நேற்றுப் பிற்பகல் வத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி நானும் எனது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.
வத்தளை - கொழும்பு வீதிதான் விமான நிலைய வீதியும் என்பதாலும் பல கிளை வீதிகள் இணையும் பெருந்தெரு என்பதாலும் எப்போதுமே வாகன நெரிசல் இருக்கும் என்பது அத்தெருவால் பயணித்த எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.
மோட்டார் சைக்கிளை நான் ஓட்டிச் சென்றேன். நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.
வத்தளைச் சந்தியைத் தாண்டிய நெரிசலுக்குள் எமக்குப் பின்னால் சைரன் சத்தம் கேட்டது. அது எந்தப் பக்கத்தால் கேட்கிறது என்பது முதலில் புரியவில்லை.
பின்னால் அமர்ந்திருந்த நண்பரோ, “அம்புலன்ஸ் ஒன்று பின்னால் வருகிறது... நீங்கள் வழி விடுங்கள்...” என்றார்.
அது ஒரு அம்பியுலன்ஸ் வண்டியின் சைரன் ஒலியாக எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்த போதும் ஒதுங்கி வழி விடுவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்து ஓரங்கட்டினேன்.
அச்த வாகன நெரிசலுக்குள் மெதுவாக வாகனங்கள் நகர்ந்த போதும் குறிப்பிட்ட அந்த வாகனம் கிட்டே வந்த போது அது ஒரு முக்கிஸ்தருக்கான பாதுகாப்பு வாகனம் என்பது தெரிந்தது.
கிட்டத்தட்ட பலாத்காரமாக வாகனங்களை ஓரங்கட்டச் சொல்லி அந்த சைரன் வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழியெடுத்து நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வாகனத்துக்குப் பின்னால் மற்றொரு வாகனம். அதற்குள்தான் முக்கியஸ்தர் அமர்ந்திருக்க வேண்டும். அவரது வாகனத்தக்குப் பின்னால் இன்னொரு பாதுகாப்பு வாகனம். ஆக மூன்று வாகனங்கள்!
ஒருவாறு பிய்த்துப் பிடுங்கி அவை மூன்றும் தாண்டிச் சென்ற விதம் இங்கிதமானதாகவோ ஏற்றுக் கொள்ளும் விதமாகவோ இல்லை.
முக்கியஸ்தர் ஓர் அமைச்சராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் அவசரமாகச் சென்று பாணின் விலையையோ ஒரு லிற்றர் டீசல், பெற்றோலின் விலையையோ ஒரு ரூபாவாலாவது குறைக்கப் போகிறார் என்றால் பரவாயில்லை. எல்லோரும் வாகனத்தை பாதையோரம் நிறுத்தி விட்டு சல்யூட் அடிக்கலாம்.