Showing posts with label கடைசி வார்த்தை. Show all posts
Showing posts with label கடைசி வார்த்தை. Show all posts

Saturday, April 20, 2013

காலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்!



மரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள்.

மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு முன்னர் வெளிப்படுத்திய சொல்லோ வார்த்தையோ அத்தருணத்தின் பெறுமதியாலும் அம்மனிதனின் மனோ நிலையினாலும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. ஒரு துயரக் கவிதை போல அவ்வார்த்தைகள் சக்தி மிக்கவையாகி விடுகின்றன| வாழும் வரத்தைப் பெற்று விடுகின்றன.

வாழ்க்கை என்பது இவ்வுலகில் ஒரே ஒரு முறைதான் வாய்க்கிறது. அதை இழக்கும் கையறு நிலையில் சிலர் சொன்னவற்றை இங்கு தருகிறேன்.

இத்தாலியின் சர்வாதிகாரி பெனிற்றோ முசோலினிக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தப்பட்டவேளை, தனது மேலாடையை விரித்து அவர் சொன்ன கடைசி வார்த்தை 'என் நெஞ்சில் சுடு!' தூக்கிலிடப்பட்ட ஈராக்கின் தலைவர் சத்தாம் ஹூஸைன் மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் தனது நெஞ்சில் சுட்டு அதனை நிறைவேற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளைச் சட்டைசெய்யாமல் தூக்கில் தொங்க விடப்பட்ட போது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது (ஸல்) இறைவனின் தூதராவார்' என்ற வார்த்தைகளை மொழிந்தார்.

1886ல் சிகாகோ குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட ஜோர்ஜ் ஏங்கல் சொன்னார்:- 'அராஜகத்துக்கு வாழ்த்துக்கள். இது எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நேரம்!' அவுஸ்திரேலியாவின் தேசிய வீரர் என மதிக்கப்படும் கவிஞர் ஹரி ஹார்போர்ட் 1902ல் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சொன்னார்:- 'தேவடியாப் பசங்களே, நேராகச் சுடுங்கள். அங்கிங்கு சுட்டு விடாதீர்கள்.' அமெரிக்காவின் தேசிய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் நாதன் ஹேல் பிரித்தானியாவில் உளவு பார்த்த குற்றத்துக்காகச் சுட்டுக் கொல்லப்படும் வேளை சொன்னார்:- 'எனது நாட்டுக்கெனத் துறப்பதற்கு ஒரே ஓர் உயிர் மாத்திரமே இருப்பதற்காக வருத்தப்படுகிறேன்.'

முற்காலத்தில் மரண தண்டனை விதிப்பதற்காகப் பயன் படுத்தப்பட்ட கழுத்தை வெட்டும் இயந்திரம் 'கில்லட்டின்' என்று அழைக்கப்பட்டது. இவ்வியந்திரம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் 14ம் லூயி, 'நான் அப்பாவியாகச் சாகிறேன். எனக்கேற்பட்ட இந்நிலைக்குக் காரணமானவர்களை நான் மன்னித்து விடுகிறேன்' என்று குறிப்பிட்டார். 1618ல் சிரச்சேதம் செய்யப்பட்ட சேர் வோல்டர் ரலீ என்பார் இவ்வாறு சொன்னார்:- 'இதயம் சரியாக இருக்கிறது. தலை எந்தப் பக்கம் கிடக்கும் என்பதைப் பற்றிக் கவலை யில்லை.'

 மின்சாரக் கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட இருவரது இறுதி வார்த்தைகள் இரண்டு அர்த்தங்களைத் தருகின்றன. 1928ல் ஜோர்ஜ் அப்பல் 'சரி, கனவான்களே... அவிக்கப்பட்ட அப்பிளைப் பார்ப்பதற்கு நீங்கள் தயாராகிறீர்கள்' என்றார். ஜேம்ஸ் பிரென்ச் என்பவர் கவித்துவமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் சொன்னார் இப்படி:- 'நாளையப் பத்திரிகையில் இப்படித் தலைப்புச் செய்தி இடம்பெறுமாக இருந்தால் எப்படி யிருக்கும்? 'ஃபிரென்ச் ஃபிரைஸ்!'

 ஊசி மூலம் விஷம் செலுத்தியும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நாம் அறிந்ததே. 1993ல் அவ்வாறு தண்டனை வழங்கப்பட்ட லயனல் ஹெரேராவின் வார்த்தைகள் பரிதாபமானவை. 'நான் அப்பாவி! அப்பாவி!! அப்பாவி!!! எந்தத் தவறும் விட்டவனில்லை. சமுதாயத்துக்கு நான் நன்றிக் கடன் பட்டவன். உண்மையில் நான் ஓர் அப்பாவி. இந்த இரவில் ஒரு மோசமான தவறு இடம் பெறப் போகிறது.' 1997ல் மாரியோ பென்ஜமின் மேர்பி சொன்ன இறுதி வார்த்தைகள்:- 'இன்றைய தினம் இறப்பதற்கு நல்ல தினம். நான் உங்கள் எல்லோரையும் மன்னித்து விடுகிறேன். கடவுளும் அவ்வாறே செய்வார் என்று நம்புகிறேன்.'

கார்லா டக்கர் ப்ரவுன் தனக்குத் தண்டனை வழங்கப்படு முன்னர், 'நான் இப்போது யேசு நாதரை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அங்கு வரும் போது சந்திப்பேன். நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்' என்று சொன்னார்.

2000ஆம் ஆண்டு டென்னி டெம்ப்ஸ் என்பவருக்குத் தண்டனை வழங்குவதற்கு 33 நிமிடங்கள் எடுத்தனவாம். ஊசி மருந்து செலுத்துவதற்கான சரியான நரம்பைக் கண்டு பிடிப்பதற்கு மட்டுமன்றி மற்றொரு ஊசி மருந்தைத் தயார் படுத்திக் கொள்வதற்குமே இவ்வளவு நேரம் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. தண்டனை வழங்கப் பட்ட நபர் இழைத்த குற்றம் அல்லது அவரது உடலமைப்புக் குறித்துத் தண்டனை வழங்குவோர் மேற்கொண்ட முன் எச்சரிக்கையாக அது இருந்திருக்கலாம். ஆனால் டென்னிஸ் இவ்வாறு சொன்னார்:- 'எனது அடித் தொடையை, காலையெல்லாம் வெட்டினீர்கள். நான் அதிகம் இரத்தம் சிந்தினேன். இது மரண தண்டனை அல்ல| கொலை!' 1993ம் ஆண்டு ஜேம்ஸ் அலன் ரெட்டுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள்:- 'பேபி, நான் வீட்டுக்குப் போகிறேன்.'

 ரொபர்ட் ட்ரோ என்பார் தனக்கு தண்டனை வழங்கப்பட்ட போது உறுதிபடச் சொன்ன கடைசி வார்த்தைகள்:- 'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மரண தண்டனை என்பது ஒரு படுகொலையாகும்.'

1989ம் ஆண்டு சீன் பிளான்னகன் என்பாருக்கு தண்டனை யளிப்பதற்குரிய ஊசிமருந்தை ஏற்றியவரைப் பார்த்து சீன் சொன்னார்:- 'ஐ லவ் யூடா... செல்லம்!'

 25.05.2008
 (தீர்க்க வர்ணம் என்ற எனது பத்தியெழுத்துத் தொகுப்பு நூலிலிருந்து)