Saturday, November 12, 2011

அறுவடைக் கனவுகள் - நாவல்


அல் அஸ_மத் எழுதிய
அறுவடைக் கனவுகள்
இலக்கியமானதும் ஆவணமானதுமான நாவல்

2010ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த நல்ல நூல்களுள் அல் அஸ_மத் அவர்கள் எழுதிய ‘அறுவடைக் கனவுகள்’ நாவலும் ஒன்று. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் அண்மையில் தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று.


ஒரு கவிஞனாக அறிமுகமாகி கவிதைத் துறையில் பெருவிருட்சமாகிப் பரந்து நிற்பது போலவே சிறுகதைத் துறையிலும் நாவல் எழுத்திலும் அவர் ஓர் அசைக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறார். அறுவடைக் கனவுகள், அமார்க்க வாசகம், சுடுகந்தை ஆகிய மூன்று நால்களை அவர் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘அறுவடைக் கனவுகள்’ 1984ல் தினகரன் பத்திரிகையில் தொடர் நாவலாக வெளிவந்திருக்கிறது. 2010ல்தான் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

2001ம் ஆண்டு அல் அஸ_மத் அவர்களின் வெள்ளை மரம் சிறுகதைத் தொகுதி அரச தேசிய சாஹித்ய விருதைப் பெற்றிருக்கிறது.

“பல சிறுகதைப் போட்டிகளில் அவருடைய படைப்புகள் முதற் பரிசு பெற்றுத் திகழ்ந்தன. குறிப்பாக 1993ல் ‘கலை ஒளி’ முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுப் புதுதில்லி ‘கதா’ அமைப்புக்காக ‘சார்க்’ நாடுகளின் அமைப்பு வரை சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புப் பெற்ற ‘விரக்தி’ என்ற கதையையும் வீரகேசரி தனது பவள விழா ஆண்டு நிறைவுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற ‘நிலத் தாய்’ கதையையும் குறிப்பிடலாம்” என்று இந்நாவலுக்கான அணிந்துரையில் நமது முன்னோடிகளில் ஒருவரான தெளிவத்தை ஜோஸப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


மிக அண்மையில் நண்பர் மேமன் கவி முகப்புத்தகத்தில் முதுகு சொறியும் தடி பற்றிய ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தார். அதுபற்றி இடம் பெற்ற இரண்டு பின்னூட்டங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. அதில் ஒன்று தேவராசா முகுந்தனுடையது.

“அல் அஸ_மத் ‘முதுகைக் கொஞ்சம் சொறிந்து விடுங்கோ’ என்ற சிறுகதையை எழுதி ‘திசை’ சிறுகதைப் போட்டியில் (1989) இரண்டாம் பரிசு பெற்றதாக இலேசான ஞாபகம்” என்று சொல்கிறார்.

“திசையில் 22.09.89 மற்றும் 29.09.89 ஆகிய திகதிகளில் வெளியான அல் அஸ_மத் அவர்களின் சிறுகதையின் சரியான பெயர் ‘முதுகச் சொறியுங்கோ’ என்பதாகும். இருப்பினும் உங்கள் நினைவாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை” என்று சின்னராசா விமலன் தகவலைத் தெளிவு படுத்தி மற்றொரு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பின்னூட்டங்களை இட்ட முகுந்தனும் விமலனும் இக் கதை வெளிவந்த காலத்தில் சற்றேறக் குறைய 20 வயதுக்குட்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்களது நினைவாற்றலை நாம் பாராட்டும் அதே சமயம் இளவயதில் அவர்களால் படிக்கப்பட்ட ஒரு கதை இன்னும் இவர்களின் மனதில் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு அல் அஸ_மத் அவர்களின் எழுத்தின் வலிமையும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

எனக்கும் கவிஞர் அல் அஸ_மத் அவர்களுக்குமிடையில் இருபத்தைந்து வருடங்களாக இலக்கியத் தொடர்பு உண்டு. ஓர் அறிவிப்பானாக வருமுன்னும் பின்னும் வானொலியில் அவர் நடத்திய நிகழ்ச்சிகளில்; நான் பங்கு கொண்டிருக்கிறேன். குறிப்பாக வானொலிக் கவியரங்குகள் பலவற்றில் அவர் தலைமையில் நான் கவிதை படித்திருக்கிறேன். அவர் முஸ்லிம் சேவையில் நடத்திய ‘கவிதைச் சரம்’ நிகழ்ச்சியில் கவிதை பயின்ற சிலர் இன்று கவிஞர்களாகவும் கவிதாயினிகளாகவும் பெயர் பெற்றுள்ளனர்.

அவரது ‘புலராப் பொழுதுகள்’ நெடுங் கவிதை நூல் 1982 லும் ‘மலைக் குயில்’ என்ற கவிதைத் தொகுப்பு 1987லும் வெளிவந்தன. வானொலி கவிதைச் சரம் நிகழ்ச்சியில் ஒலித்த 483 கவிஞர்களின் - அதாவது கவிதை எழுதியவர்களின் 568 கவிதைகளைத் தொகுத்து 1996ல் வெளியிட்டார். வானொலி, மேடை, தொலைக் காட்சிக் கவிதைகளைத் தொகுத்து 2009ல் ‘குரல் வழிக் கவிதைகள்’ எனும் தலைப்பில் வெளியிட்டார். முகம்மது நபி அவர்களது சொல், செயல், அங்கீகாரம் எனப்படும் ஹதீஸ் களை ‘நபிக் குறள்’ என்ற மகுடத்தில் எழுதிக் கொண்டிருந்தார். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குறள்களை அவர் அப்போதே எழுதி வைத்திருந்ததை நான் அறிவேன்.

இவை தவிர ‘நடைப் பா’ என்ற பல தனி நபர்களைப் பற்றி ரசனையோடு பேசும் கவிதைகளின் தொகுப்பு ஒன்று இன்னும் அவரிடம் அச்சேறாமல் இருக்கிறது. இந்தக் கவிதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஏறக்குறைய 35 இலக்கியவாதிகளை விவரணம் செய்யும் ஒரு வித்தியாசமான கவிதை முயற்சி இது. அவர் எழுதியிருந்தவற்றுன் - வேந்துகவி வில்வராசன் என்ற தலைப்பில் சில்லையூர் செல்வராசனையும் - தீன் கவி சேகப்பா என்ற தலைப்பில் அன்பு முகையதீனையும் - சித்தாந்தி சிராஜூத்தீன் என்ற தலைப்பில் வேதாந்தி என அறியப்பட்ட சிறந்த கவிஞரும் சிறுகதையாசிரியருமான முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனையும் - ஃப்ரீதர் பிச்சாசோ என்ற தலைப்பில் மறைந்த நண்பர் ஸ்ரீதர் பிச்சையப்பாவையும் பற்றி அவர் எழுதியிருந்தது என் ஞாபகத்தில் உண்டு.

தன்னை ஓவியர் விஸ்வம் கோட்டுச் சித்திரங்களால் வரைந்த படத்தை ஒரு முறை ஸ்ரீதர் எனக்குக் காட்டினார். அதில் ஒரு போட்டோப் பிரதியை பலாத்காரமாக அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து அஸ_மத் அவர்களிடம் ஸ்ரீதர் பற்றிய நடைப்பாவையும் பெற்று ‘யாத்ரா - 6ம் இதழில் இடம்பெறச் செய்திருந்தேன். எண்பதுகளில் கவிஞர் அல் அஸ_மத் அவர்களின் வித்தியாசமான கவிதை முயற்சி என்பதால் ஸ்ரீதர் பற்றி அவர் எழுதிய நடைப்பாவில் ஒரு பகுதியை இங்கு தர விரும்புகிறேன்.

ஃபிரீயாவே திரியிறவன் ஃபிரீதரு பிச்சாhஸோ
சுரீருன்னு சிரிக்காட்டி சுள்ளுன்னு தொணதொணப்பான்
றோட்டுலஒரு துண்டையும் றோலாக உடமாட்டான்
பாட்லஒரு துண்டயாச்சும் பாடாம உடமாட்டான்
சகலரையும் மொறவச்சி சட்டசேப்ல வச்சிருப்பான்
பகலெல்லாம் ஊருசுத்திப் பரிகாசம் பண்ணீட்டு
ராத்திரியில் ஊடுவந்து லைன்லைனாக் கோடிழுப்பான்
பாத்தம்னா பண்டாரம் பாக்கலன்னா பெருங் கலைஞ்சன்!

பூபாளம் என்றொரு கவிதை ஏட்டை நடத்திய அனுபவமும் அல் அஸ_மத் அவர்களுக்கு உண்டு. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கவிஞர்களுடன் மட்டுப்படுத்தப் பட்டுப்போன குறும்பா எழுதியவர்களில் இவரும் ஒருவர். குறும்பா பற்றிய இலக்கண விதிகள் பற்றி அவரது கவிதை ஏட்டிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் திருத்த வடிவத்தை யாத்ரா இதழ் 2ல் நான் அவரிடம் பெற்றுப் பிரசுரித்தேன்.

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தனது காப்பியங்களைப் பதிப்பிக்கு முன்னர் ஒரு மேற்பார்வைக்காக அல் அஸ_மத் அவர்களிடம்தான் கொடுப்பார். “நீங்கள் ஒரு மரபுக் கவிதை மன்னர்தானே... எதற்காக அவரிடம் மேற்பார்வைக்காக உங்கள் காப்பியங்களைக் கொடுக்கிறீர்கள்?” என்று ஒரு நாள் கவிஞர் ஜின்னாஹ்விடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்னார்:- “நாம் எவ்வளவு பெரிய ஆட்கள் என்பது முக்கியமல்ல, நமது நூலில் நம்மையறியாமலே ஒரு பிழை நேர்ந்து விட இடமுண்டு. ஆகவே அதை நம்பிக்கையான, பொருத்தமான ஒருவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கக் கேட்பதுவே சிறந்தது!”

கவிதை இலக்கணத்தில் வெண்பா இலக்கணம் மிகவும் சிக்கலானது என்பதை அறிவோம். ஒரு நாள் ஒரு பழைய வெண்பாவைச் சொல்லி விட்டு இதே மாதிரி நான் எனக்குத் தோன்றியதை எழுதினால் பிழையா என்று அல் அஸ_மத் அவர்களிடம் கேட்டேன். ‘அதே மாதிரி இருக்குமானால் அதில் இலக்கண வழு இருக்காதே” என்று சொல்லிச் சிரித்தார். நாம்தான் வினாவைப் பிழையாகக் கேட்டு மாட்டிக் கொண்டோம் என்று புரிந்ததும் அடுத்த கயிற்றை வீசினேன். நான் வெண்பாக்களில் ஒரு காப்பியம் எழுதப் போகிறேன். வெண்பாக்களில் இலக்கண வழு இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். “உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொன்னது?” என்று திருப்பிக் கேட்டார்.. இலக்கணப் பிழையுடன் எழுதப்படும் வெண்பா வடிவத்துக்கு வேறு பெயர் உண்டு. நீங்கள் எழுதலாம் என்று சொன்னார். ஆனால் இலக்கிய உலகத்தை விட்டே துரத்தி விடுவார்களோ என்ற பயத்தில் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிறு கதைகளை நான் எழுத ஆரம்பித்த பிறகு, நான் எழுதும் ஒவ்வொரு சிறுகதையையும் கவிஞர் அஸ_மத் அவர்களிடம் கொடுத்து அவரது கருத்தைப் பெற்றுக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அதுவே அவருக்கு ஒரு தொந்தரவுதான் என்ற போதும் அதற்காக அவர் ஒரு போதும் முகம் சுழிப்பதில்லை.


அல் அஸ_மத் அவர்களின் நாவல் பற்றிப் பேசச் சொன்னால் பேச்சில் அதைத் தவிர மற்றெல்லாம் வருகிறதே என்று சிலருக்கு ஒரு சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கும். தமிழிலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த அனுபவமும் திறமையும் உள்ள ஒரு மனிதரின் நாவல் இது என்பதையும் அவ்வாறான ஒரு நபரது நாவல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்குமாகவே அவரது ஆளுமை பற்றி இதுவரை எடுத்துச் சொன்னேன்.

370 பக்க நூல், நாவல் 348 பக்கங்களில் வந்திருக்கிறது, மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவல் முழுவதும் அவர் தனது சொந்தக் கதையைச் சொல்லிச் செல்வதோடு இதற்குள் ஒரு கால கட்டத்தின் மலையகத்தின் வரலாற்றை ஆவணமாக ஆக்கி வைத்திருக்கிறார். இதுதான் இந்நாவலின் பெருஞ்சிறப்பு. தோட்டத் துரையென்றால் யார்? கங்காணியென்றால் யார்? உதவிக் கங்காணியென்றால் யார்? சுப்பவைசர் என்றால் யார்? அவர்களது கடமைகள் என்ன? அவர்களது வாழ் நிலை என்ன? அவர்களது அந்தஸ்தை நிர்வாகம் எப்படி நிர்ணயம் செய்கிறது? தொழிலாளர்கள் எப்படிக் கணித்திருக்கிறார்கள்? என்பன போன்ற விபரங்களைத் தெளிவாகவே மனதில் அப்பிக் கொள்ளும் மொழியழகுடன் கதையூடு சொல்லிச் செல்கிறார். பெருந்தோட்டத் தொழிற் துறை, அம்மக்களின் வாழ்நிலை என்று எதையும் தவற விடாமல் இந்த நாவல் சொல்லிச் செல்கிறது.


தனது நேரடி வாழ்வியல் அனுபவங்களையும் மலையக மக்களின் துயரம் மிகுந்த வாழ்வியலையும் முற்று முழுதாகவே எடுத்தோதும் இந்த நாவல் வாசிப்பில் நான் எதிர் கொண்ட பிரச்சினை என்னவெனில் இதை வேகமாக வாசிக்க முடியாது என்பதுதான். அதற்குக் காரணம் அவரது மொழியும் சிந்தனையும் அழகு கூட்டும் வசனங்களும்தாம். நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் இவ்வாறான ரசனை மிகுந்த இடங்களில் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

கணக்குப்பிள்ளை சோமையாவை விவரிக்கும் விதம் இது.

“நாலரையடி வாமனத்தில் அரை வழுக்கையில், ஹிட்லர் மீசையில், ரஷ்யப் பற்களில், கவுளித் தொட்டத்தாற் கொழுத்த கன்னங்களில், கணுவுக்குக் கணு ரணமாகி யாழ்ப்பாணத்தைப் போல் சிதிலமாகியிருந்த ஸ_வேட்டரில், முழங்கால் மறைத்த காக்கிப் பாவாடையில், ஸ்டொக்கிங்ஸ் அணியும் காரணத்தால் சோகை பிடித்துப் போயிருந்த கருங்கால்களில், வெற்றுப் பாதங்களில்... எதையுமே நம்பாத கண்களில்.... சோமையாவைத் தரிசிக்கிறார் நாவலாசிரியர்.

அஸ_மத் அவர்களின் தகப்பனார் மலையாளி. பிரஜாவுரிமைப் பிரச்சினையில் இருவரும் கதைத்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் இது.

“எலங்கைப் பெரசாவுரிமைக்கே எழுதுவோம் அச்சா!” என்றேன் ஒரு வேண்டுகோளாக. “அச்சாவும் இப்ப எலங்கைக்குப் பழகிட்டிங்கதானே! நாங்களும் இங்கேயே பொறந்து வளர்ந்துட்டதால கேரளாவப் பத்தி எதுவுமே தெரியாம இருக்கு. இங்க நமக்குச் சொந்தக்காரங்க இல்லாட்டிப் போனாலும் இந்த ஊர் சொந்தந்தானே..!”

“வேலூ..... “ என்றவாறு உள்ளே வந்தார் அச்சா. “என்ட காணி பூமி அவிட உண்டல்லே... இனஜன பந்துக்கள் உண்டு. ஜோலிகளும் வேண்டத்ர உண்டல்லே... பாரதம் ஒரு வலிய நாடா! இவிட இனி :பாவியில்லா... கங்காணியார் பறஞ்சது கேட்டோ...”

அம்மாவுக்கு நன்றாக மலையாளம் விளங்கும். எனவே, “அப்பனும் புள்ளயும் எப்பிடியாச்சும் போங்க!” என்று எழுந்து குசினிக்குள் போனார்.

அச்சனும் திண்ணைக்குப் போனார் - திருவனந்தபுரத்துக்கே போவது போல்!

தோட்டத்துக்குள் நுழைந்த தோட்டத்துரைக்கும் கொழுந்தெடுக்கும் பெண்களுக்குமிடையிலான உரையாடல் நடந்த விதத்தை அஸ_மத் சித்தரிக்கிறார் பாருங்கள்.

“எப்டி.. அங்கம் புல்லெ!”

அங்கம்மாக் கிழவி மரியாதை மிக்கவளாகத் தலையை உயர்த்தி “சொகமா இருக்கிறேனுங்க சாமீ..” என்றாள்.

“நான் சமீ இல்லே... தொரே சொல்லு!”

இன்னொருத்தியிடம் போனார் - “மூத் ராக் புல்லே!”

“தொரைங்களே...!”

“நீ கல்யான் செஞ் எத்னே வர்சம்?”

“ஏழெட்டு வருசமாகுதுங்க!”

“எத்னே குட்டி?”

“ஆறு புள்ளைகளுங்க...”

“ச்சை வர்சம் ஒன்னு போட்றது,!”

இவ்வாறு ரசனை பிசைந்து எழுதப்பட்ட இந்த நாவல் இம்முறை தேசிய சாஹித்திய விருதைத் தவற விட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 378 பக்கங்களில் 475 கிராம் பாரத்தில் (அதாகப்பட்டது அரைக் கிலோ) உருவாகியிருக்கும் இந்த நூலை நடுவர்கள் உண்மையிலேயே முழுவதும் படித்தார்களா என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அல்லது ஏற்கனவே கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை என மலை நாட்டவர் மூவர் தெரிவாகி விட்டிருந்த நிலையில் இன்னும் ஒருவரை மலை நாட்டிலிருந்து எடுத்துக் கொள்வதில் உள்ள கோட்டா முறைப் பிரச்சினையா? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தில் நாட்டின் சிறந்த எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களில் நால்வர் இன்று இங்கு கௌரவம் பெறுவதே அந்த மன்றத்துக்குக் கிடைத்த பெருமை.  நமது மரியாதைக்கும் பெருமைக்குமுரிய தெளிவத்தை ஜோஸப் ஐயா இம்மன்றத்தின் தலைவராக இருப்பதே அம்மன்றம் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. நண்பர் சிவலிங்கம் அம்மன்றத்தின் உப.தலைவர். நண்பர் சடகோபன் இணைச் செயலாளர். சிறுகதையாளரான நண்பர் சேனாதிராஜா மற்றொரு இணைச் செயலாளர். கந்தையா கணேச மூர்த்தி அங்கத்தவர். அல் அஸ_மத் முன்னாள் இணைச் செயலாளர். நண்பர் கவிஞர் சு. முரளிதரனும் தம்பி திலகரும் தங்கை லுணுகல ஸ்ரீயும் செயற்குழு அங்கத்தவர்கள். ஒரு பெரிய எழுத்தாளர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறது மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்.


கவிஞர் அல் அஸூமத், கவிஞர். சு.முரளிதரன், ஹாஜி ஹாஷிம் உமர், சடகோபன், மு.சிவலிங்கம், கந்தையா கணேசமூர்த்தி, தெளிவத்தை ஜோஸப், சேனாதிராஜா ஆகியோர்

இந்த விழாவின் அழைப்பிதழில் பேச்சாளர்களை இந்த மன்றம் தேர்ந்தெடுத்திருக்கும் முறையை நீங்கள் அவதானிக்க வேண்டும். தமது மண்ணுக்குப் பெருமை தேடித்தந்தவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வில் தமது மண்ணின் வாழ்க்கையைப் பேசும் ஒரு நாவலை வெளியிட்டுப் பெருமைப்படும் இந்த நிகழ்வில் - பேச்சாளர்களாகத் தமது மண்ணைச் சேர்ந்த ஒருவரையும் வடக்கைச் சேர்ந்த ஒருவரையும் கிழக்கைச் சேர்ந்த என்னையும் - இன்னும் சற்று எட்டு வைத்தால் இரு தமிழர்களும் ஒரு முஸ்லிமுமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அவதானியுங்கள். எவ்வளவு நுணுக்கமான தேர்வு இது. தமது இலக்கியமும் தமது மண்ணின் மைந்தர்களின் பெருமையும் தமது மண்ணின் மைந்தர்களால் மட்டுமன்றி மற்றையவர்களாலும் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் மற்றவர்களது கவனத்துக்கும் தமது திறமைகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்ட இந்த ஏற்பாடானது மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. இதற்காக மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துக்கு இன்னொரு சபாஷ் போடலாம். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தில் தலைவர் தெளிவத்தை ஜோஸப் ஐயா அவர்களுக்கும் இணைச் செயலாளர்களான நண்பர்கள் சடகோபனுக்கும் சேனாதிராஜாவுக்கும் நிர்வாக சபைக்கும் இதற்காக எனது மனம் நிறைந்து வழியும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது பல்லினங்களும் வாழும் நாடு. தமிழ் மொழியைத் தாய் மொழியாகத் தமிழர்களும் முஸ்லிம்களும் பேசுகிறார்கள். ஒரு பிரதேசசார் மன்றம் நடத்தும் இந்த நிகழ்வில் ஒரு தேசிய ரீதியான பார்வையுடனான நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ரீதியாகப் பரிசு வழங்கும் அரச சாஹித்திய நிர்வாகத்துக்கு பரிசுக்குத் தெரிவு செய்வோரை எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செய்யத் தெரியவில்லை. விருதுக்கு நூல் தெரிவு செய்யும்; குழுவைப் பார்த்தீர்களானால் அது அநேகமாகவும் ஒரு பிரதேசத்துக்கும் ஒரே இனத்துக்கும் தாரை வார்க்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இப்படிப் போனால் இன உறவும் சௌஜன்யமும் வானத்திலிருந்தா வரும்?

இந்த விழாவைச் சற்று ஆழப் பார்த்தால் எனக்கு இன்னொரு விடயமும் புலப்படுகிறது. ஏதோ ஒரு துர்ப்பாக்கியத்தால் விருதுக்குத் தேர்வாகாமல் போன அல் அஸ_மத் அவர்களின் நாவல் வெளியிடப்படும் அதே மேடையில் மன்றம் தனது அங்கத்தவர்களான விருது பெற்றவர்களையும் கௌரவித்துக் கொண்டிருக்கிறது. இதில் நான் புரிந்து கொள்வது என்னவென்றால் ஏதோ ஒரு காரணத்தால் விருது கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனாலுமென்ன நாங்கள் அதற்குரிய கௌரவத்தை வழங்குவோம் என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.


இறுதியாக -

கவிஞர் அல் அஸ_மத் அவர்கள் தமது நாவலின் ஓர் அத்தியாயத்தின் இறுதிப் பந்தி பின்வருமாறு முடிகிறது.

“மலையின் கால வெள்ளத்தில் நான் ஒரு துளிதான். அந்தக் கால வெள்ளம் இந்தத் துளியை மறந்து விடுமோ என்னவோ... இந்தத் துளியால் அந்தக் கால கட்டத்தை மறப்பதற்கில்லை.”

நான் அவருக்குச் சொல்வது என்னவென்றால் - மலையின் கால வெள்ளம் உங்களை மறந்து விடவில்லை. அதனால்தான் அந்த மண்ணின் மைந்தர்கள் உங்களுக்காக இந்த விழாவை எடுத்திருக்கிறார்கள்!
(12.11.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் அல் அஸ_மத் அவர்களின் ‘அறுவடைக் கனவுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட உரை.)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

பி.அமல்ராஜ் said...

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஒழுங்கு படுத்திய அல் அஸுமத் அவர்களின் “அறுவடைக் கனவுகள்” நாவல் வெளியீட்டில் அனைவரைப்போலவும் என்னையும் கவர்ந்த விடயம் உங்களின் இந்த உரைதான்.

யப்பப்பா... ஒரு கனதி மிக்க, சூடான, உரை.. வாழ்த்துக்கள் அண்ணா..

Lareena said...

அல் அஸுமத் அவர்கள் பற்றிய அகன்ற பார்வையைத் தரும் இந்தப் பதிவு ஒரு சிறந்த இலக்கிய ஆவணம்தான் என்பேன். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற(2011) சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்போது அல் அஸுமத் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தனைச் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தும், துளிகூட கர்வம் இன்றி, மிக எளிமையாக அவர் இருந்ததும், கதைத்ததும் இன்றும் பசுமையாய் நினைவிருக்கிறது. நிறைகுடம் தளும்புவது இல்லை அல்லவா? மூத்த படைப்பாளியான அவர், நம்மைப் போன்ற இளையவர்களின் எழுத்துக்களையும் படித்து வைத்திருக்கிறார், உற்சாகப்படுத்தும் வகையில் பேசுகிறார் என்பதே எனக்குப் பெரும் ஆச்சரியமளித்தது. அவர் போன்றோரிடம் நம் இளையவர்கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என நம்புகின்றேன். இந்த அருமையான பதிவுக்கு நன்றிகள் பல. :)

எஸ் சக்திவேல் said...

புத்தகங்களை எங்கே வாங்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கலாம், முக்கியமாக வெளிநாடுவாழ் வாசகர்களுக்குக்கு எப்படித் தருவிப்பது என்பது...

sutharmamaharajan said...

nazza naavaz,arumayana pathivu.vaazthukkaz.