Monday, February 18, 2013

ஹலால் - ஆகுமானது!


பொது பலசேனாவுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தமது உற்பத்திப் பொருட்களைப் பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சான்றிதழ் தேவை. ஹலால் முத்திரை இல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் அவற்றின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும்
அங்கு தொழில் புரியும் எல்லா இனத்தவர்களும் பாதிப்படைவார்கள், தொழில்களை இழக்கும் நிலை உருவாகும். நாட்டின் வருமானமும் பாதிக்கப்படும்.

ஹலால் முத்திரை இல்லை என்றால் உள்ளுர் முஸ்லிம்களும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளையும் கொள்வனவு செய்யப்போவதில்லை. மிகப் பெறுமதியான ஒரு பொருள் - மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றாலும் கூட - அதில் தமக்குச் சந்தேகம் தோன்றுமாயின் அதை முற்று முழுதாக முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு நம்பிக்கைக்குரிய மாற்றுப் பொருளைத் தேடிக் கொள்வார்கள்.

இவ்விரு விடயங்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரித்தில்லாத நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். ஹலால் சான்றிதழை மறுப்பதானது பலரின் வாழ்வில் விழும் பேரிடி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உணராத ஒரேயொரு பிரிவினர் பொது பலசேனா அமைப்பினர் மாத்திரமேயாவர். அவர்களைப் பொறுத்த வரை இது பௌத்த நாடு... இந்த நாட்டில் பிக்குகள் தவிர்ந்த வேறு எந்தச் சிறுபான்மை மக்களதும் ஒன்றியம் -
அது மத ரீதியில் நாட்டின் பொது விடயங்களில் எந்த விதமான அதிகாரங்களையும் செல்வாக்கையும்  கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கருத்து நமக்கு உணர்த்தும் விடயமாகும்.

ஹலால் சான்றிதழ் நீக்கத்தால் பலரும் நஷ்டமடைவார்கள் என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கான அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைச் சொல்பவர்களது எண்ணத்தையும் கருத்திற்
கொண்டு வேறு ஓர் ஏற்பாட்டைச் செய்ய யோசிக்கலாம்.

இதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.

ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.

அவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் சான்றிதழுக்காக அறவிடும் பணத் தொகையை அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளவும் அரசுக்கு வசதியாக இருக்கும்.

இக்கருத்து பற்றிய உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

//இதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.

ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.

அவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.//

100% agreed Sir! Well said. :)