Saturday, March 5, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா


மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?



மலேசியாவில் நடத்தப்படுவதாக குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினரால் “சர்வதேச மாநாடு” என்று முழக்கம் கொட்டப்படுகின்ற நிகழ்வானது ஒரு சர்வதேச மாநாட்டுக்குரிய வலுவான பின்னணிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதை மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா என்று அழைப்பதே பொருந்தும்.

இலங்கையிலிருந்து நால்வர் தமிழகத்திலிருந்து நால்வர் கவிதையும் கட்டுரையும் படிப்பதன் மூலம் இதனைச் சர்வதேச மாநாடு என்று சொல்லிப் பெருமைப்பட முயல்வது ஒரு அற்ப ஆசையாகத்தான் நமக்குப் படுகிறது. ஆனால் இதை முழக்கமிடுவதன் மூலமும் அரசியலைச் சேர்த்து ஆரவாரம் செய்வதன் மூலமும் பெரிதாகப் படம் காட்ட நினைப்பதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருப்பதாக நமது பட்சி சொல்கிறது. அது என்ன என்பதை பின்னால் பார்க்கலாம்.

சர்வதேச விளையாட்டு என்றால் இரண்டு வெவ்வேறு நாட்டு அணிகள் மோதுகின்றன. சர்வதேச மாநாடுகள் என்றால் வெவ்வேறு நாடுகளிலிருந்து பலர் பங்கு கொள்கிறார்கள். இங்கு பலர் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்களே தவிர (அதாவது பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் போக) பிற தேசங்களிலிருந்து பங்கு கொள்பவர்கள் வெறும் எட்டே எட்டுப் பேர். இந்த எட்டுப் பேரின் பெயராலும் சர்வதேச மாநாட்டை நடத்தி விட்டோம் என்று பெருமைப்படுவது பெருமையா சிறுமையா என்று யோசியுங்கள்.

இதுவரை நடந்த மாநாடுகளில் ஏராளமான கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன. கவியரங்கில் மாத்திரமே தேசத்துக்கு இருவர் அல்லது ஒருவர் கலந்து கொள்வார்கள். படைப்பாளிகளும் இலக்கிய ஆய்வாளர்களும், புத்தி ஜீவிகளும் இவற்றில் பெருமளவில் பங்கு கொள்வார்கள். இங்கு இரண்டு கட்டுரைகளும் இரண்டு கவிதைகளும் படிக்கத் தருவார்களாம்... மீதி பதினாறு கட்டுரைகளையும் அவர்கள் படிப்பார்களாம்.... பிறதேசத்திலிருந்து பெருமளவில் பணம் செலவழித்து விமானத்தில் ஏறிச் செல்லும் பிறநாட்டு இலக்கியவாதி அதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு கையை வீசிக் கொண்டு வரவேண்டுமாம். இது ஒரு சர்வதேச மாநாடாம்! தமிழ் நாடு போன்ற ஒரு இடமாக இருந்தாலும் நான்கு நல்ல நூல்களையாவது வாங்கி வரலாம். மலேசியாவிலிருந்து ரம்புட்டான்களைத்தான் வாங்கி வர வேண்டும். மள்வானையில் இல்லாத ரம்புட்டானா?

அந்த நாட்டில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எழுத்தாளர்கள் வெகு சிலரேயுள்ளனர். இலக்கியக் கூட்டம் என்றால் எங்க ஊர்க்காரனே வரமாட்டான் என்கிறார் கவிஞர் சீனி நைனார். அப்படியானால் மற்றைய நாடுகளிலிருந்து வருவோரைப் பங்காளிகளாக அல்லவா மாற்றியிருக்க வேண்டும். இது என்னவோ எங்க ஊட்டுக் கல்யாணம்... வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போங்க என்று அழைப்பது போல் இருக்கிறது. மலேசியப் பிரதமரோடு உட்கார்ந்து சாப்பிட முடியுமாம். மலேசியப் பிரதமரோடு சாப்பிட்டோம் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட விரும்புவோரும் இருக்கத்தானே செய்வார்கள். பிரதமரோடு ஒரு உணவை உண்பதன் மூலம் முக்தியடைய நினைப்பவர்கள் பணம் செலவழித்துச் சென்று வரட்டும்!

எனவே இந்த நிகழ்வு ஒரு மாநாடு என்ற எல்லைக்குள் அமைய வலுவான காரணிகள் இல்லை என்பதால் விழா என்று அழைப்பதே பொருத்தமாகும். இக்கட்டுரையிலும் பின்னர் வரவுள்ள கட்டுரைகளிலும் மலேசிய இலக்கிய விழா என்றே இந்நிகழ்வு அழைக்கப்படும்.

முஸ்லிம்களை இணைக்கிறதா அல்லது பிரிக்கிறதா?

“உண்மையில் டத்தோ ஹாஜி முகம்மத் இக்பால் மலேசிய மாநாட்டைப் பொறுத்தளவில் பிரிந்து கிடக்கும் எல்லா அமைப்புக்களையும் ஒன்று சேர்க்கும் கனவுடன்தான் இந்தத் திட்டத்தைத் தீட்டினார்.” என்று ஒரு வசனம் எனது முதற் கட்டுரையில் வருகிறது. அது மீளாய்வுக்குள்ளாக வேண்டியிருக்கிறது என்பது இப்போது தெரிய வருகிறது.

அப்படி எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டுமாக இருந்தால் எல்லா முக்கிய அமைப்புக்களுக்கும் கடிதங்களை அனுப்பி விட்டு அந்தந்த இயக்கங்களின் முக்கியஸ்தர்களை மட்டும் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் கடிதங்களை அனுப்பி விட்டு பின்னால் எந்த இயக்கம் தனக்குச் சாதகமாகப் பதில் சொல்லவில்லையோ எது தனது விருப்பத்துக்கு எதிர்க் கருத்துக் கொண்டிருக்கிறதோ அந்த இயக்கத்தில் உள்ளவர்களைத் தனித்தனியே இரகசியமாகச் சந்தித்து தனது அரசியலைச் செய்து வருகிறது குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழு.

நாங்கள் விழா நடத்துகிறோம், அதுதான் எங்களது திட்டம், எல்லோரையும் அழைக்கிறோம் என்று விட்டு முடித்துக் கொண்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு அதை வெற்றி பெறச் செய்வதற்காக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு காய்நகர்த்திக் கொண்டிருப்பதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. யார் தாலி அறுந்தாலும் பிரச்சினை இல்லை, எனது காரியம் வெற்றி பெற்றால் போதும் என்றுதான் அது செயற்படுவதாகத் தெரிகிறது. முஸ்லிம் இலக்கியக் குழுக்களைத் துண்டு துண்டுகளாக உடைத்துத் தனது விழாவை ஆராவாரத்துடன் கொண்டு நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது மலேசியக் குழு.

தமிழ் நாட்டில் ஒரு குழுவினர், கவிக்கோவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமானால் வரமாட்டோம் என்று முடிவு செய்திருந்தார்கள். இவர்களில் பல பேராசிரியர்கள் அடங்குவார்கள். இதுவரை தமது விழாவுக்கு பெரிய ஆதரவு கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவில் வந்த பிதாவுல்லாஹ் மலேசியாவிலிருந்து ஒவ்வொரு பேராசிரியராகத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

மக்களைப் பிரித்தாளுவது ஏகாதிபத்தியங்களின் கீழ்த்தரமான செயற்பாடு என்பதை நாம் படித்திருக்கிறோம். அதையே தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மலேசியக் குழுவும் செய்து வருகிறது. சிறந்த நிர்வாகி என சீனி நைனாரால் போற்றப்படும் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் பேராசிரியர்களுக்கு எப்படிப் பந்து போட்டால் விக்கற் கழற்றலாம் என்பதை அறியாதவராதவராகவா இருப்பார். எனவே உங்களுக்கு இலவச விமானச் சீட்டுத் தருகிறோம் என்று போட்டார் ஒரு போடு.

இப்போது குப்பப்பிச்சை இக்பால் பக்கம் சாய்வதற்கு அப்பேராசிரியர்கள் காரணம் தேடிக் கொண்டிருப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறு பத்துப் பேராசிரிய பேராசிரியைகள் அழைக்கப்பட்டிருக்கிறார்களாம். இவர்களது பெயர்ப்பட்டியல் நமக்குக் கிடைத்திருக்கிறது. தமது கொள்கைகளையும் ஏற்கனவே சொன்ன நியாயங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு மலேசியா சென்று பெருமை பெறுவோர் எத்தனை பேர் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

எதையாவது நீட்டினால் இடை நடுவில் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்பதால் அப்படிச் செல்பவர்களை இனிமேல் எந்த ஒரு இயக்கமும் நம்பி ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் இவர்கள் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தால் கூட யாரும் ஒட்டிக் கொள்ளமாட்டார்கள் என்று நான் கருதுகிறேன். இவர்கள் அங்கத்துவம் பெற்றிருக்கும் இயக்கமும் சுக்குநூறாகி விடும். இந்தப் பெருமையைக் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலும் விமான டிக்கட்டுக்காக ஓடிப் போகும் இந்தப் பேராசிரியர்களும் பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள்.

புதுக்கவிதையை எதிர்ப்பவன் ‘விருந்தாளிக்குப் பிறந்தவன்!’

இதற்கிடையே எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு வரலாற்றுத் தகவல் சொல்லப்பட வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் மலேசியக் கவிஞர்கள் (சீனிநைனா, புலவர் பமு.அன்வர், மைதீ. சுல்தான் குழு) புதுக் கவிதையை கவிதையாக ஏற்றுக் கொண்டதேயில்லை. கவிதை வடிவ மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்கள் இவர்கள். இவர்களில் நாம் அறிந்தோரின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்களாம். புதுக் கவிதையை அதன் போக்கையெல்லாம் கண்டித்தும் கிண்டல் பண்ணியும் வந்தவர்கள் இவர்கள். புதுக் கவிதை எழுதுபவர்களைக் கவிஞர்களாக இவர் கணிப்பதுமில்லை. இன்றைய நிலையில் தமிழ்க் கவிதையின் வளர்ச்சிப் போக்கில் நின்று பார்த்தால் இவர்கள் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை ஜாஹிலிய்யாக் காலக் கொள்கை கொண்டிருந்தவர்கள்.

இந்த எதிர்ப்பைக் கவிக்கோ அப்துல் ரகுமான் எப்படி எதிர்கொண்டார் தெரியுமா? “புதுக் கவிதையை எதிர்ப்பவன் எல்லாம் விருந்தாளிக்குப் பிறந்தவன்” என்ற வார்த்தை கொண்டு விளக்கம் கொடுத்தார். கொதித்தது மலேசியக் கவிஞர் படை. முறுக்கியது மீசைகளை. கவிக்கோவுக்கு எதிரான கன்னா பின்னாவென்ற பதிலடிகள் பொறிப்பறந்தன. சீனியார் தனது ‘உங்கள் குரல்’ பத்திரிகையில் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் கவிக்கோவுக்கு எதிராக முன் வைத்தார் என்று அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருந்தன.

கடந்த காலத்தில் மலேசியக் கவிஞர்களில் பெரும்பாலானோர் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்றும் இன்றும் அதே கொள்கையுடனேயே இருக்கிறார்கள் என்றும் சொன்ன நமது நாட்டுக் கவிஞர் ஒருவர் வேறு வழியில்லாத காரணத்தால் அல்லது இதைப் பேசுவதன் மூலம் தமிழிலக்கிய உலகத்தால் கேலிக்கு உள்ளாகுவோம் என்ற பயத்தால் பேசாமல் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

காலத்தின் கோலத்தைப் பாருங்கள். சீனி நைனார் குழுவைப் பார்த்து ‘விருந்தாளிக்குப் பிறந்தவர்கள்” என்று சொன்ன அதே கவிக்கோவைத் தூக்கிப் பல்லக்கில் வைத்துக் காவடியாட முன் நிற்பவர் அதே சீனி நைனார்தான். இப்போது அவர் மீசை முறுக்குவது கிடையாது போலும்.

இலங்கையில் பிரிவினை

இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துவது மலேசியக் குழுவுக்கு இலகுவாக இருந்தது. இரண்டு கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் ஏற்கனவே மாநாடுகள் கண்ட எம்மைப் போன்றவர்கள் உடன்பட மாட்டோம் என்பதை குப்பப்பிச்சை முகம்மது இக்பால் அறிவார். எனவே பாம்பும் சாகாமல் கம்பும் உடையாமல் வேலையைக் காட்ட நினைத்தார். ஏற்கனவே எம்மிடமிருந்து பிரிந்து சென்ற இருவரும் அவரது வேலையைச் சுளுவாக்கி வைத்தார்கள்.

2007 சென்னை மகாநாட்டில் அவமானம் நேர்ந்த போதும் அதனை கௌரவ அமைச்சர் பெரிது படுத்தவில்லை. கௌரவ அமைச்சர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை சரியாக மரியாதை வழங்கப்படவில்லை என்ற அளவில்தான் குறை இருந்தது. ஆனால் இணைப்பாளர்களாக இருந்த நாமும் எம்முடன் வருகை தந்திருந்த பலரும் கேவலமான முறையில் நடத்தப்பட்டதை எம்மால் மறந்து விட முடியாது. இதை என்னை விடவும் தாஸிம் அகமது நன்கறிவார். எனவே கவிக்கோவை முற்றாகத் தவிர்ந்து நடப்பது என்றே நாம் தீர்மானித்தோம்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் விருந்தினராக வந்த கவிக்கோ யாழ்ப்பாணம் சென்று புலிகள் கொடுத்த வடை, தோசை, மோதகம் யாவும் சாப்பிட்டு விட்டு ஆனந்த விகடனில் “நரம்பறுந்த யாழ்” என்ற தலைப்பில் நெடுங் கட்டுரை எழுதியவர். எழுதியதில் நமக்குப் பிரச்சினை கிடையாது. ஆனால் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையின் போது இறந்த 103 பேர்கள் என்ற தொகையை மறைத்து வெறும் 63 பேர் என்று வெறும் சகட்டுமேனிக்கு எழுதியவர்தான் இந்த இஸ்லாமியக் கவிக்கோ. அதைத் தொடர்ந்து நடந்த ஏறாவூர்ப் படுகொலைகளைக் கண்டு கொள்ளாத முஸ்லிம் இவர். இப்படித்தான் பிரச்சினையின் உச்ச கட்டத்தில் இவர் எமது உணர்வு நரம்புகளை அறுத்தவர்.

இரண்டாவது ஒரு மாநாட்டுக்கான திட்டமிடல் செய்து கொண்டு அதை முதலில் மாநாடு நடத்த அரச பணம் பெற்றுத் தந்த கௌரவ ரவூப் ஹக்கீமிடம் எத்தி வைக்கச் சென்றிருந்தோம். மருதூர் ஏ மஜீதும் அவ்வேளை எம்முடன் இருந்தார். அந்தச் சந்திப்பின் போது கௌரவ அமைச்சர் எம்மிடம் கேட்ட கேள்வி இதுதான். “கவிக்கோவும் பேராசிரியர் சிவத்தம்பியும் வருவார்களா?” கவிக்கோவைப் பக்கத்திலும் எடுக்க மாட்டோம் என்பது தெரிந்துதான் அவர் கேட்டார் என்பதை நான் உணர்ந்தேன். அவர் அந்தக் கேள்வி மூலம் எமக்கு உணர்த்தியது என்னவெனில் கவிக்கோவும் சிவத்தம்பியும் இல்லாமல் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு இல்லை என்பதுதான்.

இதன் பின்னணியில் தொனிக்கும் பல விடயங்களை உங்களது தெரிவுக்கு விட்டு விட்டு நாம் சுட்டிக் காட்ட விளைவது எம்மை அழைத்து அவமானப்படுத்திக் கழற்றி விடுவதற்கு குப்பப் பிச்சை முகம்மது இக்பாலுக்கு எவ்வளவு இலேசாக இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல, இதற்குப் பின்னணியில் அதாவது கவிக்கோவை முன்னிலைப்படுத்துவதில் இவர்கள் எல்லோருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் இழையை அவதானிக்க வேண்டும் என்பதைத்தான்.

இரண்டு கட்டுரை, இரண்டு கவிதைகளுக்கெல்லாம் நாம் பெரும் சங்கெடுத்து ஊத மாட்டோம் என்பதை உணர்ந்ததால் அதற்கேற்ற ஆட்களைத் தெரிவு செய்தாக வேண்டியிருந்தது. அதற்குப் பொருத்தமானவர்களாகக் கிடைத்தவர்கள்தாம் எம்மிடமிருந்து பிரிந்து சென்ற தாஸிம் அகமதுவும் மருதூர் ஏ மஜீதும்.

நமது சரியான கணிப்பு

“பத்திரிகைகளில் கட்டுரை இரண்டுக்காகவும் இரு கவிதைகளுக்காகவும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றை யார் பகிர்ந்து கொள்வார்கள் என்பதை இப்போதே எம்மால் கணிக்க முடிகிறது. தாஸிம் அகமதுவும் மருதூர் ஏ மஜீதும் கவிதைகள் படிக்க குழுவின் தலைவர் என அறியப்படும் எஸ்எச்.எம். ஜமீல் ஒரு கட்டுரை படிக்கக் கூடும்” என்று எனது முதலாவது கட்டுரையில் தெரிவித்திருந்தேன்.

தாஸிம் அகமது கவிதையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர். மருதூர் ஏ மஜீத் கவிதையிலும் ஏனைய அம்சங்களிலும் கவனம் செலுத்துபவர். அத்துடன் அங்கும் போய் நாட்டார் பாடல் கட்டுரை வாசிக்க முடியாது. நாட்டார் பாடலை வைத்துக் கொண்டு எத்தனை மாநாட்டில்தான் கட்டுரை படிப்பது? அது தவிர மாநாடு ஒன்றில் கவிதை படிக்கும் அவரது ஆர்வத்தையும் நான் அறிந்திருந்தேன். இவர்கள் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவுக்கு பக்கபலமாக இருந்ததன் நோக்கமே கவிதை படிப்பதுதான் என்பதே எனது கணிப்பாக இருந்தது.

கவிதையைப் பொறுத்த வரை அதுதான் நடந்திருக்கிறது. தமது முதலாவது கூட்டத்தை முடித்துக் கொண்ட குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் குழுவினருக்கு கொழும்பு 2ல் உள்ள ஒரு நூலக மண்டபத்தில் தாஸிம் அகமது, மருதூர் ஏ மஜீத் ஆகியோரால் ஒரு வரவேற்பு நடத்தப்பட்டது. இந்த வரவேற்பு வைபவத்துக்கு மருதூர் ஏ மஜீத் என்னையும் அழைத்தார். நான் மறுத்து விட்டேன். இந்த வைபவத்தில் வைத்துத்தான் இவர்கள் இருவரும் கவிதை படிப்பதாக அக்குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் உடனே கவிக்கோவுக்குத் தெரிவிக்கப்பட்டதும் தனக்கு மருதூர் ஏ மஜீதைத் தெரியும் எனவும் அது யார் தாஸிம் அகமது? என்று கவிக்கோ கேட்டதாகவும் எழுத்தாளர் மானா மக்கீன் எனக்குச் சொன்னார்.

கவிக்கோ இந்தக் கேள்வியைக் கேட்டே இருக்கக் கூடாது. தாஸிம் அகமதைத் தெரியாது என்று அவரால் சொல்ல முடியாது. சில வேளை வயது முதிர்ச்சியின் காரணமாக மறந்து போனாரோ என்றுதான் சாந்தப்படலாம். இதில் அவதானிக்க வேண்டிய விடயம் கவியரங்குக்கான பொறுப்பை எப்போதோ குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு கவிக்கோவுக்குக் கொடுத்து விட்டது என்பதைத்தான். அப்படிக் கொடுத்து விட்டுத்தான் 5ம் திகதி நடந்த கூட்டத்தில் நாங்கள் அதை இன்னுமே தீர்மானிக்கவில்லை என்று சீனி நைனார் நாடகம் ஆடினார்.

இந்தக் கட்டத்தில்தான் எனது முதலாவது கட்டுரை இணையங்களில் வெளியானது. இவ்விழாவுக்கென நியமிக்கப்பட்ட குழு விழித்துக் கொண்டது. அந்தக் குழு இணைப்பு -1 என்ற தனது விழாபற்றிய விபரத்தாளில் பின்வருமாறு குறிப்பு ஒன்றை இட்டிருக்கின்றது.

“மாநாட்டு அரங்கில் ஆய்வுக் கட்டுரை வாசிப்பதற்கோ மாநாட்டுக் கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிப்பதற்கோ இலங்கை ஏற்பாட்டுக்குழு அங்கத்தவர்கள் எவரும் பங்கு பற்றுவதை தவிர்த்துக் கொள்வது என இலங்கை ஏற்பாட்டுக் குழுவினரால் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் மாநாட்டு மலரில் கட்டுரை கவிதைகளுக்கான பங்களிப்பைச் செய்வதற்கு அனுமதி உண்டு.” என்ற இந்தக் குறிப்பு தலைவர், செயலாளர் கையெழுத்துக்குக் கீழே இடம் பெற்றிருக்கிறது.

ஆனால் தாஸிம் அகமது சிலவேளை இதுகுறித்து வாளாதிருக்கக் கூடும். ஆனால் மருதூர் ஏ மஜீத் மீண்டும் மீண்டும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்றே நான் எதிர்பார்க்கிறேன். பொதுக் கூட்டம் நடந்த போது தெரிவு செய்யப்படுவதில் கௌரவ அமைச்சரால் தவிர்த்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்ட மருதூர் ஏ மஜீத் பின்னர் எந்த வழியாக இந்தக் குழுவுக்குள் நுழைந்தாரோ அந்த வழியாகவே அவர் கவிதை படிப்பதற்கு முயற்சி செய்யக் கூடும்.

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கவிதை வாசிப்பதிலிருந்தும் கட்டுரை படிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டாலும் கூட இந்தக் குழுவிலிருக்கும் சிலர் (தலைவர், செயலாளர், மருதூர் ஏ மஜீத் உட்பட) ஆகக் குறைந்தது ஓர் ஆய்வரங்கிலாவது ஒரு முக்கியஸ்தராகக் (நோக்குனர், இணைத் தலைவர்) குந்தாமல் விடவே மாட்டார்கள்.

இலங்கை ஏற்பாட்டுக் குழு

கடந்த 5ம் திகதி தெரிவான குழுவில் இல்லாதோரும் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு கட்டுரைகள் இரண்டு கவிதைகளைப் பரிசீலனை செய்வதற்கு குழு விசாலப்படுத்தப்பட வேண்டியிருந்திருக்கிறது. மலேசிய விழாவில் கட்டுரை வாசித்தால் கவிதை படித்தால் அது தமிழ் அறிஞராகி விட அல்லது பெரும் தமிழ் இலக்கிய விற்பன்னராகிவிட அங்கீகாரம் கிடைத்து விடப் போகிறது என்று ஆயிரக் கணக்கில் கவிதைகளும் கட்டுரைகளும் வந்து குவியும் என்பதால் ஏற்பாட்டுக் குழு விசாலப்படுத்தப்பட்டிருக்கலாம். இனி அந்தக் குழுவிலிருப்போர் பட்டியல்.

01. மாண்புமிகு ரவூப் ஹக்கீம் பா.உ. அவர்கள் - நீதியமைச்சர்
02. அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் - தலைவர்
03. தாஸிம் அகமது - செயலாளர்
04. கௌரவ ஹஸன் அலி - பா. அவர்கள் - இணைப்பாளர் - பயண ஏற்பாட்டுக் குழு
05. மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் - இணைப்பாளர்
06. புரவலர் ஹாசீம் உமர் - பயண ஏற்பாட்டுக் குழு
07. தமிழ்மணி மானா மக்கீன் - உறுப்பினர்
08. றமீஸ் அப்துல்லாஹ் - உறுப்பினர்
09. என்.எம். அமீன் - ஊடகக் குழு
10. ஜனாபா புர்கான் பீ இப்திகார் - ஊடகக் குழு
11. எம். நிலாம் - ஊடகக் குழு

இந்தப் பட்டியல் ஏற்பாட்டுக்குழு எவ்வாறு வெளியிட்டிருக்கிறதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற் கொள்க.

இந்த ஏற்பாட்டுக் குழு கூடிய ஒரு நேரத்தில் தாம் இரண்டு கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் இவ்வளவு மினக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு பிறந்திருக்கிறது. எனவே இன்னும் இரண்டு கட்டுரைகளை மேலதிகமாகக் கொருவோம் என்று தீர்மானித்து உடனே மலேசியாவுக்குத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழு ஒரே வார்த்தையில் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

குப்பைப் பிச்சை முகம்மது இக்பாலின் குழுவினர் இலங்கையில் இருந்த போது மலேசிய இதழ்கள் பற்றிய தனது கட்டுரையை எழுத்தாளர் மானா மக்கீன் காட்டியிருக்கிறார். மலேசிய இலக்கியம் பற்றியே கிட்டத்தட்ட பதினாறு கட்டுரைகள் படிக்கப்படவிருப்பதால் இந்த வகையிலாவது இன்னொரு வாய்ப்பை இலங்கையர் ஒருவர் பெறலாம் என்பது மானாவின் நோக்கம். அதுமட்டுமன்றி ஒரு நாட்டின் இலக்கியத்தை மற்றொரு நாட்டவர் ஆய்ந்து பார்ப்பது சிறப்பு என்றும் அவர் நினைத்திருக்கலாம். அது நியாயமானதும்தான். கடந்த காலங்களில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் இவ்வாறான ஏராளம் கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டுரையைக் கையிலெடுத்த சீனி நைனார், “மலேசியர்களின் இலக்கியத்தை மலேசியர்களே பேசுவார்கள். வேண்டுமானால் அனுதாபத்தின் பேரில் இந்தக் கட்டுரையைச் சேர்த்துக் கொள்கிறோம்” என்றிருக்கிறார்.

தனக்கு வந்த கோபத்தில் கட்டுரையைப் பறித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் என்கிறார் மானா. இவ்வளவையும் நமது ஏற்பாட்டுக் குழு பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டு புலவர். ப.மு.அன்வரின் பார்வைக்குட்படுத்தப்பட்டது என்பதையும் மானா சொல்கிறார். எவ்வளவு தூரம் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு நம்மைக் கேவலமாக நினைத்திருக்கிறது பாருங்கள். மலேசியர் இலக்கியம் பற்றி மலேசியர்தான் பேச வேண்டும் இலங்கை இலக்கியம் பற்றி இலங்கையர்தான் பேச வேண்டும் என்றால் எதற்காக நாம் அதை மலேசியா போய்ப் பேச வேண்டும். அது என்ன சங்கத் தமிழ் வளர்த்து வரும் இடமா? அல்லது உலகத் தமிழ் இலக்கியத்தின் மத்தியத் தலமா? உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டும் என்றால் ஆர அமர உட்கார்ந்து பேச வேண்டியதுதானே. இலங்கையன் எதற்காகத் தனது இலக்கியத்தை ஏறக்குறைய முப்பந்தையாயிம் ரூபாய் செலவழித்து விமானமேறி வந்து மலேசியாவில் பேசவேண்டும்? இதுவே ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையாகத் தெரியவில்லையா?

இவ்வாறான கேள்விகளை எழுப்பவோ சிந்திக்கவோ இந்த ஏற்பாட்டுக் குழுவில் யாருக்கும் உதிப்பு வரவில்லை. ஆகக் குறைந்தது இஸ்லாமிய இலக்கியத்தின் பிதாமகர் அல்லாமா உவைஸ் பெயரால் ஓர் அரங்கை வைக்க வேண்டும் என்றாவது கோரிக்கை விடுத்தார்களா என்றால் அதுவும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை இப்போது நடக்கும் கோலாகலத்துக்கு ஒரு பதவி கிடைத்துள்ளது. அதில் திருப்திப்பட்டுக் கொள்வதுதான் இலங்கையின் இலக்கியச் செயற்பாடு என்றிருக்கிறார்கள் போல் தெரிகிறது. (இந்தக் கட்டுரை வெளியானதும் இது குறித்து குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவிடம் ஏற்பாட்டுக் குழு பேசும் என்று நினைக்கிறோம். நல்ல பதில் கிடைத்து விட்டால் இதை நாங்கள் எப்போதோ சொல்லி தீர்மானமும் எடுத்து விட்டோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.)

இந்தக் குழுவிலுள்ள முக்கிஸ்தர்களை மீண்டும் ஒரு முறை அவதானியுங்கள். இவர்கள் எல்லோரும் இரண்டு கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவளித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இலங்கையில் ஒரு சர்வதேச மாநாடு நடத்துவதற்குத் தமது சக்தியைச் செலவழிப்பார்களாக இருந்தால் அது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களும் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

டத்தோ முதல் டான்ஸ்ரீ வரை

குப்பப்பிச்சை முகம்மது இக்பால் பல வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் ஓர் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்துவதற்கு முயற்சித்தார். அந்த வேளை அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தனது கட்டளைக்குப் பணிந்தே எல்லோரும் நடக்க வேண்டும் என்ற அவரது போக்கினால்தான் அவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும். “இது என்ன இலக்கிய மாநாடா... இக்பால் மாநாடா..” என்று எதிர்க் குரல் எழுப்பப்பட்டதாக நான் அறிய வந்தேன்.

தன்முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தியன் போல் இக்பால் தனது திட்டமிடலால் எல்லோரையும் எந்த இடத்தில் எப்படித் தட்ட வேண்டுமோ அப்படி அமர்த்தித் தனது கனவை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டு விட்டார். அவருக்கு இஸ்லாமிய இலக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட தனது முக்கியத்துவத்தை உறுதியாகக் கட்டமைத்துக் கொள்வதே அவரது முக்கிய நோக்கமாக இருப்பதாக நமக்குப் படுகிறது.

இதனாலேயே இலக்கியவாதிகளை விட அரசியல்வாதிகளையும் அரசியல் சார்ந்தோரையும் முக்கியஸ்தர்களையும் மலேசியாவுக்கு அழைத்துக் காட்டி மலேசிய அரசியல் தலைமைகளுக்கு தான் ஒரு சமுதாயத் தலைவன் என்ற படத்தைக் காண்பிக்க விழைகிறார் என்றே புரிய முடிகிறது. மாநில வாரியாக கொடுக்கப்படும் பட்டமான ‘டத்தோ’வை வைத்திருக்கும் அவர் இந்த விழாவை மாநாடு என்ற பெயரில் நடத்தி விட்டு தேசிய ரீதியில் வழங்கப்படும் பட்டமான ‘டான்ஸ்ரீ’ பெற்றுக் கொள்வார் என்பது எனது கணிப்பு.

முடிவாக

தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது போல் இலங்கைக்கும் பத்து விமானச் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். மருதூர் ஏ மஜீத் தன்னைத் தொடர்பு கொண்டு மாநாட்டுக்குச் செல்ல வரும்படியும் சகலதும் இலவசம் என்றும் சொன்னதாக நண்பர் மேமன் கவி எனக்குச் சொன்னார். விமானச் சீட்டுக்களைத் தாங்களே பகிர்ந்து கொள்ளாமல் இப்படியாவது படைப்பாளிகளைக் கூட்டிச் சென்று வெளிநாடு காட்ட முன்வந்துள்ளதால் ஏற்பாட்டுக் குழுவுக்கு நமது நன்றிகளைச் சொல்லியே ஆகவேண்டும்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: