“முகத்தை எப்போதும் மூடி வைக்காதே - எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே” என்று ஒரு பாடல் காற்றலைகளில் வந்து நம் கவனத்தைக் கவர்கிறது. இந்தி மொழி வசனங்களுடன் ஆரம்பமாகும் இப்பாடல் பற்றி விசாரித்ததில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஹரிசரண் குரலில் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற படத்தில் இது இடம் பெற்றுள்ளது என்றறிய வந்தேன்.
பாடல் இனிமையாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலில் “அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ - உருதுக் கவிஞன் ஒமர் கையாமின் கவிதையா நீ” என்று இடம் பெற்றுள்ள வரிகள்தாம் என்னை இதைப்பற்றி எழுதத் தூண்டிற்று.
கியாஸூத்தீன் அபுல் ஃபத் ஒமர் இப்னு இப்ராஹிம் அல் கையாமி என்கிற ஒமர் கையாம் பாரசீகத்தின் நைஷாப்பூரில் 11ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் பிறந்து 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மறைந்தவர். அவர் ஒரு சூஃபிக் கவிஞராகத்தான் நம்மிடையே உலா வருகிறார். ஆனால் அவரோ சிறந்த வானவியலறிஞராகவும் கணித மேதையாகவும் தத்துவ ஞானியாகவும் மிளிர்ந்தவர்.
ஒமர் கையாமின் “ருபையாத்” உலகப் புகழ் பெற்றது. பாரசீக கவிதை வடிவங்களில் “ருபாய்” என்பது நான்கடிப் பாவாகும். “ருபையாத்” என்பது பன்மை. அதாவது நாலடிப் பாக்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட “ருபையாத்” வெளிவந்த பின்னர்தான் உலகம் ஒமர் கையாமை அறிந்தது.
1. மகாலத் பில் ஜபர் வல் முகாபிலா 2. முஸதறாத் கிதாப் யுக்லிதாஸ் 3. லவாஸிம் அம்சினா 4. இப்னு சீனாவின் மார்க்கச் சொற் பொழிவுகள் - பாரசீக மொழி பெயர்ப்பு 5. ஸிச் மாலிக் ஷாஹி 6. றிஸாலா கௌன் வல் தக்லீப் 7. அல்வுஜீத் 8. குல்யாத் அல் வுஜீத் 9. மீஸான் அல் ஹிகம் 10. நௌரோஸ் நாமா ஆகியன ஒமர் கையாமின் அறியக் கிடைத்த நூல்களின் பெயர்கள்.
ருபையாத்தை தமிழில் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1945), பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. சகதீசன் (2002), நாகூர் ரூமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிட் ஜெரால்ட் மேற்கத்தேயப் பண்பாட்டுச் சூழலுக்கும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழகச் சூழலுக்கும் ஏற்ப மொழி பெயர்த்துள்ளதாகவும் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களே பாரசீக நாட்டுச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாடியுள்ள தாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய அம்சம் என்னவெனில் ஒமர் கையாம் பற்றிய தகவல்களுடன் ருபையாத்தை, வியாசக் கோவை மற்றும் முஸ்லிம்களின் தற்கால நிலைமை ஆகிய நூல்களை எழுதியவருமான வ.மி. சம்சுத்தீன் சாஹிப் என்பவரும் வீ.சி. அருளானந்தம் என்பாரும் இணைந்து தமிழில் மொழி பெயர்த்து 1936ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டுள்ளார்கள் என்பதாகும். இத் தகவல்கள் நான் மேலே சொன்ன நூலில் காணப்படுகின்றன.

