Monday, October 22, 2012

மலஜலமானி!


இனிமேல் கிணறு தோண்டினால் வரி  செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி
சில தினங்களுக்கு முன்னர்  வெளியாகியிருந்தது.

செய்தியின்படி கிணற்று வரி 7500.00  முதல் 15,000.00 ரூபாய்கள் வரை  நீளும்.

இது அமுலுக்கு வந்து விட்டால் வருடாந்த  வரவு செலவுத்திட்டத்தின் போது ஆயிரம்,  இரண்டாயிரம் என்று கால ஓட்டத்தில்  அதிகரித்துச் செல்லும் சாத்தியம் உண்டு.

செய்தி வெளிவந்து இரண்டு தினங்களின்  பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட இந்தத் தீர்மானத்தை அமைச்சு எதிர்க்கிறது என்று  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சர் தினேஷ் குணவர்தன  தெரிவித்துள்ளார்.

அமைச்சரை விட அதிகாரிகள் அதிகாரம்  பெற்றிருக்கிறார்கள், தன்னிச்சையாகத்  தீர்மானம் எடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளுக்கு  ஏசி ஏசிப் பழக்கப்பட்டுப்போன நமது
ஜனங்கள் இதற்கும்  அரசியல்வாதிகளைத்தான் நொந்து  கொள்வார்கள். அதில் ஐம்பது வீதம்தான்  நியாயம் உள்ளது. மீதி ஐம்பது வீதமும்  அதிகாரிகள் மீது உள்ளது. ஆனால் அதிகாரிகள் பற்றி மக்கள் அலட்டிக்  கொள்வதில்லை. காரணம் அவர்கள்  வாக்குக் கேட்டு மக்கள் காலடிக்கு  வருவதில்லை.

நாடு சீரழிந்து போவதற்கும் அரசியல்வாதிகளே முழுக் காரணம் என்பதுதான் ஸ்ரீமான் பொது ஜனத்தின்  தீர்மானம். கண்ணுக்குப் புலப்படாமல் கதிரையில் அமர்ந்திருந்து காய் நகர்த்தும் அரச அதிகாரிகள் பற்றி அவர்கள் கண்டு
கொள்வதில்லை.

அரசியல்வாதி கொஞ்சக் காலம்  அதிகாரத்தில் இருக்கிறார், அப்புறம்  அட்ரஸ் இல்லாமலே போய் விடுகிறார். ஆனால் அதிகாரி, அரசாங்கப் பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில் வாழ்த்து கொண்டு அதே மக்களுக்கே ஆப்பு  வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மேற்படி கிணற்று வரி பற்றிய செய்தி  நமக்கு உணர்த்துகிறது.

ஏறக்குறைய 20க்கும் 30க்கும் இடைப்பட்ட  காலம் அரச அதிகாரத்தில் ஓர் அதிகாரி செயல்படுகிறார். எந்த அரசியல்வாதி அமைச்சுக் கதிரைக்கு வந்தாலும் இவர்களே விதிமுறைகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழி நடாத்திச் செல்பவர்கள். எனவே ஒரு நாடு வில்லங்கத்தில் இருக்கிறது என்றால் அதில் 50 வீத பங்கு அரச அதிகாரிகளே பொறுப்பு. அவர்களில் திட்டமிடல் குறைபாடு, ஆளுமையற்ற தன்மை, பிழையான கருதுகோள்கள்
என்பவற்றால்தான் ஒரு நாடு நாசமாய்ப் போகிறது என்பதுதான் உண்மை.

போய்த் தொலையட்டும்!

எனது முப்பாட்டன் வழியாக, பாட்டன் வழியாக, தந்தை வழியாக வந்த சொந்த
நிலத்தில் எனக்கும் எனது மனைவி, மக்களுக்கும் குடிக்கவும், குளிக்கவும் நீர்
பெறுவதற்குக் கிணறு வெட்டுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதற்கையா வரி செலுத்த வேண்டும்?

நீர் காணி தந்தீரா? சேவையர் போட்டு  அளந்தீரா? மண் வெட்டி கொண்டு குழி
வெட்டித் தந்தீரா? மண் சுமந்தீரா? சீமெந்தும் கல்லும் கொண்டு கிணற்றுச்
சுவர் எழுப்பினீரா? துலாக்கால் போட்டு நீர் இறைத்துத் தருவீரா? என்று மனோகரா படப் பாணியில் ஆவேசமாகக் கேட்க வேண்டும்  போல் உங்களுக்குத் தோன்றவில்லையா?நமது காணியில் இறைவன் தந்த நீரைப் பெறுவதற்கு வரி செலுத்தக் கோருவதற்கு வடிகாலமைப்புச் சபைக்கு என்ன உரிமை உண்டு என்று யாராவது  சிந்தித்தீர்களா?

இது பற்றிப் பத்திரிகைகளில் என்ன  கருத்துக்கள் வெளிவந்தன என்று எனக்குத் தெரியாது. (எத்தனை பத்திரிகைகளைத்தான் படிப்பது?) எனது
ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறேன்.

இப்படியே போனால் என்ன ஆகும் என்று  நினைக்கிறீர்கள்?

இன்னும் சில காலம் போகும் பட்சத்தில் எல்லா வீட்டுக் கழிவறையிலும் இரண்டு அளவீட்டு மானிகளை வடிகாலமைப்பு சபை பொருத்த இடமுண்டு.

மூத்திரம் பெய்வதற்கு ஒன்று. கக்கா நிறுப்பதற்கு மற்றொன்று.

குறிப்பிட்ட மானியில் உள்ள கோப்பையில் மட்டுமே மூத்திரம் பெய்ய வேண்டும் என்றும்  கழிப்பறையில் பொருத்தப்பட்டுள்ள கோப்பையில்தான் “கக்கா” இருக்க வேண்டும் என்றும் சட்டம் வரலாம்.

மாதம் முடிய மின்சாரக் கட்டணப் பட்டியல் போல் குழாய் நீர்க் கட்டணப்
பட்டியல் போல் தொலைபேசிக் கட்டணப் பட்டியல்போல் மூத்திரத்துக்கு ஒரு
கட்டணப் பட்டியலும் கக்காவுக்கு ஒரு கட்டணப் பட்டியலும் வரும்.

குழாய் நீருக்கு யுனிற் கணக்குக்கு வரி அறவிடுவது போல மூத்திரத்துக்கு மாதம் முதல் 20 லிற்றர் மூத்திரம் பெய்தால் 250 ரூபாய் என்றும் 20 லீற்றருக்கு அதிகம் பெய்யும் ஒவ்வொரு லீற்றருக்கும் 10 ரூபாயும் அறவிடப்படும் அபாயம் உண்டு.

அதே போல ஒரு வீட்டில் சராசரி கக்காவின் நிறை 50 கிலோ இருந்தால்
300 ரூபாயும் மேலதிக ஒவ்வொரு கிலோவுக்கும் 20 ரூபாயும் அறவிடப்படக்
கூடும்.

(ஒரு வீட்டுக்குரிய சராசரி மூத்திரக் கணக்கு கக்கா நிறை பற்றி  முழுக்கை ஷேர்ட், டை அணிந்த தகுதிநிலைப் படிப்பாளிகள் ஏசி அறையில் இருந்து ஆய்வு செய்து சரியாகத் தீர்மானிப்பார்கள்.)

இதுக்கு அப்பால் மானிகள் பொருத்துவதற்கு வேறு பணம் கட்ட வேண்டும்.

இது போக ஒவ்வொரு பட்ஜட்டிலும் மல சல வரி அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலை வந்து விடலாம்.

அவசரத்தில் காற்சட்டைக்குள் கக்கா விடுபவர்களுக்கு வரி நிவாரணம் கிடைக்கக்கூடும்.

பயணத்தில் எங்காவது அவசரத்தில் மல, ஜலம் கழிப்பது என்றாலும் கூட மானி வாசிப்புப் பார்த்துக் காசு கொடுக்க வேண்டி வரும். தெரியாத ஒரு வீட்டில் குடிப்பதற்கு நீர் தருவார்களே தவிர, அவசரத்துக்கு “வெளி”க்குப் போவதற்கு அனுமதிக்க விருப்பம் காட்டமாட்டார்கள்.

நெடும்பயணஞ் செய்வோர் சாப்பாட்டுக் கடைகளில் கழிவறைக்குச் சென்றால் தனி “பில்” கட்ட வேண்டி வரும்.

இனி வடிகாலமைப்பு சபையில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். மலமானி
வாசிப்பாளர், சலமானி வாசிப்பாளர், பட்டியலிடுவோர் என்று ஒரு டிப்பார்ட்மன்ட் இயங்கத் தொடங்கும்.

எத்தனை கிலோ மிளகாயை தலையில் அரைத்தாலும் தாங்கிக் கொண்டு
பேசாமடந்தையாக இருக்கும் நமது ஜனங்கள் ரொம்ப நல்லவர்கள்!

இதனால்தானே நாம் ஆசியாவில் அதிசயமானவர்களாக இருக்கிறோம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

சரியான நெத்தியடிதான் போங்க!

ஆனாலும் இலங்கைவாழ் பொதுமக்கள் அநியாயத்துக்குப் பொறுமைசாலிகளாய் இருக்காங்க, Sir. :(

ASHROFF SHIHABDEEN said...

Face book comments:

Alashar Nijamdeen Uncle இது உங்களது மனக்குமுறல் மட்டுமல்ல பொது மக்களின் உள்ளக்குமுரலாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது கதையின் ஓட்டத்தில் நகைச்சுவை நிறையவே தெளிக்கப்பட்டுள்ளது
October 22 at 6:17am

Mohamed Shifan என்ன ஸார் இது..?! தலைப்பைப் பார்த்ததும் ஏதோ கவிதை வரி பற்றிப் பேசப்போகிறீர்கள் என நினைத்தேன். இது கக்கா வரியாயிருக்கே. இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் குமுறிக்கொண்டு பேசாமடந்தைகளாய்த் திரிவோரில் நானும் ஒருவன். என்ன பண்ண ஆண்டவன்தான் நீதி தீர்க்கனும்.
October 22 at 7:22am ·

Mohammed Faheer அரசாங்க உத்தியோகஸ்தர்கள் - கடமையில் துஸ்பிரயோகம், அரசியல் தலமைகள் - அதிகாரத்தில் கபளீகரம்,
சமூகம் - வாக்குரிமையில் காட்டப்பட்ட பிழையான தேர்வு,
அதனால் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அவ்வாறு..
ஆகையால் கடந்த காலத்தின் களநிலவரம் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழலாம் என்ற கவலை அஸ்ரப் சிகாப்தின் சேருடைய கூற்றாகவுள்ளது.
Tuesday at 1:04am