Saturday, April 13, 2013

யாரடா முஸ்லிம் இங்கே...?ஞாபகமறதி சற்று அதிகம் கொண்டவனாக இருந்த போதும் அநேகமாகவும் அக்காலப் பிரிவு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற்தடவையா ஜனாதிபதியாகப்  பதவியேற்ற காலப் பகுதியில்தான் ஒரு பூதம் கிளம்பியது போல் பிரபல்யமான செய்தி அது.

“வற் வரி” மோசடி குறித்த செய்திதான் அது. கோடிக்கணக்கான ரூபாய்களை மிகப்பெரும் வர்த்தகப் புள்ளிகள் மோசடி செய்திருக்கிறார்கள் என்ற செய்தி அரசியல், வர்த்தக, பொது மக்கள் மட்டத்தில் காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியது. செய்தி பரவிக் கொண்டிருக்கும் போது மோசடியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு மொத்தமாகக் கிளம்பிப் போயிருந்தார்கள்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் இம்மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் எனப் பெயர் குறிக்கப்பட்டவர்கள் அநேகர் முஸ்லிம் வர்த்தகர்கள் என்பதுதான். முஸ்லிம்களே இவ்வாறான செயற்பாடுகளில் முன்னணியில் நிற்கிறார்கள் என்பது அரசியல் மேல் மட்டத்தில் பேசப்பட்டதை நான் அறிவேன். ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னிலையில் அரசியல் மேல் மட்டம் இதைச் சொல்லி முஸ்லிம்கள் பற்றி எதையும் பேச முடியாதவர்களாக அவர்களை மாற்றியது.

எல்லா முஸ்லிம் சிறுபான்மை அரசியல் கட்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நகர்ந்த மஹிந்த அரசு கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரத்தைத் தமது கட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப் பகீரதப்  பிரயத்தனங்களை மேற்கொண்டது. தனது உச்ச பலத்தைக் கொண்டு முயற்சித்தது. கொழும்பு வாழ் முஸ்லிம்கள் ஐ.தே.க. வைக் கைவிட்டு தமக்கு வாக்களிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் அது கனவாகவே முடிந்தது. ஐ.தே.க. கொழும்பு மாநகர ஆட்சியைத் தக்க வைத்தது.

இயல்பாகவே இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் ஐ.தே.க வை விட்டுப் பிரிக்க முடியாதவர்கள் என்று அறியப்பட்டதுண்டு. உண்மையும் அதுதான். எனவே கொழும்பு
முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட கடுப்பு எல்லா முஸ்லிம்களையும் நோக்கியதாக மாறியிருக்கச் சாத்தியம் உண்டு.

அரசியல் மேல் மட்டத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அந்த மட்டத்துடன் தெடர்பு கொண்டவர்களுக்கு மாத்திரமே புரியக் கூடியது. கட்டுரையாளர்கள், பத்திரிகையாளர்கள்,  அரசியலுக்கு வெளியே நின்று ஓர் ஊகத்தில் பேசுபவர்களது கணக்குகள் யாவுமே தப்பானவை. அநேகமாகவும் குருடன் வெள்ளை யாளை பார்த்த கதையே. இப்போது நான் எழுதும் இந்தக் குறிப்பும் கூட அப்படிப்பட்டதே. ஆனால் பகுதி பகுதியாக ஒவ்வொருத்தர் வெளிக் கொணரும் கருத்துக்கள், கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புள்ளியில் ஒரு
தீர்மானத்துக்கு பொதுமக்கள் வந்து சேரும் போது அரசியல் வேறு ஒரு கோணம் எடுத்து நகர ஆரம்பித்திருக்கும்.

2009ல் விடுதலைப் புலிகள் மீதான வேட்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் எங்காவது  ஓரிடத்தில் யாரும் ஏதாவதொரு அரச எதிர்ப்பு, விடுதலை நோக்கிய செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட நினைக்கவே கூடாது என்ற அடிப்படையில் “கிறீஸ் மனிதன்” வடிவமைக்கப்பட்டிருக்கலாம். பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் அச்சத்தில் வாழும் ஒரு நிலையில் இருக்க வேண்டும்என்ற அடிப்படையிலேயே “கிறீஸ் மனிதன்” செயற்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த அடிப்படையில் நகர்ந்த முயற்களில் ஒன்றாகவே முஸ்லிம்களின் ஹலால் விடயம் பற்றிய பிரச்சினையையும் நாம் பார்க்க முடிகிறது. ஓர் அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள எந்தப் பேயுடனும் கைகோத்துக் கொள்ளும். ஒவ்வொரு திருப்பத்திலும் எதையாவது அல்லது யாரையாவது பயன்படுத்திக் கொள்வதில் பின்னிற்பதில்லை.இந்த அடிப்படையில் அதற்கான வசதி வாய்ப்பை முஸ்லிம் சமூகமே ஏற்படுத்திக் கொடுத்தது. பள்ளிவாசலில் அதான் சொல்லும் பிரச்சினையை ஆரம்பித்து ஒரு வாய்ப்பான தோற்றுவாயை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நகர்வு, திடீரென எழும்பும் பள்ளிவாசல்களும் அதனடிப்படையில் அடித்துக் கொள்வதன் மூலமும் தஃவா இயக்கங்களின் பெயரால் சண்டையிடுவதன் மூலமும் பொலிஸ் நிலையங்களில் நின்று சீரழியும் நிலைக்கு வந்து சேர்ந்தது.

(ஓர் ஊரில் இரண்டு அமைப்புக்களால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்க இரண்டு அமைப்பிலும் சாராதவரின் மையித்தைத் தூக்கிச் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டதாக இரண்டொரு தினங்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு சகோதரர் ஒரு பதிவை இட்டிருந்தது  முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் இஸ்லாமிய தஃவத்தை செய்வதாகச் சொல்லுபவர்களது யோக்கியத்தை எடுத்துக் காட்டவும் போதுமானது.)

பதவிச் சண்டைகளாலும் இயக்க வெறியினாலும் பிரிந்து ஆளையாள் காட்டிக் கொடுத்து பொலிஸ், நீதிமன்று வரை செல்லும் நம்மவரைப் பற்றி நமது முஸ்லிம் பொது ஜனம் என்றைக்குமே அக்கறை கொள்வதில்லை. ஒரு இயக்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பள்ளியைத் தாக்கும் மற்றைய
இயக்க முஸ்லிம்களைப் பற்றி எதுவுமே பேசாதிருக்கும் நாம் பெரும்பான்மை தாக்க வரும்போது குமுறியெழுகிறோம். (அதற்காக பெரும்பான்மையின் செயலை நான் நியாயப்படுத்துகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்)

நம்மை நாமே பிரித்துக் கொண்டு சண்டையிடுவதில் முஸ்லிம்
பொதுஜனமும், முஸ்லிம் புத்தி ஜீவிகளும் தலையிடாமல் ஒருங்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இதில் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க முயன்றாலோ நியாயம் பேச முனைந்தாலோ அவரை மட்டந்தட்டி இஸ்லாம் தெரியாதவர் என்று கேலி செய்து இயக்கங்களில் இருக்கும் குஞசு குருமான்கள் கூட ஏறக்குறைய  அவரை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்கவும்  பத்வா வழங்கவும் தயங்குவதில்லை. இதனால்தான் பல புத்திஜீவிகளும் மரியாதையுள்ளவர் களும் அமைதி காக்கிறார்கள்.

இந்த விடயங்களை எழுதினால் கூட “இவ்வாறான விடயங்களை வெளிக் கொணர்ந்து முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் கோடரிக் காம்பு” என்று சித்தரிக்கவும் எழுதியவருக்கு இஸ்லாம் தெரியவில்லை என்று தொடங்கி அவரது குடும்பம், தாய் தந்தையர் வரை தெருவுக்கு இழுத்து
அவமானப்படுத்தவும் கள்ளப் பெயர்களில் இணையத்தில் கருத்துத் தெரிவிக்கவும் இவர்கள் தயங்குவதே இல்லை. (கள்ளப்பெயர்களில், இருட்டுக்குள் இருந்து கல்லெறியும் இந்த தஃவா தாரிகளதும் ஈமான்தாரிகளதும் செயலுக்கு இஸ்லாத்தில் என்ன தண்டனை விதிக்கலாம் என்று இவர்கள் முதலில் நமக்குச் சொல்லித் தரவேண்டும்.)

இன்று மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. பள்ளிவாசல்களும் அதிகரித்திருக்கின்றன. அவை அவசியமும் கூட. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ஜூம்ஆ பள்ளிகளில் மட்டுமே மைக்கைக் கொழுவிக் கொண்டு தொழுகை நடத்தினார்கள்.

இப்போது ஊர் நிறையப் பள்ளிகள். ஒவ்வொரு நேரத் தொழுகையையும் மைக்கைக் கொழுவிக் கொண்டே ஆலிம்ஷா தொழுவிக்கிறார். சில முஸ்லிம் கிராமங்களில் பத்து முதல் இருபது, இருபத்தைந்து பள்ளிகள் உருவாகி விட்டன. ஒவ்வொரு பள்ளிவாசலின் மணிக்கூடும் ஒரு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை நேர வித்தியாசம் காட்டுகிறது. எனவே ஒரு தொழுகைக்கு ஒரு பள்ளிவாசலில் அதான் ஆரம்பித்து ஒவ்வொரு பள்ளியாக அதான் முடிவடைய சிலவேளை பதினைந்து முதல் இருபது, இருபந்தைந்து நிமிடங்கள் செல்கின்றன. கேட்பதற்கு உள்ளத்தில் உவகை ஊறுகிறது. ஆனால் சில பள்ளிகளில் கேட்கச் சகிக்காத அதான்களும் ஒலிக்கத்தான் செய்கின்றன.

இப்போது பெரும்பான்மை இனத்தவன் ஒருவனோ ஒரு வெளிநாட்டவனோ அதான் ஒலி்க்கும் நேரத்தில் இக்கிராமங்களில் நின்றால் இது ஒரு முஸ்லிம் நாடா என்று கேள்வி எழுப்பத்தான் செய்வான். அதே வேளை முஸ்லிம்களுக்கு இவ்வளவு வசதியும் வாய்ப்பும் மதச் சுதந்திரமும் உண்டா என்றும் அதிசயப் படுவான்.

பக்கத்து வீட்டுக்காரன் நன்றாக இருந்தாலே சிலருக்குப் பொறாமை வரும். தனது அதிகாரத்தின் கீழ் இருக்கும் தனக்குக் கீழே தொழில் புரியும் ஒருவன் நன்றாக உடுத்தாலோ வாழ்ந்தாலோ சிலருக்குப் பிடிப்பதில்லை. எனவே பெரும்பான்மை ஒருவனுக்கு சிறுபான்மையாக வாழும் ஒருவன் எல்லைக்கு
மீறி சுதந்திரத்தை அனுபவிக்கிறான் என்று பொறாமையும் ஆத்திரமும் வருவது இயல்புதான். ஆனால் அதனை நான் நியாயம் என்று சொல்லவில்லை. எனவே நாம் கொஞ்சம் பக்குவம் பேணவும் ஹிக்மத்துடன்
வாழவும் வேண்டியவர்களாகத்தான் உள்ளோம்.

இங்கு எழுதப்பட்டவற்றைக் கொண்டு என்னைத் தூஷிப்பது பற்றி எனக்குக் கவலை கிடையாது.  எனது கருத்துக்களை மனதில் தோன்றியவற்றை எடுத்து வைத்திருக்கிறேன். பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக்கங்கள்.நாம் நல்ல கருத்துக்களைப்பரிமாறுவோம். சரியானதை நமது சகோதரர்களுக்கு
எடுத்துச் சொல்வோம். இக்கருத்துக்களில்உடன்படாதவர்கள் உங்கள் கருத்துக்களை கண்ணியமாக  எடுத்துச் சொல்லுங்கள்.

நல்ல மாணவர்கள் கக்கூஸ் சுவர்களில் கரித்துண்டால் எழுதுவதில்லை!


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

rara said...

நீங்கள் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக .

அக்பர்தீன் said...

மிகச் சரியான கருத்துக்கள். அல்லாஹ் அனைவருக்கும் சீரிய சிந்தனையும், நேர்வழியையும் காட்டுவானாகவும். மாற்றுக் கருத்துகளை மறந்து இறைவன் கூறிய ஒற்றுமை கயிற்றை பலமாக பற்றிக்கொள்வோம்.

faqirsulthan said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் தொடராக தங்களின் எழுத்துக்களை வாசிக்கிரேன். இலங்கை அரசியலைப் புரிந்து கொள்கிறேன். மதச்சார்பற்ற நாட்டில் எப்படி பகையற்ற வாழ்க்கை வாழுவது என்பதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எல்லாப் பள்ளிவாசல்களின் கடிகாரங்களையும் சரிப்படுத்தினால் எதிர்மறை கடுப்புகளை ஓரளவு தணிக்கலாம். இங்கோ இயக்கங்கள் ஈசல் போல் முளைத்தபின் அதையே பெருமையாக நினைக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் தொழுகைகளும் சமீபகால் தமிழ்னாட்டில் சப்தமாஇ ஒலிபரப்பப்பட்டு, முஸ்லிம்களுக்கே கடுப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கு எப்படி?

FAISAN MEDIA NETWORK said...

நீங்கள் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.