Monday, May 7, 2012

முடிவுக்கு வாரீர்! - புரட்சிக்கமால் கவிதை


இலங்கையின் புகழ்பூத்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் ‘புரட்சிக் கமால்’ எம்.எம்.சாலிஹ் அவர்கள். இறுக்கமும் அழகும் கொண்ட அவரது கவிதைகள் சமூக ஒருமைப்பாட்டைப் பேசுவதுடன் சமூகக் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுவன. எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கவிதைகளை அலுப்பில்லாமல் அவ்வப்போது திரும்பத் திரும்பப் படிப்பதுண்டு.

அவரது கவிதைகளில் முஸ்லிம் சமுதாயத்தின் பேச்சு வழக்கில் இழையோடும் அறபுச் சொற்கள் இயல்பாகவே இணைந்திருப்பதைக் காணலாம்.

 (முஸ்லிம் அல்லாத வாசக உள்ளங்களுக்காக கவிதையில் உள்ள அறபுச் சொற்களும் பொருளும்: துஆ - பிரார்த்தனை, ஈமான் - இறை நம்பிக்கை, ஹாமான் - இஸ்லாமிய வரலாற்றில் வரும் ஒரு பெரும் செல்வந்தர், ஜூம்ஆ - வெள்ளியன்று மதியம் நடைபெறும் கூட்டுத் தொழுகை, பக்கீர் - ஏழை, பிர்தௌஸ் - சுவர்க்கம், கபூல் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல், இபாதத் - வணக்க வழிபாடு)

கவிதையென்றால் பெண்ணில் காதலாகிக் கசசிந்துருகிக் கண்ணீர் விடுவது என்று மட்டுமே நினைத்தெழுதும் இளைய கவிராயர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

தொழில் வளம் துறைதோறும் கண்டு,
தோதுகள் பெருகிட வேண்டும்!
பழி தரும் யாசகம், வறுமை,
பசி, பிணி, பலாத்காரக் கொடுமை,
ஒளிபடும் முயற்சியில் செல்வர்
உறுபொருள் வெள்ளமாய் ஓடி
குழிபடும் பள்ளங்கள் பாய்ந்தே
குதூகலஞ் சூழ்ந்திட வேண்டும்!


சமுதாய தாகமே, சுவனம்
சமைத்திடும் துஆவென்று தேர்ந்து
இமையா துழைத்திடல் ஒன்றே
ஈமானின் செயற்பாடு என்பேன்!
சுமையான தன்னலச் சேற்றின்
சுரிதின்னும் சுகபோகம் விட்டு:
அமைவான நற்பணி பூண்டு
ஆன்மீக சுகம்பெற வேண்டும்!


விதவைகள், அநாதைகள் என்று
வீதி அலைந்திடும் பெண்மை,
சதஞ்சல்லி யாக மலிந்தார்!
சார்ந்ததில் சார்ந்ததாய்ச் சார்ந்தார்!
இதையெண்ணிக் கசியாத இதயம்
ஈமானை வைத்தென்ன கூட்டும்
புதையலில் ஹாமானாய்ப் புரளும்
‘புண்ணியர்’ சிந்திக்க வேண்டும்!


வெள்ளிநாள் என்றாலே, மானம்
வீதிக்கு வீதியாய் நீளும்!
பிள்ளை, தாய், பெரியவர் என்று
பிச்சைக்கே வாழ்கிறார்! ஜூம்ஆ
பள்ளியோ பக்கீர்மார் பண்ணை!
பக்தியோ பிர்தௌஸின் பக்கம்!
கொள்ளை நோய் தீராத மட்டில்
கோரிக்கை கபூலாமோ கொள்வீர்!


வீதியைப் போக்கிட மாக்கி,
வீணராய் விளைந்திடும் சிறுவர்
பாதையில், திருப்பங்கள் காணும்
பக்குவம் தவறினால், நாளை
பூதமாய்ப் பழி, கொள்ளை பெருக்கி
பூகம்பம் நடத்துவார் கொசிவீர்!
ஆதலால் துல்லிய நோக்கில்
ஆவன செய்திட வாரீர்!


இரண்டொரு கடமைக்குள் குந்தி
இஸ்லாமைச் சோபிக்கும் போக்கு,
திரண்டெழும் வாலிபத் தீயின்
தினவுக்குத் தூள்படும்! காண்பீர்!
சுரண்டலில் இபாதத்து சூடி
சுந்தர ஏப்பங்கள் தீர்க்கும்
முரண்டுகாள், முற்பகல் ஓடி
முடியுமுன் முடிவுக்கு வாரீர்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி. :)

ஃபஹீமாஜஹான் said...

"முடிவுக்கு வாரீர்" கவிதையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தக் கவிதை 1988ம் ஆண்டு பாமிஸ் மாசிகையில் வெளிவந்தது என நினைக்கிறேன்.அப்பொழுது வயதில் சிறியவளாக இருந்தாலும் பாடசாலை மாணவர் மன்றத்தில் இதனைப் படித்தேன்.மேடையிலிருந்து இறங்கும் பொழுதே ஆசிரியர்கள் பாராட்டியதுடன் மாணவர் குறிப்பிலும் மூத்த சகோதரர்கள் பாராட்டினர்.

எனினும் எனது நினைவில் உள்ள படி

"பூகம்பம் நடத்துவார் 'கொசிவீர்!" "கோரிக்கை 'கபூலாமோ' கொள்வீர்!"

இந்த வரிகளில் உள்ள 'கொசிவீர்', 'கபூலாமோ'ஆகிய சொற்கள் அதில் காணப்படவில்லை.

"கோரிக்கை வெல்லுமோ கொள்வீர்" என்பது நினைவில் உள்ளது.
மற்றையது நினைவில் இல்லை.