Wednesday, July 18, 2012

லஹில்ல... லாஹில்லா....!



“முகத்தை எப்போதும் மூடி வைக்காதே - எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே” என்று ஒரு பாடல் காற்றலைகளில் வந்து நம் கவனத்தைக் கவர்கிறது. இந்தி மொழி வசனங்களுடன் ஆரம்பமாகும் இப்பாடல் பற்றி விசாரித்ததில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில்  ஹரிசரண் குரலில் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற படத்தில் இது இடம் பெற்றுள்ளது என்றறிய வந்தேன்.

       பாடல் இனிமையாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலில் “அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ - உருதுக் கவிஞன் ஒமர் கையாமின் கவிதையா நீ” என்று இடம் பெற்றுள்ள வரிகள்தாம் என்னை இதைப்பற்றி எழுதத் தூண்டிற்று.

கியாஸூத்தீன் அபுல் ஃபத் ஒமர் இப்னு இப்ராஹிம் அல் கையாமி என்கிற ஒமர் கையாம் பாரசீகத்தின் நைஷாப்பூரில் 11ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் பிறந்து 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மறைந்தவர். அவர் ஒரு சூஃபிக் கவிஞராகத்தான் நம்மிடையே உலா வருகிறார். ஆனால் அவரோ சிறந்த வானவியலறிஞராகவும் கணித மேதையாகவும் தத்துவ ஞானியாகவும் மிளிர்ந்தவர்.

ஒமர் கையாமின் “ருபையாத்” உலகப் புகழ் பெற்றது. பாரசீக கவிதை வடிவங்களில் “ருபாய்” என்பது நான்கடிப் பாவாகும். “ருபையாத்” என்பது பன்மை. அதாவது நாலடிப் பாக்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட “ருபையாத்” வெளிவந்த பின்னர்தான் உலகம் ஒமர் கையாமை அறிந்தது.

1. மகாலத் பில் ஜபர் வல் முகாபிலா 2. முஸதறாத் கிதாப் யுக்லிதாஸ் 3. லவாஸிம் அம்சினா 4. இப்னு சீனாவின் மார்க்கச் சொற் பொழிவுகள் - பாரசீக மொழி பெயர்ப்பு 5. ஸிச் மாலிக் ஷாஹி 6. றிஸாலா கௌன் வல் தக்லீப் 7. அல்வுஜீத் 8. குல்யாத் அல் வுஜீத் 9. மீஸான் அல் ஹிகம் 10. நௌரோஸ் நாமா ஆகியன ஒமர் கையாமின் அறியக் கிடைத்த நூல்களின் பெயர்கள்.

ருபையாத்தை தமிழில் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1945), பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. சகதீசன் (2002), நாகூர் ரூமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிட் ஜெரால்ட் மேற்கத்தேயப் பண்பாட்டுச் சூழலுக்கும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழகச் சூழலுக்கும் ஏற்ப மொழி பெயர்த்துள்ளதாகவும் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களே பாரசீக நாட்டுச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாடியுள்ள தாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய அம்சம் என்னவெனில் ஒமர் கையாம் பற்றிய தகவல்களுடன் ருபையாத்தை, வியாசக் கோவை மற்றும் முஸ்லிம்களின் தற்கால நிலைமை ஆகிய நூல்களை எழுதியவருமான வ.மி. சம்சுத்தீன் சாஹிப் என்பவரும் வீ.சி. அருளானந்தம் என்பாரும் இணைந்து தமிழில் மொழி பெயர்த்து 1936ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டுள்ளார்கள் என்பதாகும். இத் தகவல்கள் நான் மேலே சொன்ன நூலில் காணப்படுகின்றன.



இந்த நூலை 2007ல் சென்னையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகம் மீள்பதிப்புச் செய்துள்ளது.

கையாம் என்பது காரணப் பெயர். பாரசீகத்தில் செய்யும் தொழிலைக் கொண்டும் ஒருவரை அழைக்கும் பண்பு இருந்து வந்துள்ளது. ஒமர் தனது தொழிலைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்:- “சாத்திரக் கூடாரங்களைத் தைக்கும் கையாம் திடீரெனத் துக்க சாகரத்தில் வீழ்ந்து எரிந்து போனார். விதியின் கத்தரிக் கோல் அவருடைய சீவியக் கூடாரக் கயிற்றை வெட்டி விட்டது.”

தேசிக விநாயகம்பிள்ளை மொழி பெயர்த்த ஒன்றோ இரண்டோ ருபையாத் அடிகள் நான் படிக்கும் காலத்தில் நமது பாடப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம் உண்டு. அது ஒரு பழைய பாடலாகவும் அமைந்திருந்தது. படிப்பறிவற்றவர்கள் கூடத் தமது கேள்வி ஞானம் கொண்டு இப்பாடலைச் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ.

ஒமர் கையாம் பாரசீகத்தில் எழுதிய பெரும் புலவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இத்தகவல்கள் எல்லாமே ஒமர் கையாம் பாரசீகப் புலவர; என்பதைச் சொல்லிக் கொண்டிருக்க இப்பத்தியின் முதலில் நான் குறிப்பிட்டிருக்கும் லஹில்ல லாஹில்லா பாட்டில் வரும் “உருதுக் கவிஞர் ஒமர் கையாமின் கவிதையா நீ” எனும் வரிகள் என்னைக் குழப்பத்துக்குள் ஒரு கணம் தள்ளி விட்டன. இதில் அடிக் கோடிட்டுக் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் பாரசீகக் கவிஞரான ஒமர் கையாமை உருதுக் கவிஞராகச் சித்தரித்து எழுதியிருப்பவர் கவிஞர் வாலி என்பதே.

கையாமின் கவிதை வாலியின் திரிப்பையும் மீறி நிற்கும் வரம் பெற்றவை என்ற போதும் கூட வரலாற்றில் ஒரு கட்டத்தில் சர்ச்சைக் குரிய விடயமாக இது மாறிவிடாதா என்பது எனது கவலையாக இருக்கிறது. எது எதற்கெல்லாமோ சர்ச்சையில் ஈடுபடும் தமிழகத்தின் அறிவுக் கொழுந்துகள் இது பற்றி எதுவும் பிரஸ்தாபித்திருப்பதாகவும் தெரியவில்லை.

வாலியின் பாடல் என்பதற்காக வாலைச் சுருட்டிக் கொண்டார்களா என்ன!
-------------------------------------------------------------------------------------------------------

(“தீர்க்க வர்ணம்” - என்ற எனது பத்திரிகைப் பத்தி நூலிலிருந்து)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: