Saturday, November 5, 2011

கே.எஸ். சிவகுமாரன் - ஓயாமல் நடக்கும் நதி


கே. எஸ். சிவகுமாரன் பற்றிப் பேசுவதை ஓர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. அது எப்படியிருந்திருக்கும் என்றால் எம் ஜி ஆரின் படப் பாட்டு ஒன்றில் வருவது போல் அண்ணாந்து பார்க்கிற மாளிகையாக கே.எஸ். சிவகுமாரனும் அதனருகினில் இருக்கும் ஓலைக் குடிசையாக நானும் இருந்திருப்போம்.

கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பவள விழா மலராக வெளி வந்திருக்கும் ஜீவநதி சஞ்சிகையின் 37 வது இதழைப் பற்றிப் பேசுமாறு நான் கேட்கப்பட்டேன். முழுக்கவும் கே. எஸ்ஸைப் பற்றிய எல்லாத் தகவல் களோடும் வந்திருக்கும் இந்த சஞ்சிகையைப் பற்றிப் பேசுவதானது இன்னொரு வார்த்தையில் கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிப் பேசுவதாகும்.

இலங்கையின் தமிழ் இலக்கியப்பரப்பில் பல்வேறு பட்ட ஆளுமைகளையும் பிரகிருதிகளையும் நாம் அவ்வப்போது கண்டு வந்துள்ளோம். இப்போதும் கண்டு வருகிறோம். இருபது முப்பது புத்தகங்கள், பல்வேறு துறைகள் என்று இயங்கியோர் முதற்கொண்டு நேற்றுத் தொடங்கிய இலவச இணையத்தளத்தில் பத்து வரி எழுதியவர்கள் வரை எழுத்தாளர்களாயிருக்கின்ற சூழலில் - வாழ்வியல் பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டுரையை அல்லது கவிதையை அல்லது கதையை எழுதிவிட்டு ஓடிப்போனவர்கள், இரண்டு வருடங்கள் எழுதி விட்டுக் காணாமல் போனவர்கள், ஐந்து வருடங்கள் எழுதி விட்டுப் போதும் என்று ஓய்ந்து போனவர்கள், கரடி பிறைக் காண்பது போல் இருந்து விட்டு எழுதுபவர்கள் இருந்த, இருக்கின்ற சூழலில் - இரண்டு நிமிடங்கள் கே. எஸ். சிவ குமாரன் பற்றிச் சிந்தித்தால் அவரது ஆளுமை எத்தகையது என்பது புரிய வரும் என்று நினைக்கிறேன்.


இந்தச் சஞ்சிகையில் 23 வயதானவர்கள் முதற்கொண்டு அறுபது வயதைத் தாண்டியவர்கள் வரையான பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் கே. எஸ். சிவகுமாரனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதுதான் சிவகுமாரனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரும் தமது ஜன்னலூடாக கே. எஸ் சிவகுமாரனைப் பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரிடம் பல திறமைகள் இருந்திருக்க வேண்டும். அதை இன்னும் சிறப்பான வசனங்களில் நான் சொல்வதாக இருந்தால் எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரையும் சிவ குமாரன் தம்மைப் பார்க்க வைத்திருக்கிறார்.




அந்தனி ஜீவா மற்றும் பேரா. சபா ஜெயராசா

கே.எஸ் பற்றி அறிந்திருக்கின்ற மூத்தோரும் அவ்வப்போது பகுதி பகுதியாக அறிந்து கொண்டிருக்கும் இளையோரும் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவர் ஓர் படிப்பாளி, படைப்பாளி, திறனாய்வாளர், பன்னூலாசிரியர், பத்தி எழுத்தாளர், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எழுதுபவர், சர்வதேச சினிமா விமர்சகர், செய்தி ஆசிரியர், பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர், தமிழ் இலக்கியத் தகவல்களை ஆங்கில வாசகர்களது கவனத்துக்குக் கொண்டு செல்பவர், ஓர் ஆசிரியர், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தவர், கடல் கடந்த தேசங்களில் வாழ்ந்த இலக்கிய வல்லுனர்களுடன் நட்புக் கொண்டவர், இளையவர்களையும் அரவணைத்துச் செல்பவர், மிக, மிக, மிக எளிமையான மனிதர். ஆக தமிழ் இலக்கியத் துறையில் இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட ஓர் ஆளுமையாக கே.எஸ். சிவகுமாரன் அவர்களை மாத்திரமே நம்மால் சொல்ல முடியும்.

கே.எஸ் அவர்களின் இயக்கங்களில் முக்கியமாக என்னைக் கவர்ந்த ஒன்று இருக்கிறது. சஞ்சிகை இதழ் ஒன்றாகட்டும், ஒரு நூலாகட்டும் - அவரது கரங்களில் கொடுத்தாலோ அல்லது அவரது முகவரிக்கு அனுப்பினாலோ இரண்டு வாரங்களுக்குள் ஒரு காலை வேளை அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அந்த அழைப்பில் இத்தனையாம் திகதிய இந்த ஆங்கிலப் பத்திரிகையில் இத்தனையாம் பக்கத்தில் உங்களது நூல் - சஞ்சிகை பற்றிய எனது குறிப்பு வருகிறது என்று அவர் நமக்குச் சொல்லுவார்.

பொதுவாகவே நூல் ஒன்றை அல்லது சஞ்சிகை ஒன்றை நமக்கு உரியவர்கள் இலவசமாகத் தந்த போதும் அதை பிறகு பார்க்கலாம் என்று வைத்து விடுவது நம்மில் பலரிடம் உள்ள குணமாக இருக்கிறது. சிலர் அதை மேலோட்டமாகப் பார்த்து விட்டு வாசிக்கமலேயே விட்டு விடுவதும் உண்டு. சில நூல்களை மேலோட்டமாகப் பார்க்கும் போதே அதில் தனக்குப் பெற்றுக் கொள்ள ஏதும் இல்லை என்று முடிவுக்கு வருவது இதற்கான முக்கிய காரணம். ‘நீயெல்லாம் ஒரு எழுத்தாளர், உனக்கெல்லாம் ஒரு புத்தகம், இதை வேற நாங்க வாசிக்கணுமாக்கும்’ என்ற அலட்சிய மனோபாவம் முக்கியமில்லாத காரணம்.



ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் பேரா. சோ.சந்திரசேகரன்

இந்த இடத்தில் நமது மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மருதூர் ஏ மஜீத் சொன்ன ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தப் பாடுடையதாக இருக்கும். நீண்ட காலங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

தனது நூல் வெளியீடு ஒன்றின் போது எல்லோரும் செய்வது போல நூலை மிக அழகாகப் பொதி செய்து பிரமுகர்களைப் பெயர் குறிப்பிட்டு அழைத்து வழங்கியிருக்கிறார். வெளியீட்டு விழா வலு கலாதியாக நடந்து முடிந்தது. எட்டு வருடங்களின் பின்னர் ஏதோ ஒரு தேவைக்காக அந்த நூ}லைத் தேடிய போது தன்னிடம் கூட ஒரு பிரதி இல்லை என்பதை அவர் அறிய வந்தார். சில இலக்கிய நண்பர்களிடம் விசாரித்தார். எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட நூலை - அவரிடமே இல்லாத நூலை இன்னொருவர் பத்திரப்படுத்தி வைத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் கைவிரித்தார்கள். வெளியீட்டு விழாவை ஞாபகப்படுத்தி யார் யாரெல்லாம் நூல் பெற்றார்கள் என்று வரிசைப்படுத்தும் போது அந்தப் பிரமுகரின் பெயர் ஞாபகம் வந்தது.

நேரே அந்த நபரின் வீட்டுக்குச் சென்று மிகவும் பவ்வியத்தோடு அந்த நூல் இருக்குமாயின் தரும்படி கேட்டிருக்கிறார். எந்த விதமான சலனமுமில்லாமல் அந்த நபர் நேற்றுத்தான் அந்த இடத்தில் வைத்தவர் போல் தனது வரவேற்பறையில் இருந்த ஷோ கேஸ் மேல் கையை விட்டு அதை எடுத்துக் கொடுத்தார். மருதூர் ஏ. மஜீத் சொல்கிறார்.... எட்டு வருடப் புழுதி படிந்த நிலையில் பொதி செய்யப்பட்ட கிழிக்கப்படாத அதே உறையுடன் அந்தப் புத்தகம் கிடைத்தது!


தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் ஜீவநதி ஆசிரியர் க.பரணீதரன்

தன்னிடம் ஒரு நூலை அல்லது சஞ்சிகையைத் தந்தவர் அல்லது அனுப்பியவர் யாராகவும் இருக்கலாம். அவர் அண்மையில் இலக்கியத்துறைக்கு வந்திருக்கலாம், பெரிய எழுத்தாளராக இருக்கலாம், கல்வியாளராக இருக்கலாம் - அதற்குரிய மரியாதையை வழங்க வேண்டும், அதைப் படித்துப் பார்க்க வேண்டும், அதைப் பற்றி ஒரு குறிப்பை எழுத வேண்டும் என்று நினைத்துச் செயல்படும் ஒருவர் ஒரேயொருவர் கே.எஸ். சிவகுமாரன் மாத்திரம்தான் என்று நான் நினைக்கிறேன். எனவே இதற்காகவே நாம் அவருக்குத் தனி மரியாதையை வழங்கியாக வேண்டியிருக்கிறது.


தெளிவத்தை ஜோஸப் மற்றும் திருமதி பத்மா சோமகாந்தன்

பிடித்த எழுத்தாளர் பிடிக்காத எழுத்தாளர் என்ற வகைப்படுத்தல் ஒன்று உண்டு. சிலருக்கு சிவகுமாரனின் எழுத்துக் குறித்துப் பிடிப்பு இல்லை. அதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்னவெனில் அவரது எழுத்துக்களில் மற்றவரை ஈர்க்கும் தன்மை இல்லை என்பதுதான். அவர் எல்லாவற்றையும் மேலோட்டமாகவே எழுதி விடுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதற்காக அவர் ஓர் எழுத்து ஆளுமை இல்லை என்று சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது.

 உண்மையில் ஆழ்ந்த எழுத்தில் அவர் ஈடுபட்டிருந்தால் இது வரை அவர் அறிமுகப்படுத்திய படைப்பாளிகளில் , நூல்களில் சஞ்சிகைகளில் சரி பாதியை மட்டுமே செய்யக் கூடியதாயிருந்திருக்கும் என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. எதுவுமே செய்யாதவர்களை விட, ஆழமாக எழுதுகிறேன் என்று ஆடைக்கொருக்காக கோடைக் கொருக்காகச் செயல்படுவோரை விட தொடர்ந்து மேலோட்டமாகவே எழுதுவதன் மூலம் அவர் இயங்கிக் கொண்டேயிருப்பதும் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதல்லவா?


கலைஞர் கலைச் செல்வன் மற்றும் தம்பு. சிவா

உணவில் உள்ள நாட்டம் போல்தான் இந்தப் பிடித்த எழுத்தாளர் பிடிக்காத எழுத்தாளர் விவகாரமும். சிலருக்கு புறியாணி பிடிக்கும். சிலருக்கு புளியாணம் பிடிக்கும். சிலருக்கு வடையும் சிலருக்கு வட்டிலப்பமும் பிடிக்கும். சிலருக்குப் பொரித்த மீனும் சிலருக்குப் பொரித்த இறைச்சியும் பிடிக்கும். சிலருக்கு மச்சம் பிடிக்கும். சிலருக்கு மரக்கறி பிடிக்கும். சிலருக்கு ஆடு, மாடு, கோழி, ஒட்டகம், மான், மரை, காடை, கௌதாரி என்று எல்லாக் கோதாரியும் பிடிக்கும். ஆனால் நோய் காரணமாகச் சாப்பிட்டுக் கொள்ள முடியாமல் - ஐ டோன்ட் லைக் நொன் வெஜ்... யு சீ....- என்று நடிக்கப் பிடிக்கும்.

வாசிப்பு ரசனையும் இப்படித்தான். நெஞ்சைத் தொட எழுதுவோரைச் சிலருக்குப் பிடிக்கும். நேசம் வர எழுதுவோரைச் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குக் கவிஞர்களைப் பிடிக்கும். சிலருக்குச் சிறுகதை எழுவோரைப் பிடிக்கும். சிலருக்குப் பழைய எழுத்தாளர்களைப் பிடிக்கும். சிலருக்குப் புதிய எழுத்தாளர்களைப் பிடிக்கும். சிலருக்குச் சக்தியுள்ள எழுத்துக்களைப் பிடிக்கும். சிலருக்குச் சத்தி வர எழுவோரைப் பிடிக்கும். வசப்படுத்தும் எழுத்துக்களைச் சிலருக்கும் வம்புக்கு இழுக்கும் எழுத்துக்களைச் சிலருக்கும் பிடிக்கும். சிலருக்கு வட்டத்து எழுத்தாளரையும் சிலருக்கு வசதியுள்ள எழுத்தாளரையும் பிடிக்கும்.


ஆக எல்லோரும் எழுதுகிறார்கள். அவர்களது எழுத்துக்களின் ரசனையடிப்படையில் வாசகர்கள் அமைகிறார்கள். ஆனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது எந்த எழுத்தில் யாருடைய இயக்கத்தில் கனதி இருக்கிறதோ அது நின்று நிலைக்கிறது. அந்த எழுத்து ஓர் பொதுவான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பொது அபிப்பிராயத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக அந்த இலக்கியவாதி இருக்கிறார் என்றால் அவர் வெற்றி பெற்றவராகிறார். அப்படித்தான் கே. எஸ் சிவகுமாரனும் இருக்கிறார்.

அவரது எழுத்துக் குறித்து இச்சஞ்சிகையில் பேசும் அந்தனி ஜீவா தனது குறிப்புக்கு இட்டிருக்கும் தலைப்புத்தான் கே.எஸ்.சிவகுமாரன் பற்றிய அதிசிறந்த ஒற்றை வரி மதிப்பீடு என்பது எனது கருத்து. அவர் கே.எஸ். சிவகுமாரனை ‘பதிவு இலக்கியத்தின் முன்னோடி’ என்று மிகப் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

மற்றொரு புறமாகத் திருப்பிப் பார்த்தால் கே.எஸ் சிவகுமாரனின் நற் பண்புகள் பல தெளிவாகப் புலப்படும். ஏறக்குறைய 22 புத்தகங்களை எழுதியவர், இலக்கியம், சினிமா, ஒலிபரப்பு என்று சிவகுமாரனைப் போல் இயங்கிய மற்றொருவர் இருந்திருந்தால் அவர் எப்படியிருந்திருப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு சில நூல்களை வெளியிட்டு விட்டு, நான்கு சால்வைகளால் போர்த்தப்பட்டவுடன் உலக மகா ரேஞ்சுக்குத் தம்மை உயர்த்திக் கொள்ளச் சகல விதமான முன்னெடுப்புக்களிலும் ஈடுபடும் ஒருவர் கே.எஸ். அளவுக்குச் சாதித்திருந்தால் இந்தப் பூமி தாங்குமா? நாம்தான் எஞ்சுவோமா? அப்படிப் பார்த்தால் கே.எஸ். எத்தனை உயர்ந்த மனிதர் என்பது நமக்குப் புரியவரும்.

எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பல அரிய பண்புகள் அவரிடம் உள்ளன. அடக்கம், பணிவு, எல்லோரிடமும் மரியாதை, அவசியமானவற்றை மட்டும் பேசுதல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் நடந்து வருவது கூட ஒரு பூனை உலாத்துவது போல்தான் இருக்கும். பாதங்களுக்கும் நோகாது. பூமிக்கும் நோகாது. அவர் பேசுவதும் அப்படியே. யார் செவிப்பறையும் அதிராது. யார் மனசும் புண்படவும் மாட்டாது, அழுக்குப்படவும் மாட்டாது.


கே.எஸ். சிவகுமாரனின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவர் தன்னை எந்த அணியுடனும் பிணைத்துக் கொள்ளவில்லை என்பது. இது அவரது பலமாகவும் சில வேளை பலவீனமாகவும் இருந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தன்னை எந்த வளையத்துக்குள்ளும் சிக்க வைத்துக் கொள்ளாமல் வெகு சுதந்திரமாக இயங்கிய போதும் தன்னையே ஒரு தோப்பாக மாற்றிக் கொண்டவர் என்று சொல்லலாம். சில வேளை அது பலவீனமாக இருந்திருக்கலாம் என்று நான் குறிப்பிட்டது ஏனெனில் - அவர் ஓர் அணியோடு இருந்திருந்தால் சில வேளை.... சில வேளை அவருக்கு ஒரு மணி விழா நடந்திருக்கக் கூடும். ஆனால் அதற்காக கே.எஸ். தன்னை ஒரு போதும் இழப்பதற்குச் சம்மதிக்க மாட்டார் என்பதையும் அறிவேன்.

இருந்த போதும் கடந்த சில வருடங்களுக்குள் தனது சேவையை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்கிற ஒரு மனக்குறையும் அதனால் ஓர் ஆயாசமும் அவருக்கு வந்திருக்கிறது என்பதை அவர் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன். தன்னைப் பற்றித் தானே எழுதியிருந்த கட்டுரையை முதலில் நான் படித்த போது அவர் மீது இரக்கமும் அதே நேரம் அடக்க முடியாக் கோபமும் ஏற்பட்டது. அவரை உற்சாகப்படுத்தும் விதமான ஒரு நிகழ்வை ஒன்று சேர்ந்தேனும் செய்யாது விட்டதற்குத் தமிழ் இலக்கிய உலகு சார்ந்த நானும் ஓர் பங்காளியே என்ற சிந்தனை என்னை உறுத்தவே செய்தது.

இன்று ஜீவ நதியின் 37வது இதழும் எமது சர்வதேச சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக் கிளையும் கே.எஸ்.ஸின் ஈறலைத் தீர்த்து வைத்திருக்கின்றன என்று நம்புகிறேன். எதிர் காலத்தில் கே.எஸ். சிவகுமாரன் பற்றிய பெருமளவு தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த இதழ் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. படைப்பாளிகள் கட்டாயம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய சஞ்சிகைப் பிரதிகளில் இதுவும் ஒன்று. இதற்காகப் பரணீதரனினதும் அவர் சார்ந்தோரினதும் உழைப்புக்கு நன்றி சொல்கிறேன்.

பவள விழாக் காணும் கே.எஸ் அவர்களைப் பற்றிப் பல்வேறு இணையத் தளங்களில் குறைந்த அளவு தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் முழுமையான தகவல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஃபேஸ் புக்கில் இரண்டு கணக்குகளைப் பேணி வரும் அவருக்கு அவரது உத்தியோகபூர்வ இணையத் தளத்தை நிர்வகிப்பது பெரிய வேலையல்ல. பல புகழ் பெற்ற எழுத்தாளர்கள் மறைந்த பிறகும் அவர்களது உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா இதற்கு உதாரணம். மறைந்தவர்களான பாக்கிஸ்தானின் உன்னத கவிஞன் ஃபைஸ் அகமத் ஃபைஸையும் பலஸ்தீன எழுத்தாளர் கஸ்ஸான் கனபானியையும் அவர்களது உத்தியோகபூர்வ இணையத் தளங்களில் இன்றும் படிக்க முடியும்.

முகப்புத்தகத்தில் கணக்கு வைத்திருப்பது அவ்வப்போதைய தகவல்களுக்கு மட்டுமே உதவும். அதில் கணக்கு வைத்திருப்பதானது யாரோ விளையாடிக் கொண்டிருக்க நமக்குப் பக்கத்தில் பந்து வந்தால் அதைப் பொறுக்கிக் கொடுக்கும் வேலை போன்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்க கே.எஸ். தனக்குரிய ஒரு வலைத் தளத்தை ஆரம்பித்து அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் அவர் எழுதிய நூல்கள் பற்றிய விபரங்களையும் உலகுக்குத் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


கே.எஸ். சிவகுமாரன்

இறுதியாக, அன்புள்ள கே.எஸ்,

தருணங்களை ஏதோ ஒரு வகையில் யாராலும் வெல்ல முடியும். ஆனால் காலத்தை வெல்ல எல்லோராலும் முடியாது. 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலும் 21ம் நூற்றாண்டின் முன் பகுதியிலும் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பற்றிய வரலாறு எழுதப்படும் போது அதில் நீங்கள் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

உங்களது ஆயுள் நீடிக்கவும் சுகதேகியாக நீங்கள் வாழ்ந்து இலக்கியத்தில் இன்னும் செயல்படவும் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கப் பிரார்த்திக்கிறேன்.

(கே.எஸ் சிவகுமாரனின் பவள விழா ஆண்டை முன்னிட்டு ஜீவநதி வெளியிட்ட சிறப்பு மலர் பற்றி கொழும்புத் தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் ஆற்றப்பட்ட உரை. உலகச் சிற்றிதழ் சங்கத்தின் கொழும்புக் கிளை கே.எஸ் சிவகுமாரனுக்கான பாராட்டு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

மிக அற்புதமான பதிவு. கே.எஸ். எஸ். பற்றி தங்களுக்கே உரித்தான (கலாதியான)நடையில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். சான்றோரைப் போற்றுதலும் சால்புடைமையே எனத் தோன்றுகின்றது, எனக்கு. மற்றவர் பற்றி நல்லதாய் நாலு வரி எழுதுவதற்கே மனசின்றிப் போன இன்றைய அவசர யுகத்தில், கே.எஸ். எஸ். பற்றிய உங்கள் நீண்ட, ஆனால் அலுப்பூட்டாத உரையைப் படித்த போது, அந்த மணிவிழா மலரை வாங்கிக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் முகிழ்த்தது. அவருக்கும் உங்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைவான நலத்தையும் நேரத்தில் அபிவிருத்தியையும் அருளட்டும் என மனப்பூர்வமாய் பிரார்த்திக்கின்றேன்.