Monday, January 13, 2020

கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?


கவிஞர் சோலைக்கிளி 

இந்தப்பிரதேசத்தின் முக்கியமான படைப்பாளி ஒருவரின் நிகழ்வில் சிறப்புரையாற்றுவதையிட்டுமகிழ்ச்சியடைகிறேன்.

சிறப்புரையாற்றுவது சந்தோசமான ஒரு விடயம்தான். வெளியீட்டுரை, விமர்சன உரை, நன்றி உரை, வரவேற்புரை, போன்று ஓர் எல்லைக்குள் நின்று பேசத்தேவையில்லை. காற்றுமாதிரி அங்கும் இங்கும் அலைந்து பூக்களைப் பொறுக்கிக் குவிக்க வேண்டிய ஒன்றுதான் சிறப்புரை. சிறப்புரை ஆற்றுகின்றவனும், அந்த உரையை நிகழ்த்தும்போது ஆனந்தப்படுவான். நான் ஆனந்தப்படவில்லை! இது ஆனந்தப்படுகின்ற ஒருநேரமில்லை.

விடிந்தால் என்ன நடக்குமோ என்று எழும்புகின்றோம். விஷக்காற்று வீசி நமது ஈரல்குலைகள் அழுகிப்போய் இருக்கின்றன. நமக்கு உள்ளிருக்கும் குயில் இப்போது பாடுவதை நிறுத்தியிருக்கிறது. நமது மனதின் புல்வெளி கருகிப்போனது. எப்படி சிறப்புறையாற்றலாம்? சிரித்த முகத்தோடுஎப்படி சபையில் பேசலாம்? எப்படி ஆனந்தம் அடையலாம்?

என் அன்புக்குரியவர்களே! அஸ்ரப் சிஹாப்தீன் முக்கியமான ஒரு படைப்பாளி. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு,  நிகழ்ச்சித் தயாரிப்பு என்று பல பக்கங்களைக் கொண்டவர். பல பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதைப் போல, பல பக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிப் பேசுவதற்கும்: அவகாசமும் ஆறுதலான சூழலும் அச்சமில்லாத நிலமையும்  நமக்கு வாய்க்க வேண்டும். இன்று இவைகள் நம்மத்தியில் உள்ளனவா? வெள்ளைக் காகிதத்தைக் கசக்கி எறிந்ததைப் போல விஷக்காற்று நம்மை கசக்கி எறிந்து விட்டதல்லவா?. நாம் குப்பையில் உருளுகின்ற கடதாசிகளைப் போல ஆகிவிட்டோம். நம்மை ஏறி மிதித்துக் கொண்டு கால்கள் நடக்கின்றன. கவிஞன் எப்படி இந்தக்  காலத்தில்நிலா பார்ப்பான்?. அழுகிய தோடம் பழம் போல நிலவு கண்ணீர் வடிக்கிறது. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே! நான் எப்படி இங்கு சிறப்புரையாற்ற முடியும்? ஆனந்தப்பட முடியும்?

நான் மனமிழந்து போன மனிதனாக இருக்கிறேன். என் அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது. விடிந்தால் வாசலுக்கு வந்து விரிந்திருக்கும் மல்லிகைப் பூவை ரசித்தநான், இப்போது வெயிலேறிய பிறகுதான் வாசலுக்கு வருகிறேன். எதிலும் பிடிப்பற்றுப் போன கூதல் பிடித்த பூனையைப் போல வாசலை முகர்கிறேன். காலையில் மனைவி தரும் தேநீரின் ஆவிபறக்கும் போது இரவு ஏதோ ஒன்று பற்றி எரிந்திருக்கிறது என்ற எண்ணம்தான் வருகிறது. ஒருகிழவனைப் போல மனம் சதாவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சுவை குன்றிப் போன ஒரு காலமாக இது இருக்கிறது. பத்திரிக்கைகளைப் பிரித்தால் அனேகமாக எல்லாம் அபத்தமான,அச்சம் தரும் செய்திகளாக இருக்கின்றன. யாருடன் யார் கம்பி நீட்டினான் என்ற இனிப்பானசெய்திகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தச் செய்திகளில் சுவை இல்லை. எந்தமணமகனுக்கு எந்த மணமகள் பொருத்தம் என்று பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் பார்த்து கணித்து மகிழ்ந்த எனக்கு, இப்போது வேலை இல்லை. யாரும் இப்போதுகம்பி நீட்டுவதில்லை. அதைப் பிரசுரிக்க பத்திரிகைகளில் இடமும் இல்லை. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? மேடையில் ஒருகுருவியாக நான் எப்படிப் பறப்பது?

 இதற்குள் நாங்கள் எழுதுவதே ஒரு போராட்டமாக இருக்கிறது. அச்சத்துள் வாழ்ந்து அச்சத்தையே சாப்பிடுகிறோம். அச்சத்தால் ஆடைகட்டுகிறோம். பேனைக்குப் போராட்டம் பிடிக்கும். அதனால் அது சோரவில்லை. நாம் தான் சோர்ந்து  விட்டோம். அஸ்ரப் சிகாப்தீன் துணிச்சலான ஒருபேனைக்காரன். இந்தச் சூழலிலும் அவர்  நிமிர்ந்து நிற்பவர். வாயால் கதையளந்து பெரியஎழுத்தாளனாக முயற்சிக்காதவர். எழுத்தோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மண்ணில் அவருடைய இரண்டு புத்தகங்கள் இன்று வெளிவருகின்றன. சொந்த மண் எல்லோருக்கும் சுவையானது. அதில் ஒட்டும் கொசுக்கள்தான் நாங்கள் எப்போதும். இதில் என்னை சிறப்புரையாற்றக் கேட்டிருக்கிறார்கள். எப்படி சிறப்புரையாற்றுவது? நான் தண்ணீராக ஓடுவது? இப்போது முடியுமா?

நாம் எப்படித்தான் எழுந்து நின்றாலும், உன்னிப் பறக்கும் சிறகுகள் சோர்ந்துவிட்டனவே!. நாம் எப்படித்தான் நம்மை தயார் செய்து எடுத்தாலும் நாமாக  நடக்கமுடியாமல் இருக்கிறதே! நமது சோற்றுப் பாத்திரங்களில் காகங்கள் குந்திக் கழிக்கின்றனவே! நமது விளை நிலங்களில் எருதுகள் படுத்து பயிர் செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்கின்றனவே! பன்றி வயற்காரனை வெட்டிவிட்டுப் போகிறது. இரவுகளில் நான் பாடிவைத்துவிட்டுப் படுத்த கவிதையைக் காலையில் தேடினால் காணவில்லை. அது களவு போய் இருக்கிறது.  நண்பர்களின் முகங்களில் சிரிப்புகள் போனதைப் போல, என் மேசை வாடிக்கிடக்கிறது. புன்னகைகள் ஊரில் ஒறுத்துப்போய் விட்டன. பதர்கள் உசும்புவதைப்போல மக்கள் உசும்பித் திரிகின்றார்கள். நெல் மணிகள் குறைந்துவட்டன. வயல் செய்தவன் வெறுங்கையோடு வீடு வருகிறான். கவிஞனைப் போல! 'கலவெட்டியில்' பிச்சை கொடுக்கவும் என்னிடம் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சிக்கு பிச்சை எடுக்கின்ற ஒரு காலம் வந்துவிட்டது. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? என் கவிஞனை விட்டுவிட்டு நான் தன்னந்தனியே சிறப்புரையாற்ற முடியுமா? அவன் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?

 அவன்தானே எனக்கு குதிரை. அவனில்தானே எனது பயணமெல்லாம். எனது கவிஞன் காலக் கொடுமையினால் ஆடிப்போய் சின்னப் சின்னப் பிள்ளையைப் போல யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருக்கிறான். துப்பு துப்பு என்று தலையில் அடித்தாலும், துப்புறானில்லையே! அவனை எழுப்புவது சிரமமாக இருக்கிறது.

சிறப்புரை என்றால், சொல்லாத பல செய்திகளை அது சொல்ல வேண்டும். கேட்டிருப்போர்  மெய்சிலிர்க்க வேண்டும். சிறப்புரை என்றால் அதில் ஒரு கவர்ச்சி, அதில் ஒரு இனிமை, அதில் ஒரு உண்மை, அதில் ஒரு ஆறு ஓடவேண்டும். சிறப்புரை என்று சொல்லிக் கொண்டு, அதில் ஒரு ஓணானாவது ஓடாமல் உரையாற்ற எனக்குவிருப்பமில்லை.

அஸ்ரப் சிகாப்தீனும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக தலைமுடி வெட்டியவர்கள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் எழுத வந்த காலத்தில்தான்  நானும் எழுத வந்தேன். அவர் பேனை வாங்கிய நேரத்தில் தான் நானும் பேனை வாங்கினேன். கடதாசியும் வாங்கினேன். நானும், அவரும் என்ற இந்த இரண்டு மீன்பிடிக்காரனுக்கும் அவரவருக்கென்று தனித்துவமான வள்ளங்களும் வலைகளும் இருக்கின்றன. இது எழுத்தாளன் என்ற மீன்பிடிக் காரனுக்குமுக்கியமானது. அவர் மீன் பிடிக்கும் முறையும் வேறு வேறானது. இதனால் இவர் இந்தக் கடற்கரையில் இப்போதும் தனித் தன்மையோடும் இருக்கிறவர். எனக்கு இந்தத் 'தண்டையல்' காலம் கடந்துதான் பழக்கமானார். சோலைக்கிளி என்ற தண்டையலும், அஸ்ரப் சிகாப்தீன்  என்ற தண்டையலும் நாட்பட்டு உறவாகிய 'செம்படவர்கள்.
'
எனது மீன்பிடியில் அவர் எந்த இடத்திலும் குறுக்கு வலைபோடவில்லை. என் வலையை வெட்டவில்லை. சிலர்  செம்படவர்களாக மீன்பிடிக்க வந்து தங்கள் 'சிறுவால்களை' இழந்ததுதான் மிச்சம். அறுநாக் கொடியும் அறுந்து போனார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் அளவுக்கு அவர்களுக்கென்று ஒரு தோணி இல்லை. ஒரு வலை இல்லை. கடல் அவர்களை ஏற்கவில்லை. ஓட்டைவலையில் எப்படி மீன் பிடிப்பது? நிர்வாணம் கடலுக்குப் பிடிக்காது. தன்னில் குளிக்க வந்தசிறுவர்களை விரட்டுவதைப் போல கடல் அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது.

எனது இந்த உரை ஒரு சிறப்புரையாக அமையாது விட்டாலும், ஒரு சின்னக் காற்று மாதிரி இந்தச்சபையின் மனதைத் தடவும் என்று நினைக்கின்றேன். உங்கள் அகத்துக்குள் நுளைந்து கிளுகிழனுப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நகத்துக்குள் நுளைந்து ஊத்தை எடுக்கும் என்று கருதுகின்றேன். அனேகமாக எனது உரைகளை சபையோர் காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றுபவையாக இருக்காமல் பார்த்துக்கொள்வது எனது பழக்கம். நான் போன பல கூட்டங்களில் சிலர் ஊற்றிய வெந்நீரால்தான் எனதுகாது பொசுங்கியது. அந்த அனுபவம் எனக்குப் பேசுகிறது.

இப்போது நான் அந்தரத்தில்இருக்கிறேன். எனது எதிரிகள் ஏசும் போது சிரிக்கிறேன். அது என்னவென்று விளங்காமல், விளங்காமல் இருப்பது வாழ்க்கைக்கு நல்லதுதான். நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதனாக பெயர் வாங்கலாம் விளங்காமல் இருந்தால்தான். சமுகத்தில் உயர்ந்தும் போகலாம். இந்தச்'செவிடன்'எப்படி சிறப்புரையாற்றுவது?

நீங்கள் கைதட்டுவதே எனக்குக் கேட்கவில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் போய் எனது கேட்கும் திறனை இழந்து வருகிறேன். அதுதான் நான் எந்தக்கூட்டத்திற்கு யார் பேசுகிறார் என்று பார்த்துப் போவது. அண்மையிலும் ஒரு நாவலாசிரியர் என்னை அழைத்தார். நான் போகவில்லை. அங்கு முழங்க இருந்த பீரங்கிகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். யுத்தங்களுக்குப் பாவிக்கும் தளபாடங்கள்! நான் மலர் கொய்பவன்தான். மலை உடைப்பவனல்ல. சிலர் மலை உடைக்கிறார்களே கூட்டங்களில்இ ஏன்? மனிதன் இப்படியான நிகழ்வுகளுக்கு வரக்கூடாதென்றா?

இங்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிகிறது. இது என்னால் உண்டான மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை. உங்கள் அஸ்ரப் சிகாப்தீன் உண்டாக்கிய மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளனால் ஊருக்கு மகிழ்சிசி, ஊரால் எழுத்தாளனுக்கு மகிழ்சிசி என்ற நிலை கண்டு நானும் மகிழ்கிறேன். 'பசுமை'இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகிறேன்.

 இனிய சபையோர்களே! நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வால் எரிந்து அலறிக் கொண்டிருக்கிறதல்லவா? இவ்வளவு தூரம் இருந்து வந்து, உங்கள் முன் ஒரு சிறப்புரையாற்றாமல் போவது எனக்கும் கவலைதான். முதல் முதலாக நான் கொடுத்த காதல் கடிதத்தை அவள் கிழித்ததைப்போல.
நிலா வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரவுக்குள் சிறு பூச்சியைப் போலஊர்ந்து ஊர்ந்தாவது நான் ஊர் போய்ச் சேரவேண்டும். என் பூச்சி புழுக்களைப் பார்க்க வேண்டும். நான் போகும் போது ஊர் இருக்குமோ தெரியாது! எவன் வெட்டிச் சாய்த்து அதைத் தோளில் சுமந்து போகிறானோ! நான் அறியமாட்டேன்.! போகும் போது வழிகாட்டநிலாவையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பகலிலும் இருட்டுப்பட்ட ஊராகிவிட்டதே நமதுஊர்கள்!  அதற்குள் ஒரு சிறப்புரையை ஆற்றிவிடலாமென்றால் முடியாமல்தான் இருக்கிறது. கோழிதான் முக்கி முக்கி முட்டையிடுகிறது. பேச்சாளன் முக்கி முக்கி உரையாற்றலாமா? அது நதி போல ஓடிவரவேண்டுமல்லவா! மழைபோல பெய்து சபையோர் குடைபிடிக்க வைக்கவேண்டும் அல்லவா!

பேச்சு கட்டிப்போனது. அதற்கான காற்று இப்போது இல்லை. மணக்கின்ற காற்றில்தான் மனம் குளிர்ந்து, வார்த்தைகள் துள்ளுகின்றன. காற்றுப் பிழைத்தால் வார்த்தைகளும் சமாதியாகிவிடும். நான் வார்த்தைகளின் எலும்புக் கூடுகளைவைத்துக் கொண்டு எப்படி இங்பு சிறப்புரையாற்றுவேன்? நீங்கள் என்னில் குறை நினைக்கக்கூடாது. நாம் உறவுக்காரர்கள்! அப்படி எடுத்ததற்கெல்லாம் என்னில் குறை நினைக்க நீங்கள் எனக்கு சீதனம் தந்து பெண்னும் தந்த மாமனும் இல்லையே!.

அன்புள்ள சபையோர்களே! நான் உங்களிடம் வந்து கடன் பட்டுக்கொண்டு செல்கின்றேன். காலத்தால் பால்ஒழுகி, நான் நானாகும் போது உங்களுக்கான எனது சிறப்புரையை நிச்சயம் தருவேன். ஒரு புத்தகத்தை படித்து விட்டுத் தருகிறேன் என்று வாங்கினாலும், தராதவன்தான் எழுத்தாளன். இவன் பொய் சொல்லுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியல்ல! எனது சோற்றுக்குள் தலை முடியையும் பொறுக்கி எடுத்துஇ இது யாருடையது என்று வினவி உரியவரிடம் ஒப்படைப்பவன். எனது சிறப்புரைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். காலமும் சரிவரத்தான் போகிறது.

இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமாக இருந்தது? கண் இருந்த இடத்தில் மூக்கும், மூக்கு இருந்த இடத்தில் கண்ணுமா, எப்போதும் மனிதன் வாழமாட்டான். அவை உரிய உரிய இடங்களுக்கு வந்துதான் ஆகவேண்டும். எனது கண்ணும் மூக்கும் உரிய இடங்களுக்கு வந்தவுடன் எனது சிறப்புரையும் வரும். ஒரு பறவையாகவேனும் வந்து நின்றுதான் உங்களின் வாசலில் பேசுவேன். காலம்  புரளக்கூடியது. அதை நமது பெருமூச்சுகள் புரட்டிவிடும். நமது சூரியோதயங்களை எவரும் தொடர்ந்து தடுத்துக் கொள்ள முடியாது. இறைவன் எல்லோருக்கும் நீதியானவன். இந்தநம்பிக்கையை நாம் விட்டு விடக்கூடாது. இந்தச் சிறப்புரையை முடிக்கிறேன்.
   
(04.09.2019ல் ஓட்டமாவடியில் நடைபெற்ற இரு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட சிறப்புரை - எழுத்துத் தொகுப்பு - எஸ்எம். முர்ஷித், தலைவர், பசுமை கலை இலக்கிய வட்டம் - வாழைச்சேனை)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: