Wednesday, January 15, 2014

கவிதை படிக்க வாரீகளா!


அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா

இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக இன்று 15.01.2014ல் நடந்த வலம்புரிக் கவிதா வட்டம் (வகவம்) கவியரங்கில் கலந்து கொண்டேன்.

1985ம் ஆண்டு முதல் முறையாக கொழும்பு கொட்டாஞ்சேனை முஸ்லிம் மகாவித்தியாலய வகுப்பறைக்குள் மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் பங்கு பற்றியிருந்தேன். தொடர்ந்து நடந்த சில கவியரங்குகளில் கலந்து கொண்ட ஞாபகங்கள் இன்று மீண்டும் மங்கலாக வெளி வந்தது.

புகழ்பெற்ற 'ஸெய்த்தூன்' என்ற எனது கவிதை 'எழுச்சிக்குரல்' பத்திரிகையில் வெளிவருவதற்கு முன்னர் 'வகவம்' கவியரங்கில்தான் அரங்கேற்றப்பட்டது.

இப்னு அஸூமத், இளநெஞ்சன் முர்ஷிதீன், கலையழகி வரதராணி, பாலகிருஷ்ணன், எம்.நஜ்முல் ஹூஸைன், அல் அஸூமத், கலைக்கமல், கவின்கமல் ஆகியோர் இங்குதான் எனக்கு அறிமுகமானார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த மேமன் கவி, எஸ்.ஐ.நாகூர்கனி, ஸ்ரீதர் பிச்சையப்பா போன்றோருடனான நெருங்கிய நட்பு வலுப்பட்டதும் இங்குதான்.


கவியரங்கத் தலைமை கவிஞர் கலா.விஸ்வநாதன்

கால நீரோட்டத்தில் கைவிடயப்பட்ட 'வகவம்' மீண்டும் கடந்த மாதம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. ஸ்தாபகத் தலைவர் கவிஞர் தாஸிம் அகமது, ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் ஆகியோர் கடந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டு, கவிஞர் என். நஜ்முல் ஹூஸைன், இளநெஞ்சன் முர்ஷிதீன், கலையழகி வரதராணி ஆகியோரை முறையே தலைவர், செயலாளர், பொருளாளராகக் கொண்டு கடந்த டிஸம்பரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக இலக்கிய ஆர்வலரும் விமர்சகரும் சட்டத்தரணியுமான ராஜகுலேந்திரா கலந்து கொள்ள கவிஞர் கலா விஸ்வநாதனின் தலைமையில் கவிதைகள் படிக்கப்பட்டடன.  பல்வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கவிதைகளை ஒவ்வொருவரும் அரங்கேற்றினார்கள்.

கவிஞர் கலைவாதி கலீல்

கவிஞர் கலைவாதி எழுத்து நுணுக்க உச்சரிப்புடன் தனது கவிதையை வெகு சுவையாக அரங்கேற்றினார். மேமன் கவி ஒரு படிமேலே போய் முதுகு சொறியும் தடியைச் சபைக்குக் காட்டியபடி 'முதுகு சொறிதல்' பற்றிச் சிரிப்புக்கூடாகவே சாட்டை வீசினார். கவிஞர் றவூப் ஹஸீர் இன்றைய பெரும்பான்மை அரசியல் பற்றிக் கவிதை சொன்னார். நான் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகனைப் படித்தேன். முஸ்தீனின் அமைதியான கவிதை வாசிப்பு அக்கவிதையின் ஆழத்தை நெஞ்சில் பதித்ததுடன் கவிதைத் துறையில் அவர் அடையாளப்படுத்தப்படுவதற்கான கட்டியமாக அமைந்திருந்தது.

திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹூஸைன், ஷாமிலா ஷரீப்

சமூகஜோதி ரபீக் தனது அடுக்கு வசனம் கொண்டு அலையெழுப்ப கிண்ணியா அமீர் அலி தனது மரபுக் கவிதையால் மனதைத் தொட்டார். தமிழ்த் தென்றல் அலி அக்பர், கவிதையைச் செப்பனிடுதல் பற்றிக் கவிதையில் வகுப்பெடுக்க, நாகூர் கனி  நபிகளாரின் ஹதீஸ்களில் உள்ள கவித்துவத்தைத் தொட்டுச் சென்றார். இறுதியாகக் கவிதை படித்த நண்பர் தனது சின்னச் சின்ன ஹைக்கூக்களால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

அறியப்படாத பலர் கவிதைகளோடு வந்து பங்கேற்றது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததுடன் ஒரு பெரும் கவிதை இயக்கமாக 'வகவம்' மாறிவிடும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.


கலையழகி வரதராணி, கவிஞர் நஜ்முல் ஹூஸைன், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், கலா.விஸ்வநாதன், வேலணை வேணியன், ராஜகுலேந்திரா

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீன் மற்றும் கலா விஸ்வநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

காதிபுல் ஹக் எஸ்.ஐ. நாகூர்கனியின் மேற்பார்வையிலும் ஏற்பாட்டிலும் வழங்கப்பட்ட தேநீருக்கு ஒரு தனி நன்றி செலுத்தியாக வேண்டும். மிகவும் சுவையான ஒரு தேநீர் அது.


கலந்து கொண்ட கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள்

காலை 10.15க்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு பி.ப. 1.30க்கு திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவுக்கு வந்தது.

(முதலாவது படத்தைத் தவிர ஏனைய படங்கள் நண்பர் மேமன் கவியின் முகநூல் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. இப்படங்களை எடுத்தவர் - முஸ்தீன்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Unknown said...

நீங்கள் பாடிய வவி எங்ஙேங்கோ ???