Friday, January 10, 2020

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'எனக்குள் நகரும் நதி'


நூல் அறிமுகம் : முஹம்மத் றிழா

பத்திரிகைப் பத்திகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி, அஷ்ரஃப் சிஹாப்தீனின் இரண்டாவது பத்திகளின் தொகுப்பாகும். இவரது முதலாவது பத்திகளின் தொகுப்பாக தீர்க்க வர்ணம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இந்த தொகுப்பு பல்சுவை பத்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இந்த பத்தித் தொகுப்பிற்கும் தற்போது வெளிவந்துள்ள பத்தித் தொகுப்பிற்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு. இதனை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்கிறார். தீர்க்க வர்ணம் பத்தித் தொகுப்பில் இடம்பெற்ற பத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை. முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விடயங்கள் குறித்தே எனக்குள் நகரும் நதியை நான் எழுதினேன் என்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இலங்கையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் தமிழ்மொழி பத்திரிகையான மீள்பார்வைப் பத்திரிகையில் அஷ்ரஃப் சிஹாப்தீன் பத்தி எழுதினார். அவருக்கென தனியான பகுதியொன்றை மீள்பார்வை வழங்கியிருந்தது. அவர் அப்பத்திரிகையில் எழுதிவந்த காலங்களில் அவரது பத்தி எழுத்துகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்ததை நான் அறிவேன். மீள்பார்வை பத்திரிகையை தொடர்ந்து வாசித்த அனுபவம் எனக்குண்டு என்ற வகையில் நூலாசிரியரால் எழுப்பப்பட்ட கேள்விகள் முஸ்லிம் சமூக, சமய செயற்பாட்டாளர்களுக்கு நெருடலாக அமைந்திருக்கும் என்பது திண்ணம். அவர் இந்த பத்தி எழுத்துக்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யுமாறு, தனக்கான மொழியில் அழகுறச் சொல்லியிருப்பார். இது அவருக்கேயான தனித்தன்மை என்று கருதுகிறேன்.

எமது பிரதேச எழுத்தாளர்களில் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை நான் புரிந்துகொண்டது ஏனைய எழுத்தாளர்களைச் சங்கடத்திற்கு உட்படுத்தும் என்றிருந்தாலும்,அவர்களை விட இவர் வித்தியாசப்படும் புள்ளியை இங்கு பதிவுசெய்துதான் ஆகவேண்டும். இதனை ஏனைய எழுத்தாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எனது நம்பிக்கை மனங்கொள்கின்றது. எமது பிரதேசத்தில் 80களில் எழுதவந்த எழுத்தாளர்களுள் எதுவித சோர்வுமின்றி இன்றுவரை எழுதியும் நூல்களை வெளியிட்டும் வருவர் அஷ்ரஃப் சிஹாப்தீன். இந்த மன உறுதி அவரிடம் இருப்பதே என்னை அவர் மீது ஈர்க்க பிரதான காரணமானது. அவரது ஏனைய அனைத்து நூல்களையும் வாசிக்க முடியாது போனது எனது துரதிஸ்டம். அவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க முடியாது போனதால் அவர் பயணித்துவந்துள்ள கருத்தியல் தளத்தினை என்னால் ஆழமாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் இந்த நூல் குறித்தான எழுதுகையை அறிமுகக் கட்டுரையாகவே அமைத்து கொள்ள வேண்டிய நிலை எனக்குள் ஏற்பட்டது.

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைபாளியும் ஒளி, ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் பன்முக ஆளுமை கொண்டவர். 1978ம் ஆண்டு தினபதி பத்திரிகையின், தினபதி கவிதா மண்டலம் பகுதியில் தனது முதலாவது மரபுக் கவிதையை எழுதுவதன் மூலம் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுத்துலகத்திற்குள் வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து,பயண அனுபவ குறிப்புகள், முகநூல் எழுத்து என்று எழுத்தும் செயற்பாடும் என தன்னை வடிவமைத்துக் கொண்டார்.இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலமும் இலங்கை ஒளி, ஒலிபரப்பாளர் தளத்தில் தனக்கான இடத்தை தடம்பதித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் (1999), என்னைத் தீயில் எறிந்தவள் (2008),தேவதைகள் போகும் தெரு (2018)ஆகிய கவிதைத் தொகுதிகளையும்,புள்ளி (2007), கறுக்கு மொறுக்கு - முறுக்கு (2009),புல்லுக்கு அலைந்த மில்லா (2009) ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களையும்,விரல்களற்றவனின் பிரார்த்தனை (2013) எனும் சிறுகதை தொகுதியையும்,உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை) (2007), ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011), பட்டாம்பூச்சிக் கனவுகள் (சிறுகதை) (2015),யாரும் மற்றொருவர் போல் இல்லை (கவிதை) (2017), வெய்யில் மனிதர்கள் (நாவல்)(2019) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும்,பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான தீர்க்க வர்ணம் (2009),பயண அனுபவ குறிப்பான ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (2009),உண்மைக் கதைகளின் தொகுப்பான ஒரு குடம் கண்ணீர் (2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரதுஎன்னைத் தீயில் எறிந்தவள் கவிதை தொகுதிக்கும், பட்டமாம்பூச்சிக் கனவுகள் சிறுகதைத் தொகுதிக்கும் அரச சாஹித்தய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஓட்டமாவடி அஷ்ரஃப் எனும் பெயரில் ஆரம்பத்தில் எழுத்திய இவர் பின்னர் அஷ்ரஃப் சிஹாப்தீன் என தனது பெயரை மாற்றி கொண்டார். யாத்ரா எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்சிகையின் ஆசிரியராகவுள்ளார். தற்போது இலக்கிய படைப்புகள் ஒலித் தொகுப்புகளாக வெளிவந்து கொண்டுள்ள சமகாலத்தில் யாத்ரா சஞ்சிகையினை இணைய ஒலிச் சஞ்சிகையாக வெளியிட்டு வரவேற்பையும் பெற்றுக் கொண்டார். நாட்டவிழி நெய்தல் எனும் பெயரில் தனது எழுத்துகளை வலைப்பதிவில்; பதிவேற்றமும் செய்துவருகின்றார்.

யாத்ராவின் பதிப்பதில் வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி பத்திரிகைப் பத்தியை தனது தந்தை வழிப் பாட்டனார் மிஷின்கார லெப்பை என அறியப்பட்ட மீராலெப்பை ஆலிம் அவர்கள் நினைவுக்கு என சமர்ப்பணம் செய்துள்ளார். 26 தலைப்புகளை உள்ளடக்கியுள்ள இந்த நூல் பல்வேறு விடயங்களை பேசுகிறது.

எழுத்துச் சேவை, மொழியாள்கை,மன்னரே முதல்வர், ஒரு நாடகமன்றோ நடக்குது,கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்,வற்றாத கடலில் ஓயாத அலைகள்,தெற்கே உதித்த சூரியன்,கண்ணுக்குத் தெரியாத கபட வலை,முகத்திரண்டு புண்ணுடையார்,நுணலும் தன்வாயால் கெடும்,மூக்குகளால் சிந்திப்பவர்கள்,குகைவாசிகள்,நடத்தை காட்டும் நல்வழி, நீ சொன்னால் காவியம்,அவனன்றி அணுவும் அசையாது, அடைந்துகொள்ளப்படாத ஆயுதம்,எல்லைக்குள் எட்டப்படா இடங்கள், மூன்று காட்சிகள், வேர்கள் இறக்கும் விதம், அவளுக்கும் அழுகை என்று பெயர், நோன்புக் குழந்தைகள், அஸ்ஸலாமு அலைக்கும், ஆர்ப்பரிக்கும் ஆசை, ஹஜ் - காசாகி நிற்கும் கடமை, உன்புகழ் கூறாத சொல்லறியேன், அனல் ஹக் ஆகிய தலைப்பில் இந்நூல் பேசுகிறது.

எழுத்தாளனின் பற்றிய சமூகப் புரிதல்,ஒவ்வொரு இஸ்லாமிய முகாமும் இஸ்லாமிய சிந்தனைக்கு முழு வடிவம் கொடுக்காது தங்களை முழுவடிவமாக சமூகத்தில் அடையாளப்படுத்தியதால்; ஏற்பட்ட விளைவுகள், அறபிகளின் அரசியல், பழங்காலப் பெருநாள் கொண்டாட்டமும் அதை தடுத்துநிற்கும் நிலமற்ற வாழ்வியலும், பிரிந்துள்ள முஸ்லிம் அரசியலும் தேர்தலின் பின்னரான உறவும், எகிப்திய ரிஹாம்களாக மாறும் மனங்கள், மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் குறித்த பதிவு, போதைப்பொருள் பாவனையும் சமூக சீரழிவுகளும், பௌத்த போதனையிலுள்ள இஸ்லாமிய வாழ்வு, சிக்கலும் பிரச்சினையும் நிறைந்த குடும்ப வாழ்வை திருப்தியாக வாழ்தல், பிள்ளை வளர்ப்பு, வறுமையும் உதவியும், அன்பு கொள்ளச் செய்யும் தாஈ றபீக், கருத்தை ஏற்றலும் மதித்தலும்,மருதூர் ஏ மஜீதின் மஞ்சமாமாவும் நம்மிடமுள்ள புரிதலும், கவிஞர் கா.மு. ஷரீப் என்ற அற்புதமான கவிஞர் குறித்த பார்வை, மஹ்மூத் தர்வீஷின்யூஸூப் (அலை) பற்றிய கவிதை சொல்லும் செய்தி, ரமளான் மாதமும் நகர் வாழ்வும், பாவம் செய்தல், பெண் கல்வி, நோன்பு, சீர்திருத்தம் வேண்டிநிற்கும் குத்பா பிரசங்கம், இலாபமீட்டும் தொழிலாக மாறியஹஜ் கடமை, வைக்கம் முகம்மது பஷீரின் அனல் ஹக் சிறுகதையும் நாமும் போன்ற விடயங்களை பிரதான பேசு பொருளாக்கியுள்ளார் நூலாசிரியர்.


நுணலும் தன் வாயால் கெடும் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு எழுதுகிறார். 'எந்த ஒரு நிலையிலும் ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை அவனது தாய், தந்தையரை, குடும்பப் பாரம்பரியத்தை, அவனுடைய வளர்ப்பை, அவன் படித்த பாடசாலையை, கற்பித்த ஆசிரியர்களை, அவனுடைய சூழலை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளை,புரிந்துணர்வையெல்லாம் பிரதிபலிக்க கூடியது.' இதனை சொல்லிவிட்டு தேர்தல் காலம், சமூக வலைத்தள பாவனை, தற்கால இளைஞர்களின் நிலை குறித்தும் தொடர்ந்து பேசுகிறார். இஸ்லாம் சொல்லும் வாழ்வு அற்ற நிலை மேலோங்கியுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது என்கிறார்.

இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் குறித்த சரியான புரிதல் ஏனைய சமூகங்களிடம் இல்லாது போக நாமே முதலாவது காரணமாக இருக்கின்றோம் என்ற செய்தியை இவரது பத்திகள் எமக்குச் சொல்லிவிடுகின்றன. ஏனைய சமூகங்களுடன் வாழப் பழகும் வாய்ப்பு இருந்தும் நாம் அதை சரியாக உறவாடவில்லை. இதனால் பல சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. சுயநல கொள்கைகளையுடைய முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் தங்களின் இஸ்திரத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள கூட்டமைப்புகளாக மாற தற்போது எத்தனிக்கின்றன. கருத்தியல் வறுமையால் பாதிப்புற்றுள்ள அமைப்புகள் எல்லாம் கூட்டமைப்புகளாக மாறியும் எந்தவித விடிவும் சமூகத்திற்கு ஏற்படப்போவதில்லை. எம்மை மீள் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு இவரது பத்தி நமக்கு வாக்கு மூலமாக உள்ளது. இந்த நூல் சொல்லும் கருத்துகள் ஊண்டிக் கவனிக்கப்படவேண்டிவை.

எல்லா சமூகங்களும் அனுபவிக்கின்ற நிம்மதியின்மை, தோல்வி, வறுமை, தொழிலின்மை, குடும்ப உறவு, மகிழ்ச்சி போன்ற கூறுகள் எல்லாம் முஸ்லிம்களும் அனுபவித்து வருகின்றனர். அனைவரிடமும் உள்ள பொதுப் பண்புகள் எல்லாமாக ஒன்று சேர்ந்துதான் இலங்கைத் தீவில் பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களையும் அவர்களது வாழ்வியல் கோலத்தினையும் மாற்றுகின்ற அரசியலும், மதமும் கொண்டுள்ள அரசியலை தகர்க்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். இந்த பொறுப்பை ஏற்பது நாட்டு மக்களின் கடமையாகும். இதனை நூலாசிரியர் பின்வருமாறு சொல்கிறார்.

'நமது நாட்டைப் பொறுத்தவரை அண்மைக் காலக் கலவரங்களை ஆராய்ந்தால் இரண்டு வகையான பிரிவினர் இவ்வாறான கலவரத்தில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடியும். 01. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர். அநேகமாகவும் கல்வியறிவில் குறைந்தவர்கள். 02. அரசியல்வாதிகளின் கையாட்கள், அவர்களால் கூலிக்கு அமர்த்தப்படுபவர்கள். வறுமையில் உழலும் கல்வியறிவில் குறைந்தவர்கள்தாம் எப்போதும் உணர்ச்சிவசப்படக் கூடிய நிலையில் உள்ளவர்கள். இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று அறியாதவர்கள்..அறிவு கிடைக்கும் போது தெளிவு கிடைக்கும். தெளிவு பெற்றவன் ஒரு செயற்பாட்டுக்கு முன் பார்வையை எல்லாப் புறத்திலும் செலுத்துவதற்கு முனைவான்.' என்கிறார்.

ஒரு நாடகமன்றோ நடக்குது என்ற தலைப்பில் இப்படிவரும் 'கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கின்றோம். இஸ்லாத்தினது நல்லம்சங்களை, குர்ஆன் போதனைகளை, நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வியலை, மக்கள் கொள்ள வேண்டிய தெளிவை, தமது சமூகத்திக்கெதிரான சதிகளை எல்லாம் மக்கள் முன் இலகுவாக எடுத்துச் சொல்லக் கூடிய அற்புத சாதனம்தான் நாடகம். ஆனால் அது பற்றி யாரும் அக்கறைப்படுவதில்லை.' ஆரம்ப காலத்தில் எமது பிரதேசங்களில் நாடகங்களை பொது வெளிகளில் இடம்பெற்றன. நாடகங்களை இயற்றவும் நடிக்கவும் ஆட்கள் இருந்தனர். பெருநாள் தினங்களில் இது கலைகட்டியது.

அந்த பத்தியில் அவர் இதனை அழகாக சொல்லுவார். 'அக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள வீடுகளிலேயே வானொலிப் பெட்டி இருந்தது. தொழிலுக்கு உழைத்தல் தவிர அன்றைய மனிதருக்குத் தமது ரசனைப் பசிக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. எனவேதான் பெருநாள் தீனிசையிலும் நாடகங்களிலும் மக்கள் வருடத்துக்கு இருமுறை மனதைப் பறி கொடுத்து மயங்கி நின்றார்கள். நாடகங்களைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டன. வீட்டுக்குள்ளே குறுந்திரைகளில் வருடக் கணக்காக சீரியல் ஒடுகின்றது. சீரியல் நாடகங்கள் மனோ வக்கிரதை ஏற்படுத்தி மனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார் உளவியல் பேராசிரியரான மறைந்த பெரியார்தாசன் அப்துல்லாஹ்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கின்றோம்.' என்கிறார். மாற்று துறைகள் பற்றி எழுத்துக்கள் எவை வந்தாலும் மன நிம்மதிக்கு பயான் ஒன்றை கேளுங்கள் என்று சொல்லி விடைபெறும் சமய அமைப்புகளும் இதற்கு பொறுப்புதாரிகள் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

மேலும், இவரது பத்திகள் கருக்கொண்டுள்ள விடயங்களை எழுத்தில் கையாளும் முறை அலாதியானது. அனைத்துப் பத்திகளின் முடிவும் கனதியான செய்தியைச் சொல்வது மாத்திரமல்லாது மகிழ்விக்கவும் செய்கிறது. இந்த அருமையான நூலை வாசித்து கருத்துப் பரிமாறிக்கொள்ளவது அவசியமான பணியாகும்.



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: