Wednesday, September 19, 2012

கிழக்கு மாகாண சபையும் எனது கழிவறையும்


கடந்த வாரம் ரொம்பவும் “டென்ஷன் வாரம்.” 

ஒன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வந்தும் தொடர்ந்தும் இழுபறி நடந்து கொண்டிருந்தமை. அது இப்போது ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. இது பற்றிப் பின்னர் எழுதலாம். எழுதாமலும் விடலாம்.

எனக்கு நேர்ந்த அடுத்த “டென்ஷன்” எங்களது வீட்டுக் கழிவறைப் பிரச்சினை.

வீட்டைக் கட்டி அதில் வேறு யார்யாரையோவெல்லாம் வாடகைக்குக் குடி வைத்துவிட்டு நான் கொழும்பில் பத்தரை வருடங்கள் குடியிருக்க வேண்டி வந்தது. பிள்ளைகளின் பாடசாலை, போக்குவரத்துக் கருதியே இப்படி நான்கைந்து வாடகை வீடுகளில் குடியிருந்தோம். வாடகை வீடுகளில் வசிப்பதில் உள்ள சிரமங்களைப் பலர் எழுதி விட்டார்கள். தவிர, நான் எழுத வந்த விடயமும் அதுவல்ல.

பத்தரை வருடங்களுக்குப் பிறகு அண்மையில்தான் சொந்த வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வீடு திருத்தி, பொருட்களை ஏற்றியிறக்கி, 50 வீதம் வீட்டை வீடாக்கி எடுப்பதற்குள் பாதி உயிர் போய்விட்டது.

வீட்டுக்கு வந்து 5ம் நாள் எங்களது வீட்டுப் பிரதான கழிப்பறையிலிருந்து அதன் கதவு நிலையில் ஒரு கால் பகுதியூடாக நீர் கசியத் தொடங்கியது. 6ம் நாள் வீடு முழுக்க நாற்றம் பரவத் தொடங்கிற்று. வீட்டின் மேல்மாடியில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். கழிவுகள் செல்லும் பெருங் குழாயைக் கீழ் வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். எல்லாம் நன்றாக இருந்தது. நீரை வாளி வாளியாக இறைத்து நீர் கசிகிறதா என்று பார்த்தேன். இல்லை! 

வீட்டில் நாற்றம் குடலைப் பிடுங்கத் தொடங்கியதால் சாம்பிராணி, சந்தனக்குச்சி என்று புகை வேறு. 

நமது அறிவுக்கு இது புலப்படாது என்றும் குழாய் வேலைக்காரர் ஒருவரை அழைத்துக் காட்டினால்தான் புரியும் என்றும் நினைத்தேன். ஒரு நாள் இரவு குழாய் வேலைக்காரர் ஒருவரின் உதவியாளரைத் தேடிக் கண்டு பிடித்தேன். வந்து பார்த்த அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. தனது தொழில் வழங்குனரைக் காலையில் அழைத்து வருவதாகவும் அவர் கண்டு பிடித்து விடுவார் என்றும் சொல்லிச் சென்றார்.


சொன்னதைப் போலவே அவர் காலையில் வந்தார். பார்த்தார். நீரை இறைத்தார். கழிவறைச் சுவரில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று “டைல்“களை உடைக்க வேண்டி வரும் என்றார். அதே வகை “டைல்“ களை இப்போது வாங்க முடியாது என்றேன். வேறு வழியில்லை என்றார். நானும் வேறு வழியில்லாமல் “வேறு என்ன செய்வது... உடைத்துப் பார்ப்போம்” என்றேன்.

நல்ல வேளையாக அவருக்கு ஏற்கனவே பொறுப்பெடுத்த வேலையொன்று இருந்தது. நான்கு தினங்கள் கழிந்த பிறகே வரமுடியும் என்றார். வேறு வழியில்லையாதலால் ஏற்றுக் கொண்டேன். போய் விட்டார்.

அன்று மாலை, எனது மகள் ஒரு விடயத்தைச் சொன்னாள். கழிவறைக்குள் நுழைய முன்னர் கதவருகில் போடப்பட்டிருக்கும் ”பாப்பீஸ்” கால் துடைப்பானிலிருந்து இந்த நாற்றம் வருகிறதோ என்ற சந்தேகம் மகளுக்கு. அந்தக் கால்துடைப்பான் எங்களுடையது அல்ல. ஏற்கனவே வீட்டில் ஒன்றரை வருடங்கள் வாடகைக்கு இருந்தவர் விட்டுச் சென்றிருந்த பொருள். பார்ப்பதற்கு சுத்தமானதாகத்தான் தெரிந்தது. நிச்சயமான ஒன்றரை வருடமாக அதே இடத்தில்தான் அது கிடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, அப்படியே தூக்கிக் கீழே நிலத்தில் - வீட்டு முன்றலில் போட்டேன். மழை வேறு பெய்ததால் வடியும் நீர் தேங்கிய இடத்தில் அதைப் போட்டேன். அது கிடந்த இடத்தை வேறு ஈரப்புடவை கொண்டு துடைத்தெடுத்தோம்.

இரவு வீட்டில் நாற்றம் இருக்கவில்லை!

காலையில் கீழே இறங்கிய போது இலேசான நாற்றம் முகத்தில் அறைந்தது. ஆம். அதுதான். அதனைக் குப்பைப் பையில் குப்பையோடு சேர்த்துக் கட்டியாயிற்று. ஒருவாறு ஒரு பிரச்சினை தீர்ந்தது.

ஆனால் கழிவறையிலிருந்து “லீக்” ஆகும் நீர் நிற்கவில்லை. அவ்வப்போது கழிவறைக்குச் சென்று எனது பரிசோதனைகளை நடத்தினேனே தவிர, விஷயம் பிடிபடவில்லை. 

ஆகவே, நீர்க்குழாயில் எங்கோ சுவருக்குள் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் அல்லது பொருத்துக்களில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.

அடுத்த நாட்காலை என் மண்டைக்குள் ஒரு “பல்ப்“ எரிந்தது.

(மேலேயுள்ள படத்தைப் பாருங்கள். சிவப்புக் கோடு “பிடே” எனப்படும் நெகிழும் நீர்க் குழாய், பச்சை வட்டம் நீர் விழும் இடம். நிலத்துக்கும் சுவருக்குமிடையிலான ஒரு விளிம்பு அதில் உண்டு.)

நெகிழும் நீர்க்குழாயில் கசியும் நீர் துளித்துளியாக அந்த சுவர் விளிம்பில் விழுந்து கொண்டேயிருந்திருக்கிறது. அந்த இடம் ஊறி நீர் வெளியே கசிகிறது என்ற முடிவுக்கு வந்ததேன். நெகிழும் நீர்க் குழாயை நீள வாக்கில் இழுத்து வேறு பக்கம் வைத்தேன். 

சக்ஸஸ்... சக்ஸஸ்!

ஆக, பிரச்சினை தீர்ந்தது. 

குழாய் திருத்துனர் வந்த அன்றே கழிவறைச் சுவரை உடைத்திருந்தால் வேறு நிறத்தில் இரண்டு மூன்று “டைல்” களைப் பதிக்க வேண்டி வந்திருக்கும். ஒரு நாள் முழுக்க வேலை நடந்திருக்கும். சில ஆயிரம் ரூபாய்கள் கூலியாகச் செலுத்த வேண்டியிருந்திருக்கும். எல்லாவற்றையும் விட “அடடா... இநதச் சின்ன விடயம் பிடிபடாமல் போய்விட்டதே..” என்று ஏற்படும் மனக் கஷ்டம் அவ்வப்போது உறுத்திக் கொண்டேயிருந்திருக்கும்.

உங்கள் வீட்டில் இப்படி ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எனக்குச் சொல்லுங்கள். கட்டாயம் வாகனம் அனுப்ப வேண்டும். தீர்த்துத் தந்தால் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவுக்குக் குடும்பத்துடன் வருகை தருவது என்று உறுதி தரவேண்டும். முடியாது என்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

கிட்டத்தட்ட கிழக்கு மாகாண சபை அமைந்ததும் எனது கழிவறைப் பிரச்சினை தீர்ந்ததும் ஒரே மாதிரித்தான். ஆனால் அதை விபரமாகச் சொல்ல முடியாது. புரிந்து கொள்ள மட்டுமே முயற்சிக்க வேண்டும்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

Shaifa Begum said...

ஐயோ...சேர் !!!!!!! எனக்கு நீங்கள் டிக்கட் போட்டிருந்தால் ஓரிரு மணிநேரத்தில் பிரச்சினை தீர்ந்திருக்கும்.. கொல்மபஸ் அமெரிக்காவ கண்டு பிடிச்ச மாதிரியல்லோ நீங்க நீர் கசியிற இடத்ததைக் கண்டு பிடிச்சிருக்கீங்க...... என்றாலும் உங்களை நான் மெச்சுகிறேன்... விடாம . நித்திரை கூட பண்ணாம யோசிச்சு கடும் முயற்சியால் கண்டுபிடிச்சிருக்கீங்க பாருங்க .. ...உங்களுக்கு கண்டிப்பா விலைமதிப்பறற சால்வை உண்டு.......... ஹா..ஹா..

தேவமுகுந்தன் said...

இப்படி வீடுகளில் அவசியமான ஆய்வுகள் முடிபுகளை செய்து கண்டுபிடிப்பது மனத்துக்கு மகிழ்வானது.

Lareena said...

நக்கலோ நக்கல்! நம்பர் வன் நக்கல் Sir! :D

Siddeeque said...

உங்கள் ஆற்றாமையுடன் உண்ணமை கலந்து ஒரு விழிப்பூட்டும் நல்ல தொகுப்பை வாசிக்கும்போது, கிழக்கு மாகாண அரசியலை உங்கள் / எங்கள் கழிவறையுடன் ஒப்பிட்டு, ஒரு மனிதனின் அதிகமாய் சிந்திக்கும், தெளிவும், முடிவும் எடுக்கும் சிறந்த இடமான கழிவறையுடன் அரசியலை ஒப்பிட்டு அவ்வறையைக் குறைத்து மதிபிட்டிருக்க வேண்டாம் எனக் கருதுகின்றேன். சமையல் கூடம் வரை வந்த அரசியலை, எமது கழிவறைக்குள் வராமல் காப்போம்.