Showing posts with label ஹலால். Show all posts
Showing posts with label ஹலால். Show all posts

Saturday, March 16, 2013

கிழக்கு மாகாண சபையில் பொதுபல சேனாவுக்கு அமீர் அலி சாட்டை



இன்று 'ஹலால்' சம்பந்தமாக இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு ஓர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் கௌரவ தலைவி அவர்களேஇ முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் வரையறையோடு வாழ வேண்டிதொரு சமூகம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக 'புனித குர்ஆன்' என்கின்ற நூல் இருக்கின்றது.

அந்நூலில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள், வாழ்க்கை, அவன் உணவு உண்பது எப்படி, ஏனையவர்களோடு நடந்து கொள்வது எப்படி,  அயலவர்களோடு நடந்து கொள்வது எப்படி, அந்நிய உறவுகளோடு நடந்து கொள்வது எப்படி, அரச அதிகாரிகளோடு நடந்து கொள்வது எப்படி, அரசனோடு நடந்துகொள்வது எப்படி,  ஒரு சிறுபான்மையாக இருக்கின்ற பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,  நாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒட்டு மொத்த தெளிவினை கூறுகின்ற நூலாக முஸ்லிம்கள் அதனை நம்புகின்றார்கள்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் 'அல் குர்ஆன்' ஐ பற்றி பிரச்சினை ஒன்று வருகின்ற போது யாரும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த 'அல் குர்ஆனால்தான் கூறப்படுகின்றது  நாங்கள் எவ்வாறான உடைகள் அணியவேண்டும், எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் எவ்வாறான உணவை நாங்கள் தேடிக்கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும் வரையறையோடு அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் முஸ்லிம் ஒருவன் உண்ண வேண்டிய உணவு 'ஹலால்' என்று கூறப்படுகின்றது. 'ஹலால்' என்பது 'ஆகுமாக்கப்பட்ட உணவு' இதன் வரைவிலக்கணம் மிக நீண்ட தூரம் பேசுகின்ற வரைவிலக்கணம். 'அந்த உணவை வாங்குவதற்கு அவனுடைய உடல் உழைப்பினால், நியாய பூர்வமாக உழைக்கப்பட்ட பணத்தை கொண்டு வாங்கியிருக்க வேண்டும். தடுக்கப்பட்ட உணவாக இருக்க கூடாது அவ்வாறு கூறப்படுகின்றது'. இதை 'ஹலால்' என்று நாங்கள் கூறுவோம்.

அதேபோன்று 'ஹராம்' என்று ஒன்று இருக்கின்றது. இவை மனித குலத்திற்கு தடுக்கப்பட்ட விடயங்கள். விஷேடமாக முஸ்லிம் சமூகத்திற்கும், உலகத்தில் உள்ளவர்களுக்கும் தடுக்கப்பட்டவையாக 'குர்ஆன்' கூறுகின்றது.

'குர்ஆன்' என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரைக்கப்பட்ட நீதி புத்தகம் அல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதொரு நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சாசனம். அந்த சாசனத்தை கூடுதலாக முஸ்லிம்கள் ஏற்று அவர்களின் திருமறையாக, அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக அதனை ஏற்றுக் கொண்டு நேசிக்கின்றார்கள்.

இந்த திருமறையில்தான் ('குர்ஆன்') 'ஹலால், ஹராம்' பற்றி கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறான உணவு உண்ணப்பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு நாடுகளிலும்இ ஒவ்வொரு திட்டங்கள் காணப்படும். அங்கு உணவு தயாரிக்கின்ற முறைமை, அவர்களுடைய நடை, உடை பாவனைகள், 'ஹராம் ஹலால்' உணவில் மாத்திரம் அல்ல. நாங்கள் அணிந்திருக்கின்ற ஆடையில் 'ஹலால் ஹராம்' இருக்கின்றது. இந்த விடயத்தில் 'ஹலால்' ஆன பணத்தில் வாங்கப்பட்டதா? உண்மையான உழைப்பின் மூலம் பெறப்பட்டதா?.... என்பது போன்ற சட்ட முறைப்படி நடந்து கொள்கின்ற வழிமுறைகளையும்,  மதத்தை பின்பற்றுகின்ற வழிமுறைகளையும் இஸ்லாமியர்கள் 'ஷரிஅத்' என்று கூறுவார்கள்.

அந்த 'ஷரியா' சட்டத்தின் படி நாங்கள் நடந்து கொள்கின்றோமா, திருமணம் செய்கின்றோமா, பிள்ளை பெறுகின்றோமா, அந்த பிள்ளைகளை 'ஷரியா' சட்டத்தின் படி வளர்க்கின்றோமா, இல்லை என்றால்,  அது எங்களுக்கு 'குர்ஆன்' இல் கூறப்படுகின்றது அதற்கு தண்டனை இருக்கின்றது என்று. அயலவர்கள்; எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சரி, 'அயலவன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்'. அவன் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், பறங்கியராக இருக்கலாம் அவர் உண்ணாமல் கஸ்டத்தில் இருக்கின்ற போது நீங்கள் உண்ணாதீர்கள். உங்களது வீட்டில் வாசனையோடு உண்ணுகின்ற பொழுது எவ்வளவு தூரத்திற்கு உங்களது வீட்டின் அந்த வாசனை செல்லுமோ, அத்தனை வீட்டிற்கும் நீங்கள் திருப்திப்படுத்துகின்ற ஆத்மாவாக இருக்க வேண்டும் என்று 'குர்ஆன்' கூறுகின்றது.

இதன் அடிப்படையில்தான் 'ஹராம் ஹலால்' என்பது தவிர்க்கப்பட்டவை, ஆகுமாக்கப்பட்டவை என்ற விடயம் வருகின்றது. எப்பொழுதும் இந்த 'குர்ஆன்' ஐ முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

கௌரவ தலைவி அவர்களே...

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் தொழில்துறைகள், அவர்கள் ஆடை அணிதல், அவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் உணவு நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரியாத விடயம் அல்ல.

இந்த சபையில் இருக்கின்ற கௌரவ தமிழ், சிங்கள் முஸ்லிம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும் இது இன்று நேற்று தொட்டு வந்ததல்ல. எப்பொழுது நாம் ஒரு இஸ்லாமியனாக பிறக்கின்றோமோ அன்றிலிருந்து 'குர்அன்' சட்டம் எங்களுக்கு ஆரம்பமாக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் எமது பெற்றோர்களால் சொல்லித் தரப்படுகின்றது. அதன் பிறகு எங்களுடைய  மௌலவிகளாலும், உலமாக்களாலும் கூறப்படுகின்றது. இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு நரகத்தில் வேதனை இருக்கின்றது. இதை செய்வீர்கள் என்றால் உங்களுக்குத் சொர்க்கத்தில் நல்ல விடயங்கள் காத்துக் கொண்டிருக்கினனத என்று கூறுகின்றாhர்கள்.

இந்த நாட்டில் இருக்கின்ற, உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனை நம்புகின்றார்கள்.

நாங்கள் 'ஷரியா' சட்டத்தை நிறைவேற்றுகின்ற போது 'ஹலால்இ ஹராம்' ஐ பேணி நடக்கின்ற பொழுது ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக வாழ அவனுக்கு கிடைக்குமென்று கூறினால்,  அவர் இந்த உலகத்தில் மாத்திரமல்ல இன்னுமொரு உலகம் இருப்பதாக அதில் எங்களுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கின்ற அந்த செய்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். நாங்கள் மரணம் நிச்சயம் என நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றவாகள்;. இவ்வாறான காலகட்டத்தில்தான் நாட்டில் அவசரமாக முளைத்திருக்கின்ற ஒரு பிரச்சினை 'ஹலால் ஹராம்'. 'ஜமியத்துல் உலமா' என்கின்ற ஓர் நிகழ்வோடு கூடிய பிரச்சினை.

'ஜம்மியத்துல் உலமா' என்பது நாட்டில் இருக்கின்ற அஸ்கிரிய, மல்வத்த பீடம் போன்று முஸ்லிம் சமூகத்துக்கென்று இருக்கின்ற ஒரேயொரு சபை. நாட்டில் இருக்கின்ற உலமாக்கள் இஸ்லாமிய மதத் தலைவர்களை உள்ளடக்கிய, நிரந்தரமான ஓர் சபையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த சபைக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்ற போது ஷரிஆ என்கின்ற 'குர்ஆன்'ல் கூறப்பட்ட சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

அந்த சட்டத்தில் பிரச்சினைகள், ஏற்படுகின்ற பொழுது 'ஜம்மியத்துல் உலமா' குறித்த விடயம் இஸ்லாத்திற்கு முரணானது, குர்ஆனுக்கு முரணானது என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையன்றி ஆயுதத்தை எடுங்கள் பயிற்சி பெறுங்கள் அதைச் செய்யுங்கள், சிங்களவரை அடியுங்கள், தமிழர்களை இழிவுபடுத்துங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடையுங்கள் என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையாக நீங்கள் எப்பொழுதும் கண்டிருக்க முடியாது.

Friday, March 15, 2013

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?



ஹலாலை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சகல பௌத்த மதபீடங்களும் தெரிவிப்பதாக ஒரு செய்தி இன்று வெளியாகியுள்ளது.

ஹலால் என்பது மனித வாழ்வை நெறிப்படுத்தும் அம்சங்களையும் கொண்டது என்ற விளக்கம் மீள மீள வழங்கப்பட்ட பின்னரும் கூட பன்றியின் சினையம்சங்கள் கொள்ளாதவை மட்டும்தான் ஹலால் என்ற நிலையில் மட்டும் நின்று சிந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் புரிந்துகொள்ளத் தயாரில்லை என்பதையே அது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இல்லை, அவர்களுக்குப் புரிகிறது என்றால் இது வேண்டும் என்றே மேற்கொள்ளப்படும் விசமத்தனம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கண்ணியத்துக்குரிய தேரர்களே,

பௌத்தம் சொல்லும் பஞ்ச சீலங்களில் ஒன்று (ஐந்த ஒழுக்கங்கள்) இது.

பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

பிராணிகளை உணவுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்களும்தான் கொல்லுகிறார்கள். முஸ்லிம்கள் உணவுக்காகக் கொல்லும் மாடுகள் மட்டும் உங்கள் கவனத்துக்கு வருவதென்ன?

அதை விடுங்கள்... பௌத்த தேசம் எனப் பெருமையடித்துக் கொள்ளுகின்ற இந்தத் தேசத்தில் எத்தனை மனிதக் கொலைகள் நடைபெறுகின்றன? வாழைக் குலை திருடுபவன் பிடிபட்டு விடுகிறான். சில மனிதக் கொலைகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றனவே! இந்த மனிதக் கொலைகளுக்கெதிராக நீங்கள் என்றாவது குரல் எழுப்பியது உண்டா? இது பௌத்த தேசத்துக்கே இழுக்கு என்று நீங்கள் இதுவரை ஏன் பொங்கி எழவில்லை? ஒரு கூட்டறிக்கை விடவில்லை?

மற்றொரு ஒழுக்கம் இப்படிச் சொல்கிறது.

காமேசு மிச்சாசாரா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருக்கும்  பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக தென்பகுதி அரசியல்வாதியொருவர் விபசாரத்தை சட்டபூர்வமாக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இலங்கையில் 40,000 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் அவர் கணக்குச் சொல்கிறார். இது பௌத்த ஒழுக்கத்துக்கு இழுக்காகத் தெரியவில்லையா? கொழும்பில் இரவு பகலாக நடைபெறும் கசினோக்களில் நடப்பது என்ன உன்று உங்களுக்குத் தெரியாதா? சீனா, தாய்லாந்து, கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விலைமாதர் நடமாடும் இந்தக் கசினோக்களால் பௌத்த சீலம் கெடுவது பற்றி, கலாசாரம் சீர் குலைவது பற்றி உங்களுக்கு ஏன் கவலை ஏற்படவில்லை.

இது இன்னொரு ஒழுக்கம்.

சுரா-மேரயா-மஜ்ஜா-பமா தத்தானா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

உலகில் மடாக்குடியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நமது பௌத்த நாடும் ஒன்று என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. எவ்வளவு பெருமை பார்த்தீர்களா நமது நாட்டுக்கு? தெருக்குத் தெரு சாராயக் கடைகளால் நிரம்பி வழிகிறது நமது பௌத்த தேசம். விமானத்தில் நமது நாட்டுக்குள் நுழையுமொருவன் விசாவைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்தவுடன் கண்ணில் தெரிவது சாராயக் கடைதான். அதைக் கடந்துதான் அவன் தனது அடுத்த விடயத்துக்கு வரவேண்டும்.

இதுவெல்லாம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் ஏன் பேசுவதில்லை? குடியால் எத்தனை குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதிருக்கும் நீங்கள் இந்த நாட்டில் வெகு அற்பத் தொகையினராக வாழும் மக்களது உணவில் எந்த நியாயத்தின் அடிப்படையில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த முயல்கிறீர்கள். நாட்டையும் கலாசாரத்தையும் மனித ஒழுக்க விழுமியங்களையும் பௌத்த பண்பாட்டையும் அழிக்கும் இவ்வாறான விடயங்களில் பேசாமடந்தைகளாக இருக்கும் நீங்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் உணவின் மீதும் உடையின் மீதும் அதிகாரம் செலுத்த முனைவது எந்த வகையில் தர்மமாகும்?

மேற்குறித்த பௌத்த ஒழுக்கங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் மதிக்கிறோம்.

சுட்டிக் காட்டிப்படவை விலக்கப்பட்டவை - ஹராம் - ஹலால் அல்ல - என்கிறோம்.

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

Monday, February 18, 2013

ஹலால் - ஆகுமானது!


பொது பலசேனாவுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தமது உற்பத்திப் பொருட்களைப் பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சான்றிதழ் தேவை. ஹலால் முத்திரை இல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் அவற்றின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும்
அங்கு தொழில் புரியும் எல்லா இனத்தவர்களும் பாதிப்படைவார்கள், தொழில்களை இழக்கும் நிலை உருவாகும். நாட்டின் வருமானமும் பாதிக்கப்படும்.

ஹலால் முத்திரை இல்லை என்றால் உள்ளுர் முஸ்லிம்களும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளையும் கொள்வனவு செய்யப்போவதில்லை. மிகப் பெறுமதியான ஒரு பொருள் - மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றாலும் கூட - அதில் தமக்குச் சந்தேகம் தோன்றுமாயின் அதை முற்று முழுதாக முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு நம்பிக்கைக்குரிய மாற்றுப் பொருளைத் தேடிக் கொள்வார்கள்.

இவ்விரு விடயங்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரித்தில்லாத நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். ஹலால் சான்றிதழை மறுப்பதானது பலரின் வாழ்வில் விழும் பேரிடி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உணராத ஒரேயொரு பிரிவினர் பொது பலசேனா அமைப்பினர் மாத்திரமேயாவர். அவர்களைப் பொறுத்த வரை இது பௌத்த நாடு... இந்த நாட்டில் பிக்குகள் தவிர்ந்த வேறு எந்தச் சிறுபான்மை மக்களதும் ஒன்றியம் -
அது மத ரீதியில் நாட்டின் பொது விடயங்களில் எந்த விதமான அதிகாரங்களையும் செல்வாக்கையும்  கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கருத்து நமக்கு உணர்த்தும் விடயமாகும்.

ஹலால் சான்றிதழ் நீக்கத்தால் பலரும் நஷ்டமடைவார்கள் என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கான அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைச் சொல்பவர்களது எண்ணத்தையும் கருத்திற்
கொண்டு வேறு ஓர் ஏற்பாட்டைச் செய்ய யோசிக்கலாம்.

இதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.

ஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.

அவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் சான்றிதழுக்காக அறவிடும் பணத் தொகையை அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளவும் அரசுக்கு வசதியாக இருக்கும்.

இக்கருத்து பற்றிய உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...