Thursday, October 18, 2012

கண்ணீர்க் கோடுகள்




லண்டன் செல்ஸீ பிரதேசத்தின் ஐவ்ஸ் தெருவில் அமைந்திருந்தது குவைத்தின் ‘அல் கப்பாஸ்’ பத்திரிகையின் பிராந்தியக் காரியாலயம். 

1987ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி அக்காரியாலயத்திலிருந்து வெளியே வரவிருந்த ஒருவருக்காகத் துப்பாக்கியை மறைத்துப் பிடித்தபடி தெருவில் காத்திருந்தான் ஓர் இளைஞன். 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தெருவைத் தொட்ட சில நொடிகளில் அவரது முகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. கீழே சாய்ந்த அந்த மனிதர் உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் நஜி அல் அலி.

அவரது கூடார்ந்த சித்திரங்களைப் பார்க்கும் ஆவலில் எப்போது பொழுது புலரும் என்று மத்திய கிழக்குக் காத்துக் கிடந்ததுண்டு. 



எழுத்தறிவற்ற அறபிகளின் அரசியல் ஆசிரியனாக, அடக்கு முறைக்குச் சிரம் பணியாத இளைஞர்களின் வழிகாட்டியாக, சமரசஞ் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக, அடக்குமுறையாளர்களின் கண்களில் விழுந்த ஒரு கந்தலாக, துரத்தப்பட்ட மக்களின் ஆன்மாவாகவெல்லாம் அவர் தோற்றங் கொண்டிருந்தார். 


இழந்த மண்ணுக்கான போராட்டத்தை, அதனை அழித்தொழிப்பதற்கான வஞ்சகச் சூழ்ச்சியை, அதன் மீது நடத்தப்பட்ட அரசியலை மிகச் சாதாரண மகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூடார்ந்த சித்திரத்தில் உலகத்தின் உணர்வுக்கும் வாழ் நிலத்தை இழந்தோரின் எதிர்பார்ப்புக்கும் முன்னால் பத்திரிகைகளில் பரிமாறினார். நஜி அல் அலி ‘பலஸ்தீனத்தின் மல்கம் எக்ஸ்’ என்று சொல்லும் எழுத்தாளர் ஆமினா இஷ்தாயி, பலஸ்தீனர்களின் எண்ணத் துடிப்பாக விளங்கிய அவரை ‘இன்றும் மத்திய கிழக்கு மக்களின் இதயத்தில் வாழும் பேறு பெற்றவர்’ என்று சொல்கிறார்.


‘ஹன்ஸல்லா’ என்ற ஓர் ஏழைச் சிறுவன் மூலம் உலகத்தின் ஒட்டுமொத்த மனச்சாட்சியையும் பலஸ்தீனத்தின் துயரின்பால் அவரால் திருப்ப முடிந்தது. அவரது கூடார்ந்த சித்திரத்தில் அவன் ஓர் அங்கமாக ஏன், அதன் உயிர்த்துடிப்பாக இடம் பெற்றான். 


ஹன்ஸல்லா


 ‘ஹன்ஸல்லா அழகானவனோ கெட்டவனோ சத்தூட்டமிக்க சிறுவனோ அல்லன். அகதி முகாம்களில் உள்ள அணிவதற்குச் செருப்புக் கூட இல்லாத ஆயிரக் கணக்கான  சிறார்களில் ஒருவன். நிலவும் எதிர்மறையான சூழலை நிராகரிப்பவன்’ என்று, தான் சிருஷ்டித்த அந்தப் பத்து வயதுச் சிறுவனைப் பற்றிச் சொல்லும் நஜி அல் அலி, ‘இழந்து போன எனது பிள்ளைப் பருவத்தின் அடையாளம் அவன்’ என்று விபரிக்கிறார். 

ஆனால் அவரது சித்திரங்களைப் பார்ப்போர் உலகத்தின் மனச் சாட்சியாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனாக, துயர்கொண்ட மக்களின் கண்ணீர்த் துளியாக ஹன்ஸல்லாவை அடையாளங் கொள்ள முடியும்.

1938ம் ஆண்டு பலஸ்தீனின் வடபுலத்தில் உள்ள அல் ஷாஜரா என்ற இடத்தில் பிறந்தவர; நஜி அல் அலி.  1948ம் ஆண்டு பிறந்த மண்ணை விட்டுத் துரத்தப்பட்டு லெபனானின் அகதி முகாமுக்குப் பெற்றோருடன் சென்று வாழ நேர்ந்தது. பின்னர் அல் ஜாபரியா கல்லூரியில் வரைதல் கற்பித்த நஜி அல் அலி 1961ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து ‘அல் ஷர்க்கா’ என்ற பத்திரிகையை வெளியிட்டார்.



  எழுத்தாளரும் கவிஞரும் அரசியல் செயற்பாட்டாள ருமான கஸ்ஸான் அல் கனபானி வெளியிட்ட ‘அல் ஹூர்ரிய்யா’வில் அலியின் கூடார்ந்த சித்திரம் முதன் முதலாகப் பிரசுரமானது. லெபனானின் சிறைச் சுவர்களில் அலியால் வரையப்பட்ட சித்திரங் களைப் பார்த்து அவருடன் அங்கிருந்த கனபானி அவரை ஊக்குவித்ததாக அலி நன்றியுடன் ஞாபகிக்கிறார். (கனபானி 1971ல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்) 

நஜி அல் அலி 1963ல் குவைத்தின் ‘அல் தாலி’ பத்திரிகை யிலும் 1968ல் ‘அல் சியாஸா’ பத்திரிகையிலும் 1974ல்  லெபனானின் ‘அல் ஸாபிர்’ பத்திரிகையிலும் பணிபுரிந்தார். 1982ல் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னர் 1983ல் மீண்டும் குவைத் சென்று ‘அல் கப்பாஸ்’ பத்திரிகையில் இணைந்தார். அங்கு தனது உயிருக்கு உத்தரவாதமற்ற சூழலினால் அப்பத்திரிகையின் சர்வதேச வெளியீட்டில் பணிபுரிய லண்டன் சென்றார். 



“நான் ‘அல் ஸாபிர்’ பத்திரிகை யில் பணி புரிந்தபோது படையினரின் சுற்றி வளைப்பு, இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைப் பேனாவுடனும் தூரிகையுடனும் எதிர் கொண்டேன். நான் பயப்படவுமில்லை’ சரணடையவுமில்லை” என்று சொல்கிறார் நஜி அல் அலி. 

சில காலங்களுக்கு முன்னர; அமெரிக்காவில் வாழும் இணைய எழுத்தாளரான பலஸ்தீனப் பெண்மணி ஒருவருடன் இணையத்தில் உரையாடிக் கொண்டிருந்த போது நஜி அல் அலி பற்றி விசாரித்தேன். அவரை நான் அறிந்திருப்பதையிட்டு அப்பெண் கொண்ட ஆச்சரியத்தை கணனியே தாங்காத டெரா பைட்களாக உணர்ந்தேன். இது என்ன  ஆச்சரியம் - நஜி அல் அலியின் சித்திரங்களுக்கு எனது நாட்டில் ஒரு கவிஞர் கவிதைகள் படைத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார் என்று சொன்ன போது அவர் கொண்ட ஆச்சரியமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதவை. நஜி அல் அலியை இங்கு தமிழில் அறிமுகப் படுத்தியவர் நண்பர; கலைவாதி கலீல். எண்பதுகளின் பிற்பகுதியில் வெளிவந்த ‘பாமிஸ்’ மாசிகையில் அலியின் சித்திரங்களுக்கு அவர் படைத்த கவிதைகளைத் தொகுத்து 1999ம் ஆண்டு 68 பக்கக் கையடக்கக் கவிதை நூலாக வெளியிட்டார்.


துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர்  கோமா நிலையில் இருந்த நஜி அல் அலி 29.08.1987 அன்று காலமானதும்  லண்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள புறூக்வூட் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார். 


பலஸ்தீனப் பெண் கவி பத்வா துகானின் கவிதைகளைப் படித்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மோஷே தயான் இது இருபது கமாண்டோக்களுக்கு சமமானது என்று ஒரு முறை தெரிவித்தாராம். நஜி அல் அலியின் சித்திரங்கள் அதனை விடவும் தாக்கமானவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். 

18.11.2007
(தீர்க்க வர்ணம் என்ற பத்தித் தொகுப்பு நூலிலிருந்து)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

வாசித்து முடித்தபோது, கண்ணீர்க் கோடுகள் கன்னத்தில் மட்டுமல்ல, உள்ளத்தின் சுவரிலும் பதியக்கூடும் என்பதை உணர்ந்தேன்.

புகழ்பெற்ற/ நம்மால் மறக்கப்பட்டுவரும் ஓர் ஆளுமை குறித்த நினைவுகளைத் தூண்டிவிட்ட உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.