Friday, November 2, 2012

நான் உன்னைத் தேடுகிறேன்!மின்னஞ்சலில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முஸ்லிம் இளைஞர் படை நீண்ட காலமாக இயங்கி வருகிறது.

அநேகமாகவும் தங்களது கருத்துக்களை, மன உணர்வுகளை இவர்கள் முழு நீளக் கட்டுரைகளாக எழுதுவார்கள். பெரும்பாலும் இந்த ஆக்கங்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெறுகின்றன.கட்டுரைகள் மட்டுமல்ல, சகோதரா என்று விளித்து அவை கடிதங்களாகவும் எழுதப்பட்டிருக்கும்.

தமிழில் வந்து சேரும் மற்றும் எழுதப்படும் தளங்களில் கட்டுரைகளை முழுமையாகப் படிப்பதற்கே சிரமப்படுபவன் நான். இதற்கிடையில் எனது எழுத்து, சிலரது கோரிக்கைக்கான எழுத்து- என்று எனக்கு வேறு சிக்கல்களும் உண்டு.

எனக்கு மின்னஞ்சலில் வரும் இவ்வாறான முழு நீளக் கட்டுரைகள் பல முறை எனது கோபத்தைக் கிளறியிருக்கின்றன. காரணம் ஓர் அற்ப விடயத்துக்கு அங்கங்கள் வைத்து அவை சோடிக்கப்பட்டிருப்பதுதான்.

அதே வேளை சில கடிதங்கள், கட்டுரைகள் பேசும் விடயங்கள் சகலரையும் சென்றடைய வேண்டிய தகவல்களைக் கொண்டு பெறுமதிவாய்ந்த வையாகவும் அமைந்து விடுகின்றன.

இக்கடிதங்களும் கட்டுரைகளும் சமூகாபிமானம் கொண்ட இளைஞர்களால் சமூக நன்னோக்கோடு எழுதப்படுகின்றன என்பது முக்கியமான விடயம்.

மிக அண்மையில் சலாஹ்தீன் என்ற சகோதரர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

“பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சில குழுக்கள் பெருமளவில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பெரும் திடடமிடலோடு அவர்கள் இயங்கி வருகிறார்கள். இந்தக் குழுவினரின் வேகமான, மோசமான பிரச்சாரத்தால் நல்ல உள்ளம் கொண்ட சிங்களச் சகோதரர்களை நாம் இழந்து வருகிறோம்.

முஸ்லிம்களுக்கெதிரான பார்வையை, மனோ நிலையைச் சிங்கள மக்களின் மனங்களில் விதைப்பது இவர்களது நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆக்ரமித்து வருகிறார்கள்... அதற்காகன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. 1. ஜெய்லானி 2. தெவனகல 3.முகுது மகா விகாரை (பொத்துவில்) 4.Maha Mewnawa - ஆகிய இடங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து சமூக நிறுவனங்களும் முஸ்லிம் தலைவர்களும் உடனடிக் கவனம் செலுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையில் சிங்கள மக்கள் நட்பார்ந்தவர்கள். அமைதியை விரும்புபவர்கள்.இன ஐக்கியம் எப்போதும் சாத்தியமானது”

இதுதான் அந்தச் சகோதரரின் கடிதம்.

இனரீதியான இன்னொரு பிரச்சினை இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது, முஸ்லிம் சிங்கள இனப் பிளவுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தக் கடிதத்தை அவர் எழுதித் தன்னால் அனுப்ப முடிந்தவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அநேகமாகவும் அவரால் முடிந்த பங்களிப்பு அதுதான். அதைச் செய்து முடித்திருக்கிறார். சில வேளை இன்னும் சிலர் அவருடன் இணைந்தால் செயற்பாட்டில் இறங்க அவர் தயாராக இருப்பார். ஆனால்...முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ஏதோ ஒரு இயக்கத்துடன் அமைப்புடன் இணைந்திருக்கிறார்கள். இயக்கச் செயற்பாட்டைத் தாண்டி இவ்வாறான ஒரு சகோதரருடன் அவர்கள் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? என்பது முக்கியமான கேள்வி.

சமூகாபிமானச் செயற்பாடு என்ற பெயரில் தமக்கான எதிர்கால அரசியல் அபிலாஷைகளோடு இயங்குபவர்களையும் நாம் அவதானித்து வந்திருக்கிறோம், அவதானித்து வருகிறோம். தாம் இல்லையென்றால் இந்த சமூதாயமே இல்லை என்ற எண்ணத்துடன் சகலவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து எதையும் செயற்படுத்த விடாமல் குழப்பி வந்தவர்களும் இருக்கிறார்கள்.

அதே போலவே அரசியல் கட்சிகளில் இருப்போரும். அவர் வருவதென்றால் இவர் வரமாட்டார். இவர் வருவதென்றால் அவர் வரமாட்டார்.

பெரும்பாலும் ஒரு குழுவினர் செய்யும் சமூகச் செயற்பாட்டை விமர்சித்தபடி மறுகுழுவினர் காலங்கழித்து வருகிறார்கனே தவிர,

இயக்க நலன்களுக்கப்பால், அரசியல் பாகுபாடுகளுக்கப்பால், தனிநபர் எதிர்பார்ப்புகளுக்கப்பால் - இயங்குவதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பது இன்னொரு கேள்வி.

எல்லாவற்றையும் கடந்து சமூக நலனே முக்கியம் என்று இயங்க நினைப்பவர்களை ஒன்றிணைப்பது எப்படி? அப்படி இணைவதற்கான ஒரு வழிமுறையை யாராவது அடையாளங் காணுங்கள். அதற்குரிய சாத்தியப்பாடுகளைத் தெரிவியுங்கள். ஒன்றிணையுங்கள். (இவர்களில் ஒரு பிரிவினர் சிங்கள மொழியிலும் மற்றொரு பிரிவினர் ஆங்கில மொழியிலும் இன்னொரு பிரிவினர் தமிழ் மொழியிலும் தங்களது தொடர்புகளை மேற்கொள்பவர்கள்.)

அவ்வாறான ஒரு குழுவினருடன் சேர்ந்தியங்க நான் பேராவலுடன் இருக்கிறேன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

பேசப்பட வேண்டிய ஓர் அடிப்படையான விடயத்தை இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.

உண்மையில், பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், மற்ற சமூகங்களில் இருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலியை எழுப்பிக்கொண்டு வாழாமல், பரஸ்பர புரிதலோடு, சமூகங்களின் நலன், நாட்டின் நலன் குறித்த பொறுப்புணர்வோடு பங்களிப்பு சமூகமாக மாற முற்பட வேண்டும்.

ஒரு முஸ்லிம் ஏதாவது ஓர் இஸ்லாமிய/ அரசியல் இயக்கத்தின் அங்கத்தவராய் இருப்பது அவரது விருப்பார்வம் சார்ந்த விடயம். ஆனால், அது அவரது பணிகளைக் குறுக்கிவிடத் தேவை இல்லை.

பெரிய அளவில் என்று இல்லாவிட்டாலும் கூட, தமது சுற்றுவட்டாரத்திலாவது மற்ற சமூகத்தவரையும் இணைத்துக்கொண்டு செய்யும் பணிகள் எவ்வளவோ உள்ளன. உதாரணமாக, டெங்கு ஒழிப்புக்காய், ஊரில் எல்லோரும் ஒன்றிணைந்து சிரமதான அடிப்படையில் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்கலாம். ஊர் முன்னேற்றம் என்ற அடிப்படையில் மாதமொருமுறை ஒன்றுகூடி ஊர்ப் பிரச்சினைகளைக் கலந்துரையாடலாம். ரமழானின்போது, ஊரில் உள்ள மற்ற சமூகத்தில் உள்ள வறியவர்களுக்கும் சேர்த்தே உதவிகள், சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இப்படி எத்தனையோ இருக்கும். நான், என்னைச் சுற்றியுள்ள சூழலை வைத்து சில கருத்துக்களைச் சொல்லியுள்ளேன். இடத்துக்கிடம் முன்னுரிமை அளிக்கத்தக்க தேவைகள் மாறக்கூடும்.

அடுத்து, நம்முடைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் இறக்குமதிச் செய்திகளை, அரசியல் சித்தாந்தங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நாட்டு மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்து அதிகமாய்ப் பேசவும், மக்களை விழிப்புணர்வூட்டவும் முன்வர வேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எகிப்தின் அரசியலையும் பாகிஸ்தானின் அரசியலையும் பேசிக்கொண்டு இருக்க? கொஞ்சம் இறங்கி, பக்கத்தில் இருக்கும் மக்களின் அன்றாட சமூக, வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி இனியாவது கொஞ்சம் அதிகமாய்க் கரிசனை கொள்வது நல்லதல்லவா?

என்னமோ சேர், எத்தனையோ காலம் மனதுக்குள் புகைந்துகொண்டிருந்த எண்ணங்களை உங்கள் வரிகள் ஆழமாய்க் கிளறிவிட்டன. அதற்கு ஜஸாக்கல்லாஹு கைரன்.