Saturday, October 13, 2012

ஜமீலாவின் கதை


சிங்கிஸ் ஐத்மத்தோவின் “ஜமீலா” என்ற சிறு நாவல் பற்றிப் போற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளைப் படித்தேன். அந்த நாவலின் ஆங்கிலப் பிரதியை  இணைத்தில் தேடிப் பெற்றுக் கொண்டேன்.மேலோட்டமாகப் படித்த போது சற்றுக் கடின ஆங்கில நடையாக இருந்ததால் பின்னர் பார்ப்போம் என்று அப்படியே வைத்து விட்டேன்.

 தற்செயலாக எனது புத்தகக் கட்டுக்களை வேறு ஒரு தேவைக்காகக் கிண்டிய போது.. ஆச்சரியம்... “ஜமீலா” தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. 1983ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டிருந்தது. கையடக்க நாவலாக பூ. சோமசுந்தரம் என்பவரால் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

ஐத்மத்தோவ் கிர்கிஸ்தானிய எழுத்தாளர். குல்சாரி, முதல் ஆசிரியன் போன்றவை தமிழில் வந்த நாவல்கள். அவரது ஈர்ப்பு மிக்க எழுத்துக்களால் புகழடைந்தவர். 14க்கும் மேற்பட்ட படைப்புக்களைத் தந்தவர். 1928ம் ஆண்டு பிறந்த ஐத்மத்தோவ் தனது 79வது வயதில் ஜூன் 2008ல் காலமானார்.

“ஜமீலா” பற்றியும் ஐத்மாத்தவ்வின் எழுத்து அழகு பற்றியும் ஆங்கிலத்தில் கிடைக்கும் குறிப்புக்கள் தரும் ஆர்வத்தை ஜமீலா - தமிழ் மொழிபெயர்ப்புப் பொய்ப்பித்து விடுகிறது. இது ஐத்மாத்தவ்வின் தவறு அல்ல. ஒரு வினோதமான தமிழ் நடையில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதுதான் அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

ஜமீலா இளம் மனைவி. அவளது கணவன் போர்முனைக்குச் சென்று காயப்பட்டு மாதக் கணக்கில் வைத்தியசாலையில் கிடக்கிறான். ஓர் ஓவியனும் குடும்பத்தில் இளையவனுமான அவளது கணவனின் தம்பி அவளை உள்ளார நேசிக்கிறான். இடையில் எங்கிருந்தோ வரும் ஒருவனுடன் அவள் சென்று விடுகிறாள்.

நாவல் மொழி பெயர்ப்பின் கடைசி இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன.

“எனது தூரிகையின் ஒவவோர் இழுப்பிலும் தானியாரின் இன்னிசை ஒலித்திடுக. எனது தூரிகையின் ஒவ்வோர் இழுப்பிலும் ஜமீலாவின் இதயத் துடிப்பு எதிரொலித்திடுக!”
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

பகிர்வுக்கு நன்றி. இந்நூல் பற்றி இன்னும் சற்று விரிவாக அறியத்தாருங்கள்,Sir.