Wednesday, January 6, 2016

'ஸச்ச வொண்டர்புல் கேர்ள்!'

- 32 -


01
'நீ ரொம்ப அழகா இருக்கே..!'

'என்னைச் சந்தோஷப்படுத்த பொய் சொல்லாதீங்க.. இங்கப் பாருங்க... முகத்துல எத்தன பரு இருக்குதெண்டு...?'

'ஐயோ.. அதுதான் உன்ட அழகைக் கூட்டிக் காட்டுது... முகத்துல முத்துக்கள் பதிச்ச மாதிரி எவ்வளவு அழகா இருக்கு...!'

மேற்படி உரையாடலை தனது உரை ஒன்றில் சொல்லிக் காட்டியவர் மறைந்த பேராசிரியர் பெரியார்தாசன் அப்துல்லாஹ் அவர்கள். 

திருமணம் செய்து கொண்ட புதிதில் கணவன் மனைவிக்கிடையிலான உரையாடல் இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன அவர் சில காலம் சென்ற பிறகு மனைவியைத் தேடும் போது  'எங்க பெய்த்து இந்த மூதேவி?' என்று கணவன் கேட்பானாம் என்றார்!

02
வலீமா விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மணமகனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாகத் தொழில் புரிந்து வரும் சாதாரணர் என்ற போதும் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அறிமுகமானவர். ஒரு பெயர் பெற்ற திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வாத்தியங்களை நொறுக்கித் தள்ளிக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடல்களைப் பாடும்  கோஷ்டி விருந்து ஆரம்பமானதும் தமது குரல்களைத் தளைத்துக் கொண்டது. 

ஏறக்குறைய விருந்தின் இறுதிக் கட்ட வேளை பாடகர் கோஷ்டியின் ஒலிவாங்கியை உருவி எடுத்தார் மணமகன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். 'லேடீஸ் அன்ட் ஜென்ட்ல்மன்..' என்று விளித்தார். 'நீங்கள் எல்லாரும் வந்து எமது விருந்தில் கலந்து கொண்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி' என்றார். 'இந்தத் திருமணத்துக்காக எனது தாய், தந்தையருக்கும் (பெயர்களைச் சொல்லி) நன்றி' என்றார். 'எனது மாமா, மாமி மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கும் நன்றி' என்றார்.

அதற்குப் பிறகுதான் அந்த முக்கியமான விடயத்தைச் சொன்னார்.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி... இப்படி ஒரு மனைவி - 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - (இதுதான் ஆங்கிலத்தில் மனைவியைப் பாராட்டச் சொன்ன வார்த்தை) எனக்குக் கிடைத்ததையிட்டு நான் உண்மையில் பெருமைப் படுகிறேன்' என்றார். ''ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்னை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார்' என்றார்.

பிறகு மனைவியைச் சுற்றியே அவரது பேச்சுத் தொடர்ந்தது. 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்ற வார்த்தையை பதினைந்து முறைக்குமேல் அவர் பிரயோகித்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் நான் வாயிலை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

திருமணம் முடிந்து மூன்று தினங்கள் கூட முழுமையாக முடிந்திருக்கவில்லை.

நான் வெளியே வரும் போது கோர்ட் ஷூட் அணிந்த ஒரு இளைஞன் மற்றவனிடம் சொல்வது எனது காதில் துல்லியமாக விழுந்தது...

'என்னடா இவன்.. நட்டுக் கழன்டவன் மாதிரி ஒளத்திக் கொண்டீக்கான்?'

இரண்டே இரண்டு இரவுகளில் மணமகளைக் கற்றுக் கொண்ட மணமகனை நினைத்துப் பார்த்தேன். இந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்தவைகள் அந்த இளைஞனைப் பொறுத்தவரை புதியவை, சில வேளை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்தவை என்றும் கூடச் சொல்லலாம். இல்லையென்றால் மனைவியை முன்னிறுத்தி இப்படி அவர் பொங்கி வழிந்திருக்க முடியாது!

03
அது சரி... இனி அதுக்கென்ன என்று ஒரு கேள்வி உங்களுக்குள் இப்போது கொக்கி போட்டிருக்க வேண்டும்.

பெரிதாக ஒன்றுமில்லை.

இன்றைய தலைமுறையின் ஒரு பகுதியினர் - அரசியல், மார்க்கம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கும் பிரதிபலிப்பதற்கும் மணமகனின் 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - என்ற பொங்குதலுக்குமிடையில் வித்தியாசங்கள் எதுவுமில்லை என்று சொல்ல வந்தேன்!

06.01.2016
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: