அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ரமழான் பரிசு ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்
- பஸ்லி ஹமீத் -
ஒரு சமுதாயத்தின் நடைமுறை வாழ்வியல், வரலாறு என்பவை பெரும்பாலும் இலக்கியங்களிலும் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில் ஏதோ ஒரு வகையில் அவன் வாழும் புறச் சூழல் பிரதிபலிக்கப்படுவதனால் அது நடைமுறையிலும், பிற்காலத்திலும் அவனது சமுதாயத்தை அறியப் பயன்படும் தடயங்களாக அல்லது வாழ்வியல் அத்தாட்சிகளாக மாறிவிடுகின்றன. எனவே வித்தியாசமான சிந்தனை, வாழ்க்கை அணுகுமுறைகளைக் கொண்ட பல்வேறு சமுதாயங்களுக்கிடையில் பொதுவான அம்சங்களை மேம்படுத்துவதில்; இந்த மொழிபெயர்ப்புக்கள் முக்கிய பங்காற்றுவதனால் இன்று மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப் பரவலாக வெளிவருவதுடன் அவை பெருமளவில் வரவேற்கவும் படுகின்றன.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக் கலையாகும். அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. ஒரு மொழிபெயர்ப்பாளன் தான் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்கிறானோ அந்த இரண்டு மொழிகளிலும் சம அளவிலான பரீட்சயம் உள்ளவனாய் இருத்தல் வேண்டும். ஒரு சினிமாவை மொழிபெயர்ப்பது போலன்றி எழுத்து இலக்கியத்தை மொழிபெயர்த்தல் என்பது சவாலான ஒரு விடயமாகவே இருக்கும். மூலப் பிரதியின் எழுத்துக்கள் வரைந்த அதே ஓவியத்தை மொழிபெயர்ப்புப் பிரதி வரையுமா என்பதில்தான் மொழிபெயர்ப்பாளனின் ஆளுமை அளவிடப்படுகின்றது.
இன்று உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டதாகப் பேசப்படும் நிலையில் ஒரு கலாச்சாரப் பின்னனியில் உள்ள ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தின் கலாச்சாரத்தை விளங்கிக் கொள்வதில் மொழியே முக்கிய முட்டுக்கட்டையாக நிற்பதைக் காணலாம். இதனால்தான் உலகம் தனிக்கிராமம் என்று உணரப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகளின் அவசியம் மேலோங்கி நிற்கின்றன. அந்தவகையில் மிக அண்மையில் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள 'ஓரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்' எனும் அரபுச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் இலக்கிய உலகில் மிகுந்த அவதானத்தைப் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
உலகளவில் அறியப்படுகின்ற அரபு எழுத்தாளர்கள் ஒன்பது பேரின் பத்து சிறுகதைகள் வழிமொழியான ஆங்கிலத்திலிருந்து அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வெளியீடுகளை இலக்கிய உலகிற்குத் தந்து கொண்டிருக்கும் அவரின் இம்முயற்சி அரபிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக உலகத்தின் கவனம் அரபு தேசத்தின்பால் திரும்பியுள்ள நிலையில் அம்மக்களின் இதயத்துடிப்புகளின் சில அதிர்வுகளை இத்தொகுப்பில் உள்ள கதைகள் துல்லியமான தமிழில் விளக்கி நிற்கின்றன. இக்கதைகள் அரபுப் பிராந்தியத்தின் வௌ;வேறு நாடுகளில் நீண்டகால இடைவெளிகளில் எழுதப்பட்டவைகளாயிருந்த போதிலும் தொகுப்பினை வாசிக்கும் போது சமகாலத்தில் எமது சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்; சம்பவங்கள் என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
'மஹ்மூம் சயீத்' அவர்களின் 'விசர் நாய்க் கடி' என்ற கதை, தொகுப்பில் முதல் கதையாக இருப்பதுடன் அது ஈராக்கில் சதாம் ஹுஸைனின் ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து மிகவும் அருமையாக வரையப்பட்டுள்ளது. மஹ்மூத் சயீத் அவர்களின் கதை சொல்லும் ஆற்றலை, விறுவிறுப்பாக நகரும் இக்கதையில் மிகச் சிறப்பாய் அவதானிக்கலாம். இக்கதை அதிகாலைத் தொழுகைக்கான அழைப்புடன் ஆரம்பிக்கின்றது. தொழுகை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகும். தொழுகையில்லாதவன் இஸ்லாத்தில் இல்லை என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் கதையில் வரும் தம்பதியினரைக் கொண்டு அவர்களை தொழுகையில் சிரத்தை காட்டாத ஒரு சமுதாயத்தினராகவே அறிய முடிகின்றது. அவர்கள் தொடர்ச்சியான துன்பங்களுக்கு முகங்கொடுக்க இதுவும் ஓரு காரணம் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் மஹ்மூத் சயீத் அவர்கள் அதிகாலைத் தொழுகை அழைப்பை கதைக்குள் புகுத்தியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அதே போன்றே தொகுப்பில் இரண்டாவதாக இடம்பிடித்துள்ள 'புகையிரதம்' என்ற கதையும் மஹ்மூத் சயீத் அவர்களால் எழுதப்பட்டதே. இக்கதையில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிந்திய ஈராக்கையே சொல்லியிருக்கிறார் கதாசிரியர். ஒரு புகையிரதத்தில் பயணிக்கும் நான்கு சிறார்களைப் பற்றியதே கதை. இக்கதையைச் சொல்வதற்காக புகையிரதத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது. கதை முழுதிலும் சிறார்களின் குரும்புத்தனமான செயல்கள் நிரம்பியிருக்கின்றபோதிலும் அவற்றை சிரித்து இரசிக்க முடியாமல் வாசகர்களினது உணவர்வுகளைக் கட்டிப்போடும் கதாசிரியர் ஈராக்கில் நடந்தேறிய கொடிய யுத்தத்தின் விளைவுகளை யுத்தம் பற்றி எதுவுமே கதைக்காமல் கண் முன்னே படம்போட்டுக் காட்டியிருக்கிறார். இதே போன்றே தௌஃபீக் அல்ஹகீம், தையிப் ஸாலிஹ், ஸகரிய்யா தாமிர், கஸ்ஸான் கனஃபானி, யாஸர் அப்தல் பாக்கி, ஒமர் எல் கித்தி மற்றும் பெண்களான ராபியா ரைஹான், ஜுக்ஹா அல் ஹார்த்தி போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற கதாசிரியர்களின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுவதனூடே இவர்கள் தமிழ் வாசகர்களுக்கு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
கஸ்ஸான் கனஃபானி அவர்களின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' கவசப் பீரங்கிகளின் மீது எறியப்படும் சிறிய கற்களின் வலிமையைச் சொல்லும் மற்றுமொரு கதை. ஒரு கடிதத்தின் வடிவில் எழுதப்பட்டுள்ள இக்கதையை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவரும் அது தமக்கே வந்த கடிதம் என்ற உணர்வைப் பெறுகின்றனர். பொதுவான சில பிரச்சினைகளிலிருந்து தம்மை மட்டும் தப்பவைத்து ஓட நினைப்பவர்களை கதைக்குள் கட்டி இழுக்கிறார் கஸ்ஸான் கனஃபானி அவர்கள்.
சுமார் 15 பக்கங்கள் வரை நீளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிக் கதையான 'நெடுநாள் சிறைவாசி' ஒமர் எல் கித்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் மிகச் சாதாரண வரிகளைக் கையாளும் கதாசிரியர் ஒரு சிறைச்சாலை பல்கலைக்கழகமாக மாறும் விதத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். நாகரீக மோகம் கொண்ட ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் கிண்டலடித்த காரணத்திற்காக சிறைபிடிக்கப்படுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை அவனுக்கு எதிராகவே அமைந்துவிடுவதால் சுமார் 25 வருடங்களை அவன் சிறையில் கழிக்கவேண்டி வருகிறது. இந்தக்காலப்பகுதியில் அவனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை மிகவும் தத்ரூபமாக தான் அனுபவித்ததைப் போன்று சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.
அதே போன்று இத்தொகுப்பில் இரண்டு பெண் எழுத்தாளர்களின் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றுமொறு விடயமாகும். ராபியா ரைஹானின் 'சிவப்புப் புள்ளி' என்ற கதையும் ஜுக்ஹா அல் ஹார்த்தியின் 'திருமணம்' என்ற கதையுமே அவை. இவ்விரண்டு கதைகளிலும் அரேபியப் பெண்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரு கதைகளுமே திருமணத்தைப் பற்றிக் கதைக்கின்ற போதிலும் அவை இருவேறு கோணங்களில் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பினை வாசித்து முடிக்கும் போது அது ஏற்படுத்தும் அதிர்வுகள் மிக முக்கியமானவையாக உள்ளன. ஒவ்வொரு கதையும் வாசகர் மனங்களில் நீண்ட நேரம் பதிந்திருக்கின்றன. உணர்வுகளோடு கதைக்கின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இக்கதைகளை நிரப்பியிருக்கும் சாதாரண எழுத்துக்களில் உள்ள அழகு அவற்றை உலகளவில் பேசச் செய்துள்ளன.
உதாரணத்திற்கு ஒமர் எல் கித்தி அவர்களின் நெடுநாள் சிறைவாசி கதையில் ஸாலிஹ் ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்தமைக்காக சிறைபிடிக்கப்படும்போது நிலத்தில் விழுந்து கிடக்கும் அப் பெண்ணின் காதணியை கையில் எடுத்துக்கொள்கிறான். 25 வருடங்களுக்குப் பின்னர் அவன் விடுதலையடைந்து வெளிவந்த பின்னர் அந்தக் காதணியை மீண்டும் கதைக்குள் கொண்டுவந்து வாசகர்களின் உணர்வுகளைத் தொட்டிருப்பதைக் கூறலாம். அதே போன்றே ஜுக்ஹா அல் ஹார்த்தியின் 'திருமணம்' கதையில் ஸலாமா என்ற பிரதான பாத்திரத்தை ஒரு கதிரையில் உட்காரவைத்தபடியே முழுக் கதையையும் கொண்டு சென்றிருக்கும் விதமும் அரபுக் கதாசிரியர்கள் எழுத்துக்களில் கையாளும் அழகை எடுத்துக் காட்டுகின்றன. ஒன்றை வைத்து ஒன்றைச் சொல்வது இத் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் அவதானிக்கக்கூடிய பொதுவான விடயமாக உள்ளது. ஒரு கதைக்குள் வாசகரை ஆழமாக நுழையவிட்டு அதற்குள் இருந்து இன்னும் பல கதைகளை வாசகர்களுக்கு உணரச் செய்வதே இக் கதைகளின் மிக முக்கியமான சிறப்பு எனலாம்.
அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் மொழிபெயர்ப்பை நோக்கும் போது அது அவரின் மொழி வல்லமையை மீண்டும் ஒரு முறை பறைசாற்றி நிற்கின்றது. இத் தொகுப்பில் ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் அல்லாமல் ஒன்பது கதாசிரியர்களின் கதைகளை தெரிவு செய்திருக்கும் முறையும் அவ்வொன்பது பேரின் ஒன்பது விதமான உரைநடைகளுக்கேற்ப தனது பேனாவை வளைத்துள்ள விதமும் அவரின் திறமையை தனித்துவமாகக் காட்டும் அம்சங்களாகும். இந்த ஒன்பதுவிதமான உரைநடைகளின் வித்தியாசகளைப் பேணுவது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும். இந்த வித்தியாசத்தைக் காட்டுவதற்காகத்தானோ அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மஹ்மூத் சயீத் அவர்களின் இரண்டு கதைகளைத் தெரிவு செய்து அவ்விரு கதைகளிலும் ஒரேவிதமான உரைநடையையும் ஏனைய கதைகளில் உரைநடைகள் வித்தியாசப்படுவதையும் அவதானிக்கும்படி கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்; என்று எண்ணத் தோன்றுகிறது.
அடுத்து அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் கதை சொல்லியிருக்கும் விதம் இக் கதைகள் வழி மொழியான ஆங்கிலத்திலிருந்து அன்றி மூல மொழியான அரபிலிருந்தே மொழிபெயர்க்கப் பட்டிருப்பது போன்ற உணர்வையும் தருகின்றது. ஒவ்வொரு கதையிலும் அவர் சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் வியக்க வைக்கிறது. கதைகளை உற்று வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். புகையிரதம் கதையில் பல இடங்களில் விளக்குகள் பற்றிய வர்ணனைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரே சொல்லைக் கையாளாமல் வித்தியாசமான சொற்களைக் கொண்டு வர்ணித்துள்ளமையை உதாரணமாகக் காட்டலாம். இப்படியான சின்னச் சின்ன விடயங்களில் கூட நுணுக்கங்களைக் கையாண்டிருக்கும் நூலாசிரியர் தன்னை ஒரு தலைசிறந்த மொழிபெயர்ப்பாளனாக அடையாளப்படுத்தியுள்ளார்.
அவர்கள் நால்வரும் ஒன்றாகவே நடந்து சென்றார்கள்.
அவர்களில் மூவர் பாசாலை சிறார்கள் போல பைகளை முதுகுகளில் தாங்கியிருந்தனர். பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க அவர்களில் மூத்தவளாகத் தெரிந்தவள் மட்டும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரயாணப் பெட்டியை இழுத்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் கொஞ்சம் நடப்பதும்கொஞ்சம் தரிப்பதுமாயிருந்தனர். ரயில் நிலைய மின் விளக்குகளின் வெளிர் ஒளியைப் பார்த்து வியந்து தமது நடையைத் தாமதித்தனர். என்று தொடரும் புகையிரதம் என்ற கதையைப் போன்றே அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இலகுவான, இனிமையான எழுத்துக்கள் ஒவ்வொரு கதையிலும் படர்ந்து விரிவதனால் ஒரு கதையை வாசிக்க எடுத்ததும் அது முடியும்வரை தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்படியாய் உள்ளது. அதே போன்றே ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் கதாசிரியர் பற்றிய குறிப்புக்களைத் தந்திருப்பதினூடாக வாசகர்களுக்கு அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிவும் வாய்ப்பாக உள்ளது.
அரபுலகச் சிறுகதைகளை முதன்முறையாக தமிழுக்கு மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் வாசகர்களின் அரபு இலக்கியத்தின் மீதான ஒரு பிணைப்பை நீண்ட இடைவெளிக்குப் பின் ஏற்படுத்தியிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் இத் தொகுப்பின் மூலம் மீண்டும் இலக்கிய உலகின் கவனத்தினை தன்பால் ஈர்த்துள்ளார். இருந்த போதும் இதற்கு முன் அவர் வெளியிட்ட 'ஒரு குடம் கண்ணீர்' என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பின் பாதிப்பு இன்னும் அவரைவிட்டுப் பிரியவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இத் தொகுப்பின் தலைப்பு முதல் கதைகள்; வரை இப்பாதிப்பினை உணரக் கூடியதாய் உள்ளது.
நூலுக்குப் பொருத்தமான அழகிய அட்டைப்படம் 'டெலன்ட் பிரின்டெக்கின்' பஞ்சு போன்ற காகிதத்தில் அற்புதமான அச்சுப்பதிப்பு மற்றும் புத்தகக் கட்டமைப்பு என்பன பார்த்த பார்வையிலேயே நூலுக்கு சர்வதேச தரத்தினைக் கொடுத்து நிற்கின்றன.
திருமணம் என்ற கதையில் அரபுச் சொற்களுடன் இலக்கங்களை சேர்த்திருப்பது முதலில் படிக்கும் வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. நெடுநாள் சிறைவாசி என்ற கதையில் 'இப்போதுதான் 'சேர்;தி'ன் கோவேறு கழுதையுடன் ஏற்பட்ட விபத்தில் ஒரு நூலில் தப்பி வந்திருக்கிறேன். இப்போது நீயும் வந்து மோதிவிட்டாய்!' என்று வரும் இடத்தில் இப்போது இப்போது என்று தொடர்ந்து வருவதால் ஓர் இடத்தில் சற்றுமுன் என்றோ அல்லது அது போன்ற ஒரு சொல்லையோ பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ணம் வருகிறது. மிகவும் சிரமப்பட்டுத் தேடியதில் நூலின் 8ம் பக்கத்தின் கடைசி வரியில் ஒரு எழுத்துப் பிழை இருப்பதாய் தெரிவதோடு 10ம் பக்கத்தின் இரண்டாம் பந்தியில் ஒரு சொல் தவறவிடப்பட்டுள்ளதோ என்ற சிந்தனையும் வருகின்றது.
உலகத் தரத்திலான அரபுக் கதைகளின் சுவையை அனுபவிப்பதற்கு தமிழ் வாசகர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளதுடன் அவரின் நூல்களை இன்னுமின்னும் எதிர்பார்த்து நிற்கிறது. அதற்கான சக்தியையும், ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக.
-யாத்ரா -22
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
ஆழமான ஒரு விமர்சனத்தை வாசித்த திருப்தி எழுகிறது.
//உலகத் தரத்திலான அரபுக் கதைகளின் சுவையை அனுபவிப்பதற்கு தமிழ் வாசகர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளதுடன் அவரின் நூல்களை இன்னுமின்னும் எதிர்பார்த்து நிற்கிறது. //
சத்தியமான வார்த்தைகள்!
Post a Comment