Monday, March 21, 2011

மூட்டைக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா?



அன்புள்ள கடாபி மச்சான்,

நெலம ரொம்ப சிக்கலாகிக்கிட்டு வாறதாப் பேசிக்கிறாங்க. உங்களுக்கெதிரா வான் வெளித் தாக்குதல் ஆரம்பமாகிட்டு. வில்லங்கத்த வெல கொடுத்து வாங்கிக்கிட்டிங்கன்னு நெனக்கிறேன். எங்க நாட்டில பொல்லக் குடுத்து அடிவாங்கிற என்டு சொல்லுவாங்க. அதத்தான் நீங்களும் செய்திருக்கிறதாப் படுகுது எனக்கு.

நீங்க ஒரு புகழ்பூத்த தலைவன்தான் மச்சான். அதில சந்தேகமே இல்லை. இதை மறுக்கிறவனோட மல்லுக்கு நிக்கிறத்துக்கு நான் ரெடியாத்தான் இருக்கன். ஆனாப் பாருங்க மச்சான்.... எல்லாத்துக்கும் ஒரு கால எல்லை இருக்கு. அது தாண்டிட்டுண்ணு வச்சிக்குங்க.. அதுக்குப் பிறகு சடுதியா மாற்றங்கள் வரும். மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படக்குள்ளேயே நாம சுதாகரிச்சுக்கணும். இல்லைன்னு வைங்க... றோட்டால போற சொறி நாயும் நம்மளப் பார்த்து சும்மாவாலும் ‘வள்’ என்று விட்டுப் போகும் நெலம வந்துரும். அந்த நெலம இப்போ உங்களுக்கு வந்துட்டுது. நீங்க சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ள விழுந்திருக்கீங்க.

வரலாற்றுல இருந்து கத்துக்கிறதுக்கு நெறய இருக்கு மச்சான். துரதிர்ஷ்ட வசமா நாம அதைப்பத்திச் சிந்திக்கிறதே இல்லை. இதனாலதான் இந்தக் கதி ஏற்படுகுது. இப்ப கூட உங்களுக்கு அவகாசம் இருக்கு. இன்னும் முரண்டு பிடிக்காதீங்க மச்சான். சாட்சிக் காரன் கால்ல விழுகுறத விடச் சண்டக்காரன் கால்ல விழலாம். உங்கட மக்கள்ற விருப்பத்துக்கிணங்க நீங்க நடந்துக்கிட்டா கௌரவமா மிச்சக் காலத்தையும் வாழ்ந்து கழிக்கலாம்.

இப்ப உங்களுக்குச் சில நாடுகள் ஆதரவா இருக்கிறாங்தான். ஆனா நெலம மோசமாகினா எல்லாப் பயலுகளும் வாலச் சுருட்டிக்கிட்டு நம்ம வேலயப் பார்ப்போம்னு போயிடுவானுங்க. அதாவது உங்களக் கொண்டு நடுத் தெருவுல விட்டுப் போட்டு ஓடி ஒளிச்சிருவானுங்க.

வான் வெளித் தாக்குதல்ல குழுந்தைகள், அப்பாவிகளெல்லாம் இறந்து போனதாக் கேள்விப்பட்டு சரியான கவலையிருக்குது. நீங்க விட்டுக் குடுக்க மாட்டேன் என்று மார் தட்டினதால மேற்கத்தேய மச்சான்மார் உங்க நாட்டுக்குள்ள காலடி வைக்கப் போறான். பிடிவாதம் பிடிச்சிக்கிட்டே இருந்தீங்கன்னு வைங்க. வந்து புகுந்து உங்களையும் அள்ளிக்கிட்டுப் போய்த் தூக்குல போட்டுடுவானுங்க. அத செல் போன்ல படம் புடிச்சி ஊருலகமெல்லாம் காட்டுவான். தேவையா இது?

மூட்டைக்குப் பயந்து வீட்டக் கொளுத்துற வேலயத்தான் நீங்க எல்லாரும் பார்த்துக்கிட்டு வாறீங்க. வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சினை வரும். அதைப் பயன்படுத்திக் கள்ளன் காவாலியெல்லாம் வீட்டுக்குள்ள நுழையுறத நீங்க அனுமதிச்சா நீங்க எப்புடித் தலைவனா இருக்க முடியும்? கண்ணுக்கு முன்னால ஈராக் இருக்கு. அதை மட்டும் பார்த்தாலே போதும். நான் சொல்லுறத் சொல்லிட்டேன்... அதுக்கு மேல உங்க இஷ்டம்!

மச்சான் என்று விளிக்கிறத்துக்காக மன்னிக்கணும் தல. எல்லாம் ஒரு பாசத்துலதான்!

ஏலுமென்டா தலைமுடியையும் நல்லா எண்ணெய் வச்சு வார்ந்துக்குங்க!

Saturday, March 5, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா


மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?

Thursday, March 3, 2011

சிறகு முளைத்த தீயாக


மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைத் தொகுதியின் மீதான பார்வை


புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

கவிதையின் சூட்சுமம் புரிபடாத நிலையில் எழுதப்பட்டுத் தொகுக்கப்படும் இந்த நூல்களால் கவிதையின் ஆரோக்கியமும் கெட்டுப்போயிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு சிறுகதைத் தொகுதியின் விற்பனையை விட கவிதைத் தொகுதிகள் விற்பனையில் பின்தங்கியிருக்கின்றன. அதாவது கவிதைத் தொகுதிகளைப் படிப்பது ஒரு வீண்வேலை என்ற நிலைக்கு வாசகர்கள் வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையைத் தோற்றுவித்தது கவிஞர்கள்தாம் அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள்தாம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

Wednesday, February 16, 2011

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - மலேசியா


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01

அறிமுகம்

இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.

பொதுவாக இக்கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு அந்நிகழ்வுகள் ‘ஏதோ ஒன்று நடந்திருக்கிறது’ என்ற எண்ணத்தையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சார்ந்தோருக்கும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் ஒரு சிலருக்கும் இந்நிகழ்வுகள் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

Friday, February 4, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011


இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களது குரல் எல்லோருக்கும் பரிச்சயமானது. இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர். இலக்கியத் தளத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் இவர் கவிதைகளுக்கான ‘யாத்ரா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இதுவரையில் இவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 2008ல் கவிதைக்கான தேசிய அரச சாஹித்ய விருது பெற்றவர்.அண்மையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இவர் இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹ{த்தீன்

* பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். எழுத்தாளர் லெ.முருகப+பதி இலங்கைக்கு வந்த நேரம் மல்லிகையில் ஒரு சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் டொமினிக் ஜீவா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களை அதாவது தமிழில் எழுதும் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே திரு.முருகபூபதி இம்முயற்சியில் இறங்கினார். இதனை முன்னெடுத்துச் செல்ல 2010ல் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பு எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அவ்வளவுதான். வேறு எந்தப் பின்னணியும் இந்த மாநாட்டுக்கு கிடையாது.

Tuesday, January 25, 2011

எழுத்தாளர் சந்திப்பு


கடந்த 22.01.2011 அன்று பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தில் எம்.ஏ. பட்டக் கல்வி மாணவ மாணவிகளுடன் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு.
இடமிருந்து வலமாக் விரிவுரையாளர் மகேஸ்வரன், கனகசபாபதி (கனடா) நான், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், கலாநிதி நுஃமான், கலாநிதி துரைமனோகரன், லெ.முருகபூபதி, வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்)
நண்பர்கள் ஓ.கே.குணநாதன், (ஜேர்மனி- பத்மகுணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Thursday, January 20, 2011

திசைதோறும் துலங்கிய நட்சத்திரம்


“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”

கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பதுமான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப் பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில் மறைந்த காஸி அல் குஸைபியைப் போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.

பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்;டனுக்கான சவூதி அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல் கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் குஸைபி. அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் குஸைபி.

Sunday, January 16, 2011

பேசும் புத்தகம்



ஹலோ.... அஷ்ரஃப் சிஹாப்தீன்!

நான் மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறேன். வெளியீட்டு விழாவன்று மிகவும் கம்பீரமாக மேடையில் ஏறி நீங்கள் என்னைப் பெற்றுக் கொண்டு வந்தீர்கள். வீட்டுக்கு வந்து என்னைச் சுற்றியிருந்த அழகான பளபளக்கும் உறையைக் கழற்றி விட்டு என்னை விரித்துப் பார்த்தீர்கள். அணிந்துரை, முன்னுரை, உள்ளடக்கம் ஆகியவற்றைத் தட்டிக் கொண்டு சென்ற நீங்கள் திடீரென என்னை மேசை மீது எறிந்து விட்டு வெறுப்புடன் எழுந்து சென்று விட்டீர்கள்.

முதலில் என்னை எழுதியவன் மீது கோபம் கோபமாக வந்தது. எனக்கு மட்டும் நகருவதற்கு முடியுமாக இருந்தால் நான் உங்களது வீட்டு அடுப்பில் விழுந்து என்னை எரித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் உங்களை ஒரு எழுத்துலக சுல்தானாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அது உங்கள் இஷ்டம். பலர் அப்படித்தானே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் படித்துப் பார்ப்பதற்கும் சிலர் இருக்கக் கூடுமல்லவா? உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தூக்கி எறியும் உங்களது மனோபாவம் அகம்பாவமா இல்லையா?

என்னை எழுதியவன் ஓர் அரைவேக்காடாக இருக்கலாம். புத்தகமாக இந்த எழுத்துக்களைப் பார்க்கும் ஆசையில் என்னை வெளியிட்டு விட்டான். அவரவர் திருப்திக்கேற்ப அவரவர் புத்திக்கேற்பத்தான் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சரியோ பிழையோ அவனுக்கு இதை எழுதி வெளியிடும் எல்லாச் சுதந்திரமும் உண்டு.

Tuesday, January 11, 2011

செவ்விதாக்கம் (Editing) - ஒரு பொதுப் பார்வை





எழுத்துக்கள் வாசிக்கப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன. எது, எப்படி, யாருக்காக, ஏன் அவ்வெழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்ற கேள்விகளின் அடித்தளத்தில் ஓர் உறுதியான இழையாகப் பின்னி இருக்கிறது செவ்விதாக்கம் என்கின்ற அம்சம். இன்னும் சொல்வதானால் இந்த வினாக்கள்தாம் எழுதப்படுகின்ற அனைத்து எழுத்துக்களதும் செவ்வைப்படுத்தலுக்கான நியாயத்தைக் கோரி நிற்பவை.

மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஓரிடத்தில் இன்ன பொருளுக்கு இவ்வாறு, இன்ன செயலுக்கு இவ்வாறு என்ற சைகை மொழி பரிச்சயமான போது அந்த மொழி செவ்வியதாக இருந்திருக்க வேண்டும். சைகையால் பேசிய நம் முன்னோர் அனாவசிய சைகைகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. செயல்களையும் பொருட்களையும் குறிக்கும் மொழி, பயன்பாட்டுக்கு வந்த போதும் கூட, இந்த நிலையே இருந்திருக்கும். மேலதிக விபரிப்புத் தோன்றி அது ஓர் எல்லையைத் தாண்டிக் கிளை பரப்பியபோது அநாவசியச் சொற்சேர்க்கைகள் மொழிகளில் இணைந்து கொண்டன.

எந்த வார்த்தைகளில் சொன்னால் கவனத்தைப் பெறும் அல்லது எத்தகைய விதமாகச் சொன்னால் மனதில் பதியும் என்பதை அறிந்து அதற்கேயுரிய வார்த்தைகளில் சொல்லுவதில் தெளிவு இருக்குமானால் வெளியிடப்படும் வார்த்தைகளில், எழுதப்படும் எழுத்துக்களில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.