1993 மார்ச் மாதம் இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் வந்திருக்கிறது. 1994ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்த எட்டு இதழ்கள் என்வசம் உள்ளன. 1999ம் ஆண்டு தி. நகர் “முன்றில்” கடையில் இவற்றை வாங்கியிருந்தேன். இச்சஞ்சிகை இப்போது வருகிறதா இல்லையா என்று தெரியவில்லை.
ஆசரியர், உரிமையாளர், அச்சிட்டு வெளியிடுபவர் என்று கோ. பாஸ்கரன் என்பவர் பெயர் சஞசிகையில் உள்ளது.
ஒரு நாட்டு மக்களின் தகுதிக்கு ஏற்பத்தான் தரமான ஒரு கவிஞன் தோன்றுவான் - என்று வால்ட் விட்மன் கூறியிருக்கிறார். அதே போல் நாட்டு மக்களின் இலக்கிய தாகத்துக்கும் இலக்கிய உணர்வுக்கும் தக்கபடிதான் நல்ல இலக்கியங்களும் அவற்றைப் படைப்பவர்களும் தோன்றி வளர முடியும். தமிழ்நாட்டில் இலக்கிய உணர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது. நல்ல இலக்கியத்தை நாடுவோர் மிகக்குறைவு. பொழுதுபோக்குக்காகவும் கிளுகிளுப்புக்காகவும் கதை, கவிதைகளை படிக்கிற போக்கு மிக அதிகம். அதற்குத் தக்கபடிதான் எழுத்துக்களும் தோன்றி வளருகின்றன என்று பதில் சொல்லியிருந்தார்.
பி.நரேந்திர நாத் என்பவரின் கவிதையொன்று.
இப்படிச் சிந்திப்பவரோடு
ஜாக்கிரதையாகப் பழகுங்கள்
வானத்தில் உயரே ஒரு மாடமாளிகை
அதில் ஒரு பொன்னூஞ்சல்
அதில் நான், என் மனைவி, மக்கள்
நாங்கள் மட்டும்.
எங்களுக்கு ஒரு அட்சய பாத்திரம்
ரேடியோவும் டீவியும் சினிமா பார்க்கும்
சாதனங்களும் வேண்டும்
ஒலி, ஒளி நாடாக்கள் வேண்டும்
எனக்குப் பட்டு வேட்டியும்
அங்க வஸ்திரமும் வேண்டும்
என் மனைவிக்கு
காஞசிப் பட்டுப் புடவையும்
வைர மாலையும் வேண்டும்
என் குழந்தைகளுக்குப்
பகட்டான துணிமணிகள் வேண்டும்
இது ம்டும் போதாது
எங்களைப் பொறாமையோடு நோக்க
வானத்தின் கீழ் பெரும்
மக்கள் கூட்டமும் வேண்டும்.
(தமிழ்ச் சங்கத் தலைவர் பேரா. சபா. ஜெயாசா “சங்கத் தமிழ்” சஞ்சிகையை வழங்கும் போது)
நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமுள்ள முகில் என்கிற பரமானந்தம் நேர்காணலில் சொல்கிறார்-
தண்ணி கருத்திருச்சு
தவளைச் சத்தம் கேட்டுருச்சி
பொழுதும் உறங்கிருச்சி
புண்ணியரே வேலை விடு
என்ற பாடல் வேறொரு பகுதியில்
தண்ணி கருத்திருச்சி
தவளைச் சத்தம் கேட்டுருச்சி
பொழுதும் இறங்கிருச்சி
ஆளை களைச்சி விடு
அறிவு கெட்ட மொதலாளி
என்று மாறிப்போய் இருக்கிறது. இந்த இரண்டு மாதிரியும் இல்லாமல் சினிமாவில் -
தண்ணி கருத்திருச்சி
தவளைச் சத்தம் கேட்டுருச்சி
ஊரும் ஒறங்கிருச்சி - நாம
ஒதுங்க இடம் கெடச்சிருச்சி
என்று மாற்றி விட்டார்கள் என்கிறார்.
என்னிடமிருந்த மலர் 2 இதழ் 5ல் சு.முரளீதரன் இதயங்களை உலுக்கும் இனங்களின் அழிவு என்ற தலைப்பில் சுற்றுச் சூழல் சம்பந்தமான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதழ் 6ல் இலங்கை - மலையகக் கவிதை - தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. என்னிடம் உள்ள இதழ்களில் இலங்கையைச் சார்ந்த இவர்கள் இருவரது எழுத்துக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
(சபையின் ஒரு பகுதி)
எழுத்தாளர் கோணங்கியின் சகோதரரான ச. தமிழ்ச் செல்வன் 5ம் இதழில் நேர்காணப்பட்டுள்ளார். “வெயிலோடு போய்” என்ற கதைத் தொகுதியைத் தந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதழ்களுக்குள் இவரது பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது.
உங்கள் எதிர் கால லட்சியம் என்ன? என்றொரு கேள்வி பேட்டியின் இறுதியில் கேட்கப்படுகிறது. அவரது பதில் எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன்.
அவர் சொல்கிறார்-
ஒரு லட்சம் சிறுகதை எழுதணும். ஒரு நூறு சினிமா எடுக்கணும்.
ஒரு கனவு எனக்கு அடிக்கடி வரும். நான் மேடையிலே நின்னு பேசிக்கிட்டே இருக்கேன். எனக்கு எதிரிலே லட்சக் கணக்கான மக்கள் எனக்கு முதுகு காட்டி எழுந்து போய்க்கிட்டிருக்காங்க... அவங்களை என்னை நோக்கித் திரும்ப வைக்க முடியும். அந்த ஒரு வார்த்தையைச் சொன்னா போதும். லட்சம் பேரும் என் பக்கம் வந்துடுவாங்க... ஆனால் “அந்த வார்த்தை” என் நெஞ்சுக்கும் தொண்டைக்குமா உள்ளேயே இழுத்துக்கிட்டிருக்கு. ஆனால் வாய் வரமாட்டேங்குது...
நான் சாகிறத்துக்குள்ள அந்த வார்த்தையைக் கண்டு பிடிச்சாப் போதும்!
--------------------------------------------------
படங்கள் - நண்பர் கே. பொன்னுத்துரை
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment