(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை)
இது தவிர, “காணாமல் போனவர்கள்” (1999), “என்னைத் தீயில் எறிந்தவள்” (2008) என்பன இவரது கவிதைத் தொகுதிகள். “புள்ளி” (2007), “கறுக்கு-மொறுக்கு - முறுக்கு” (2009), “புல்லுக்கு அலைந்த மில்லா” (2009) என்பன இவர் படைத்த சிறுவர் கதைகள். பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான “தீர்க்க வர்ணம்” (2009), பயண அனுபவங்களைச் சுவைபடக் கூறும் “ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை” (2009) என்பன இவரது குறிப்பிடத்தக்க பிற படைப்புக்களாகும்.
அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து தமிழ்ச் சேவை, முஸ்லிம் சேவை, கல்விச் சேவை போன்றவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், தொகுத்து வழங்கியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தார். முஸ்லிம் சேவையில் இவர் நடத்திய “அறிவுக் களஞ்சியம்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்துடன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தில் சுமார் 10 வருட காலத்துக்கும் மேலாகச் செய்தி அறிவிப் பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். “நாட்டவிழி நெய்தல்” (http://ashroffshihabdeen.blogspot.com/ ) என்ற வலைப் பூவுக்குச் சொந்தக்காரரான இவர், அதில் சுவாரசியமான பல பதிவுகளைத் தொடர்ச்சியாகத் தருவதன் மூலம் இணைய உலகிலும் உற்சாகமாக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்க இலங்கைக் கிளையின் உபதலைவராகப் பணியாற்றி வரும் இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்திலும் உப தலைவராகச் செயற்பட்டுள்ளார். அஷ்ரஃப் சிஹாப் தீன், 2002 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியதோடு, 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக் குழுச் செயலாளராகவும் இருந்து காத்திரமான பங்காற்றியுள்ளார். இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இயங்கி வருகின்றார்.
ஓர் ஆசிரியராகப் பணிதொடங்கி இலங்கை குடிவரவுத் திணைக்கள அதிகாரியாய் முன்னேறிய அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள், எத்தனையோ ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு மூத்த படைப்பாளியாகத் தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றிருந்தும் பழகுதற்கு எளியவராய், இளந் தலைமுறையினரின் திறமைகளுக்கு எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவராய் இருப்பது விதந்துரைக்கத் தக்கதாகும்.
இவருடைய படைப்புக்கள் பல்வேறு தரப்பட்டவர்களையும் உள்வாங்கி, தமக்கெனத் தனியானதொரு வாசகர் வட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவரது படைப்புக்களில் “ஸைத்தூன்” என்ற கவிதை 1985 ஆம் ஆண்டுகளில் நாட்டில் நிலைகொண்டிருந்த நெருக்கடியான அரசியல் சூழலை அடியொட்டியதாய் அமைந்திருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பத்திரிகை, சஞ்சிகைகளில் பலமுறை மீள் பதிப்புச் செய்யப்பட்டுத் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பெரும் புகழை ஈட்டித்தந்த இந்தக் கவிதையும், “என்னைத் தீயில் எறிந்தவள்” என்ற அற்புதமான கவிதையும் “மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” (2002) தொகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் அந்த நூலின் பிரதான தொகுப்பாளரும்கூட.
அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் “என்னைத் தீயில் எறிந்த வள்” கவிதைத் தொகுதிக்கு 2009 ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது கிடைத்தது. அண்மையில் காயல்பட்டினத்தில் இடம்பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இவர், ‘தமிழ்மாமணி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவரது படைப்புக்களில் என்னை மிகவும் கவர்ந்தது, கலாநிதி எம். எஸ்.எம். அனஸ் அவர்களின் கனதியான அணிந்துரையோடு உண்மைக் கதைகளின் தொகுப்பாக வெளிவந்த “ஒரு குடம் கண்ணீர்” (2010) நூல்தான். அதிகார மமதையாலும் அரச யந்திரத்தின் எதேச்சதிகாரச் செயற்பாடுகளாலும், பகைமையின் குரோதத்தாலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் மிருகங்களைவிட நிலை தாழ்ந்து போன மானுட அவலங்களை நெஞ்சை உலுக்கும் அதியற்புதமான நடையில் இந்த நூல் பேசி இருக்கிறது. எடுத்ததும் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடாமல் கட்டிப் போடும் அப்படியோர் ஆற்றொழுக்கான தமிழ்நடை. பொதுவாக இஸ்லாமிய மார்க்க நூல்களையே படிக்கும் வழக்கமுடைய 60 வயதான என்னுடைய மாமியார் தற்செயலாகத் தான் இந்த நூலைக் கையில் எடுத்தார். படிக்கத் தொடங்கியவர் இரண்டு நாட்களுக்குள் படித்து முடித்துவிட்டுச் சொன்னார், “இப்படியான கொடுமைகளும் உலகத்துல நடக்குதா மகளே? மனசெல்லாம் பாரமாப் போச்சு.” வயது வித்தியாசமின்றிப் படிப்பவரை ஈர்த்துக் கொள்ளும் அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர் என்பதை உணர்த்தும் ஒரு சின்னச் சம்பவம் இது.
இவருடைய “ஒரு குடம் கண்ணீர்” நூலுக்குச் சாகித்திய விருது கிடைக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்புக்கு மாற்றமாக தேசிய சாகித்திய விழாவில் (2011) வெறுமனே ஒரு சான்றிதழ் மட்டுமே வழங் கப்பட்டமையானது இலக்கிய உலகில், குறிப்பாக இணையத்தில் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருப்பதை நாமறிவோம். இந்த நூலைப் பற்றி 2011 ஆகஸ்ட் 17 ஆம் திகதி ‘இந்தியா டுடே’ சஞ்சிகையில் வெளிவந்த குறிப்பில், “ஒரு மரத்தையும்கூட மனித உரிமைப் போராளியாக ஆக்கி விடும் எழுத்து அஷ்ரஃபுடையது” என்று இடம் பெற்றிருந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து” என்றார், வள்ளுவர் பெருந்தகை. அத்தகைய தோர் வெல்லும் சொல் நடைக்குச் சொந்தக்காரராக அஷ்ரஃப் சிஹாப் தீன் திகழ்கின்றார் என்பதையே மேற்படி குறிப்பு நமக்கு உணர்த்தி நிற்கின்றது எனலாம்.
*********
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்றும்,
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”என்றும் கட்டளையிட்டான் மகாகவி பாரதி.
ஒரு மொழி அபரிமிதமாக வளம் பெற்று என்றென்றும் வாழும் மொழியாகப் பரிணமிப்பதற்கான அடிப்படையை அவன் நமக்குச் சொல்லிச் சென்றான். அந்த வகையில், ஏனைய மொழிகளில் எழுந்த கலைச் செல்வங்கள் மொழிபெயர்ப்பு வழியே தமிழுக்குள் பிரவேசித்தன. பிரான்ஸிய, ரஷ்ய, அமெரிக்க இலக்கியங்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு மொழிகளில் படைக்கப்பட்ட இலக்கியங்கள், இலக்கியக் கோட்பாடுகள் என்பன தமிழ் வாசகர்களாலும் சுவைஞர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டன. விடுதலைப் போராட்ட கால முதல் மாப்பசான், விக்டர் ஹியூகோ போன்றோரின் பிரான்சிய இலக்கிய நூல்கள் பல தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டன.
ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி என்பன ஏற்படுத்திய அலைகளால் இடதுசாரி இயக்கங்கள் வலுவடைந்தன. நவகாலனிய எதிர்ப்பு தன்முனைப்புப் பெற்றது. இலக்கியங்கள் இந்த மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தின. அவை ஆயுதங்களுக்கு நிகராகக் களத்தில் குதித்து ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான போராட்டத்துக்குப் புத்துயிரூட்டின.
சேகுவாரா படுகொலை செய்யப்பட்ட 1967 ஆம் ஆண்டு அஸ்தூரியாஸ் எழுதிய “சைக்ளோன்” எனும் நூலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதையடுத்து இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் ஆபிரிக்க இலக்கியங்களும் பரவலடைய ஆரம்பித்தன. தமிழிலும் அவை வலம் வரத் தொடங்கின. சினுவா அச்செபே, அலெக்ஸ் ஹீலி, கூகி வா தியாங்கோ, லத்தீன் அமெரிக்கப் பெண் எழுத்தாளர; இஸபெல் அலன்டே, ஆபிரிக்கப் பெண் எழுத்தாளர; மாயா ஆஞ்சலூ, பாப்லோ நெருடா போன்றோரின் எழுத்துக்கள் இப்படித்தான் தமிழ் வாசகரி டையேயும் பரிச்சயமாயின.
தமிழிலும் புதிய பரிசோதனை முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. நவீன தொழினுட்பம் என்ற சவாலைத் தமிழ்மொழி மிக இலாகவமாக எதிர்கொண்டது. “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற கூற்றைப் பொய்ப்பித்துக் கணினி யுகத்திலும் தமிழ் கோலோச்சத் தொடங் கியது. இணையம் வரை தமிழுக்கு இறக்கை முளைத்தது. உலகம் ஒரு பூகோளக் கிராமம் என்ற அளவில் சுருங்கச் சுருங்க தமிழ் உள்ளிட்ட உலக மொழிகளில் எல்லாம் பரஸ்பரம் வெவ்வேறு நாடுகளின் இலக்கியப் பரிவர்த்தனைகள் நிகழ, இலக்கியம் மிகப்பரந்த தளத்தை எட்டிப் பிடித்தது.
இந்தப் பின்புலத்தில் நாம் அரபு இலக்கிய உலகு குறித்தும் சற்று நோக்கவேண்டியுள்ளது. அரபு இலக்கியத்துக்கு மிக நீண்டதொரு பாரம்பரியம் இருந்து வந்த போதிலும், பல நூற்றாண்டுகளாக அரபுலகுக்கு வெளியே அதன்பால் கவனம் ஈர்க்கப்படவில்லை. எனினும், 1988 ஆம் ஆண்டு எகிப்தின் நகூப் மஹ்ஃபோஸ் (Naguib Mahfouz) எனும் பிரபல நாவலாசிரியர; இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றபின் இந்நிலைமை மாறியது. மொரோக்கோவின் முஹம்மது பெர்ராதா (Mohamed Berrada), பலஸ்தீனரான கஸ்ஸான் கனாஃபானி (Ghassan Kanafani), எமில் ஹபீபி (Emile Habiby), அண்மைக் காலமாய் எழுதி வரும் பாஹா தாஹிர் (Bahaa Taher), யூசுஃப் ஸெய்தான் (Yusuf Zeydan)), இப்ராஹிம் அல்கோனி (Ibrahim Al- Koni), அப்துல் றஹ்மான் முனீஃப் (Abdel Rahman Munif), நஜீப் கைலானி (Najib Kailani) போன்ற பலரது எழுத்துக்கள், குறிப்பாகப் புனைகதைகள் உலக அளவில் பேசப்படலாயின.
இவ்வாறாக, மேலைத்தேய நாடுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஆபிரிக்க இலக்கியம் என்பவற்றுக்கு நிகரான மிக உன்னதமான ஓர் இடம் அரபு இலக்கியத்துக்கும் அளிக்கப்பட்டு வருகின்றமை கண்கூடு. என்றாலும், தமிழ் மொழியைப் பொறுத்தளவில் ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க எழுத்துக்களுக்குக் கொடுக்கப்பட்டதற்கு இணை யான முக்கியத்துவம் அரபு இலக்கியத்துக்கு வழங்கப்படவில்லை என்பதே நிதர்சனம். தமிழிலே, எட்வர்ட் சயீட், இப்றாஹீம் துக்கான், அபூ சல்மா, சமீஹ் அல் காசிம், சுலஃபா ஹிஜாவி, மஹ்மூத் தர்வீஷ், சல்மா கத்றா ஜய்யூசி, அமினா கஸக் முதலானவர்களின் எழுத்துக்கள், பெரும்பாலும் கவிதைகள் ஆங்காங்கே தனியாகவும் தொகுதியாகவும் வெளிவந்துள்ளன என்பது இங்கே நினைவு கூறத்தக்கதே.
இந்தப் பின்னணியில், அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற இம் மொழியாக்க நூல், தமிழில் வெளிவரும் முதலாவது அரபுச் சிறுகதைகளின் தொகுப்பாகும் என எண்ணுகின்றேன். அந்த வகையில் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகின்றது. மஹ்மூத் சயீத், தௌஃபீக் அல் ஹக்கீம், தையிப் ஸாலிஹ், ஸகரிய்யா தாமிர், கஸ்ஸான் பாயிஸ் கனஃபானி, யாஸர் அப்தல் பாக்கி, ராபியா ரைஹான், ஜூக்ஹா அல் ஹார்த்தி, ஒமர் அல் கித்தி முதலான எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தனக்கே வாலாயமான அழகுத் தமிழ் நடையில் தந்திருக்கின்றார், அஷ்ரஃப் சிஹாப்தீன்.
இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீன், யெமன், மொரோக்கோ, ஓமான், லிபியா முதலான அரபு நாடுகளின் வெவ்வேறு காலகட்டத்து மக்கள் வாழ் வியலைக் கதைக்களமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளன. சர்வாதிகார ஆட்சியின் இரும்புக்கரங்களில் எந்த நிமிடமும் எதுவும் நேரலாம் என்ற அச்சுறுத்தலான வாழ்க்கை, யுத்த நெருக்கடியில் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் அவலம், மதத்தின் பெயரால் சமூகத்தில் புரை யோடிப்போயுள்ள சடங்கு சம்பிரதாயங்கள், போலிப் பித்தலாட்டங்கள், நிலப்பிரபுத்துவச் சுரண்டல்கள், காலாகாலமாக மக்கள் மத்தியில் வேரூன் றியுள்ள மூடநம்பிக்கைகள், அடக்குமுறை ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் குரல், கலாசாரம் என்ற புனைவுகளின் பெயரில் நிலவும் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் என்று இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளின் பேசுபொருள் பலதரப்பட்டதாக அமைந்துள்ளது.
இவற்றுள் அனேகமான கதைகள் நம்முடைய மண்ணுக்கும் பொதுவான சில பண்புக்கூறுகளைத் தன்வயப்படுத்தியனவாக இருக் கின்றமை நோக்கத்தக்கது. கற்பு, கன்னிமை போன்ற பெண்கள் சார்ந்த சமூக மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்பும் “சிவப்புப் புள்ளி”, கிராமிய மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் “சின்னச் சூரியன்”, “கறுப்புப் பூனை”, “திருமணம்” முதலான கதைகள், ஆட்சியாளரின் எதேச்சதிகாரப் போக்கை, அடக்குமுறைகளை, சித்திரவதைகளைப் பதிவுசெய்யும் “விசர;நாய்க்கடி”, “நெடுநாள் சிறைவாசி”, போரின் அவலங்களைச் சித்தரிக்கும் “புகையிரதம்”, “காஸாவிலிருந்து ஒருகடிதம்” என்பன இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
இந்தத் தொகுதியில் ஆசிரியர் நமக்குத் தந்துள்ள அரபுச் சிறு கதைகளில் விதந்துரைக்கத்தக்க எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பதை அவதானிக்கலாம். அரபுலக மக்கள் வாழ்வியலின் ஒரு பகுதியை, ஒரு நிகழ்வை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள இக்கதைகளின் வாயிலாகப் புலப்படுத்தப்படும் கலாசார அம்சங்கள் குறித்த புதிய தரிசனம் தமிழ்மொழி வாசகருக்குக் கிடைத்துள்ளது. அரபு மக்களைப் பொறுத்தவரை மறுமணம் என்பது சர்வசாதாரணமானது. அழகு, உயர் குடும்பம் முதலான காரணங்களுக்காய் ஒரு பெண் விதவையானதன் பின்னர் மீண்டும் மீண்டும் மணமுடிக்கப்படுவதுண்டு. இங்கு, “திருமணம்” கதையில் வரும் நாயகி ஸலாமா பத்துமுறை திருமணம் முடித்தவள் என்பது தமிழ் வாசகருக்கு முற்றிலும் விந்தையான செய்தியாய் அமையும் என்பது உறுதி. அவ்வாறே, ஓமானிய திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் மனதை ஈர்க்கும் வகையில் இக்கதையில் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.
தமிழ் வாசகர்கள் அரபு மக்களின் சமய அனுட்டானங்கள், நம்பிக்கைகள் பற்றிய அம்சங்களை எந்த இடையூறுமின்றிப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் இக்கதைகள் அழகுற மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதும், தேவையான இடங்களில் உரிய அடிக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதும் பயனுடைத்தாகும். ஜின்கள், பேய்கள், கெட்ட ஆவி கள் பற்றிய நம்பிக்கை, லைலத்துல் கத்ர் இரவு வணக்கம், கியாமுல் லைல் தொழுகை, அந்தந்த அரபுப் பிரதேசத்துக்குரிய உணவு வகைகள், ஆடையலங்கார முறைகள் என்பன இத்தொகுதியில் அமைந்துள்ள பல கதைகளில் சுவைபட இடம்பெற்றுள்ளன.
இக்கதைகளில் வரும் மாந்தர்கள் பலதிறப்பட்ட குணாதிசயங்கள், அவர்களின் உணர்ச்சிப் போராட்டங்கள் என்பன மிக அற்புதமாகப் படைக்கப்பட்டிருக் கின்றமையைப் பார்க்கும்போது இவை தமிழிலேயே எழுதப்பட்ட கதைகள்தாமோ என்ற எண்ணத்தையும் இடையிடையே ஏற்படுத்தத் தவறவில்லை.
மிகுந்த நகைச்சுவையாகவம் வித்தியாசமாகவும் படைக்கப் பட்டு நல்லதொரு படிப்பினையையும் தரும் “விற்பனைக்கான அற்புதங்கள்” சிறுகதை இறுதி வரை சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்லப்பட்டுள்ள விதம் அருமை. அவ்வாறே, இத்தொகுதியில் அமைந்துள்ள முதலாவது கதையான “விசர் நாய்க்கடி” இலும், இறுதிக் கதையான “நெடுநாட் சிறைவாசி” இலும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக மிக நுண்மையாக இழையோடிச் செல்லும் எள்ளல் தொனியை அப்படியே தமிழுக்குக் கொண்டுவருவதில் மொழி பெயர்ப்பாளர; வெற்றி கண்டுள்ளார; எனலாம்.
அரபு மக்கள் இயல்பாகவே கவித்துவமாகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் பேச்கூடியவர்கள் என்று கேள்வியுற்றுள்ளேன். இத் தொகுதியின் வாயிலாக அதனைத் தரிசிக்க முடிந்தது. இத்தொகுதியின் மணி மகுடமாய் இடம்பெற்ற “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” கதையிலே, ‘பெரிய பேரீச்சங் குலை உயரத்திலிருந்து கீழே விழும் சத்தத்தில் மட்டும் அவனது கவனம் ஈர்க்கப்பட்டது. மரத்திலிருந்து பேரீச்சங் குலைகளைத் தனது நீண்ட கூரிய கத்தியால் அறுக்கும் பையனை நோக்கி ஒரேயொரு முறை அவன் சத்தமிட்டுச் சொன்னான்: “கவனம்... மரத்தின் இதயத்தை அறுத்து விடாதே!”’ என்ற வரிகளும், ‘திருமணம்’ என்ற சிறுகதையில், “ஓஹ்.. ஆண்டவனே... உன்னுடன் இருந்ததைப் போல் நான் வேறு எந்தப் பெண்ணுடனும் சந்தோசமாக இருந்ததில்லை ஸலாமா... நீ பெரும் இன்பம்... நீ ஒரு நன்கொடை... எடுத்துக் கொள்... எனது மண்டூஸ்களை எடுத்துக் கொள்.... கழுதையை எடுத்துக் கொள்... பேரீச்ச மரங்களையும் எடுத்துக் கொள்... இவ்வளவு காலமும் நீ எங்கிருந்தாய் பெண்ணே..!” எனும் கூற்றும், ‘சிவப்புப் புள்ளி’ என்ற கதையின் நாயகி, “யார் கன்னிமையுள்ளவள், யார் கன்னிமையிழந்தவள் என்றெல்லாம் பேசும் அருவருக்கத்தக்க, பைத்தியக் காரத்தனமான செயலைத் தாங்கிக் கொள்ளும் அவலத்தை நினைத்துப் பாருங்கள்!” என்று குமுறியெழுவதும் ஒரு பானைச் சோற்றின் சில பருக்கைகள்தாம்.
அடுத்து, இக்கதைகளின் தலைப்புக்கள் வாசகரின் ஆவலைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதுமட்டுமன்றி, இக்கதைகளில் இடம்பெறும் மனதை நெகிழச் செய்யும் அழகான வர;ணனைகள் படிப்போரின் சிந்தையை நிச்சயம் ஈர்க்க வல்லன. போரின் அவலத்தைச் சித்தரிக்கும் வகையில் அமைந்த, “அறுவைத் தொழுவத்துக்கு அருகில் உள்ள, அலைகளால் கொண்டுவரப்பட்ட, துருப்பிடித்த நத்தைக் கோதுகளால் நிறைந்த இறுகிய மணல் மேடாக காஸா எனக்குத் தோற்றமளித்தது. நோயுற்றிருக்கும் ஒருவனின் உறக்கத்தில் உள்ள மனக்கிலியை விட நோவினை தரக் கூடியதாக ஒடுக்கமான வீதிகளும் நீட்டிக் கொண்டிருக்கும் பல்கனிகளும் கொண்ட காஸா இருந்தது. இந்த காஸா... செம்மறியாட்டுச் சிறு மந்தையை தனது திசை நோக்கித் திருப்பும் ஊற்றுப் போல ஒரு மனித னைத் தனது குடும்பம், வீடு மற்றும் நினைவுகளை நோக்கி நகர வைக் கும் மறைமுகமான காரணிகள் யாவை...?” (காஸாவிலிருந்து ஒரு கடிதம்) என்ற வரிகளாகட்டும், ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்பட் டிருக்கும் “காலையில் குர்ஆன் ஓதி முடிந்ததும் எனது ஓதற் பலகையைச் சட்டெனப் போட்டுவிட்டு ஒரு ஜின்னைப் போல் வேகமாகத் தாயாரிடம் சென்று விடுவேன். மளமளவென்று எனது காலையுணவைச் சாப்பிட்டு விட்டு நேராகச் சென்று ஆற்றில் பாய்ந்து விடுவேன். நீந்திக் களைத்ததும் ஆற்றங்கரையில் அமர்ந்து ஆற்றின் சிற்றலைகள் கிழக்குப் பக்கமாக நகர்வதையும் அவை தடித்த அடிப்பகுதிகளைக் கொண்ட அக்கேசியா மரங்களின் பின்னால் மறைவதையும் உற்றுப் பார்த்தபடி அமர்ந் திருப்பேன். இராட்சத அக்கேசியா மரங்களுக்கப்பால் அரக்கர்கள் கூட்டம் வாழ்வதாக நான் கற்பனை செய்வேன். அவர்கள் எனது பாட்டனாரைப் போல, மிக உயரமானவர்களாகவும் ஒல்லியானவர்களாகவும் வௌ்ளைத் தாடியுடன் நீண்ட கூர்மையான மூக்கும் கொண்டவர் களாகவும் என் கற்பனையில் படமாக வருவார்கள்.” (ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்) என்னும் வரிகளாகட்டும் இக்கதைகளைக் கவித்துவத்தோடு நகர்த்திச் செல்கின்றன என்பதற்கான வெகுசில உதாரணங்களாகும். இவ்வாறான இனிய அழகிய கவிதைப் பாங்கான தமிழ் நடை யழகை இத்தொகுதி முழுவதும் நாம் கண்டு அனுபவிக்கலாம்.
எந்த ஓர் இலக்கியப் படைப்பும் அது சார்ந்த மண்ணின் மணத்தை, மக்களின் பண்பாட்டை, அதன் அழகைத் தனக்கே இயல்பான முறையில் பதிவு செய்திருக்கும். இப்பண்பாட்டுக் கூறுகளையும் அப்படியே சுவை குன்றாமல், மூலத்தின் இயல்புத்தன்மை திரிபடைந்து விடாமல் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்லுதல் என்பது கத்தி மேல் நடப்பதான மிகப்பெரும் சவாலாகும். இதனைத்தான் “மூல மொழியில் உள்ள பிரதிகள் முற்றிலும் அவ்வாறே மொழிபெயர்க்கப்பட முடியாதவை என்று கூறுவதை விட, கூடுதலாகவோ குறைவாகவோ மொழி பெயர்க்கப்படக் கூடியவை” என்று கற்ஃபோர்ட் குறிப்பிடுகின் றார். மொழிபெயர்ப்பின் போது மூலமொழியின் பண்பாட்டம் சங்கள், அப்பிரதி சொல்லவரும் செய்தி முதலானவற்றுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்குச் சற்றும் குறைவுபடாமல் இலக்கு மொழியின் வாக்கியவியல், நடையியல் அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். பேராசிரியர; எம். ஏ. நுஃமான் குறிப்பிடுவது போல, “ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழியில் சுயமாக எழுதப் பட்டது போன்ற தற்புதுமையுடன் காட்சி தர வேண்டும்.”
எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தான் தேர்ந்தெடுத்த பிரதியை மொழிபெயர்க்கும் போது மிக நுண்ணிய ஒரு சமநிலைப் போக்கைக் கடைப் பிடிப்பவராக இருக்கும் நிலையிலேயே அவரால் ஒரு நல்ல மொழி பெயர்ப்பைத் தருவது சாத்தியமாகின்றது எனலாம். அந்த இலக்கை அடைவதில் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் என்பதையே இத்தொகுதியில் அமைந்துள்ள அவருடைய மொழியாக்கச் சிறுகதைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆக மொத்தத்தில் இத்தொகுதியில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் முத்துக்கள்தாம் என்றால் மிகையன்று.
“ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அனுபவத்தினைச் சான்று பகரும் ஆய்வறிவாளரைப் போன்று எழுத்தாளருக்கும் ஒரு சிறப்பான, குறியீட்டுப் பாங்கான பாத்திரம் உண்டு. இவ்வாறு சாட்சி பகர்வதன் மூலம் அந்த அனுபவத்திற்கு ஒரு பொது அடையாளம் இடப்படு வதுடன் பூகோள ரீதியாக மேற்கொள்ளப்படும் சொல்லாடலில் அது என்றென்றும் பொறிக்கப்படும்” என்று எட்வர்ட் சயீட் குறிப் பிடுவார். அந்த வகையில், பல்வேறு நாடுகளின், அவற்றின் மக்களின் அனுபவங்களை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் மொழி பெயர்ப்பாளருக்கும் அந்தச் சிறப்பு உண்டு என்பதில் ஐயமில்லை.
எனவே, அரபுச் சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்து, அரபு நாட்டு மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புக்களை, ஆதங்கக் குமுறல்களை, சமுதாய விமர்சனங்களை, அவர்களின் அன்றாட வாழ்வியலில் இரண்டறக் கலந்துள்ள பண்பாட்டம்சங்களைத் தனக்கே உரித்தான ஆற்றொழுக்கான தமிழ்நடையில் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்துள்ள அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்த முன்முயற்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இது போன்ற மற்றும் பல படைப்புக்களை அவர் தமிழுலகுக் குத் தரவேண்டும், அதற்குரிய நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் வளங்களையும் அல்லாஹ் அவருக்கு அருள வேண்டும் என்று மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கின்றேன்.
லறீனா அப்துல் ஹக்
பீ.ஏ.(சிறப்பு), எம்.ஃபில் (ஆய்வு மாணவர்)
முன்னாள் விரிவுரையாளர்,
மொழிபெயர்ப்புக் கற்கைகள்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
3 comments:
நல்வாழ்த்துக்கள் சார் !
வாழ்த்துக்கள் சேர்!
வாழ்த்துகள்...ஆவலுடன் எதிர்பாகிறேன்
Post a Comment