Saturday, January 12, 2013

யாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு“எப்படியிருக்கிறது வாழ்க்கை?”  என்ற வினாவை வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் பலரிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன். தொழில் நிமித்தம் வாழ்பவரர்கள், ஒரு காலப் பிரிவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளானவர்கள், சுகபோகக் கனவுகளோடு வெளியேறியவரர்கள் போன்ற - தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் எனது பட்டியலில் அடங்குவார்கள். வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைமைகளில் இவ்வினாத் தொடுக்கப்பட்ட போதும் அவர்கள் அனைவரினதும் பதிலின் சாராம்சம் ஒன்றாகவே இருந்ததை நான் அறிய வந்தேன்.  “நம்ம நாடு போல் வராது!” என்பதே அவர்கள் அனைவரினதும் பதிலாக அமைந்திருந்தது.


ஒரு விமானப் பயணம் மேற் கொண்டு இலங்கைக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் பயணிகளை குறிப்பாக இலங்கையரை அவதானித்தீர்களானால் அவர்கள் அனைவரிடமும் ஒரு வித்தியாசமான அவசரத்தைக் காண்பீர்கள். எவ்வளவு விரைவாகத் தனது இருப்பிடத்தை அடைய முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது உறவுகளைக் காண முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது சூழலைச் சேர முடியுமோ, அவ்வளவு விரைவாக இயங்கி  அடைந்து கொள்ளும்  மனித மனத்தின் துடிப்பைத்தான் அந்த அவசரம் நமக்கு உணர்த்துகிறது.

நானும் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதிக பட்சம் பத்து நாட்கள் மாத்திரமே அங்கெல்லாம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்க முடிந்திருக்கிறது. நமது தேசத்தை விட எல்லா வகையிலும் முன்னேறிய, பார்த்துப் பரவசப்படக் கூடிய ஏராளமான அம்சங்களைக் கொண்ட நாடுகளாக அவை விளங்கிய போதும் நாட்கள் செல்லச் செல்ல அத்தேசங்களின் எல்லா அம்சங்களும் எல்லா அழகுகளும் எல்லா ஆச்சரியங்களும் எனக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கு அருந்திய தேனீர் கூட வயிற்றைக் குமட்டும் அளவுக்கு என்னை வெறுப்பேற்றியிருக்கிறது. அவ்வாறான நிலைமைகளில் நமதுமண்ணும் நமது உறவுகளும், நமது சூழலும், நமது நட்பும் உலகத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் எல்லாவற்றையும் விட உயர;ந்தவையாக, உன்னதமானவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன.  ஏன் நமது மண்ணின் ஒரு மிடர் நீர் கூட உலகத்தில் எங்கும் கிடைக்காத அதியற்புத பானமாக நமது உணர்வில் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனின் சொந்த இடத்துக்கு அவனது சூழலுக்கு இணையாக வேறொரு இடமும் சூழலும் அமைவதில்லை என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் உறவினர் அல்லது உடன்பிறப்பு, அல்லது நெருங்கிய பாசத்துக்குரிய ஒருவரின் நிதமான பிரிவு நம்மை தாங்க முடியாத துயரில் தள்ளிவிடக்கூடியது. என்றாலும் கூட ஒரு மாதத்தின் பின், அல்லது ஆறு மாதங்களின் பின் அந்தத் துயரிலிருந்து நாம் மீண்டு விடுகிறோம். நமது வழமையான வாழ்வுக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வின் போது அவனது மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவனது எண்ணவேட்டங்கள் எல்லோரையும் போல் வாழும் ஒரு மனிதனின் எண்ணவேட்டமாக இருப்பதில்லை. அவனது வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இந்தத் துயரம் ஒரு நுளம்புக் கடி போலபோலவோ ஒரு கட்டெறும்புக் கடிபோலவோ இருப்பதில்லை. நகக் கண்ணுள் சிதைந்த மரப்பலகையின் சிராய் ஏறிவிடுவதுபோல கல்லில் கால் மோதி கால் நகத்தைப் பெயர்த்துவிடுவது போல அவ்வப்போது அவனை வதை செய்து கொண்டேயிருக்கும். இந்த வதை அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்டட மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 22 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

இந்தக் கால் நூற்றாண்டுத் துயரம் அரசியலாக, சமூகவியலாக, பண்பாட்டியலாக, இலக்கியமாகவெல்லாம் இன்று மாற்றம் பெற்று விட்டது. வரலாற்றுக்கும் நாளைய சமூகத்துக்கும் இந்தத் துயரை எடுத்துச் செல்லவும் சொல்லலவும் பயன்படப்போவது இலக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த மகத்தான பங்களிப்பைச் செய்தவராகத்தான் நாம் நண்பர் யாழ் அஸீம் அவர்களைப் பார்க்கிறோம். எல்லா மக்கள் குழுமத்துக்குள்ளும் கவிஞர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வை அவர்களே காலத்துக்குக் காலம் படம் பிடித்து வரலாற்றுக்கும் அடுத்த பரம்பரைக்கும் வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார்கள்.வடபுல வெளியேற்றலின் வலியை, சுமையை, கஷ்டத்தை, கண்ணீரை, ஏக்கத்தை - எல்லாவற்றையுமே இலக்கியத்தில் பதிந்து வைத்துவிடும் படைப்பாளிகள் தத்தமது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நண்பர் யாழ். அஸீம் ஒரு முக்கிய சாட்சியாக நம்மிடம் இருக்கிறார். அவரது கவிதைகள் உலகிடம் இருக்கின்றன.


முதற்பிரதி வழங்கலும் பெறுதலும்

யாழ் அஸீமின் கவிதைகள் தம்மைத் துரத்தியோர் மீது காறி உமிழவில்லை. உன் இரத்தம் பார்க்காமல்  ஓயமாட்டேம் என்று சத்தியம் பண்ணவில்லை. உனது வாழ்வைக் கூறு போடுவேன் என்றோ நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்றோ சாபம் இடவில்லை. நீங்கள் ஏன் முதுகில் குத்தினீர்கள்? எங்கள் சோற்றுப் பானைகளில் ஏன் மண்ணை இறைத்தீர்கள், எங்களை ஏன் உப்புக் கரிக்கும் நீரில் உழல விட்டீர்கள் என்றே கேட்டு நிற்கின்றன. உங்களுக்கு நாங்கள் செய்த எந்த அநீதிக்காக எம்மை நெருப்புக் கிடங்குள் எறிந்தீர்கள் என்று கேட்கின்றன. அவரது கவிதை மொழியின் கேள்விகள் நீதிக்காக நிற்கும் ஓர் ஏழையின்  உடைந்த குரல். அநியாயம் இழைக்கப்பட்ட ஒருவனின் ஏந்திய கைப் பிரார்த்தனை. அழகிய பண்பாடும் கலாசாரமும் சகோதரத்துவ உணர்வும் கொண்ட ஓர் இஸ்லாமியனின் வாஞ்சை மிக்க உறுதிக்  குரல்.

யாழ். அஸீம் எத்தகையவர் என்பதைப் புரிந்து கொள்ள இந்நூலின் 80ம் பக்கம் ‘அகிம்சைப் போராளிக்கு’ என்ற தலைப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை சான்று பகர்கிறது.  அஸீம் தந்தை செல்வநாயகத்துக்கு இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

புத்தளத்துப் பள்ளி தனில் புனிதத் தலத்துள்ளே
துப்பாக்கிக் குண்டுகள் துயர் விளைத்த வேளையிலும்
இனமென்றும் மதமென்றும் பேதங்கள் பாராமல்
துடித்தெழுந்து அடலேறாய் துணிந்து குரல் கொடுத்தீர;கள்...

பாராளுமன்றத்தில் பலபேரும் மௌனிகளாய்
கைகட்டிப் பார்த்திருக்க கர்ச்சித்த சிங்கம் நீங்கள்
இஸ்லாமிய இதயங்களில் இனிய பால் வார்த்தீர்கள்
இப்போதும் எப்போதும் இதயமதை மறக்காறு!

அன்று எல்லாச் சிறுபான்மைக்குமாகப் பேசிய ஒரு முன்மாதிரிதான் செல்வநாயகம் ஐயா என்ற ஆளுமை. இன்னொரு சிறுபான்மையைக் காவு கொடுத்து விட்டு அல்லது அடக்கியாண்டு அதன்மேல் வாழ்க்கை நிர்மாணித்துக் கொள்ள நினைப்பவர்கள் எஸ்ஜேவி ஐயாவின் பாதைகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களுக்காக அவர் கொடுத்த குரலை அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர் மேற்கொண்ட கலகத்தைப் புகழும் அஸீம் என்றைக்கும் நன்றி தெரிவிக்கும் இடம் போற்றுதலுக்குரியது. ஒரு மனச்சாட்சியுள்ள உண்மைக் கவிஞனாக அவரை நம்முன்னே நிற்க வைக்கிறது.

வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில் ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது - வே. பிரபாகரன்” - இதுதான் அந்த பெனரிலே காணப்பட்ட வாசகம். அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.

90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். இந்தக் கள்ள மௌனமும் பூசனிக்காய்களை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைக்கும் செயல்பாடுகளும் வடபுலத்து முஸ்லிம்கள் விடயத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கவிஞன் தன் கவிதைகளாயே போரிடுவான். அந்தக் கவிதைகள் நிறுத்தப்பட முடியாதவை. கவிதைகளுக்காக ஒரு கவிஞன் கொலையுறுவானேயாகில் இன்னொரு கவிஞன் தோன்றுவான். அவன் தனது நியாயத்தை உலகத்தின் தர்மத்தை மதிக்கும் மக்கள் முன்னால் சமர்ப்பித்துக் கொண்டேயிருப்பான்.

உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் மற்றவர்களை மாற்றிக் கொள்ளவும் வரலாற்றைத் தமக்கு ஏற்றவாறு திருப்பி அல்லது திருத்தி எழுதவுமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மனித குல வரலாற்றின் போக்கைத் தீர்மானிப்பது தனி மனிதனோ, ஒரு இனக் குழுமமோ, ஒரு தேசமோ அல்ல என்பதை இறைவன் உணர்திக் கொண்டேயிருக்கிறான். காலம் அவனுடையது;. அவனே காலமாயிருக்கிறான். அஸீம் சொல்கிறார்:-

வரலாறு நீயா எழுதுகிறாய்?
எழுத்தாணி அவன் கையில்
ஏடும் அவன் கையில்

வல்லவன் அவன் எழுதும்
வரலாற்றின் பாத்திரம் நீ
எழுத்தாளன் அவன் எழுதும்
வெறும் வெற்றெழுத்துத்தான் நீ

வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது!

ஆட விடுகிறான்
உன் ஆட்டம் தவறினால்
அவுடடாக்கி விடுகிறான்.

அஸீம் வெளியிடும் இந்த நூலின் 92ம் பக்கம் இடம்பெற்றுள்ள கவிதை இது. 2006 அக்டோபரில் இந்த முற்றுப் புள்ளிக் கவிதையை அவர் எழுதுகிறார். கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது. ஆகக் குறைந்தது நீ கொஞ்சம் நகரலாம் என்ற முதலாவது நம்பிக்கையை துரத்தப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தியது அந்தப் புள்ளிதான். புண்பட்டுப்போன மனதுக்கு ஓர் சிறிய ஆறுதலைத் தந்தது அந்தப் புள்ளிதான். ஏக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கான பாதையில் நிற்கும் பாறையை அகற்றுகிறேன் என்று அறிவிப்புச் செய்யப்பட்ட புள்ளிதான் அது. அந்தப் புள்ளிதான் துரத்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டுவதற்காகக் காட்டப்பட்ட துருவ நட்சத்திரம்.


ஒரு புள்ளிதான் விழுந்திருக்கிறது. அந்தப் புள்ளியை மீண்டும் வைத்திருப்பதற்குப் பலர் முயற்சிக்கிறார்கள்.
அதாவது துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது ஜென்ம பூமிக்கு வந்துவிடக் கூடாது என்ற வக்கிர மனத்துடன் இன்னும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பெருந்துயர் தருவது. அதாவது வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை நாம் வழங்கமாட்டோம் என்பதை எல்லா வகையிலும் சிலர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். துரத்தபட்ட முஸ்லிம்களின் அரசியல் பிரமுகர்கள் முதற் கொண்டு சாதாரண வர்த்தகர் வரை மீள முயற்சிக்கும் எல்லோரையும் அதற்கு உதவ முயற்சிக்கும் எல்லோரையும் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அடர்ந்தேற வருவோராகவும் சித்திரித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றிலிருந்த அவர்கள் படிப்பினை பெறவில்லை என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.

பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ் .ஜெயராஜ் இப்படிச் சொல்கிறார்:-

“தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,”

ஒரு கவிஞன் நியாய தர்மங்களுக்கு அப்பால் தனது கவிதையில் பேசுவதில்லை. அப்படி ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் உண்மையான கவிஞனும் இல்லை. தனது சொந்த நடத்தையில் போக்கில் கூடுதலோ குறையோ கொண்டவனாக ஒரு படைப்பாளி இருக்கக் கூடும். ஆனால் அவனது படைப்புகளில் அவன் ஒரு போதும் நேர்மை தவறுவதில்லை. அவன் நேர;மையையும் நியாயத்தையும் மக்களிடம்; ஏந்தி வருகிறான். நேர்மையும் நியாயமும் இறைவனின் நியாயத் தராசிலிருந்து அவன் பெற்றுக் கொள்வது. அதைத்தான் மக்களின் மனச்சாட்சியின் முன்னால் வைத்து விடுகிறான். மனச்சாட்சியுள்ள மனிதர்களே இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் கவிஞனின் கவிதை விடுக்கும் செய்தி. மனச்சாட்சியுள்ளவர்கள் தர்ம நியாயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இல்லாதவர்களே மற்றவரின் மரணங்களின் மீது சாம்ராஜயம் எழுப்பவும் அதற்கு ஆதரவு தருவதற்கும் முன்னிற்கிறார்கள்.

2003ம் ஆண்டு வடகிழக்குக்குத் தன்னாதிக்க அதிகார சபையொன்றை வழங்குவதற்கு அப்போதிருந்த அரசு ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அந்த அறிவிப்பு வந்து விடலாம் என்ற நிலையில் கிழக்கில் பாரம்பரியமாக சில ஊர்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு தமிழ் விடுதலைப் போராளிகள் ஒரு செய்தியை அனுப்பியிருந்தனர். ‘நீங்களும் ஷொப்பிங் பைகயோடு எந்நேரமும் வெளியேறுவதற்குத் தயாராக இருங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அவ்வாறானதொரு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் கிழக்கு முஸ்லிம்களும் இன்று மொத்தமாக வடபுல அகதிகள் போல் முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள்.  அவ்வாறனதொரு நிகழ்வு நடைபெறாமல் போனமைக்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இடம்பெயர்ந்து வாழும் ஒரு பலஸ்தீனக் கவிஞனுக்கு ஒப்பான நிலையில்தான் துரத்தப்பட்ட வட புல முஸ்லிம்களின் பிரதிநிதியான யாழ் அஸீம் திகழ்கிறார். ஆக துரத்தப்பட்ட எல்லா மக்களினதும் பிரதிநிதியாகவே அவர் குரல் கொடுக்கிறார். இந்த அடிப்படையில் அவர் பலஸ்தீன மக்களுக்காகவும் பேசுகிறார். துரத்தப்பட்ட மக்களின் கவிஞன் என்ற அடிப்படையில் உலகத்தில் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அனைவரினதும் பிரதிநிதியாக அவர் மாறிவிடுகிறார். மத்திய கிழக்கில் அரபுலக ஆட்சியாளர்களின் சின்னத் தனத்துக்கெதிரான அவரது ஆதங்கம் ‘உரத்துப் பேச ஒரு ஒட்டகம் இல்லையே’ என்ற கவிதையில் வெளிவந்திருக்கிறது. ஆழ்ந்த அர;த்தமுள்ள இந்தக் கவிதை தினக்குரல் பத்திரிகை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சமரசம் சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்தது. அந்தக் கவிதையைக் கொண்டே யாழ் அஸீமை யாத்ரா 21வது இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, துரத்தப்பட்டு அகதி முகாம்களில் வாழும் சமூகமாயிருந்தாலென்ன - அந்தச் சமூகங்களுக்குள் இறைவன் கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உலவ விடுகிறான். ஆக ஒரு சமூகத்தின் மொத்த வாழ்வையும் அவர்கள் தங்கள் இலக்கியப் படைப்பூடாகக் கொண்டு வந்து வெளியுலகுக் காட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையில் வடபுலத்துத் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் கவிஞர்களுள் முக்கியமான ஓர் இடம் யாழ். அஸீமுக்கு இருக்கிறது. எனவே நம் எல்லோராலும் அவர் போற்றப்பட வேண்டியவர். இந்த யாழ். சமூகத்துக்குள் செல்வந்தர்கள் இருக்கலாம், பெருந்தொழில் செய்வோர் இருக்கலாம். அவர்களால் பெரும் சமூகப்பணியும் ஆற்றப்படலாம். ஆயினும் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கும் கவிஞனுக்கு யாரும் ஈடாக மாட்டார்கள் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஏனெனில் காலப்போக்கில் யாவும் மறைந்து போகும். கவிதையும் இலக்கியமும் வரலாற்றைச் சொல்லியபடி வாழ்ந்து கொண்டிருக்கும்.


யாழ். அஸீம் பதிலுரை

இப்போது நம்முன்னால் ஒரு பலஸ்தீனம் உள்ளது. தூரத்தில் உள்ள பலஸ்தீனுக்கு எவ்வாறு நமது ஆதரவைத் தெரிவிக்கிறோமோ அதை விட இரண்டு மடங்கு ஆதரவை நமது வடபுலத்துப் பலஸ்தீனத்துக்கு வழங்க வேண்டியது நமது கடமை என்று உணரவேண்டும். யாழ் அஸீம் உட்பட உலகளாவிய ரீதியில் துரத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் அனைத்துக் கவிஞர்களினதும் வேண்டுகோள் என்னவெனில் துரத்தப்பட்ட மக்களோடு இருங்கள் என்பதுதான். இதைத்தான் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாழ் அஸீமின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என்று இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் புதுக் கவிதையும் எழுதுகிறார். மரபுசார் ஓசை நயத்தை நெருங்கியும் எழுதுகிறார். மிகவும் தெளிவான வார்த்தைகளில் நேரடியாக வாசகனுடன் பேசுகிறார். அவர் எந்த வடிவத்தைத் தனக்கெனத் தேர்ந்து கொண்டார் என்பது இப்போது முக்கியமானதல்ல. அவரது எழுத்துக்குள் கவிதை இருக்கிறது, துரத்தப்பட்ட மக்களின் ஏக்கமும் கண்ணீரும் இருக்கிறது. அவர் ஒரு மக்கள் கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்று நம்புகிறேன்.

(06.01.2013 அன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் “ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேனரன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் யாழ் அஸீமின் “மண்ணில் வேரோடிய மனசோடு” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட கருத்துரை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

//யாழ் அஸீமின் கவிதைகள் தம்மைத் துரத்தியோர் மீது காறி உமிழவில்லை. உன் இரத்தம் பார்க்காமல் ஓயமாட்டேம் என்று சத்தியம் பண்ணவில்லை. உனது வாழ்வைக் கூறு போடுவேன் என்றோ நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்றோ சாபம் இடவில்லை. நீங்கள் ஏன் முதுகில் குத்தினீர்கள்? எங்கள் சோற்றுப் பானைகளில் ஏன் மண்ணை இறைத்தீர்கள், எங்களை ஏன் உப்புக் கரிக்கும் நீரில் உழல விட்டீர்கள் என்றே கேட்டு நிற்கின்றன. உங்களுக்கு நாங்கள் செய்த எந்த அநீதிக்காக எம்மை நெருப்புக் கிடங்குள் எறிந்தீர்கள் என்று கேட்கின்றன. அவரது கவிதை மொழியின் கேள்விகள் நீதிக்காக நிற்கும் ஓர் ஏழையின் உடைந்த குரல். அநியாயம் இழைக்கப்பட்ட ஒருவனின் ஏந்திய கைப் பிரார்த்தனை. அழகிய பண்பாடும் கலாசாரமும் சகோதரத்துவ உணர்வும் கொண்ட ஓர் இஸ்லாமியனின் வாஞ்சை மிக்க உறுதிக் குரல்.//

அருமை!

உங்கள் விமர்சனம் அந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது, நன்றி.