Monday, November 19, 2012

சினிமாப் பயங்கரவாதிகள்முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் “துப்பாக்கி” என்ற சினிமாப் படம் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்து விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இணையத் தளங்களிலும் முகநூலிலும் அதன் அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயிருப்பது அத்திரைப்படம் முஸ்லிம்களை மட்டுமல்லாது நேர் நின்று சிந்திக்கும் முஸ்லிமல்லாத பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் குட்டுபவனும் முட்டாள் என்பது இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை நானும் ஒரு பொதுமகன் என்ற அடிப்படையில் எனது பார்வையில் பட்ட படங்களில் விஜயகாந்த், கமல்ஹாஸன், அர்ஜூன் போன்றவர்களின் திரைப்படங்களில்தான் முஸ்லிம்களை தேசத் துரோகிகளாக, வில்லன்களாகச் சித்தரிப்பது நடந்து வந்திருக்கிறது. (ஹிந்திப் படங்களிலும் இந்நிலை உள்ளதாகச் சொல்லுகிறார்கள். எப்போதாவது நல்ல படங்களை யாராவது சொன்னால் பார்ப்பதுண்டு.)

இவர்களில் விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் தமது கதாநாயக அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கு படத்தில் யாரையாவது அடித்தே ஆக வேண்டியிருக்கிறது.அதைத்தவிர வேறு திறமைகளும் அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு யாருக்காவது அடிப்பது மாதிரிக் கதை இல்லையென்றால் அவர்களால் ஜொலிக்க முடியாது.எனவே சும்மா ஒருவனை அடிப்பதை விட தேசத்துரோகியை அடிப்பது கவர்ச்சியான இருக்கும். அந்தத் தேசத் துரோகி ஒரு முஸ்லிமாக இருந்தால் இன்னும் சாதகமாக இருக்கும். எனவேதான் தேசத் துரோகிகள் யாவருமே முஸ்லிம்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். காற்றில் கைகால் விசுக்குவதைத் தவிர வேறு எதுவுமே இல்லாத அல்லத எதுவுமே தெரியாத கதாநாயகர்கள் வரிசையில் விஜய் என்ற நபரும் சேர்கிறார்.

பிரிவினைக்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட பாக்கிஸ்தான் வெறுப்பு, தன்னோடு சக சகோதரனாக அயல் வீட்டில் வாழும் ஒரு முஸ்லிமையும் எதிரியாகப் பார்க்கப் பழக்கியிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அரசியலும் பாக்கிஸ்தான் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டு ஒட்டுமொத்த ஏழை இந்தியனின் - முஸ்லிமல்லாதர்களினதும் உட்பட - சோற்றுப்பானையைக் களவாடிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியலின் இன்னொரு வடிவம்தான் இப்படியான சினிமாக்கள். அரிவாள், துப்பாக்கிகளுடன் தேசத் துரோகியைச் சுட்டும் வெட்டியும் துவம் செய்து விட்டுத் தாங்கள் கல்லாக் கட்டுவது. அதாவது ஆளும் வர்க்கம் எதை வைத்துத் தனது பிழைப்பை நடத்துகிறதோ அதே விசயத்தை மற்றொரு வடிவில் சினிமாக்காரர் செய்து கொண்டிருக்கிறார்கள். சக இனத்தானை அகெரவப்படுத்திக் கேவலப்படுத்தி விட்டு அப்படிக் கிடைக்கும் பணத்தில் ரோல் ரோய்ஸ் மற்றும் பென்ஸ் கார்களில் பவனி வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் உலகத்திலேயே அற்புதமான படைப்பைத் தந்து விட்டது போல பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கதாநாயகர்களது அடுத்த கட்ட நகர்வு எது? அதே பாதையில் முன்னேறி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் தானைத் தலைவர்களாக பணம், அதிகாரம் ஆகியவற்றுடனும் கைச்சொடுக்கில் எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடிக்கிறார்கள்.

இப்போது யோசித்துப் பாருங்கள். சக அயல் வீட்டு முஸ்லிமை அவமானப்படுத்தி விட்டு இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வது கேவலமானது இல்லையா? ஒரு சமூகத்தைக் கூனிக் குறுகச் செய்து, வஞ்சகம் இழைத்துப் பெறும் பணத்தில்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள், இவர்களது குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள், தமது மனைவியருக்கு ஆடைகள், உடுதுணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமது சுகபோக வாழ்வை மேற்கொள்கிறார்கள்.இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்த கூட்டமொன்றில் உலக வரைபடத்திலிருந்து இலங்கையை அழித்து விடுவதாகச் சூழுரைத்தவர் விஜய். அந்தக் கூட்டத்தில் தனது சினிமாப்பாட்டு வரிகளை (நான் அடிச்சாத் தாங்க மாட்டே... நாலு மாசம் தூங்கமாட்டே) படித்துக் காட்டித் தனது வீராவேசத்தை வெளிப்படுத்தியவர். இந்தப் பேச்சு கீழ் வரும் இணைப்பில் இருக்கிறது.பார்த்து விட்டுத் தொடர்வது பொருத்தமாக இருக்கும்.

http://www.youtube.com/watch?v=pirNKF0A72E&feature=related

இந்த இணைப்பை முழுவதுமாக நீங்கள் பார்த்தீர்களானால் அவர் தமிழர்களுக்காகப் பேச வந்தாரா அல்லது தனது படங்களை விளம்பரப்படுத்த வந்தாரா என்று ஓர் ஐயம் வரும். மீனவர் பிரச்சினை பேச வந்து தனது அடுத்த படத்தில் குத்தாட்டம் பாடல் இடம் பெறும் என்று சொல்லும் அவரின் மக்கள் நலன் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். இதற்குத்தான் எரிகிற வீட்டில் பிடுங்கும் லாபம் என்று சொல்வது.

மீனவர் பிர்சசினைக்காக ஒரு தேசத்தையே வரைபடத்திலிருந்து அழித்து விடுவதாகச் சூழுரைக்கும் இந்த அதிமேதாவியின் படங்களை அப்போதே இலங்கையில் திரையிடுவதற்குத் தடை விதித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவரது கொழுப்புச் சறறு அடங்கியிருக்கும்.தனது ரசிகர் மன்றங்களை மாற்றியமைத்து எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அறிகிறோம். அவர் அரசியலுக்கு வந்து இலங்கையை அழித்து விட்டால் இலங்கை வம்சாவழியான அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கத்தின் இலங்கை உறவுகளும் சேர்ந்துதான் அழிந்து போவார்கள் என்பதால் அவர் கொஞ்சம் கருணை காட்டவேண்டியிருக்கும்.

துப்பாக்கி படம் ஏற்படுத்திய சர்ச்சையில் முஸ்லிம்கள் சார்பாகப் பேசவந்தவர்களோடு கலந்துரையாட விஜய் வரவில்லை. அவர் சார்பாக, அவரது நலன்களைக் கவனிக்கும் அவரது தந்தையார்தான் கலந்து கொண்டார். உண்மையில் விஜய் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவித்திருக்கவில்லை என்பதை நாம் அவதானிக்கவும் குறித்துக் கொள்ளவும் வேண்டும். இதுக்கெல்லாம் நான் பணியமாட்டேன் என்றோ நானெல்லாம் எங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றோதான் இதனை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இவர் நடிக்கும் படத்துக்கான கதையைக் கேட்பது, பணக் கொடுக்கல் வாங்கல்களைக் கவனிப்பது முதற்கொண்டு மகனுக்கு ஏற்ற நடிகையைத் தேர்ந்து எடுப்பது வரை எல்லாவற்றையும் தந்தையாரேதான் செய்கிறார் என்றால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் படத்தில் நடித்திருப்பதும் ஒரு சமூகத்தை அவமானப்படுத்தியிருப்பதும் விஜய்தான் என்பதால் அவருக்கு ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவர் நடித்த ஆரம்பப் படங்களில் ஒன்று பற்றிய காரசாரமான விமர்சனம் பிரபலமான வாரப் பத்திரிகையொன்றில் வந்த போது அவரும் அவரது தகப்பனாரும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்ல. கடைசியில் அந்தச் சஞ்சிகை மன்னி்ப்புக் கோரி எழுதியதை நான் படித்திருக்கிறேன்.தனது ஆரம்ப காலப் படத்தை விமர்சித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் தன்னால் ஒரு சமூகம் அவமானப்படுத்தப்படுவதையிட்டு எதுவும் தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்றொரு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. நடிகர் சந்தானம் உட்பட சில நகைச்சுவை நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளிவரும் சினிமாப்படங்களின் கதைகளை வைத்துக் கிண்டல் பாணியில் நடித்து வந்தார்கள். ரசிகர்களால் நகைச்சுவை என்று மட்டுமே ரசிக்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மிகப் பெரும் நடிகர்களின் படங்களைக் கூட கிண்டல் செய்வதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இதை எல்லா நடிகர்களுமே ஒரு நல்ல பொழுது போக்காக, நகைச்சுவையாக மட்டுமே ஏற்றுக் கொண்டு பேசாதிருந்தார்கள். அல்லது ரசித்தார்கள். ஆனால் விஜயின் படமொன்றை அந்நிகழ்ச்சியில் கிண்டல் செய்தார்கள் என்பதற்காக அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதை இணையத் தளங்களின் மூலம் தெரிய வந்த போது எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை, தனது படமொன்றைக் கிண்டல் செய்வதே விஜய் அகராதியில் பிழை என்றால் ஒரு சமூகத்தையே ஒட்டு மொத்தமாக பயங்கரவாதிகள் என்று தான் அவமானப்படுத்தியது பிழை என்பது அவருக்குப் புரியாமல் போனது ஏன்?

தான் வானத்திலிருந்து குதித்தவர் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? ஆகக்குறைந்தது படத்தில் கையைக் காலை விசுக்குவதையும் அரிவாள் சுறறுவதையும் டம்மித் துப்பாக்கி நீட்டுவதையும் தவிர அவரிடம் உலகத்தில் வேறுயாரிடமும் இல்லாத அதியற்புதத் திறமைகள் ஏதும் உண்டா?
அல்லது இவற்றை அவரைத் தவிர சினிமாவில் வேறு யாருக்கும் செய்ய முடியாதா? இல்லையென்றால் ஏன் அவர் இன்னொரு சமூகத்தை அவமானப்படுத்தும் படி நடித்த படம் குறித்து மன்னிப்புக் கோரவில்லை.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்ததையும் அதில் பத்திரிகையாளர்களைப் பார்த்து “டேய்.......!”என்று உறுமுவதையும் பார்த்த போது சினிமாத் துறையில் இவரை விடப் பெரிய பயங்கரவாதி யாரும் இருக்கமாட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=2y_U7415p_I

மேற்குறித்த இணைப்பில் ஊடகவியலாளர்களை அவர் எவ்வாறு உருட்டி மிரட்டுகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

சினிமாவில் கதாநாயகனாக வந்து போகும் இவர் இப்போதே பத்திரிகையாளர்களை இப்படி அதட்டுகிறார் என்றால் தமிழ்நாட்டின் அரசியல் தலைவிதியாக வந்து விட்டால் என்ன நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

இவ்வாறு இனவெறுப்பைக் காட்டி முஸ்லிம் சமூகத்தைத் திரையில் அவமானப்படுத்துவதாலும் அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதாலும் எதிர்கால சமூகம் அதை எப்படிப் பார்க்கும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தருகிறேன்.
------------------------------

Muralikannan Rengarajan
நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம் 

“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.

படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. 

இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.

சரி ஒரு வாதத்துக்காக ஆக்‌ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.

ஆக்‌ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன் அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.

இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.

அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.

எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல

இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.

நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.

தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்‌ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான். அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?

படத்தில் டைட்டிலுக்கு முன் ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!

சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும்.

படம் நல்ல லாஜிக்கோடு இருக்கிறது என்று வேறு சொன்னார்கள். பல இடங்களில் ஓட்டை இருக்கிறது.


------------------------------------

மேற்குறித்த தகவல் முகநூலில் இடம்பெற்றிருந்தது. இதைப் பதிவிட்டிருந்தவர் ஒரு முஸ்லிம் அல்லர். இப்போது அந்தச் சிறுவனின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய மோசமான பதிவை ஏற்படுத்தியதற்கு யார் பொறுப்பு? முருகதாஸ் முதற்கொண்டு விஜய் வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இப்போது - நான் இதுவரை சொன்ன தகவல்களை ஒன்று திரட்டிப் பார்த்தால் மக்கள் விரோச் செயற்பாட்டில் ஈடுபடுவது யார் என்பதும் பயங்கரவாதி யார் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

சமூகத்துக்காக எழுதுகிறோம் என்று பக்கம் பக்கமாப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. சினிமாக்காரனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தமக்கு நெருக்கமான கட்சி சார்ந்த ஒருவருக்கு ஏதாவதென்றால் வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடிவரும் தமிழகத்தின் இந்த அதி உன்னத மனிதர்கள் எல்லோரும் எங்கேயிருக்கிறார்கள் என்று நான் தேடுகிறென்.

விஜய்க்கு எதிராக, சினிமாக்காரனுக்கு எதிராக முச்சு வி்ட்டால் கூடத் தமக்கு ஆபத்து என்று உணர்கிறார்களா? அல்லது தம்மை ஒதுக்கி வைதது விடுவார்கள் என்பதற்காகத் தமது கவச குண்டலங்களையும் ஆயுதங்களையும் பரனில் ஏற்றி வைத்து வி்ட்டார்களா என்று கேட்கத் தூண்டுகிறது. இவ்வாறான சினிமாக்களை செயற்பாடுகளை வாய் மூடி மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருப்பதும் தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக, தமக்குச் சாதகமான வழியை உருவாக்கிக் கொள்வதற்காக மட்டும் வாய் திறப்பதும் கேவலம் என்பதை அவர்கள் உணரவில்லையா?

இம்முறை இப்படத்துக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களதும் ஆதரவு தெரிவித்த முஸ்லிம் அல்லாத நண்பர்களதும் செயற்பாடுகளைப் பாராட்டுகிறோம். படம் எடுக்கிறோம் என்று சொல்லி மற்றொரு சமூகத்தை இழிவு படுத்த நினைக்கும் எவனும் இனிமேல் அடுத்த இனத்தைக் கொச்சைப்படுத்தவோ அவமதிக்கவோ இடம் தராத வகையில் அவர்களுக்குப் பாடம் புகட்டியாகவேண்டும்.

நாம் வாழும் உலகை நல்ல உலகாக, நல்ல சூழலாக இட்டுச் செல்லவே நாம் விரும்புகிறோம். எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் இனப் பகையையும் குரோதத்தையும் வளர்த்து அதில் சுகவாழ்வு பெற நினைக்கும் எவனும் நிம்மதியாக வாழ முடியாத வகையில் எதிர்காலச் செயற்பாடுகள் அமைய வேண்டும். அகிம்சா வழியிலே இவற்றை உணர்த்த முடியும்.

அடுத்த படத்தில் விஜய் முஸ்லிம்களின் நண்பராக நடிப்பார் என்று அவரது தந்தையார் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதன் மூலம் அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். அதாவது முஸ்லிம்களது கௌரவத்தை அவர்களது எதிர்காலத்தை, சக மனிதரோடு வாழும் சகவாழ்வைக் குழி தோண்டிப் புதைத்து விட்டோம். புதைத்த இடத்தில் கல்லறை கட்டித் தருவோம் என்பது போல் இருக்கிறது அவரது கருத்து. விஜய் முஸ்லிம்களின் நண்பராக நடிப்பதாலெல்லாம் ஒன்றும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது மிஸ்டர் சந்திரசேகர்.

துப்பாக்கி என்ற சினிமாவில் விஜய் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலகளாவிய முஸ்லிம்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். சர்வதேச ரீதியாக யூதர்களும் மேற்கத்தேயமும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து வருகிறன்ற அப்பட்டமான தீங்கை காலாகாலத்துக்கும் அழிக்க முடியாதபடி உங்களது மகன் புரிந்திருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

இந்த உலகத்தின் படித்தவர்கள், சமாதான விரும்பிகள், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் தொகை அதிகமானது. அளப்பரியது. அமைதியான உலகையும் சமாதானமான வாழ்வையும் மக்களுக்கு வழங்கவே அதியற்புதமான மனிதர்கள் உலகத்தில் தோன்றினார்கள். அவ்வாறான மனிதர்களைத்தான் மனித குலம் இன்றும் போற்றிப் புகழ்ந்து வருகிறது.

இந்த ஒழுங்கைச் சிதைத்து இனங்களைக் குரோதப்படுத்தி அதனூடாகச் சுகபோக வாழ்வு வாழ நினைப்பவர்கள் மிகச் சொற்பம். அந்தச் சொற்பத் தொகைக்குள்தான் உங்களது புத்திரன் அடங்குகிறார் என்பதை உலகம் அறியும். நீங்களும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

imran nainar said...

படம் எடுக்கிறோம் என்று சொல்லி மற்றொரு சமூகத்தை இழிவு படுத்த நினைக்கும் எவனும் இனிமேல் அடுத்த இனத்தைக் கொச்சைப்படுத்தவோ அவமதிக்கவோ இடம் தராத வகையில் அவர்களுக்குப் பாடம் புகட்டியாகவேண்டும்.

ASHROFF SHIHABDEEN said...

இப்பதிவு இடப்பட்டு 22 மணித்தியாலங்களுக்குள் சர்வதேச ரீதியாக 759 பேர் படித்திருக்கிறார்கள் என்பதை ப்ளகர் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இதுவரை நான் இட்ட பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 129 பேர் படித்த பதிவும் இதுதான்.
இனி - முகப்புத்தக இணைப்பில் வாசகர் கருத்துக்கள்.
-----------------------

Begum Sbegum

சூடான தலைப்பு... முழுவதுமாக வாசித்தேன்.. என்ன சொல்றது இந்த ஹீரோவை நினைத்தால் சிரிப்பதா . அழுவதா என்றிருக்கு..எந்த தகுதியை அடிப்படையாக வைத்துக் கொண்டு இலங்கையயை வரைபட்த்திலிந்து இவர் எடுப்பாராம்... சிரிப்பாக வருகிறது..சவால் விடுவதற்கும் ஒரு Capacity வேணும் இல்லையா..? மறுபக்கமாக துப்பாக்கி திரைப்படம் பற்றியும்.. இந்த சினிமாக் காரர்களின் உள்நோக்கம் பற்றியும் சேர் சொன்ன விடய்ங்கள் எல்லாமே யதார்த்தம்...மக்கள் மனதினில் நஞ்சை விதைப்பதும் இவர்களே..Director முருகதாஸ் பகிரங்க மன்னிப்புக் கேட்டு இதிலிருந்து கலன்று கொண்ட மாதிரியான தோற்றத்தை உருவாக்கி விட்டார்..ஆனால் ஒன்றை மட்டும் இதுவரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.. முஸ்லிம்களை இனவாதியாக, தீவரவாதியாக காட்டுவதில் இவர்களுக்கு என்னதான் இன்பம் இருக்கோ..... தன்னை வீரனாகக் காட்ட பாடுபொருளாகக் கிடைத்தவர்கள் முஸலிம்கள் தானா ..? என்பதாகக் கூட சிந்திக்கக் தோன்றுகிறது...
--------------------------------
Farveen Mohamed

முஸ்லிம்களை குழப்பவாதிகளாக காட்டுவதில் மேலைத்தேய சினிமா கொண்டுள்ள அதே வக்கிர உணர்வுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இந்திய தமிழ் சினிமாவும் தனது பங்களிப்பை தொடர்ச்சியாக செய்து வருகிறது என்பதை "விஜய் அன்ட் முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி மூலமாக இலாவகமாக நிரூபித்துள்ளது.
விஜய்காந்த் இந்த வகையில் முன்னணியில் திகழ்கின்றவர் இவரை விட்டால் தீவிரதிகளை அழிப்பதற்க்கு உலகில் இதுவரைக்கும் யாரும் பிறக்க வில்லை என்ற கிறுக்குத்தனமான செயற்பாட்டை பயன்படுத்தி இலகுவாக அரசியலில் புகுந்து கொண்டார், அவர்மட்டுமா அர்ஜுன் விண்ணாதி வின்னர் இப்போது அதே பப்படத்தை பொறிக்க விஜய் கிளம்பியுள்ளார் பாவம் முஸ்லிம்களை வைத்து பொழப்பு நடத்தும் இவர்களின் பம்மாத்து தனத்தை பாமர இந்திய ஜனங்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார்களோ ?
-------------------------
Razana Manaf

நிலமைக்கேற்ற ஒரு பதிவு நிச்சயம் ஒரு "ஓ" போட வேண்டும் பாராட்டுக்கள் சேர்...!

காலம் காலமாக நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் செய்து வந்த ஒரு வேலையை அப்படியே பிரதி பண்ணி மீண்டும் ஒரு தடவை செய்திருக்கிறார் திருவாளர் விஜய். உண்மையை சொல்லப்போனால் முஸ்லீம் மக்களினால்தான் இன்று பலபேர் உலகில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதற்க்கு விஜய் மட்டும் விதிவிலக்கல்ல முஸ்லீம் மக்களை ஆபத்தானவர்களாக சித்தரித்து பேசு பொருளாக வைத்து திரைப்படங்கள் மூலமாகவோ அல்லது பத்திரிகை செய்திகள் மூலமாகவோ பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து கொண்டிருக்கிறார்கள் அது வளர்ந்து இன்று விருட்சமாகி நிற்பதை அறிந்தும் கூட. முஸ்லீம் ஒருவரின் பெயரில் ஏனைய மதத்தினர் செய்யும் இழிவேலைகளும் வன்முறைகளும் சேர்ந்து முஸ்லீம் ஒருவனையே பேசுபொருளாக வைக்கின்றது கடந்த காலங்களில் இந்தியாவில் நடந்த பன்னிரெண்டு பாரிய வன்முறை சம்பவங்களுக்கு முஸ்லீம் அல்லாத ஏனைய மதத்தினர் தான் பொறுப்பாக இருந்துள்ளார்கள் ஆனால் அவை முஸ்லீம்களின் பெயரில் ஆக்கப்பட்டு இந்திய முஸ்லீம்கள் இழந்தது அதிகம்.ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை பிடிக்கபடவுமில்லை. இதுபோல்தான் உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கும் முஸ்லீம்கள் வெறும் பெயர் தாங்கிகளாகவும் குற்றத்தை மட்டும் வெறுமனே சுமப்பவர்களாவும் தான் இருக்கிறார்கள். அர்ஜுன், விஜயகாந்த்,மணிரத்னம்,தாணு,கமல்.இவர்களின் வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறார்கள் முருகதாசும், விஜய்யும்.

AH said...

இந்த விடயத்தில் நாம் வாழும் சமுகங்கள் இன்னும் பொழுதுபோக்கும் பிரதான அங்கமாக இந்திய சினிமாக்குள் தான் இருக்கிறோம்... அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கத்தான் வேண்டும்..

“அதை பார்க்க வேண்டாம்“ என்று சொன்னால் அதற்கு பிரதியீடு நம்மில் இல்லை.உடனே ஈரான் சினிமாக்களை பார்க்க சொல்ல வேண்டாம்.அது நமக்கு சரி வராது..

நம்மிடத்தில் எந்த பொழுதுபோக்கு வழிகளும் இல்லை.. நாம் சார்ந்த இணையங்கள் கூட தீவிரமாக சமுக பிரச்சினைகளையும் மார்க்கத்தையும் தான் பேசுகிறது.

பத்திரிகை, வானொலி, டீவி என்று நமக்கான எந்த விதமான பொழுதுபோக்கு வழிகளும் இல்லை.
ஆக குறைந்து ஒரு இணைய வானொலி கூட இல்லை..

“வீணாக பொழுதுபோக்குதான் இப்போது முக்கியம்“ என்று நீங்கள் கேட்டால் இன்றை இணைய உலகின் போக்கை மாற்றிய Facebook நல்ல உதாரணமாக அமையும்.. அல்லது நடுநிசியில் வாப்பாக்கும் உம்மாக்கும் பாட்டு கேட்கும் பாத்திமாக்களுக்கும், பாட்ட கிளிக் பண்ணி போடுறவன பெரிய மேதையாக நினைத்து “சேர்” போட்டு பேசும் நம்மவர்களும் குறைவார்கள்.

Lareena said...

இத்தகைய சமூக விரோத சினிமாக்கள் இத்தோடு ஓய்ந்துவிடும் என்று தோன்ற வில்லை. இனியும் தொடரவே செய்யும்.

இதுபோன்ற சினிமாக்கள் மக்களைப் பிளவு படுத்தி நாட்டை நாசமாக்கும் விஷக் கிருமிகள் என்பதை மிகப் பலமாகவும் பரவலாகவும் அறிவுறுத்த வேண்டும். முஸ்லிம் அல்லாத நடுநிலையாளர்கள் மத்தியில் இக் கதையாடலைத் தீவிரப் படுத்த வேண்டும். இது போன்ற சாக்கடைகளை முஸ்லிம்கள் மட்டு மன்றி நடுநிலை பேணும் சகோதர சமூகத்தவரும் பெருமளவில் பகிஷ்கரிக்கும் நிலை தோன்றினால், இவர்கள் இனியும் வாலாட்டப் பயப்படுவார்கள்.

இந்தியத் தமிழ் முஸ்லிம்கள் இயக்க வேறுபாடுகளை மறந்து இது விடயத்தில் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனியும் அவர்கள் இயக்க வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு, சகோதர சமூகங்களுக்கு இடையில் முஸ்லிம்கள் குறித்த தவறான புரிதல்களைக் களைந்து,சமூக நல்லிணக்கத்தைக் கட்டி யெழுப்பும் பணிகளுக்கும் போதிய முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயக் கடமையும்கூட!

RoshaNi said...

Akber Hassan சொல்வது மெத்தச் சரி.
இத்தகைய கருத்துக்களை விதைக்கும் சினிமாக்கள் முதற் தடவையல்ல இத்துடன் முடியப் போவதும் இல்லை.
பிற மதமொன்றை குறிப்பாக முஸ்லிம்களை கொச்சைப் படுத்தி விளம்பரம் தேட முயல்வது ஒரு latest trend ஆகி விட்டது. சர்வதேச சினிமாவிற்கு ஈடாக தமிழ் சினிமாவும் இப்போது... இன்னும் மிகக் குறுகிய காலத்தினுள் இதை விட முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்த நபர் கையைக் காலை காற்றில் சுழற்றுவதையும் நாக்கை வாய்க்குள் சுழற்றுவதையும் சர்வதேச சமூகம் பார்த்து மெச்சணும்னு எழுதியிருக்கு போல!! :D