Friday, January 17, 2020

மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் 'நிழலைத் தேடி'



மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'நிழலைத் தேடி'யை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'ஜலசமாதி' 2008 இல் வெளிவந்திருக்கிறது.

ஏ.எஸ். உபைத்துல்லாஹ் ஒரு நல்ல சிறுகதையாளர் என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். 2016ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு சம்பந்தமான பிரதேசவாரியான எழுத்தாளர் சந்திப்பின் போது ஒரு மாலை வேளை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

திருமலை மாவட்டத்தின் இயற்கை அழகு, கடலும் ஆறும் அண்மிய நிலம், அப்பிரதேச ஊர்களின் கடந்த காலமும், நவீன மயப்படுதலும், அப்பிரதேச மக்களின் ஒற்றுமையான வாழ்க்கை, சுனாமி, இனப்பிரச்சனை ஏற்படுத்திய வடுக்கள், இடப்பெயர்வின் துயரம், மீள்குடியேற்றமற்றுச் சீரழியும் ஏழை - எளியவர்களது வாழ்க்கை, சிறிய வரலாற்றுக் குறிப்புகள், பிரித்தாளும் அரசியல் தந்திரங்கள், பிரதேச கல்வி என்றெல்லாம் நிறைய விடயங்களைத் தனது கதைகளுடே உபைத்துல்லாஹ் பேசுகிறார். திருமலையும் அதனுள்ளடங்கும் பிரதேசங்களும் நீர் வளம் நிரம்பியவை என்பதால் அவரது கதைகளில் கடல், ஆறு, கிணறு என்று நீர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

'தண்ணீர், தண்ணீர்' இத்தொகுதியின் முதலாவது கதை. குடும்பத்தில் வலது குறைந்த பிறந்த,  ஒரு பக்கம் காலை இழுத்துக் கோணி நடக்கும் மம்மறாயன் - முகம்மது இப்றாஹீம் -  நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியமுடையவன்.  அக்காலத்தில்  வீடுகளில் உள்ள கிணற்று நீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தபடியால் மக்கள் குடிநீருக்கு அலைந்த போது தூரத்தே இருந்த நன்னீர் கிணறுகளில் நீர் பிடித்து வந்து வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் கொடுப்பதைப் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். குடங்களில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு தள்ளு வண்டியை ஒரு நல்லவர் கொடுக்கிறார். ஏழ்மை நிறைந்த அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது ஒரே வருமான வழியும் இழக்கப்பட்ட நிலையிலும் வலது குறைந்த மம்மறாயன் மனைவியிடம் சொல்கிறான்.. 'பாத்தும்மா யோசிக்காத... இந்த உலகத்துல தண்ணி யாவாரம் மட்டுந்தான் ஒரு தொழிலா? எத்தனையோ தொழில் இருக்கு.. நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கொள்ளுவம்..!'

'கொடி பறக்குது' என்ற கதை வெள்ளை மணல் அருகே இருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல், அங்கு வருடா வருடம் விழாவாக நடக்கும் கந்தூரி, பெயர் தெரியாத நாற்பது முழ அவுலியா (இறைநேசர்) அடக்கஸ்தலம், அதனோடு இணைந்த 1815ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை ஜூனைதீன் என்ற முதியவர் நினைவு கூரும் கதை. இப்போது இந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லி ஒரு பெருமூச்சுடன் முடிவடைகிறது.

நீண்ட நெடுங்காலமாக மூதூர், கிண்ணியா பிரதேசப் பயணத்தைத் தோணி மற்றும் மிதவை மூலம் கடந்த மக்கள் பாலங்கள் அமைக்கப்பட்டதும் அதில் ஒரு சுற்றுலாத் தலம் போல் போய் நின்று மகிழ்ச்சியனுபவித்ததையும் பாலங்கள் அமையுமுன் எப்படியெல்லாம் மக்கள் சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது 'நீலக் கடல் தாண்டி' என்ற கதை.

'ஓயாத அலைகள்' என்ற கதையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு தினத்தில் சென்று கற்பிக்கும் சேவையைச் செய்து கொண்டிருப்பதையும், சிறு வகுப்பு முதல் ஏ.எல் வரை நடக்கும் டியுஷன் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதையும் பேசுகிறது. பாடமற்ற வேளை வேறு ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை அதிபர் கோர, அதை மறுத்துப் பேசும் ஆசிரியர் ஒருவருக்கு உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தரமுயரும் கடிதம் வருவதோடு கதை முடிகிறது.

மிக அண்மைக் காலம் வரை அறபிகள் பள்ளிவாசல் கட்டித் திறப்பதற்காக வருவதும் அந்தப் பள்ளிகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கு வீடுகள் இல்லாத நிலையில் வாழும் மீனவர்கள் பற்றியதுமான கதை 'ஏமாற்றம்.'  'ஊர் துறந்து' என்ற கதை புலிகளுக்கும் அரச படையினருக்கும் நடந்த ஷெல், மோட்டார் வீச்சில் மரித்தவர்களதும், ஊர் துறந்து அகதிகளாகச் சென்றவர்களதும் கதை. 'நிழலைத் தேடி' என்ற கதையும் இனப் பிரச்சனை காரணமாக ஊர் துறத்தலைத்தான் பேசுகிறது. ஆனால் மூவின மக்களும் எப்படித் தத்தம் தொழிலைச் செய்தபடி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைப் பேசும் ஓர் அருமையான கதை இது.

'வாயில்லாப் பூச்சிகள்' வீடற்ற பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் நிராகரிக்கப்படுவதையும் 'வாழத்துடிப்பவர்கள்' என்ற கதை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்பும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதையும் பேசுகிறது.

'அம்மா என்றால் அன்பு' என்ற கதை பாடசாலையில் கொடுக்கும் கஞ்சியை வீட்டிலிருக்கும் தாயாருக்கு எடுத்துச் செல்லும் வறுமைப்பட்ட குடும்பச் சிறுமி பற்றியது.

 மூதூரின் நொக்ஸ் வீதிக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதை கப்பல் மாலுமியான நொக்ஸின் வருகை தந்ததை வைத்து உண்டாகியிருக்கிறது என்பதை ஒரு கதையிலும் மலை நாட்டில் இருந்த ஜேம்ஸ் என்ற ஒரு வெள்ளைக்காரன் பொழுது போக்குக்காக திருமலை வந்து அங்கேயிருந்த ஒரு பிரதேசத்தில் தெங்குத் தோட்டம் அமைத்ததையும் அதில் கூலிக்கு வேலை செய்தவர்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளிலும் சாதாரண மக்களின் வாழ்வியல் உபைத்துல்லாஹ்வினால் எடுத்துக் காட்டப்படுகிறது. தான் வாழும் பிரதேசம் பற்றிய அவருடைய ஆழமான அறிவு விதந்துரைக்கத்தக்கது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: