(மார்ச் 2017 - தீராநதி சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல். நேர்கண்டவர் பவுத்த ஐயனார்)
** எழுத்துலகிற்கு வரக் கூடிய சூழல் உங்களுக்கு எப்படி உருவானது? உங்களின் குடும்பப் பின்னணி பற்றியும் சொல்லுங்கள்.
என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஒரு புலவர். அவரது பெயர் அப்துஸ்ஸமது ஆலிம். அவர் சில குறுங்காவியங்களைப் பாடியிருக்கிறார். தவிர புத்தக வியாபாரியாகவும் இருந்துள்ளார். பெரும்பாலும் அவை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள். சிறுவனாக இருந்த போதே இவற்றைச் சத்தமாக வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் பாட்டனார் தரும் நூலைச் சத்தமாக வாசிப்பேன். அவர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் எனக்கு 25 சதம் அன்பளிப்பாகத் தருவார். அன்றைய நிலையில் ஒரு இறாத்தல் சீனியின் விலை 18 சதங்கள். எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் ஓர் உண்டியலில் சேமித்து வந்தேன்.
அதேவேளை எனது தாய்மாமன்கள் இருவர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களும் நல்ல வாசகர்கள். அவர்கள் வாசிக்கும் எல்லா நூல்களையும் நானும் வாசிக்கத் தொடங்கினேன். இப்படியே ஆரம்பித்து ஊர் நூலகத்துள் நுழைந்தேன். அங்கே சமது என்ற சகோதரர் நூலகராயிருந்தார். அவர் நல்ல நூல்களைத் தெரிந்து எனக்கு வாசிக்கத் தருவார். இப்படி வளர்ந்த வாசிப்புத் தாகம் என்னை முதலில் கவிதையின்பால் உந்தியது.
** நீங்கள் வானொலி, தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது அங்கு இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட முடிந்ததா?
அரச வானொலிதான் அந்நாட்களில் தனித்துவ ஊடகமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பகுதிநேர அறிவிப்பாளனாக 1986 இறுதிப் பிரிவில் நான் இணைந்தேன். 1986க்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சேவை - 1 அறிவூட்டல், கலை, இலக்கியம், வாழ்வியல், தொழிலியல் பற்றிய விடயங்களை உள்ளடக்கியும் சேவை - 2 சினிமாப் பாடல்களை மையப்படுத்திய விளம்பர சேவையாகவும் செயற்பட்டன. ஆயினும் கூட வர்த்தக சேவையில் பல்வேறு தமிழ்க் கலை, இலக்கியம் சார் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகியே வந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு நேயர் படையே இருந்து வந்திருக்கிறது. இலங்கை வானொலி தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருந்த பணி மகத்தானது. இருந்த போதும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.
இது தவிர தினமும் ஒரு மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இதற்கென தனிச் சேவை ஒன்று இயங்கி வருகிறது. தமிழ்ச் சேவையில் தெரிவாகும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இந்த ஒரு மணி நேரத்தையும் இன்று வரை அலைவரிசையில் வழங்கி வருகிறார்கள். அதே போல கல்விச் சேவை என்றும் ஒரு சேவை உண்டு. இதில் ஒரு வருடம் நான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றியிருக்கிறேன்.
எல்லா சேவைகளிலும் பல்வேறு வகையான இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன, வருகின்றன. அந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்தும் தயாரித்தும் அவற்றில் அதிகம் பங்கு கொண்டும் வந்திருக்கிறேன்.
வானொலி, தொலைக் காட்சிச் செய்தி வாசிப்பாளராக மட்டுமன்றி வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தும் வந்திருக்கிறேன்.
ளு இலங்கையின் இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதில் மூத்த படைப்பாளிகளில் பேராசிரியர். நுஃமான், சோலைக்கிளி அளவிற்குப் பரவலாக யாரும் தமிழகத்தில் தெரியவில்லையே?
அதற்குக் காரணம் நாங்கள் இல்லை. பேராசிரியர் நுஃமான், நோலைக்கிளி ஆகியோரின் நூல்கள் தமிழகத்தில்தாம் முதலில் வெளியாகின. பேராசிரியர் நுஃமான் அறியப்படுவதற்கு மற்றொரு காரணம் அவர் இலங்கையின் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் என்பதும் கூட. உங்களுக்கு இவர்கள் இருவரையும் தெரிகிறது. இன்னும் சிலருக்கு இவர்களைத் தெரியாமல் வேறு இருவரைத் தெரிந்திருக்கிறது. இன்னும் சிலர் பேஸ் புக் வந்த பிறகு அதில் கவிதை எழுதும் தமது நட்பு வட்டத்துள் இருக்கும் இலங்கை நபர்களை மாத்திரம் தெரிந்திருக்கிறது. பெண்கள் வட்டத்தில் முகநூல், இணையத் தளங்கள், தொலைபேசி ஆகியவற்றினூடாகச் சிலரைத் தெரிகிறது. இதில் துயரம் என்னவெனில் தமக்குத் தெரிந்தவர்கள் மாத்திரம்தான் இலங்கைக் கவிஞர்கள், இலங்கைத் தமிழ்க் கவிதையை வளர்த்தவர்கள் என்று அவரவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதுதான்.
இந்த நிலை தமிழ் முஸ்லிம் கவிஞர்களுக்கு மாத்திரம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. பொதுவாகத் தமிழ் மொழியில் எழுதும் பல நூறு படைப்பாளிகளுக்கும் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தக் கதிதான். அவரலர் அறிமுக வட்டத்துக்குள் மாத்திரம் அவரவர் அறியப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இலங்கைப் படைப்பாளிகளுக்குள் தமிழக, இந்தியப் படைப்பாளிகளின் அறிமுக விகிதம் அதிகம். நானறிந்த காலத்திலிருந்து இந்திய எழுத்தாளர்களைத்தான் நாங்கள் அதிகம் படித்து வருகிறோம். அவர்களது நூல்களை இறக்குமதி செய்கிறோம், வாங்கிப் படிக்கிறோம். ஆனால் எங்களது நூல்களை நாங்களே கொண்டு வந்து உங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும் அல்லது அங்குள்ள ஒரு வெளியீட்டாளரிடம் கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிகிறேன்.
** அரபு இலக்கியங்கள மொழிபெயர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?
அறபு இலக்கியம் என்றைக்குமே உயர்ந்த இலக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. முதன் முதலில் ஆங்கிலத்தில் ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூத் சயீத் எழுதிய 'புகையிரதம்' என்ற கதையைப் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை என்னைப் படாத பாடு படுத்தி விட்டது. ஆர்வம் மிகுதியால் அதை மொழிபெயர்ப்புச் செய்து சென்னையிலிருந்து வெளிவந்த 'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் கதை பிரசுரமாகியதும் யாரோ ஒரு நண்பர் அதை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கேட்டதாக சஞ்சிகை ஆசிரியர் ஜாபர் சாதிக் என்னிடம் தெரிவித்தார்.
அந்தக் கதையின் வீரியமும், கலை நயமும் என்னை வெகுவாகக் கவரவே மஹ்மூத் சயீத் பற்றித் தேடத் தொடங்கினேன். மேலும் அவரது மூன்று கதைகள் கிடைத்தன. அவற்றையும் மொழிபெயர்த்தேன். தொடர்தேடலில் கஸ்ஸான் கனபானியின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்', சூடானிய எழுத்தாளர் தையிப் ஸாலிஹ் அவர்களின் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' ஆகிய முத்தான கதைகள் கிடைத்தன. மேலும் ஒமர் அல்கித்தி எழுதிய - லிபியத் தலைவர் கேர்ணல் கடாபியின் மறுபக்கத்தைக் காட்டும் 'நெடுநாள் சிறைவாசி என்கிற கதை.. இப்படியே எனது மொழிபெயர்ப்புத் தொடர்ந்த போது இவற்றை ஒரு தொகுதியாகப் போட்டு விடலாமே என்கிற எண்ணம் வந்தது. எனவே பத்துக் கதைகளைத் தொகுத்து 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' எனும் தலைப்பில் 2011ம் ஆண்டு வெளிக் கொணர்ந்தேன்.
2011ல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான தேசிய சாஹித்திய விருது இந்த நூலுக்கு 2012ல் வழங்கப்பட்டது.