இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01
அறிமுகம்
இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.
பொதுவாக இக்கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு அந்நிகழ்வுகள் ‘ஏதோ ஒன்று நடந்திருக்கிறது’ என்ற எண்ணத்தையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சார்ந்தோருக்கும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் ஒரு சிலருக்கும் இந்நிகழ்வுகள் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
எனவே இது பற்றிய எமது பக்கச் சந்தேகங்களையும் நியாயங்களையும் ஒரு பொதுத் தளத்தில் வைப்பது பொருத்தமானது எனக் கருதியே இக்கட்டுரை வரையப்படுகிறது. இதன் மூலம் யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எமக்குக் கிடையாது. அது எமது நோக்கமும் அல்ல. அந்தக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பிப் போயிருந்தவர்களுக்கும் இந்திய, மலேசிய இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த இதயங்களுக்கும் எமது நிலையை விளங்கப்படுத்த விழைகிறோம்.
கொழும்பு மாநாடும் இக்பால் அறிமுகமும்
2002ம் ஆண்டு இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஒரு புத்துணர்வை ஊட்டிற்று. உலகில் முதன் முதல் அரசாங்கம் ஒன்றின் பணத்தைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு அரச பணத்தைப் பெற்றுத் தந்தவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமாவார். அவரே இம்மாநாட்டுக் குழுவின் தலைவருமாவார். இந்த மாநாட்டின் சகல ஏற்பாடுகளையும் செய்து நடத்தியது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற எமது அமைப்பாகும். இதன் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன். இலக்கிய ஆய்வகத்துக்கும் மாநாட்டுக்கும் செயலாளராக இருந்து இயங்கிவன் நானாவேன்.
இந்த மாநாட்டின் நுனி முதல் அடிவரை திட்டம் வகுத்துச் செயற்பட்டது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற எமது அமைப்பாகும். இந்த மாநாட்டு ஏற்பாடுகளுக்குள் கௌரவ அமைச்சர் அவர்கள் எந்தவொரு விதத்திலும் தலையீடு செய்தது கிடையாது.
மாநாடு நடத்துவதற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஏற்கனவே மாநாடு நடத்தி அனுபவப்பட்ட இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினரைச் சந்தித்து நாம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டோம். அங்குதான் மாநாட்டுக்கான மலேசியாவுக்கான இணைப்பாளராக டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளர் ஹாஜி ஏவி. எம். ஜாபர்தீன் சிபார்சு செய்தார். அதன் படி அவரைக் கொண்டே தகவலை இக்பாலுக்குத் தெரிவித்தோம். இக்பால் எமது மாநாட்டுக்கு ஏறக்குறைய 35 பேரளவில் அழைத்து வந்தார். அப்போதுதான் கௌரவ அமைச்சரையும் அவர் சந்தித்தார். அதாவது கௌரவ அமைச்சருடனான அவரது நட்பு ஏற்பட்டதற்குப் பின்னணியிலிருந்தவர்கள் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனும் எமது இலக்கிய ஆய்வகமுமாகும். இதைத் தெளிவாக அழுத்திச் சொல்வதற்கான காரணத்தை நீங்கள் பின்னால் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை மாநாட்டுக்குப் பிறகு சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் 2007ல் நடத்திய மாநாட்டுக்கு டாக்டர் ஜின்னாஹ்வையும் எழுத்தாளர் முத்துமீரானையும் என்னையும் இணைப்பாளர்களாக அறிவித்திருந்தார்கள். (1997ல் நடந்த மாநாட்டுக்கும் டாக்டர் ஜின்னாஹ்வும் முத்துமீரானும் இணைப்பாளர்கள். இந்த மாநாட்டின் போதே இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது)
ஆக எப்படிப் பார்த்தாலும் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளுக்கான இலங்கை இணைப்பாளராக டாக்டர் ஜின்னாஹ் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.
2007ல் சென்னையில் நடந்த மாநாட்டில் இலங்கை மற்றும் மலேசியப் பேராளர்களுக்கு நடந்த அவலங்களும் அவமதிப்புகளும் பலர் அறிந்தவையே. இம்மாநாட்டை இரண்டொருவர் தமது அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தினர் என்று தமிழ் நாட்டிலேயே விமர்சித்தனர். இறுதி நாளன்று இலங்கையிலிருந்து அங்கு சென்றிருந்த எமது அமைச்சர்கள் (ரவூப் ஹக்கீம் உட்பட) முன் வரிசையில் அமர்ந்து கருணாநிதியின் கண்களுக்குப் பட்டுவிடாமல் இருப்பதற்காக சிவில் உடையில் பொலீஸாரை அமர்த்தியிருந்தனர். அந்த மாநாட்டை முன் கொண்டு சென்றவர்கள் நடந்து கொண்ட பண்பற்ற முறைகளால் எம்முடன் வந்திருந்த நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட பேராளர்கள் மனங் கசந்து திரும்பினர். இன்றும் அந்த அவமானத்தையும் கசப்பையும் மறந்து விட முடியாமல் தவிக்கின்றனர்.
இம்மாநாட்டில் நேர்ந்த அவமானங்களை சுட்டிக் காட்டிய கட்டுரைகளைப் பிரசுரித்தமைக்காக சமநிலைச் சமுதாயம் இதழின் கௌரவ ஆசிரியர் ஹாஜி ஜாபர்தீனை அவமதித்து புதிய ஒரு சஞ்சிகையில் தாக்கி எழுதினார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹாஜி ஜாபர்தீன் கவிக்கோவுக்கு எதிராகத் தொடர்ந்த மான நஷ்ட ஈட்டு வழக்கு இன்னும் நீதி மன்றில் இருக்கிறது என அறிய வருகிறோம்.
இவ்வாறு நீண்ட பாரம்பரியம் கொண்ட இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை ஒரு சாரார் தம்வசம் எடுத்துக் கொண்டார்கள். ஏற்கனவே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தியதன் மூலம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை வழி நடத்தியோர் தனித்து நின்றிருந்தனர். அவ்வேளை தமிழ் நாட்டில் நின்றிருந்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தைச் சேர்ந்த நாம் அவர்களுடன் இத்துயர நிலையை மாற்றியமைக்க் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் தங்கியிருந்த காலப்பிரிவுக்குள்ளேயே அவர்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நாயக காவிய ஒரு நாள் கருத்தரங்கை வெற்றிகரமாகச் சென்னையில் நடத்திக் காட்டியது.
இந்த பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினர்தாம் மலேசிய மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கியவர்கள். சிறந்த நிர்வாகியும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளருமான பேரா. சேமுமு. முகம்மதலியை மலேசியாவுக்கு அழைத்தெடுத்த டத்தோ இக்பால் அவரது ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துக்கு வந்த கடிதம்
தலைவர், இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், இலங்கை என்று விளிக்கப்பட்டு ஆய்வகத்தின் தலைவரது தபால் முகவரிக்கு அனுப்பப்பட்ட - டத்தோ ஹாஜி இக்பால் கையெழுத்திட்டிருந்த மலேசிய மாநாடு சம்பந்தமான விபரக் கடிதத்தில் 10.12.2011 திகதியிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் 12ம் திகதிக்கும் 14ம் திகதிக்குமிடையில் கிடைத்திருக்க வெண்டும். திகதி ஞாபகமில்லை. இரண்டுக்குமிடையிலான 13ம் திகதியை நாம் வைத்துக் கொள்ளலாம்.
இக்காலப் பிரிவில் 2011 ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெறவிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுப் பணிகளில் மிகத் தீவிரமாக நாம் ஈடுபட்டிருந்தோம். டாக்டர் ஜின்னாஹ் சரிபுத்தீன் மாநாட்டுச் செயற்குழுவில் முக்கிய பொறுப்புக்களை மேற் கொண்டிருந்தார். அம்மாநாட்டின் செயலாளராக நான் இயங்கினேன். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இம்மாநாட்டை நடத்திச் செல்லும் ஏற்பாடுகளில் நாம் இறங்கியிருந்தோம். இடைக்கிடை தூரப் பயணங்கள் செய்து பலரைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இக்பாலிடமிருந்து வந்த கடிதக் கோவையை என்னிடம் தந்திருந்தார் ஜின்னாஹ். நானும் அவரும் அதை முழுமையாகப் படித்துப் பார்த்தோம். மலேசிய மாநாடு குறித்த எனது முடிவு என்னவெனில் இது ஒரு மலேசிய இலக்கிய விழாவேயொழிய ஒரு சர்வதேச மாநாடு அல்ல என்பதுதான். இலங்கையிலிருந்து இரண்டேயிரண்டு பேர் கட்டுரை படிப்பதற்கும் இரண்டு பேர் கவிதை படிப்பதற்கும் வரையறை சொல்லப்பட்டிருந்தது. இதே போலவே தமிழ் நாட்டுக்கும். அதாவது சாப்பாட்டில் உப்புச் சேர்ப்பது போல் பிற நாட்டவர் பயன்படுத்தப்படப் போகிறார்கள் என்பது புரிந்தது.
எனவே இம்மாநாடு சம்பந்தமாக அவசரப்பட்டு ஊர்கூட்டி ஊர்வலம் எடுப்பது அவசியமில்லை எனவும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு முடிந்த பின்னர் செயற்குழுவை அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடலை நடத்தி ஒரு முடிவுக்கு வருவோம் என்று தீர்மானித்தோம்.
கட்டுரைகளைப் பெறுவதற்கும் கவிதை படிப்பதற்கும் ஈரிருவரைத் தீர்மானித்து விட்டு மலேசியாவுக்குத் தகவல் சொல்வதே எமது நோக்கமாக இருந்தது. இரண்டு கட்டுரைகளுக்காகவும் இரண்டு கவிதைகளுக்காகவும் பத்திரிகை அறிவித்தல் கொடுத்தால் பலரோடு மனக் கசப்புக்குள்ளாக நேரும் என்று நினைத்தோம். பெரும் மன உழைச்சலுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாக நேரிடும் என்ற ஒரு பயம் எமக்கு இருந்தது.
தமிழ் எழுத்தாளர் மாநாடு முடிந்த கையோடு தனது ‘திப்பு சுல்தான்’ காவிய நூலை வெளியிட ஜின்னாஹ் தமிழ் நாடு சென்றார். அவர் மீண்டும் வந்தவுடன் அதாவது 6.2.2010ஞாயிறன்று இலக்கிய ஆய்வக செயற்குழுவையும் சில இலக்கிய முக்கியஸ்தர்களையும் அழைத்து இது பற்றி முடிவெடுக்கலாம் என்றிருந்தோம். ஆனால் அதற்கிடையில் ஜின்னாஹ் இந்தியாவில் இருக்கும் போதே மலேசியக் குழு தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தது.
கவிஞர் ஜின்னாஹ்வுடன் தொடர்ந்து டத்தோ இக்பாலும் அவரது குழுவினரும் நேரிலும் தொலைபேசியிலும் பேசி ‘நீங்கள்தான் இவ்விடயங்களை இலங்கையில் முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக ஜின்னாஹ் இலங்கை சென்ற பின்னரே மலேசியக் குழு இலங்கை வரும் என்றும் ஜின்னாஹ்விடம் இக்பால் அழுத்தமாகத் தெரிவித்திருந்தார்.
ஜின்னாஹ் பெப்ரவரி 2ம் திகதி நாடு திரும்பினார். 4ம் திகதி மலேசியக் குழு இக்பால் தலைமையில் இலங்கை வந்திறங்கிற்று. தாம் வருவதை ஜின்னாவிடம் இக்பால் அறிவித்த போது தங்களை விமான நிலையத்தில் எதிர் கொள்ளட்டுமா? தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளட்டுமா? என்றெல்லாம் இக்பாலிடம் ஜின்னாஹ் கேட்டுள்ளார். அதற்கு இக்பால் ‘எனக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வாகனம் அனுப்புகிறார், நீங்கள் வரவேண்டியதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற அங்கத்தவருமான கௌரவ ஹஸன் அலி அவர்கள் 5ம் திகதி அமைச்சின் கேட்பொர் கூடத்தில் மலேசிய மாநாடு பற்றிய கூட்டம் இருப்பதாக இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் யாவருக்கும் அவரே தனது தொலைபேசி மூலம் அழைத்துக் கொண்டிருந்தார். கவனியுங்கள், இலக்கிய மாநாட்டுக்கு அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தை நாம் அல்லவா ஒழுங்கு செய்ய வேண்டும், இவர்கள் ஏன் இத்தனை சிரமம் எடுத்தக் கொள்கிறார்கள் என்று எமக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றி ஒரு பத்திரிகைச் செய்தியையும் அமைச்சர் சார்பில் கௌரவ ஹஸன் அலி கொடுத்திருந்தார்.
4ம் திகதி பிற்பகல் தொடர்பு கொண்ட டத்தோவிடம் இவ்விடயம் பற்றி ஜின்னாஹ் தெரிவித்த போது, “நீங்கள் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! அமைச்சர் எனது நண்பர் என்ற வகையில் எனக்கு விமான நிலையத்துக்கு வாகனம் அனுப்புவார். நீங்களே இலங்கையில் எமது முகமாக இருக்கிறீர்கள். அமைச்சர் அவருக்குரிய ஸ்தானத்தில் அல்லது ஒரு புரவலர் ஸ்தானத்தில் இருப்பார். அவருக்கும் மாநாட்டுக்கும் வேறு சம்பந்தம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
எதுவாக இருந்த போதும் இதற்குள் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது. 2007ம் ஆண்டு சென்னை மாநாட்டுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போது எம்மை அழைத்துப் பேசினார் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம். நாமும் அதுவரை நடந்துள்ளவற்றை அவருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை வந்த இந்தியக் குழுவிடம் 2002ம் ஆண்டு இலங்கையில் மாநாட்டை நடத்த அரச பணத்தைப் பெற்றுத் தந்தமைக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமை உச்ச நிலையில் கௌரவிக்க வேண்டும் என்ற வேண்டு கோளை விடுத்ததையும் அவருக்குச் சொன்னோம். அடுத்த நாள் பத்திரிகையில் ‘அமைச்சர் தலைமையில் இலங்கைக் குழு மாநாட்டுக்குச் செல்கிறது’ என்று செய்தி வந்தது.
எனவே இந்த மாநாட்டுக்கும் தன்னுடைய தலைமையிலேயே ஒரு குழு செல்கிறது என்று தெரிவிக்கும் நோக்கத்தில்தான் இந்த ஏற்பாட்டில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் புறந்தள்ளப்பட்டதா என்ற ஒரு சந்தேகம் எமக்கு வந்தது. இக்பாலும் குழுவினரும் ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்க கௌரவ அமைச்சரின் கட்சிச் செயலாளர் வேறு ஒரு கதை சொல்லிக் கொண்டிந்ததில் நாம் பெரும் குழப்பத்துக்கு உள்ளானோம்.
கொழும்புக் கூட்டம் - 05.02.211
நான்கு மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்துக்கு கௌரவ அமைச்சர் வருகைக்கு முன்னர் மூன்று வீடியோக் கமராக்கள் பொருத்தபட்டன. ஸ்டில் கமராக்கள் வேறு. (இரண்டு கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் மூன்று வீடியோ கமராக்கள்!) 5.30 அளவில் கௌரவ அமைச்சரும் வெளிநாட்டுத் தூதுவர்கள் போல் இக்பால் குழுவினரும் வந்து சேர்ந்தார்கள்.
கௌரவ அமைச்சர் அவர்கள் மலேசியாவில்தான் முதலாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்ததாகத் தெரிகிறது என்கிற அதிசயத் தகவலைத் தெரிவித்துத் தனது தலைமை உரையை நிகழ்த்தினார். பிரதேச சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சிப் பணிகளுக்கு மத்தியில் இதில் கலந்து கொள்வதைச் சொல்லி இக்பால் அன் கோவை அறிமுகப்படுத்தி விட்டு அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து இக்பால் பேசினார். மலேசிய மாநாட்டின் ஒன்றிணைப்புப் பொறுப்பை அமைச்சர் தோளில் பாரமாக வைப்பதாகச் சொன்னார். தம்முடன் வந்திருந்தவர்களை அறிமுகப்படுத்தினார். சீனி நைனா மூன்று மணித்தியாலம் பேசக் கூடியவர் என்றார். சரியான ஒரு வரை முறைகளுடன் மலேசிய மாநாடு நடக்கும் என்றும் இலங்கையிலிருந்து இரண்டு கட்டுரைகளும் இரண்டு கவிதைகளும் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறுதியிட்டுச் சொல்லிச் சென்று அமர்ந்தார். நேற்று பிற்பகல் வரை நீங்கள்தான் எமது முகம் என்று சொன்ன இக்பால் தனது பேச்சில் ஒரு இடத்தில் கூட ஜின்னாஹ்வின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது.
சீனி நைனாரின் பேச்சு சுவாரஸியமானது. மலேசியாவில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய பிரக்ஞை இல்லை என்றும் அங்குள்ளோருக்கு முன்னோரின் முதுசொம் இதுதான் என்று அடையாளப்படுத்திக் கொடுப்பதற்குமே இந்த மாநாடு என்று விளக்கம் தந்தார். இயல்பாகவே மலேசியாவில் இலக்கிய விழாக்களுக்கு மலேசியரே வருவதில்லை. நீங்கள் யாவரும் திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று அழைத்தார். இஸ்லாமிய இலக்கியம் என்றால் என்ன? தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்து மொத்தமாக அரை மணிநேரம் பேசினார். கவிக்கோவைப் போல் தமிழ் நாட்டில் பெரிய கவிஞன் கிடையாது என்றும் வைரமுத்துவையெல்லாம் மிஞ்சியவர் அவர் என்றும் சான்றிதழ் கொடுத்தார். கவிஞர் மைதீ சுல்தானும் ஃபிதாவுல்லாஹ்வும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்துக்கு சுமார் 70 பேர் வரை வந்திருந்தார்கள். அவர்களில் இலக்கியவாதிகள் 25 வீதம். இலக்கிய ஆர்வலர்கள் 30 வீதம். அமைச்சரின் கட்சி முக்கியஸ்தர்கள் 20 வீதம். ஏனையோர் அமைச்சர் அழைத்தமைக்காக வந்திருந்தோர்.
முக்கியஸ்தர்களாக மேடையில் அமர்ந்திருந்தோரில் ஒருவர் கூட இலங்கை இலக்கியப் படைப்பாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முன்னாள் நீதிபதி, கௌரவ அமைச்சர், கௌரவ ஹஸன் அலி (கட்சிச் செயலாளர் - பா.உ), ஒரு முன்னாள பொலிஸ் அதிகாரியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர், கட்சி முக்கியஸ்தரான மற்றொருவர். ஏனையோர் மலேசியர்.
பாருங்கள்! ஒரு சர்வதேச மாநாட்டின் முக்கியஸ்தர்களாக அரசியல்வாதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க தமிழில் ஏழு காப்பியங்களை எழுதிய ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சபையில் அமர்ந்திருந்தார். இதன் மூலம் இங்கு என்ன நடந்திருக்கலாம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
சீனி நைனார் பேசி முடிந்த பிறகு, சபையினருக்கான கேள்விகள் நேரத்தில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுந்து சென்று தனது ஆதங்கத்தை உணர்ச்சி வசப்பட வெளிப்படுத்தினார். ‘எமக்குக் கடிதம் அனுப்பி ஏற்பாடு செய்யுமாறு பணித்து விட்டு இங்கே வேறு ஏதோ நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... இது என்ன?’ என்ற வினாவை ஜின்னாஹ் எழுப்பினார். ஜின்னாஹ் மலேசியா வந்த போது அவரை பெரு மரியாதையுடன் நடத்தியமைக்காக தனிப்பட்ட முறையில் இக்பாலுக்கு நன்றி கூற ஜின்னாஹ் மறக்கவில்லை.
ஜின்னாவின் கேள்வியைத் தொடந்து பதட்டத்துடன் எழுந்த இக்பால் நான் உங்களுக்கு டிசம்பர் 10ம் திகதி கடிதம் அனுப்பினேன். நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையே என்று சமாளித்து விட்டுச் சென்று அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்ற நான், அப்படியாயின் நீங்கள் நேற்று வரை எதற்காக ஜின்னாஹ்விடம் ‘நீங்கள்தான் எமது முகம்’ என்று சொன்னீர்கள் என்று வினாவெழுப்பினேன். இக்பால் கடைசிவரை அதற்குப் பதிலளிக்கவில்லை. அவரால் அதற்குப் பதிலளிக்க முடியாது என்பது எமக்குப் புரியும். எந்த நிமிடத்தில் இலங்கை மண்ணைத் தொட்டாரோ அந்த நிமிடத்திலிருந்து அவர் வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்குத் திருப்பப்பட்டு விட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
‘அமைச்சரின் தலைமையில் நீங்கள் இயங்குங்கள் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நாங்கள் சந்தோசமாக இயங்கியிருப்போம்’ என்று குறிப்பிட்டேன். நேற்று வரை ஒரு கதையையும் இன்று வேறு ஒரு கதையையும் இக்பால் சொன்னதானது அவர் மீது இருந்த மரியாதையை எமது மனங்களிலிருந்து அந்தக் கணத்திலேயே இறக்கி விட்டது.
மலேசிய மாநாட்டில் கவிக்கோவை முன்னிலைப்படுத்துவதால் தமிழ் நாட்டுப் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் கலந்து கொள்ளாமல் இருப்பது பற்றி முடிவு செய்திருப்பதையும் கவிக்கோ 2007ம் மாநாட்டில் எம்மை அவமானப்படுத்தினார் என்பதையும் எனது உரையில் சொல்லி அமர்ந்தேன். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இம்மாநாடு சம்பந்தமான சூடான செய்தி இதுதான். இதை நான் வெளியே சொன்னதும் எனக்குப் பின்னால் பதிலளிக்க வந்த சீனி தன்னை மறந்து ‘இது ஒரு சித்து விளையாட்டு’ என்று பேசத் தொடங்கினார். சபையிலிருந்த ஜின்னாஹ் ‘விளையாடுவது நாங்களல்ல, நீங்கள்’ என்று சொன்னார். அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் மானா மக்கீனும் குரல் கொடுத்தார். தனது சூட்டைத் தணித்துக் கொண்ட சீனி தமது நிலைப்பாட்டைச் சொல்லியமர்ந்தார். ஆனால் எம்மிடம் நேற்று வரை ஒரு கதையும் இன்று ஒரு கதையும் சொன்னது பற்றி சீனி நைனாரும் எதுவும் பேசவில்லை.
அதனைத் தொடர்ந்து எழுந்த எழுத்தாளர் மானா மக்கீன் கவிக்கோ, ஹிதாயத்துல்லாஹ் குழுவினரின் 2007ம் ஆண்டு மாநாட்டு நடவடிக்கைகள் பற்றிக் கருத்துச் சொல்லிக் கலகலப்பை ஏற்படுத்தினார். இரண்டு கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்படும் என்ற விடயத்தையிட்டுத் தனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தார். கவியரங்குக்குத் தலைமையேற்க மலேசியாவில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
நிலைமை சிக்கலாவதை அமைச்சர் புரிந்து கொண்டார். எனவே, ‘ஜின்னாஹ்வின் தலைமையில் ஒரு குழுவை ஏற்பாடு செய்வோம்’ என்று சொல்ல, ஜின்னாஹ் அதை மறுத்தார். தலைமை கேட்டு இங்கு நான் வரவில்லை என்பதை உறுதியாக அவர் தெரிவித்தார். மலேசியக் குழுவினரின் தகிடு தத்தங்களால் மனம் விட்டுப் போன நிலையில் அந்த மண்டபத்திலிருந்து நாம் வெளியேறினோம்.
நமது கருத்து
மலேசிய மாநாட்டுக்கு ஒருங்கிணைப்பை வழங்குவதன் மூலம்தான் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமோ அதன் முக்கியஸ்தர்களோ வெளிச்சத்துக்கு வரமுடியும் என்ற எந்த அவசியமும் கிடையாது. இந்த நாட்டின் இலக்கியப் படைப்பாளிகளில் அதிசிறந்தவர்கள் எம்மோடிருக்கிறார்கள் என்பதை மலேசியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். டத்தோ ஹாஜி முகம்மத் இக்பால் மீது 05.02.2011 வரை ஒரு மரியாதை இருந்தது. அவரது வேண்டுகோளுக்காகவே நாம் இந்தக் கூட்டத்துக்கே வந்திருந்தோம். இக்பால் குழுவினர் நடந்து கொண்ட முறையானது திருமணத்தில் நீதான் மாப்பிள்ளை என்று சொல்லி வரவழைத்து விட்டு மணவறையருகே வந்ததும் இன்னொருவரை மாப்பிள்ளையாக்கிய கதையைப் போன்றது. இந்த நடவடிக்கையையிட்டு நாம் மிகவும் வருந்துகிறோம். மலேசியக் குழுவினரின் இந்த அற்பச் செயற்பாட்டை மலேசிய இலக்கிய சமூகத்தின் முன்னால் சமர்ப்பிக்கிறோம்.
டத்தோ இக்பால் ஒரு முக்கியஸ்தராக இருக்கலாம். அதற்காக இலக்கியவாதிகள் சுண்டைக் காய்கள் அல்லர். அவரது மேட்டிமைக்கு அமைச்சர் மட்ட நடவடிக்கைகளில் அவருக்கு ஆர்வம் இருப்பதில் தப்பே கிடையாது. ஆனால் அதற்காக இலக்கியவாதிகளை விட்டு விட்டு அரசியல்வாதிகளை மேடையேற்றி வெளிச்சம் காட்டுவதற்குப் பெயர் இலக்கியமோ இலக்கியச் செயற்பாடோ அல்ல. இலக்கிய மாநாடோ இலக்கிய விழாவோ செய்வதெனில் இலக்கியவாதிகளே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இல்லை நான் அமைச்சர் மட்டத்தில்தான் தொடர்பு கொள்வேன் என்றால் எமக்கு அவர் கடிதம் அனுப்பியிருக்கவோ நீங்கள்தாம் எமது முகம் என்று தொடர்ந்து சொல்லிவிட்டுக் கடைசி வேளை கழுத்தறுக்கவோ தேவையில்லை.
அமைச்சர் இலக்கிய ஆர்வலர்தான். சந்தேகமே இல்லை. அதற்காக அத்தனை கட்சி முக்கியஸ்தர்களையும் மேடையில் இருந்தி விட்டு இலக்கியவாதிகளைக் கீழே அமர்த்தி விட்டு இலக்கியம் பேசுவது இலக்கியவாதிகளை அவமதிப்பது இல்லையா? இதை இலக்கிய மாநாடு நடத்தப்’ போகும் மலேசியக் குழு ஏன் அதரிந்து கொள்ளாமல் இருக்கிறது.
இலங்கையில் ஓர் அமைச்சரையும் இந்தியாவில் அரசியல் சம்பந்தப்பட்ட சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், கவிக்கோ ஆகியோரை முன்னிலைப்படுத்துவதையும் பார்த்தால் இதுவும் மலேசியாவின் ஓர் அரசியல் மாநாடாகவே இருக்குமோ என்று ஒரு சந்தேகம் தோன்றுவது நியாயம்தானே. 2007ம் ஆண்டு மாநாடு எப்படி சிலருக்கு அரசியலுக்குப் பயன்பட்டதோ அப்படியே மலேசியாவில் யாருடையவாவது அரசியல் அபிலாஷைகளுக்காகவோ தமது முக்கியத்துவத்தை அரசியல் தலைவர்களுக்கு நிரூபிப்பதற்கோ பயன்படப் போகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மலேசியக் குழுவினர் மாநாடு பற்றிய விளக்கக் கூட்டத்தில் மலேசிய மாநாடு பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். சீனி நைனார் மூன்று மணித்தியாலம் பேசுவார் என்று சீனி வியாhபரம் நடத்தி எமது நேரத்தை வீணடித்திருக்கத் தேவையில்லை. மிக அண்மையில் அதிக நேரம் உரையாற்றி கின்னஸ் புத்தகத்தில் தன்னைப் பதிவு செய்தவன் இருக்கும் நாட்டில் சீனி நைனார் மூன்று மணித்தியாலம் பேசுவார் என்பதெல்லாம் எங்களுக்குக் காமெடிதானே! எங்களிடமும் ஒரு றபீக் நானா இருக்கிறார். மூன்று மணித்தியாலம் என்ன 30 மணித்தியாலம் பேசுவார். அதுவும் அடுக்கு மொழியில். இந்த மாநாட்டுக் கூட்டத்தை அரசியல்வாதிகளுக்குள் கொண்டு நுழைத்ததும் சீனி நைனார் புகழ்பாடியதும் எதை எங்கு சொல்வது யாருக்குச் சொல்வது எப்படிச் சொல்வது என்ற அவர்களது தெளிவின்மையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.
மலேசியாவில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய பிரக்ஞை கிடையாது என்று சொன்ன சீனி நைனார் ஏற்கனவே இரண்டு சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்த இலங்கை மண்ணில் பல மாநாடுகளில் பங்கெடுத்துக் காரியமாற்றிய, மாநாடு நடத்தியோர் முன்னிலையில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிப் பாடம் நடத்தியதுதான் வேடிக்கையானது. 2002 மாநாட்டுக்குப் பிறகு இஸ்லாமிய தமிழ் இலக்கியம், முஸ்லிம்கள் இலக்கியம், முஸ்லிம் தேச இலக்கியம் என்ற பரிமாணங்களில் இளைஞர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் மண்ணில் ஒரு மாநாட்டை நடத்துவதற்கு ஆள் சேர்க்க வந்த சீனி இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடம் நடத்தியது சிரிப்பை ஏற்படுத்திற்று. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. “ஒரு பிள்ளைப் பெத்தவள் ஏழு பிள்ளைகளைப் பெத்தவளுக்கு முக்கிக் காட்டினாளாம்”. அப்படித்தான் சீனியின் பேச்சு அமைந்திருந்தது. ஒரு மாநாட்டை நடத்துவதற்கு முன்னரே சட்டாம்பிள்ளைத் தனமெல்லாம் காட்டக் கூடாது. மாநாட்டை நடத்துவதற்கு முன்னரே இஸ்லாமிய இலக்கியத்தின் காப்பாளர்களாக மாறிவிடுவது நகைப்புக்கிடமானது. அந்தக் கூட்டத்தில் இலக்கியவாதிகளை அழைக்காமல் அரசியல்வாதிகளை மட்டும் அழைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கைதட்டுக்களைச் சீனி நைனார் பெற்றிருக்கலாம்.
வைரமுத்துவை விடக் கவிக்கோவை உயர்த்திப் பேசினார் சீனி நைனார். மாநாடு பற்றிப் பேசவந்தாரா கவிக்கோவையும் வைரமுத்துவையும் ஒப்பிட்டு உரையாற்ற வந்தாரா என்று ஒரு கணம் சந்தேகம் வந்தது. அது அவரது கருத்துத்தான். இஸ்லாமிய இலக்கியத்துக்குக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பங்களிப்பு எதையும் செய்யாத கவிக்கோவை அள்ளித் தலையில் வைத்து உலாத்துவதற்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தவிர எம்மிடம் மாற்றுக் கருத்து இருக்கிறது. உருது மொழியோடு கவிக்கோவுக்குப் பரிச்சயம் இல்லையென்றால் அவர் தமிழ்க் கவிதைப் பக்கமே தலைவைத்துப் படுத்திருக்க மாட்டார். ஒரு கருவாச்சி காவியம் எழுத் கவிக்கோவால் ஒரு போதும் முடியாது. முகம்மது நபி பற்றிக் காவியம் எழுதவே தயங்கும் அவரை ஒரு பொதுவான தமிழ் அறிஞராக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.
தனது பதிலளிக்கும் பேச்சின் போது என்னை ஜின்னாஹ்வின் செயலாளர் என்று மட்டுமே குறிப்பிட்டுப் பேசினார் இக்பால். நான் எந்த நபருடையவும் செயலாளன் அல்லன். சில வேளை அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக எனது பெயர் மறந்து போயிருக்கலாம் என்பதால் அவருக்கு சில விடயங்களை ஞாபகமூட்ட வேண்டும்.
டத்தோ இக்பால் அவர்களே... 2002ம் ஆண்டு கொழும்பு மாநாட்டில் பிரதமர் கரங்களால் பொன்னாடை போர்த்தபட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா? அந்த நிமிடங்களில் பிரதமர், அமைச்சர், டாக்டர், ஜின்னாஹ், நான் ஆகியோர்தாம் அந்த நிகழ்வில் பங்கு கொண்டோம். உங்களுக்குப் போர்த்தப் பட்ட பொன்னாடையையும் விருதினையும் எடுத்துக் கொடுத்தது நான்தான்!
அம்மாநாடு முடிந்த பின் அடுத்த நாட் காலையுடன் எமது பொறுப்பு முடிந்த பிறகு இன்னொரு நாள் நிற்பதற்கு சகாயம் செய்ய மாட்டீர்களா என்று தனியே ஒரு நபரிடம் கேட்டீர்களே... அந்த நபர் நான்தான்!
2007ம் ஆண்டு மாநாட்டின் பாராட்டினைப் புறக்கணித்து விட்டுச் செல்கையில் ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் ஏற்பாட்டில் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்ர விடுதியில் உணவருந்தச் சென்ற போது பக்கத்தில் அமர்ந்திருந்து ஒருவரோடு பேசிக் கொண்டு வந்தீர்களே... நான்தான் அந்த நபர்.
அந்த வேளை 2002ம் ஆண்டு மாநாட்டின் இறுதி நிகழ்வில் உங்களைப் பேச அழைக்கத் தவறியமைக்காக மன்னிப்புக் கோரினேனே.. ஞாபகமா... அவன்தான் நான்! எனது பெயர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
மலேசியாவில் கற்கும் தனது மகளுக்கு உங்களை பாதுகாவலராக எமது கௌரவ அமைச்சர் நியமித்திருப்பதாக நீங்கள் சொன்னீர்களாம். அவருடனான உங்களது நட்புக்கு வழிகோலியவர்களில் ஒருவன்தான் நான். நாம் பல விருந்துகளில் சந்தித்து அளவளாவியுள்ளோம்... எல்லாவற்றையும் சொல்ல அவசியம் இல்லை... மறதி பொல்லாதது ஹாஜி! தானாக வரும் மறதியை விட இன்னொருவரால் ஏற்படுத்தப்படுகிறது பாருங்கள் மறதி! அது எல்லாவற்றையும் விடக் கொடியது.
டத்தோவின் மாநாட்டுக் கனவு
உண்மையில் டத்தோ ஹாஜி முகம்மத் இக்பால் மலேசிய மாநாட்டைப் பொறுத்தளவில் பிரிந்து கிடக்கும் எல்லா அமைப்புக்களையும் ஒன்று சேர்க்கும் கனவுடன்தான் இந்தத் திட்டத்தைத் தீட்டினார். அவர் ஒரு இலக்கியவாதி இல்லை என்று அவரே சொன்னபோதும் ஒரு நல்ல நிர்வாகி என்று சீனி நைனார் சொல்கிறார்.
இதனடிப்படையில்தான் கவிக்கோ ஹிதாயத்துல்லாஹ் ஆதிக்கத்தில் இருக்கும் இஸ்லாமிய இலக்கியக் கழகம், பேரா. சேமுமு, ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் செயற்பாட்டில் இயங்கும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், பேரா. சாய்பு மரைக்காரின் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் ஆகியவற்றைப் பொதுவாகச் சந்தித்து எல்லோருடையவும் ஒத்துழைப்பையும் கோரினார். இதில் துருத்திக் கொண்டு நிற்பது இஸ்லாமிய இலக்கியக் கழகம்தான். இவை மூன்றையும் ஒன்று சேர்த்து மலேசிய மாநாட்டை நடத்தும் எண்ணம் இருந்திருந்தால் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்திடம் மட்டும் ஆலோசனை பெறுவதை டத்தோ இக்பால் தவிர்த்திருக்க வேண்டும். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சின்னாபின்னமான வருத்தத்தில் இருக்கும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினர் கவிக்கோவுக்கு எந்தவொரு நிகழ்விலும் தலைமை வழங்கப்படுவதை விரும்பவில்லை. கவிக்கோவுக்குத் தலைமையை வழங்கும் மலேசியக் குழுவின் பிடிவாதத்தில்தான் தமிழகத்தில் பெரும் பகுதியினர் மாநாட்டுக்கு வருவதை மலேசியா இழந்து விடப் போகிறது என்பது எனது கணிப்பு.
இலங்கை மாநாட்டில் கவியரங்குக்கு நாம் கவிக்கோவுக்குத் தலைமை வழங்கவில்லை. எமது நாட்டுக் கவிஞரைத்தான் தலைமை தாங்க விட்டோம். கவிக்கோவை ஒரு சிறப்புரை நிகழ்த்த அழைத்தோம். விமானச் சீட்டுக் கொடுத்தால் அவர் வந்து கலந்து கொள்வார். கவிக்கோவே மலேசிய நாட்டுக் கவியரங்குக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்ற மலேசிய ஏற்பாட்டுக் குழுவின் தீர்மானம் மாநாட்டின் வெற்றியில் ஓர் இடை வெளியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு தனி மனிதனா? ஒரு குழுவா? மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்க வல்லது என்பதுதான் கேள்வி.
இலங்கையில் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் சுதந்திரமான அமைப்பு. 2002 மாநாட்டை நடத்திய ஒரே அமைப்பு. ஏனைய மாநாடுகளுக்கு ஒருங்கிணைப்பை வழங்கிய அமைப்பு. அப்படியிருக்கையில் ஆய்வகத்தை மலேசியக் குழுவும் கௌரவ அமைச்சரும் கண்டு கொள்ளாது விட்டமைக்கான காரணிகளைத்தான் ஆராய வேண்டியிருக்கிறது.
நான் மேற்சொன்ன விடயங்களிலிருந்து 04.02.2011 வரை மலேசியக் குழு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் தொடர்பு வைத்திருந்து அடுத்த நாள் பி.ப. 5.30க்கு காலை வாரிவிடுகிறது. முஸ்லிம்கள் சம்பந்தமாக இலங்கையில் எது நடந்தாலும் தனது தலைமையின் கீழ் நடக்க வேண்டும் என்று கௌரவ அமைச்சரோ கௌரவ அமைச்சரை அண்டியிருக்கும் கூட்டத்தினரோ நினைத்திருக்கலாம். அத்துடன் டத்தோ இக்பாலுக்கு ஒரு அதிதி அந்தஸ்து வழங்கி கௌரவிப்பதுவும் மாநாட்டுக்கு இலங்கைப் பேராளர்களுக்குத் தலைமை வகித்து அழைத்துச் செல்வதுவும் தனது மகளுக்கு மலேசியாவில் பாதுகாவலராக இருக்கும் இக்பாலுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று கௌரவ அமைச்சர் நினைத்திருக்கக் கூடும். எனவே இரு திறத்தாரும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று தீர்மானித்திருக்கலாம்.
இதுதவிர, இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்திலிருந்து பிரிந்து சென்ற இருவர் ‘இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றம்’ என்ற ஒன்றை 12.12.2011ல் ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இலக்கிய ஆய்வகத்தின் ஸ்தாபக உறுப்பினர்கள் அல்லர் என்ற போதும் 2002 இலக்கிய மாநாட்டுக் குழுவில் உள்ளடங்கியிருந்தவர்கள். ஒருவர் தாஸிம் அகமது. மற்றவர் மருதூர் ஏ மஜீத். ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தனது நியாயங்களைச் சொல்ல எழுந்த போது ஆவேசத்துடன் எழுந்த ஜின்னாஹ்வை எதிர்த்து ‘நீங்கள் போய் மலேசியாவில் மாநாடு நடத்துங்கள்’ என்று குரல் கொடுத்ததன் மூலம் இந்த நிகழ்வுகளுக்குப் பின்னாலுள் தனது ஈடுபாட்டின் ஆழத்தை தாஸிம் அகமது வெளிப்படுத்தினார். பின்னர் நியமிக்கப்பட்ட குழுவிலும் இவர் உள்வாங்கப்பட்டுள்ளார். அமைச்சரின் சார்பில் கூட்டத்தை நடத்துவதற்கு இந்த இருவரும் கௌரவ ஹஸன் அலி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்களின் தொலை பேசி இலக்கங்களைத் தேடிக் கொடுத்ததும் இவர்கள்தாம். மருதூர் மஜீத் குழுவில் இல்லாத போதும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் தவறாது சமுகமளிப்பதாக அறியக் கிடைக்கிறது.
மருதூர் ஏ. மஜீத் சர்வதேச எழுத்தாளர் மாநாடு முடிந்த கையோடு மலேசியா போயிருந்தார். அங்கு டத்தோ ஹாஜி முகம்மது இக்பாலைச் சந்தித்துள்ளார். இவர் கௌரவ அமைச்சரின் நெருங்கிய சகபாடிகளில் ஒருவர். 2002 மாநாட்டுக் குழுவில் தன்னைப் பலவந்தமாக உள்ளீர்ப்புச் செய்து கொண்டவர். அவர் செய்த பணி கௌரவ அமைச்சரின் குடும்பத்தின் இலக்கிய ஆர்வத்தை ஆய்வு செய்து ‘வேர்’ என்ற ஒரு நூலை வெளியிட்டதுதான்.
இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் செயற்படாமல் இருப்பதாக என்னிடம் அடிக்கடி குற்றம் சுமத்தி வந்த இவரிடம் பொருளாதார பலமின்றி எதையும் செய்ய முடியாத நிலையை விளக்கியிருந்தேன். தன்னால் பணம் சேர்த்துத் தர முடியும் என்றும் ஆனால் தானே தலைவராக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் சொல்லி வந்துள்ளார். செயற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அவர் வைத்திருந்தார். ஒரு இயக்கத்துக்கு பல தலைவர்கள் இருக்க முடியாது. இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் யாப்பில் ஸ்தாபக அங்கத்தவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தற்போதைய தலைவர் ஸ்தாபக உறுப்பினர். வேண்டுமானால் நான் விலகிக் கொள்கிறேன், செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்ட போது அதை மறுத்தார்.
2007ம் ஆண்டு சென்னைக் கவியரங்கில் கவிதை படிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதுவே ஒரு சர்வதேசக் கவியரங்கில் நான் கவிதை படித்த முதல் முறையுமாகும். ஒரு மாநாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தாற்றான் அல்லது ஒரு இலக்கிய இயக்கத்துக்குத் தலைமை வகித்தாற்றான் கவிதை படிப்பதுவும் அறிமுகங்களும் சாத்தியமாகும் என்று மருதூர் மஜீத் நினைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
பத்திரிகைகளில் கட்டுரை இரண்டுக்காகவும் இரு கவிதைகளுக்காகவும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றை யார் பகிர்ந்து கொள்வார்கள் என்பதை இப்போதே எம்மால் கணிக்க முடிகிறது. மேற்குறிப்பிட்ட இருவரும் கவிதைகள் படிக்க குழுவின் தலைவர் என அறியப்படும் எஸ்எச்.எம். ஜமீல் அவர்கள் ஒரு கட்டுரை படிக்கக் கூடும். இரண்டாவத கட்டுரைதான் யாருக்காவது படிக்கக் கிடைக்கப் போகிறது. இதை மாநாட்டில் கட்டுரை படிக்கும் ஆர்வமாகவோ இஸ்லாமிய இலக்கியத்தில் உள்ள அபிமானமாகவோ பார்க்கக் கூடாது. மலேசியாவுக்குச் செல்லும் இலவச விமானப் பயணச் சீட்டின் பின்னணியிலிருந்தே இதை நோக்க வேண்டும்.
எது எப்படியிருந்த போதும் ஒரு சர்வதேச மாநாட்டுக்கான இக்பாலின் திட்டம் ஒரு விழாவுக்குரியதாக மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. வேற்று நாட்டு நபர் ஒருவர் கலந்து கொண்டால் சர்வதேசம் என்று பெயர் போடலாம் என்கிற பலவீனமான நோக்கமும் அதன் மூலம் சர்வதேச மாநாட்டை நடத்திய பெருமையைப் பெறலாம் என்ற நோக்கமுமே தலை நீட்டிப் பார்ப்பதாகத் தோன்றுகிறது.
பொதுவாக இதுவரை நடந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் பலரும் பங்கெடுத்துக் கட்டுரை படிப்பார்கள். அப்போது பல்வேறு நாடுகளிலுமிருந்து பலநூறு பேர் கலந்து கொள்வார்கள். மலேசிய மாநாட்டின் வரைமுறையைப் பொறுத்த வரை மலேசியர்கள் கட்டுரை படிக்க வேற்று நாட்டிலிருந்து பெருந் தொகை செலவளித்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் எமது கௌரவ அமைச்சர் அவர்கள் மூன்று விமானங்களை ஏற்பாடு செய்து போகலாம் என்றிருக்கிறார். அப்படிப் பார்த்தால் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் மலேசிய மாநாட்டுக்கு கௌரவ அமைச்சர் தலைமையில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். டத்தோ இக்பாலுட்பட மலேசியக் குழுவினர் அதிர்ச்சியடைந்து விடப் போகிறார்கள். இக்பால் நினைத்தால் எதைச் சாதிக்க முடியாது?
முடிவுரை
டத்தோ முகம்மது இக்பால் ஆளுமை மிக்கவர். அவர் அழைத்து வரும் குழுவினர் எப்போதும் அவர் சொற்படி கேட்டபார்கள். இதனைப் பார்க்கும் போது டத்தோ இம்மாநாட்டின் பாதிச் செலவை ஏற்றுக் கொள்வார் போல் தோன்றுகிறது. வேற்று நாடு ஒன்றிலிருந்து மாநாட்டின் செலவறிக்கையைக் கோர எந்த நியாயமும் உரிமையும் நமக்குக் கிடையாது. ஆனால் மாநாட்டுச் செலவு அறிக்கை கிடைத்தால் டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலின் நிதிப் பங்களிப்பை நாம் அறியலாம்;. இதை மலேசிய நண்பர்கள் யாராவது எனக்கு அனுப்பித் தரக் கோருகிறேன்.
எமது நாட்டிலும் எதிர்காலத்தில் மாநாடு நடத்துவதற்கு புரவலர்களை அணுகும் போது டத்தோ ஹாஜி முகம்மது இக்பாலை அவரது பணப்பங்களிப்புக்காக மட்டும் நான் உதாரணம் காட்ட வேண்டும்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment