Sunday, September 16, 2012

கவியரங்கக் காட்சிகள்

“விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்” நேற்றும் இன்றும்  கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒரு கண்காட்சியை நடத்தியது.

“ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக“ என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிக் கூடம், புகைப்படக் கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சி ஆகியன அமைக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

 பி.ப. 2.30 மணி முதல் 3.30 மணிவரை 
அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமையில் கவியரங்கொன்றும் இடம்பெற்றது. அக்கவியரங்கக் காட்சிகள் இதோ...

அஷ்ரஃப் சிஹாப்தீன் - தலைமைக் கவிதை
-----------------------------------------------------------

மன்னார்க் கவிஞன், மனங்களைப் படித்தவன்
தன்னார்வத்தால் தமிழ்க் கவியானவன்
பொன்னார் சொற்களில் புதுக்கவி நெய்பவன்
அன்னார்தாம் நம் அமல்ராஜ் பிரான்ஸிஸ்

வளங்குறை மக்களின் வலது கரத்தான்
உளவியல் வல்லான் உறுகவி சொல்வான்
இளங்கவி ஆயினும் இனிதே தமிழில்
அளந்து கொட்டும் ஆற்றல் கொண்டான்

எழுத்திலும் கவியிலும் இதயங்கவர்ந்தவன்
வழுத்திடும் அன்பை வழங்கிடும் நல்லான்
செழுமைச் சொல்லும் சிந்தைக்குக் கருத்தும்
சேர்ந்தே பிசைந்து சீர்கவி தருவான்

மானுடம் போற்றும் மனமெனும் தலைப்பில்
மணிமணியாகக் கவிதையை உரைப்பான்“மானிடம் போற்றும் மனம்” எனுந் தலைப்பில் கவிதை படித்த
கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸ்
--------------------------------------------------------

இனிப் பெண்பா
தருவது ஒரு வெண்பா!

இவள் ஒரு குறிஞ்சிப் பபூ
இவள் இதழ்க் கடையில்
என்றும் குறுஞ் சிரிப்பு

தளைதட்டாத தமிழ்க் கவியில்
இவள் ஒரு குறிஞ்சிப் பூ

இவள் மரபில் மலர்ந்த மலர்
இவள்தான் இருபத்தோராம் நூற்றாண்டின்
உண்மையான அவ்வை!

தொடை தளை சீர் கொண்டு
இவள்
தொடுத்திடுவாள் மாலை
படித்தவர்கள் அறிவார்கள்
அது
மயக்கும் ஆளை

ஸ்ரீமதி ஸ்ரீ
லுணுகல ஸ்ரீ

வாக்குகளான வாழ்க்கை பற்றி
வாக்களிப்பாள் 
உங்கள் மனங்குளிரப் பாக்குளிப்பாள்
“வாக்குகளாலான வாழ்க்கை” எனுந் தலைப்பில்
கவிதை படித்த கவிஞர் லுணுகல ஸ்ரீ
------------------------------------------------------------


மக்கள் நலத்தை மதிக்கத் தெரிந்தவன்
எழுது கோலால் ஏதிலி காப்பவன்
கயமைக் கெதிராய் கொதித்து எழுபவன்
கவிஞன் கடமை அதுவே என்பவன்

சிறுமை கண்டு சீறிடும் குணத்தான்
வறியவர்க்காக வாடிடும் மனத்தான்
துணிச்சல் கொண்ட தூய எழுத்தான்
துன்பம் தீர்க்க எழுத்தை எடுத்தான்

பேச்சால் எழுத்தால் பெருகிடும் கவியால்
உழைக்கும் ஊரின் உறையாய் இருப்பவன்
நாச்சியா தீவின் நல்லடையாளம்
பர்வீன் தந்திடும் பாவை ரசிப்போம்

அரசியல் என்னும் அல்லல் என்று
அளிக்கும் கவிதை தொல்லை அன்று!“அரசியல் என்றொரு அல்லல்” எனுந் தலைப்பில்
கவிதை படித்த கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்
---------------------------------------------------------------------

நேர்படப் பேசுபவன் 
நேர்மையாய்ப் பேசுபவன்
ஆர்படை வந்தாலும் அஞ்சாது உரைக்கின்ற
ஆளுமை!

வரலாற்றூடு வழிகாண விழைகின்ற
புதிய தலைமுறையின் புன்னகை!

எதிர்கால சமூகத்தின் ஏழைக் காற்று
ஆயின்
எங்கள் சமூகத்தின் மின்னற் கீற்று!

பேச்சும் தமிழ்க் கவியும் 
பேராறாயப் பொங்கும்
இவன்
பேச எழுந்தாலோ
தமிழ்ப் பேரருவி கொஞ்சும்

மர்சூம் மௌலானா 
எங்கள் 
மாநபியின் பரம்பரை
எதிர்காலப் பரம்பரையின் இனிய கலங்கரை

நீதியாலணையும் நிலம் எனும் தலைப்பு
பீதி கிளப்புவாரோ? பார்ப்போம்!“நீதியாலணையும் நிலம்” எனும் தலைப்பில்
கவிதை படித்த கவிஞர் மர்ஸூம் மௌலானா
-----------------------------------------------------------------------

மூத்த கவிஞன் மேடையேறின்
முழக்கம் நடக்கும் 
அவன்
யாத்த கவிதை கேட்டுச் சபைகள் 
மயங்கிக் கிடக்கும்

வேட்டுப் போல சொற்கள் கொண்டு
வீச்சு நடத்துவான்
கவிதை
கேட்க வந்த கூட்டம் உறைய
பாட்டு நடத்துவான்

சொற்களையே ஆயுதமாய்ச்
சுழற்றிக் காட்டுவான்
அதை
மற்போராய்க் கவிதையிலே
மாற்றிக் காட்டுவான்

கண்கலங்கக் கவிதையிலே
ஜாலங்காட்டுவான்
கவிதைக்
கண்ணாடிக்குள்ளாலே
கோலங்காட்டுவான்

நல்லரசால் நமக்கெல்லாம்
நலங்கள் இருக்குமோ
அதை
நவில வரும் ஹஸீர்கவிதை
துலங்கிக் காட்டுமோ?
“நல்லரசாலாகும் நலம்” எனுந்தலைப்பில்
கவிதை படித்த கவிஞர் ரவூப் ஹஸீர்இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: