Friday, August 31, 2012

சிறந்த மொழிபெயர்ப்பு


சிறந்த மொழிபெயர்ப்பிலான
“ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”

மௌலவி காத்தான்குடி பௌஸ்.


அஷ்ரஃப் சிஹாப்தீன் நவீன உலகின் சிறந்த எழுத்தாளன்.

அண்மையில் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” என்ற அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை அவர் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். அறபுக் கதைகள் என்கின்ற போது “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்”, “இளவரசன் அஹமதும் அவனது இரண்டு சகோதரிகளும்” போன்ற அறபுக் கதைகளுள் “ஆயிரத்தில் ஓர் இரவுகள்” கதை வாசகர்களை இன்பத்தில் ஆழ்த்தும் இரசனை கொண்ட கதையாகும்.

அதிகமான அறபுக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைவிட ஆங்கிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இருந்துதான் அறபுக் கதைகள் தமிழுக்குத் தலை காட்டுகின்றன. “கலீலா வதிம்னா” போன்ற கதைகள் இன்னும் மொழி பெயர்ப்புக்கு வரவில்லை. அறபியில் அப்படியே இருக்கின்றது.

அல்லாமா இக்பாலின் உர்துக் கவிதைகளை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதன் உயிரோட்டம் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவ்வளவாகக் களை கட்டவில்லை. ஆனாலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்துள்ள “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” அறபுக் கதை மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அறபே அப்படியே தமிழாக மாறியதா? என்று நினைக்கத் தூண்டுகிறது.

வெறுங் காமத்தையும் சரித்திரத்தையும் உள்ளடக்கிய கதைகளை சமூகத்துக்குத் தராமல் உணர்ச்சிபூர்வமான படைப்பாக மக்கள் எண்ணங்களை, கனவுகளை, கண்ணீரை, கவலையை, அவலங்களை, சிறை அனுபவங்களை, சித்திரவதை நெகிழ்வுகளை அஷ்ரஃப் சிஹாப்தீன் அந்த மனோ நிலையில் இருந்து மிக அற்புதமாக இந்தக் கதைகளை நகர்த்தியுள்ளார்.

புனித ரமளானில் வாய்க்கு ருசியாக பேரீத்தம் பழங்கள் கை நிறையக் கிடைத்தாலும் அவை அனைத்தும் மக்களின் நாவுக்கு ருசியாக அமைந்து விடும்.  ஆயினும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” அறிவுக்கும் மூளைக்கும் அற்புதமான வேலையைத் தந்திருந்ககிறது.

அறபுலக எழுத்தாளர்களான மஹ்மூத் சயீத், தௌபீக் அல் ஹக்கீம், தையிப் சாலிஹ், ஸகரிய்யா தாமிர், கஸ்ஸான் பாயிஸ் கனபானி, யாஸர் அப்துல் பாக்கி, ராபியா ரைஹான், ஜூக்ஹா அல் ஹாத்தி, ஒமர் அல் கித்தி போன்றவர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து மிக எளிய தமிழில் 10 கதைகளைத் தந்துள்ளார். இக்கதைகளுக்குத் தலைப்புக்களாக - விசர்நாய்க் கடி - புகையிரதம் - விற்பனைக்கான அற்புதங்கள் - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - சின்னச் சூரியன் - காஸாவிலிருந்து ஒரு கடிதம் - கறுப்புப் பூனை - சிவப்புப் புள்ளி - திருமணம் - நெடுநாள் சிறைவாசி ஆகியன அமைந்து மணம் பரப்புகின்றன.

அறபுலக இலக்கிய ஆய்வுகள் தமிழ் உலகத்துக்கு மணம் வீச இன்னும் இவர் உழைக்கட்டும்!

(தினகரன் ஆகஸ்ட் 31 - 2012 - வெள்ளிக் கிழமை)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

ரத்தினச் சுருக்கமான அறிமுகம்தான் எனினும், கனதியான வரிகள்...

ஆம், அறபுலகின் இலக்கிய மணம் தமிழ் உலகிலும் கமழ்வதற்கு பெரு மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன் தன் பணியை இனிதே தொடர நம்முடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...