீது அவதானம் செலுத்துமாறு அது கெஞ்சுவது போல் இருந்தது. இவையெல்லாமே குறிப்பாக எனக்கு ஹூஸைனி பவ்லியை ஞாபகப்படுத்திற்று.
ஹூஸைனி பவ்லியின் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
கணிதம்தான் விலங்குகளிலிருந்து மானுடத்தின் உண்மையான அவதாரத்தைப் பிரித்தறிய வாழ்க்கை முழுக்க எனக்கு அடிப்படையாக அமைந்தது. எனது வாப்பா முதல் தடவையாக ஒரு வினா மூலம் என்னைச் சோதித்துப் பார்த்தார்.
“நமது வீட்டுத் தொழுவத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன?”
“ஒன்பது!”
- நான் உறுதியாகத்தான் பதிலளித்தேன்.
“இல்லை! அங்கே ஒன்பது இல்லையே மகனே!”
“அதே உறுதியுடன் வாப்பாவும் எனக்குப் பதிலளித்தார்.
எனது படிப்பறிவுக்கு ஏற்ப அங்கே இருப்பவை ஒன்பதுதான். அதை உறுதிப்படுத்துவதற்காக எனது விரல்களைப் பயன்படுத்தி எண்ண ஆரம்பித்தேன்.
“இரண்டு பசுக்கள், மூன்று ஆடுகள், ஒரு பெண்குதிரை, ஒரு கழுதை, ஒரு நாய் மற்றும் ஹூஸைனி பவ்லி. ஆக மொத்தம் ஒன்பது!”
வாப்பா சிரித்து விட்டுச் சொன்னார்:-
“ஆனால் ஹூஸைனி பவ்லி ஒரு பிராணி அல்ல. அவன் எங்கள் வீட்டு வேலைக்காரன். அவன் எம்மைப் போன்ற ஒரு மனிதன்!”
எனக்கு வாப்பாவுடன் ஒத்துப் போக முடியவில்லை. எமது பிராணிகளுடன் ஒன்றாய் வாழும் ஹூஸைனி பவ்லி எப்படி ஒரு மனிதனாக இருக்க முடியும்? நாம் - வாப்பாவும் மகனும் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடியாமல் மூத்த வாப்பாவின் தீர்ப்புக்குச் சமர்ப்பித்தோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்க, நான் எனது விடயத்தை மூத்தவாப்பாவுக்குச் சொன்னேன்.
“ஹூஸைனி பவ்லி ஒரு மனிதன் என்றால் ஏன் அவன் எங்களைப் போல் இல்லை. அவன் ஏன் எப்போதும் பிராணிகளுடனேயே இருக்க வேண்டும்? பிராணிகளுடன் சேர்ந்து தரையில்தான் தூங்குகிறான். எனது கனவுகளில் அவன் பிராணிகளைப் போல் சத்தம் எழுப்புகிறான்
புல்லைத் தின்கிறான். அவன் ஒரு கழுதையைப் போல்தான் நடக்கிறான்...!”
மூத்த வாப்பா தனது இறுதித் தீர்ப்பை வழங்கினார். ஹூஸைனி பவ்லி ஒரு மனிதன் என்பதே அவரது முடிவு. வழக்கில் நான் தோற்றுப் போனது கவலையாக இருந்தது. அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. ஏனெனில் ஹூஸைனி பவ்லி ஒரு மனிதன் என்பதை எனது மூளை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்த போதும் எனது வழக்கின் வலுவான வாதாட்டத்துக்காக மூத்த வாப்பா எனக்கு ஒரு ரூபாய்ப் பணம் தந்தார்.
கிராமத்தில் பவ்லிகள் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டனர். நீர் இறைத்தல், சால்வை நெய்தல் போன்ற தொழில்களைச் செய்து அவர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட பவ்லிகள் ஹூஸைனியை அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வதற்குக் கூட விரும்பவில்லை.
ஹூஸைனியின் தந்தை யார் என்பதைக் கடைசி வரை அவனது தாயார் யாருக்கும் சொன்னதில்லை. ஹூஸைனிக்குப் பத்து வயதாக இருக்கும் போதே தாயார் இறந்து விட்டார். பிறகு அவனது உறவினர்கள்தாம் அவனைப் பராமரித்தார்கள். ஆனால் ‘வேசைப் புள்ள’ என்று அவனைத் திட்டினார்கள். கிராமத்தின் தலைவரான எனது மூத்த வாப்பாதான் அவன் மீது இரக்கப்பட்டு எங்களது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
எங்களது கிராமம் மிகவும் உஷ்ணமானது. வரண்ட மேட்டு நிலப் பிரதேசம். நீர் வளம் குறைந்த காரணத்தால் எமது நிலத்தில் விவசாயம் பண்ண முடியாது. ஆனால் புற்றரைகள் உண்டு. அதிகாலையில் எழுந்து விடும் ஹூஸைனி பவ்லி எங்களுக்கு நீர் இறைப்பான். எமது பிராணிகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது அவனது முக்கியமான தினக் கடமைகளில் ஒன்று. மாலை வேளையில்தான் எமது பிராணிகளோடு மெதுவாக ஊருக்குள் நுழைவான்.
ஹூஸைனி பவ்லியின் முன் பற்கள் நீளமானவையானபடியால் அவன் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பதைப் போலவே இருக்கும். பிராந்தியத்தின் கடும் வெயில் சுட்டதால் அவனது தோலின் நிறம் வித்தியாசமாக இருந்தது. அவன் கழுதை மேல் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் கற்கால மனிதனைப் போல் தோற்றமளிப்பான்.
தெருவில் ஹூஸைனி மெதுவாகக் கழுதையோட்டிக் கொண்டு செல்வதைக் காணும் உயர் வர்க்கத்தவர் முகத்தில் ஒரு கேலித் தனமான குறிப்புத் தென்படும். கழுதையுடன் ஹூஸைனி தகாத உறவு வைத்திருப்பதாகக் கூடச் சில போக்கிரிகள் கதை பரப்பினார்கள். சிலர் அவனைப் பார்த்துச் சொல்வார்கள்:-
“டேய் ஹூஸைனி ... கழுதையின் அசைவுகளைப் பார்த்தால் நீ நன்றாகக் கவனித்துக் கொள்கிறாய் போல் தெரிகிறது!”
அதைக் கேட்டுத் தேநீர்க் கடையில் உள்ள ஒருவன் சத்தமிடுவான்:-
“அப்படி இல்லடா... இந்தக் கழுதை அவனுடை தங்கச்சி அல்லவா? தங்கச்சிக்கு அப்படிச் செய்யமாட்டான்!”
ஹூஸைனி இந்தக் கிண்டல்களுக்கெல்லாம் ஒரு போதும் பதில் சொல்வதில்லை. இதற்கெல்லாம் பதிலாக ஒரு பெரிய சிரிப்பு அவனிடமிருந்து வெளிவரும். எங்களிடம் ஒரு பெண் குதிரையும் இருந்தது. அதில் அவன் ஏறிச் சென்றிருந்தால் இப்படிக் கிண்டலுக்கு ஆளாகியிருக்கமாட்டான். ஆனால் அவன் பவ்லி அல்லவா?
கழுதை மேய்ப்பதற்கே லாயக்கானவன்.
நான் சிறிய வயதினனாக இருக்கும் போது எமது முற்றத்தின் பெரிய வாயிற் கதவோரம் நின்று கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். பின்னடையும் துருப்புக்களை முன்னோக்கி வழி நடத்தும் அழுக்கு உடை இராணுவ அதிகாரியைப் போல் ஹூஸைனி பவ்லி தூரத்தே இருக்கும் மலைப் பிரதேசத்திலிருந்து எமது ஆடுகளுடன் மெதுவாக நடந்து வருவதைக் காண்பேன். மாலை மயங்கும் அந்த வேளையில் ஆடுகளின் கழுத்துக்களில் கட்டப்பட்டுள்ள மணிகளிலிருந்து வரும் துயரம் சேர்ந்த ஒலியின் பின்னணியில் ஹூஸைனி பவ்லியின் குரல் பழைய திரைப்படப் பாடல் இசை போல வருத்தம் தோய்ந்ததாக இருக்கும்.
ஹூஸைனி என்றைக்குமே வெறுங்கையுடன் வீட்டுக்கு வந்ததில்லை. வரும் போது எனக்காக ஏதாவதொன்றைக் கொண்டு வருவது வழக்கம். காட்டுப் பழங்கள், பூக்கள், காளான்கள் என ஏதாவதொன்றை எனக்கென எடுத்து வருவான். ஆனால் அவன் காட்டிலிருந்து திரும்பி வரும் போது கொண்டு வரும் அபூர்வப் படைப்புக்கள் பற்றிய அல்லது ஓநாய்கள் பற்றிய கதைகள்தாம் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
வியாழன், வெள்ளி ஆகிய தினங்கள் ஹூஸைனி பவ்லிக்கு மிகவும் விசேட தினங்களாக இருக்கும். இந்த நாட்களில் சாதாரண கிராமவாசிகள் விசேடமாகச் சமையல் செய்து திறந்த வெளியில் உள்ள பெரிய மரங்களின் கீழ் வைத்து விடுவார்கள். இம்மரங்களில் பிசாசுகள் வசிப்பதாகவும் இவ்வாறான சுவையான உணவு வகைகளை அவற்றிற்குப் படைப்பதன் மூலம் அவற்றின் சீற்றம் தணியும் என்றும் கிராமவாசிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆடுகளை மேய்க்கச் செல்லும் ஹூஸைனி பவ்லி இந்த உணவுகளை மிகுந்த ஆர்வத்துடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குச் சாப்பிடுவான்.
காலம் நகர்ந்தது. நான் பெரியவனாக வளர்ந்தேன். எனது மூத்த பெற்றோர் காலமானார்கள். எனது சகோதரர்கள் அனைவரும் பெற்றோர்களானார்கள். ஆனால் ஹூஸைனியின் வேலைப் பழு அதிகரித்ததே தவிர, அவனது வாழ்வில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்னும் அதிகமான நீரை அவனது பலவீனமான தோள்களில் சுமக்க வேண்டியிருந்தது. மாமா எமது குடும்பத் தலைவரானார். ஹூஸைனியின் பலவீனங்களால் ஏற்படும் தவறுகளுக்கு அவர் அவனை அடிக்கடி அடிக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் ஹூஸைனியின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனிடமிருந்தது ஒரேயொரு உடை. அதை மாதத்துக்கு ஒரு முறை அவன் கழுவுவான். திடீரென அவனது ஆடை சுத்தமாக மாறியது. அதை ஒவ்வொரு வாரமும் துவைக்க ஆரம்பித்தான். ஒரு பிச்சைக்காரனின் மகளை அவன் காதலிக்கிறான் என்பது தெரிய வரும் வரை இந்த மாற்றம் ஏன் உண்டானது என்பது பெரும் புதிராகத்தான் இருந்தது.
பிச்சைக்காரர்கள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தார்கள். பவ்லிகளை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். கிராமத் தலைவரின் சேவகன் என்ற காரணத்தால் ஹூஸைனிக்குப் பிச்சைக்காரர்களிடம் ஒரு மரியாதையிருந்தது. அந்த மரியாதைதான் பிச்சைக்காரனின் மகளின் காதலை அவனுக்கு வென்று கொடுத்தது.
ஹூஸைனியின் அருவருக்கத்தக்க காதல் விவகாரம் விரைவில் மாமாவின் காதுகளுக்கு எட்டியது. அவர் ஹூஸைனியைத் தனியே அழைத்து எச்சரித்திருக்க வேண்டும். சகலருக்கும் மத்தியில் மாமா அதைச் செய்தார். கிராமத்தின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் மாமாவின் வரவேற்பறையில் பின்னேரப் பொழுதுபோக்கு விநோதத்துக்காகக் கூடியிருந்தனர். ஹூஸைனி அனைவருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தான்.
மாமா அவனைப் பார்த்து உரத்த குரலில் கேட்டார்:-
“ஹூஸைனி, பிச்சைக்காரனின் மகளை நீ விரும்புவது உண்மையா?”
அவன் பதில் சொல்லவில்லை. அவனது தலை வழமையை விடவும் அதிகம் குனிந்திருந்தது.
“அவளுடைய உம்மாவும் ஒரு நல்ல காதலி!”
அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர் சொல்ல, சிரிப்பொலி வெடித்தது. அவர்களில் வயதான ஒருவர் ஹூஸைனியின் நோயாளியான தாயாரைப் பற்றி மோசமான நகைச்சுவைகளை எல்லோரதும் காதுகளில் விழும்படி சொன்னார். பலமான சிரிப்பொலிகளின் வெட்கத்தில் ஹூஸைனியின் காதல் அன்று மரணித்துப் போயிற்று. அக்கூட்டம் கலைந்த போது காதலை இழந்த வேதனை அவனில் இருந்தது. ஆயினும் யாவற்றையும் மறந்து எதுவுமே நடக்காதது போல் வழமையான வேலைகளில் அவன் ஈடுபடத் தொடங்கினான். அதன் பிறகு பிச்சைக்காரர் குடிசைப் பகுதியில் அவனை யாரும் கண்டதில்லை.
பிறகு, வேலை தேடி நான் கிராமத்தை விட்டு வெளியேறினேன். நகரத்தில் எனது வாழ்க்கை அமைந்தது. வாழ்க்கை நீரோட்டம் என்னை எங்கெங்கோவெல்லாம் இழுத்துச் செல்ல, நான் ஹூஸைனியை மறந்து விட்டிருந்தேன்.
பல வருடங்களுக்குப் பிறகு நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகக் கிராமத்துக்கு வந்தேன். இங்கு வந்த பிறகு ஹூஸைனியைத் தேடினேன். ஆனால் அவன் கண்ணில் படவேயில்லை. விசாரித்த போது, காச நோயால் பாதிக்கப்பட்டுத் தனது கடைசி நாட்களை நெருங்கிய நிலையில் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் ஹூஸைனி இருப்பது தெரியவந்தது. கழுதை போல் இருக்கும் ஒரு மனிதனை யாரும் வைத்தியரிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு உதவுவதற்காகச் செல்வது கூட மற்றவர்களது கிண்டலுக்கு ஆளாகும்தான். இருந்த போதும் அவனது குடிசைக்கு ஒரு முறை சென்றேன்.
இருண்டுகிடந்த, குளிரான குடிசைக்குள் ஹூஸைனி சுருண்டு கிடந்தான். என்னை நிமிர்ந்து பார்த்த உடனேயே அவனால் அடையாளம் காண முடியவில்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவனது பார்வை மின்ன, சந்தோஷத்தில் கண்ணீர் விட்டான். பேசுவதற்கு முயற்சித்த போதெல்லாம் தொடர் இருமல் இடையூறு செய்தது. ஒவ்வொரு மூச்சை விடுவதற்கும் அவன் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அந்த இறுக்கமான சூழலின் வேதனை தாங்காமல் வெளியேற நினைத்தேன். புறப்பட முன் அவனுக்குச் சொன்னேன்:-
“ஹூஸைனி, கவலைப்பட வேண்டாம். நாளைக்கு நான் உன்னை டாக்டரிடம் கூட்டிச் செல்கிறேன். விரைவில் குணமடைந்து விடலாம்.”
வெளியே வந்த பிறகு திறந்து கிடந்த அந்தக் குடிலுக்குள் இருந்த ஹூஸைனியைத் திரும்பிப் பார்த்தேன். வாடி வதங்கிப் போயிருந்த அவனது முகத்தில் மரணத்தில் நிழல் படிந்திருப்பது தெரிந்தது.
ஆம். அன்றிரவே ஹூஸைனியை மரணம் தழுவிக் கொண்டது. அடுத்த நாட் காலை அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உண்மையில் அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தால் அவனது மரணத்தையிட்டு எந்த வித சடங்குகளும் நடத்தப்படவில்லை.
இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு, ஓய்ந்து போன தெருவில், இருளில் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கழுதை எனக்கு ஹூஸைனி பவ்லியை ஞாபகப்படுத்துகிறது.
எனக்குள்ள ஆச்சரியம் என்னவென்றால், மனிதர்களுடன் ஒரு நாளைக் கூடக் கழிக்காத ஒருவனது உடலைப் புதைக்க மனிதர்களுக்கான மையவாடியில் கிராமத்தவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதுதான்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
வெகு இயல்பாக நகர்கிறது, கதை. ஆனால், அதற்குள் பொதிந்திருக்கும் சோகம் மனதை அறுக்கிறது. இறைவனின் அற்புதமான சிருஷ்டியான மனிதர்கள், சமுதாய ஏற்றத்தாழ்வுகளால், எவ்வளவு மோசமாகத் தாழ்த்தப்படுகிறார்கள்!
பகிர்வுக்கு மிக்க நன்றி Sir.
Post a Comment