Wednesday, February 27, 2013

கைகட்டி நிற்கும் கதைமொழி


(“விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூலுக்கு பிரபல சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்கள் வழங்கிய மதிப்புரை)


அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை ஒரு கவிஞனாக (காணாமல் போனவர்கள் - 1999, என்னைத் தீயில் எறிந்தவள் - 2009), ஒரு பத்தி எழுத்தாளராக (தீர்க்கவர்ணம் - 2009), ஒரு மொழிபெயர்ப்பாளராக (உன்னை வாசிக்கும் எழுத்து - 2007, ஒரு குடம் கண்ணீர் - 2010, ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - 2011) ஒரு பயண இலக்கியக்காரராக (ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - 2009) நான் ஏலவே அறிந்திருக்கிறேன்.

சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு, கவிதை என்று அகலக் கால் வைத்தாலும் மிக ஆழமாகவே வைத்திருக்கின்றார் -  வைக்கின்றார் என்பதை அவருடைய ஒவ்வொரு நூலும் ஊர்ஜிதம் செய்தே வந்துள்ளது.

'ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை' என்னும் பயண அனுபவ நூல் - எழுபது பக்கங்களே கொண்ட அந்தச் சின்ன நூல் இவருடைய பயண அனுபவங்களை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றது!

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் பயண நூல்கள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'குறிப்பிட்ட பயண அனுபவங்களையும் பார்த்த, கேட்ட விடயங்களையும் கொண்டு சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதும் சிறு பிரிவினருக்கான சிறந்த உதாரணம் அஸீஸ்' என்னும் குறிப்பே என் நிலைவிலோடியது, இந்தச் சின்ன நூலை வாசித்த போது.

நம்மை மறந்து வாசிக்கச் செய்யும் சுகானுபவம் எல்லா எழுத்துக்களிலுமா கிடைக்கிறது!

'விரல்களற்றவனின் பிரார்த்தனை' எனும் இந்தத் தொகுதி மூலம் தன்னை ஒரு பேசப்படவேண்டிய - விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய சிறுகதையாளனாகவும் நிரூபித்துக் கொள்கின்றார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

'எல்குறொஸ்' செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஒரு ஏவுகணை சந்திரனில் செய்யப்போகும் வித்தைகள் பற்றிப் பேசும் 'அவ்வெண்ணிலவில்' கதையில் நாஸா விண்ணாய்வுக் கூடம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் அஷ்ரஃப்:-

'நாஸா விண்ணாய்வுக் கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானி மேல்தான் விழ வேண்டும். விழுபவனும்கூட ஒரு விஞ்ஞானியாகத்தான் இருப்பான்...'

நமது இலக்கிய உலகும் அப்படித்தான் இருக்கிறது. தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் சூட்டிப் பறக்க விட்டுக் கொண்டும் பறந்து கொண்டும்  கால் இடறினால் இன்னொரு பட்டத்தில் விழுந்து கொண்டும்...

கதை, கதையாகத்தான் வந்து குவிகின்றது. இலங்கையில் ஒரு மாதத்துக்குச் சுமார் 150 லிருந்து 200 வரை கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு எத்தனை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சின்ன இலங்கையிலேயே இப்படியென்றால் தமிழ் நாட்டில்...? ஆண்டுக்கு 5000 கதைகள் போல் எழுதப்படலாம். ஒரு பக்கக் கதைகள் உட்பட.

வருடத்தின் சிறந்த கதைகள் என்று ஒரு 12 சிறுகதைகளைத் தெரிவு செய்து நூலாக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பு நல்ல கதைகள் கிடைக்காத சிரமத்தால் தங்கள் பணியினைக் கைவிட்டு விடும் உத்தேசத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

அங்கே இலக்கியச் சிந்தனையும் இங்கே தகவமும் திணறித்தான் போகின்றன, நல்ல சிறுகதைத் தேடலில்.

நம்மில் நிறையப்பேருக்குச் சிறுகதை எழுதுவது என்பது ஒரு லேசான விளையாட்டான விசயமாகப் போய்விட்டது.

'இந்தக் கதை வேண்டாம். வேறொன்று தருகின்றீர்களா?' என்று கேட்பார் பத்திரிகையாசிரியர்.

'நாளைக்குக் கொண்டு வர்ரேன் சார்! எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும்!' என்று கூறிச் செல்பவர்களை நான் நிறையவே அறிந்திருக்கிறேன்.

அவசரமாகக் கற்பனை பண்ணி, அவசர அவசரமாக எழுதி, அவசரமாகப் பேப்பரில் போட்டுக் கொள்வதால்தான் இந்தக் கீழ் நிலை.

ஒரு இரண்டு நாள் குப்பைக்காரர் வராவிட்டால் பார்க்க வேண்டுமே எங்கள் ஒழுங்கையை - அத்தனையத்தனை வீடுகளிலும் வீட்டுக்கு இரண்டு மூன்று என்று கலர் கலராய்ச் சிலு சிலுப் பைகள் தோரணமிட்டுத் தொங்கும் அழகை!

உதாரணம் சரியில்லையோ என்னும் நினைவு வருகின்றது. கூடவே அஷ்ரஃபின் துணையும் கிடைக்கிறது.

முதல் கதை 'நாய்ப்பாசம்'.

அந்த நாயின் நடை... அது நடந்து செல்லும் விதம். 'எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் ஒப்பிடுவதாக நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது...' என்றெழுதிச் செல்கிறார்.

கிணற்றில் நீர் ஊறுவது போல் அது மனதில் கிடந்து ஊறவேண்டும் என்கிறார் ஒரு பழைய மேநாட்டுக் கதையாசிரியப் பெண். இந்த அமெரிக்க எழுத்துச் சிற்பியின் (குநசடிநச நுனயெ) கூற்றுப்படி, 'ஒரு சிறுகதை பேப்பரில் அல்லாமல் மனதில் வளர வேண்டும். எழுத்தாளன் மாதக்கணக்கில் அதை மனதில் சுமந்து திரிய வேண்டும்.'

ஒரு சிறுகதையின் பிறப்பைப் பிரசவத்தின் பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் அனுபவஸ்தர்கள். சுமந்து திரிதல், வெளிவரத் துடிக்கும் அதன் படபடப்பு, பிறக்கும்போது அது தரும் வேதனை, பிறந்தபின் கிடைக்கும் சுகமான மகிழ்வு... என்று அத்தனையும் அந்த வாசகத்துக்குள் இரண்டையும் இணைக்கின்ற விதம் உயிர்ப்பானது.

சிறுகதை எழுதுவது அப்படி ஒன்றும் லேசான விசயமில்லை எனத் தெரிந்து கொண்டேதான் இந்தத் தீக்குள் விரலை வைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார் அஷ்ரஃப்.

அவருடைய 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்க'ளும் 'ஒரு குடம் கண்ணீ'ரும் அதை அவருக்கு உணர்த்தியிருக்கும். உபதேசித்திருக்கும்.



என்னுடைய இந்த 50 வருட இலக்கிய வாழ்வில் நான் ஒரு அறுபது சிறுகதைகள்போல் எழுதியிருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த சிறுகதைக்காரர்களாக அங்கும் இங்கும் என்று ஒரு சிலரை மனதுக்குள் வரித்தும் கொண்டிருக்கிறேன்.


சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்றாலும் இப்போது ஒரு சிறுகதையை வாசித்து அதன் உள்நுழைந்து உலா வருவதற்கான வசதியின்மை கண்டு வருத்தமடைகிறேன். நிர்ப்பந்தங்கள் மூலம் வாசித்து முடித்தே ஆகவேண்டும் என்னும் நிலை வரும்போது உற்சாகத்துக்குப் பதிலாகக் களைப்பும் தலைவலியுமே மிஞ்சுகின்றன.

தலைவலி என்றதும் ஒரு நினைவு வருகிறது. உமா வரதராஜனின் 'உள்மன யாத்திரை' தொகுதியில் உமா, ஒரு வாசகர் கடிதத்தையும் சேர்த்திருந்தார். உமாவின் அந்தக் கதை வந்த பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு வாசகர் எழுதிய கடிதம் அது.

'இந்தமாதிரிக் கதையையெல்லாம் போட்டு ஏனையா பத்திரிகையின் பக்கங்களை வீணடிக்கிறீர்கள்? ஒரே தலைவலி. தாங்க முடியவில்லை' என்பது அந்த வாசகனின் கோபக்குரல்.

சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டார். 'சிறு கதைகள் இப்படி அரை வேக்காட்டுடன் வந்து குவிவதற்குப் பத்திரிகைத் தேவைகளே முக்கியமான காரணம்' என்று.

பெருவாரியான எழுத்தாளர்களைச் சிறுகதை என்கிற இலக்கியத் துறையிலிருந்து தூரமாக்கி விடுவதைப் போலவே பெரும்பாலான வாசகர்களையும்  ஒரு சில நல்ல படைப்பாளிகளிடமிருந்து தூரமாக்கியே வருகின்றன இப்பத்திரிகைகள் என்பதை சுஜாதா சொல்ல மறந்து விட்டார்.

அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய சிறுகதைகளை வாசிக்க முற்பட்டபோது அவை என்னை உள்ளீர்த்துக் கொண்டன. களைப்புக்குப் பதில் ஒரு சுவாரஸ்யமான உற்சாகத்தைத் தருகின்றதான உணர்வு எழுந்தது. அவருடைய கதை மொழி ஒரு சித்திரம் போல் நம்மைக் கவர்ந்து கொள்கிறது. சொற்களைத் தேடி அவர் ஓடாமல் அவரைத் தேடிச் சொற்கள் ஓடிவருகின்றன. அதனதன் இடத்தில் சக்கைக் கல்போல் அமர்ந்து கதையின் கட்டுமானத்தை மேலெழுப்புகின்றன. மிகச் சாதாரணமான வழக்காற்று மொழிச் சொற்கள் கூட இவரது கதைகளுக்குள் உயிர்த்தெழுகின்றன. வார்த்தைகளைக் கோத்துவிடும் வித்தை மிகவும் அருமையாகக் கைவந்த ஒருவராகவே இவரைக் காணுகின்றேன்.

மு.பொ.வின் 'முடிந்து போன தசையாடல் பற்றிய கதை'த் தொகுதியை வாசித்தபோது நான் வியப்படைந்து போனேன். கதை எழுதுவது என்பது 'கிள்ளுக்கீரை' விஷயமல்ல. ஒரு கதை எழுத வருகிறவனுக்கு என்னென்ன சங்கதிகள் தெரிந்திருக்க வேண்டும், எத்தனை எத்தனை உலகத்தை அவன் காணுகிறான் என்று.

அஷ்ரஃப் சிஹாப்தீனும் அதே வியப்பைத் தருகிறார். ஆனால் வேறு விதத்தில். எழுதுவதை விட வாசிப்பதையும் தேடித் தேடி வாசிப்பதையும் முன்னிலைப்படுத்துகிறவர்கள் வியக்க வைக்கும் எழுத்தைத் தர வல்லவர்களே.

கதை எழுத வருபவர்களை அஷ்ரஃப் அச்சுறுத்துகிறாரோ என்ற நினைவும் எழுந்தது.

ஒரு தெருநாய் பற்றியும் எழுதுகிறார். வெள்ளை வேன் கடத்தல் பற்றியும் எயிட்ஸ் நோயைப் பூனைக் காய்ச்சல் என்றும் மலச் சிக்கலால் அவதிப்படும் லெப்டினன்ட் கேர்ணல் பற்றியும் நாஸா விண்வெளி ஆய்வுகூடம் பற்றியும் ஆய கலைகள் 64ஐயும் விட்டு 65ஆம் கலை பற்றியும் நந்திக் கடல் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டு எதையோ தேடுவது பற்றியும் அதிபாரக் குத்துச் சண்டைப் போட்டிக்கு ஈடான விளையாட்டுப் போட்டி பற்றியும்... எத்தனை எத்தனை உலகங்களைக் கொண்டு வந்து இறக்கி வைக்கிறார், இதற்குள்... இந்த இறக்குதல்களைத்தான் அச்சுறுத்தல் என்று அஞ்சினேன்.

இந்தத் தொகுதியின் பதினாறு சிறுகதைகளையும் பல தடவை சலிப்பின்றி வாசித்தபோது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான அ.முத்துலிங்கம் எனக்குள் பல தடவை ஓடிவந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு நல்ல கதைக்குக் கதை சொல்லும் கோணம் என்பது மிக முக்கியமானது. கதை யாருடைய பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்பதைக் கதை சொல்ல வருபவர் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

கதை சொல்ல வருபவர்களின் பொதுத் தன்மைக்கு ஏற்பவே அதுவும் குறிப்பாக அ. முத்துலிங்கம் அவர்களைப் போலவே தன்னுடைய பெரும்பாலான பிரதிகளைத் தானே கூறிக் களிப்பதுடன் வாசிக்கும் நம்மையும் களிப்படைய வைக்கிறார். இப்படி ஆசிரியரே பாத்திரமாகிக் கதையைச் சித்தரிக்கும்போது பிரதியின் பல சவால்கள் எளிதாகிவிடுகின்றன. கதையின் எல்லாத் தனித் தனிப் பாத்திரங்களையும் இணைக்கும் மையச் சுடராகக் கதை சொல்லும் ஆசிரியரே இருந்து விடுகின்றார்.

தொகுதியின் முதற் கதை 'நாய்ப்பாசம்.'

அந்த நாய் என் கவனத்தைக் கவர்ந்ததற்குக் காரணமிருந்தது. அது ஒரு தெரு நாய். அந்த நாயைப் போல் சொறி பிடித்து... என்னும் ஆரம்ப வரிகளே என்னிடம் முத்துலிங்கத்தைக் கூட்டி வந்து விட்டது.

அவருடைய 'எலுமிச்சை' கதையிலும் ஒரு நாய் வருகிறது.

'நாயென்றால் ஏதோ சந்திர குலம் சூரிய குலத் தோன்றலில்லை. சாதாரண ஊர் நாய்தான்.' (வடக்கு வீதி)

இனி அஷ்ரஃபின் நாயிடம் வருவோம்.

'... அதன் பின்னங்கால்கள் முன்னங் கால்களை விட நீளமாக இருந்தன. அப்பின்னங்கால்கள் உட்புறமாக நீண்டிருந்ததால் குதியுயர்ந்த செருப்பணிந்து செல்லும் பெண்களுக்குப்போல் புட்டம் பின் பக்கமாகச் சற்றுத் தூக்கலாக... குதிகால் செருப்புப் பெண்களையும் விட எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரையும் ஞாபகப்படுத்தியது. அந்த வாத்தியார் ஒரு குதூகலமான பேர்வழி...'

தான் கூற நினைப்பதைத் தடங்கலின்றியும் ஒரு தெளிவுடனும் கூறிவிட அவருடன் கைகோர்த்து நிற்கின்றன அவரது வார்த்தைகள்.

அபஸ்வரமாகிவிடாமல் கதையினூடாக வந்து குவியும் தகவல்கள் கதையின் ரசனைக்கு உறுதுணையாகி நிற்கின்றன.

இந்த நாய்ப்பாசம் கதையிலும் கூட எத்தனைத் தகவல்கள். உதாரணத்துக்கு ஒன்று.

'முஸ்லிம்கள் நாயையும் பன்றியையும் தவிர்த்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வாழ்வு முழுவதும் விபச்சாரம் செய்த ஒருத்தி நீர் விடாயால் தவித்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டினாள் என்பதற்காக அவளுக்குச் சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டதை இஸ்லாமிய வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது...

கி. ராஜநாராயணின் எழுத்தின் பலமே அவருடைய தகவல்கள்தாம் என்கிறார் ஜெயமோகன்.

சுப்ரபாரதி மணியனின் கதைகளில் அதீத தகவல்கள் இருப்பது பற்றி விமர்சகர்கள் குறை கூறிய போது கொதித்தெழுந்தவர் கி.ராஜநாராயணன் அவர்கள். 'கூந்தல் உள்ள மகாராசி கொண்டை முடிக்கிறாள்... உங்களிடம் கூந்தலுமில்லை... கொண்டையுமில்லை..' என்று.

அஷ்ரஃப் சிஹாப்தீனின் இத்தனைக் காட்சிகளும் எங்கே நடக்கின்றன?

பஞ்சிகாவத்தைக்கு அருகில் உள்ள கராஜில் ரிப்பேருக்காகக் காரை விட்டு விட்டு 'கராஜ்' பையன் காருக்கடியில் படுத்துக் குடைந்து கொண்டிருக்கையில் நடக்கிறது.

'நான் தெருப் புதினம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த நாய் என் கண்ணில் பட்டது' என்கிறார் அஷ்ரஃப்.

ஒரு படைப்பாளியின் வேடிக்கை பார்க்கும் கண்கள், மானுட இயல்புகளையும் உடல்சார்ந்த நுட்பங்களையும் கூர்ந்த அவதானிப்புக்குள்ளாக்குவது போன்றவை இவருடைய முக்கியமானதும் பலமானதுமான அம்சங்கள்.

இந்தத் தொகுதியின் அனைத்துக் கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் வாசகனுடன் குலாவுகின்ற பண்பைக் கொண்டிருக்கின்றன.

'வைத்தியம்' என்ற கதையில் டாக்டரைத் தெருவில் மறித்து, ஒரு விடயமா உங்களுடன் கதைக்கணும் சேர் என்கின்ற ஒருவன், திருட்டுப்போன சைக்கிளை பொலீஸிலிருந்து எடுக்க முடியாமல் திண்டாடும் அந்த அப்பாவி மனிதனைக் காட்டும் 'சட்டத்தால் ஆகாதது', கவர்ச்சிகரமான பெண்களைக் கண்டவுடன் கண்டவிடத்தில் நோண்டிவிடத் துடிக்கும் ஜெனரல் டுபுக்குவைக் காட்டும் 'பூனைக் காய்ச்சல்', மலச் சிக்கலால் அவதிப்படும் அமெரிக்க இராணுவ ஜெனரல் பற்றிப் பேசும் 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', அக்பர் சக்கரவர்த்தியின் பின்தோன்றலான அதிமேதகு ஆளுனரை நோக்கிக் கல்லெறிந்த கதை கூறும் 'கல்லும் கனியும்'...

எத்தனை எத்தனை விதமான மானுட வேடிக்கைகளை ஒரு எள்ளலுடன் எழுதிக் காட்டுகிறார் இந்த மனிதர்!

'சுபியானின் சாகசங்கள்' மட்டுமென்ன... மனிதன் எத்தனை விஷமத்தனமானவன், விசித்திரமானவன் என்பதை ஒரு சிரிப்புடனே செய்து காட்டுகிறார் அஷ்ரஃப்.

வறுத்த முந்திரிப் பருப்புகளைக் கொறித்தபடி தொலைக் காட்சிக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சுபியானை யாரால் என்ன செய்ய முடியும்? மனம் முழுக்கவும் ஒரு கோணங்கி போல் நிரம்பி வழிகின்ற அவனை நம்மாலும் தூக்கி எறிந்துவிட முடியவில்லைதான்.

றமளானில் பகல் சாப்பாடு தேடும் அந்தச் சராசரி மனிதனை, அவனின் பதட்டங்களை, சோர்வை, எத்தனைக் குதூகலமாகச் சொல்கிறது 'ரமளானில் ஒரு பகலுணவு'!

பாத்திரம் பரிதவிக்கிறது. ஓடி ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறது. வாசகனோ குமட்டுக்குள் புன்னகைத்தபடி குதூகலத்துடன் வாசிப்பைத் தொடர்கிறான்.

அஷ்ரஃபைத் தவிர வேறு யாரால் இந்தக் கதையை இப்படிக் கூற முடியும்?

கோட்பாடுகள் தேடாமல், புதிய புதிய மொழியாக்கம் தேடாமல், சொல்லாட்சி நுட்பங்கள் தேடாமல் தன்பாட்டில் தன் மொழியில் தனக்கே கைவந்த சொல்லாடல்களுடன் கதைகூறும் வல்லமை கொண்டவராகத் தன்னை இனம்காட்டுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்னும் கீதை வரிகள் போலவே நொண்டாமல் நொடிக்காமல் சரியாமல் சளைக்காமல் அஷ்ரஃப் சிஹாப்தீனின் இந்தக் கதைகளும் நன்றாகவே நடக்கின்றன.

ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறவேண்டும் என்றில்லை!

ஒன்றையும் இழக்காமலேயே சிறுகதை என்ற இன்னொன்றையும் முழுமையாகப் பெற்றிருக்கிறார் அஷ்ரஃப். இத்தனை காலம் எங்கிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது.

அ.முத்துலிங்கம் பற்றிக்குறிப்பிடும்போது 'கி. ராஜநாராயணனினதும் அசோகமித்திரனினதும் நீட்சியே முத்துலிங்கம்' என்கிறார் ஜெயமோகன்.

அதன் அடுத்த நீட்சியாக நான் அஷ்ரஃப் சிஹாப்தீனைக் காணுகின்றேன்.

அவருடைய இந்தச் சிறுகதைகளும் அதை உறுதிப்படுத்தும். உறுதிப்படுத்துகின்றன.

வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்
தெளிவத்தை ஜோசப்





இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

Abufaisal said...

ஒன்றையும் இழக்காமலேயே சிறுகதை என்ற இன்னொன்றையும் முழுமையாகப் பெற்றிருக்கிறார் அஷ்ரஃப். இத்தனை காலம் எங்கிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது. :)
மாஷா அல்லாஹ்... வாழ்த்துகள் பாய்

Unknown said...

.சிறுகதைகள்தான் தாங்கள் சொல்லும் கருத்துகளை நான்றாக சென்றடைவர்களின் மனதில் பதித்துவிடும் . நன்றி

simproduction said...

சரியான சந்தோசம். கதைகளை வாசித்துவிட்டுத்தான் ஏனையன...

Anonymous said...



அ.முத்துலிங்கம் பற்றிக்குறிப்பிடும்போது 'கி. ராஜநாராயணனினதும் அசோகமித்திரனினதும் நீட்சியே முத்துலிங்கம்' என்கிறார் ஜெயமோகன்.

அதன் அடுத்த நீட்சியாக நான் அஷ்ரஃப் சிஹாப்தீனைக் காணுகின்றேன்.

இதைவிட வேறுஎன்ன வேண்டும்?
எனது பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.
வாழ்த்துக்கள் ஸேர்.
எஸ்.பாயிஸா அலி.