ஆண்டுகள் மாறியபோதெல்லாம்
அடையாளம் காட்டியது
நெருப்புத்தான்!
ஒரு பெருந்தீ எழுந்தபோது
ஒரு யுகம் முடிந்து போனது
ஒரு யுகம் மலர்வதானது...
பழைய ஆயிரத்தாண்டும்
புதிய ஆயிரத்தாண்டும்
பெருநெருப்பில்தான்
கைகுலுக்கிக் கொண்டன...
நான் -
வான - வாண வேடிக்கை
விநோதங்களைச் சொல்கிறேன்
நெருப்பு -
ஒரு புதிய விஷயமல்ல
ஆடையற்ற ஆதி விஞ்ஞானியின்
அரிய கண்டுபிடிப்பு அது
நம் முன்னோரை விட
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை
அவன் ஆடையில்லாதிருந்தான்
நாம்
ஆடையிழக்க அவதிப்படுகிறோம்
அவன் அவித்துச் சாப்பிட்டான்
நாமும்
அவித்துக் கொண்டிக் கொள்கிறோம்
அவன் மிருகங்களைக் கொன்றான்
நாம்
மனிதர்களையும் சேர்த்துக் கொல்கிறோம்
அவன் சிந்தனையில் ஏறுவரிசை
நம் சிந்தனையில் இறங்குவரிசை
அவன் தெரிந்து கொள்ள முயன்றான்
நாம் மறந்துவிட முயல்கிறோம்
அவனுக்கும் அவசியமாயிருந்தது நெருப்பு
நமக்கும் அவசியமாயிருக்கிறது நெருப்பு -
யாருக்கேளும் வைப்பதற்கு!
ஆக நம் முன்னோரை விட
நாம்
அதிகம் வித்தியாசப்பட்டுவிடவில்லை!
00
ஆகாயத்தில் நெருப்புச் சிரித்த போது
கும்மாளமிட்டுக் குதூகலித்தது
ஒரு கூட்டம்
அதே நெருப்பு வயிற்றில் சிரித்தபோது
வாழ்த்துச் சொல்வதற்கும் வலுவின்றி
வாடிக் கிடந்தது
ஒரு கூட்டம்
ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது ஒரு கூட்டம்
அது -
மது!
ஆகாயத்தில் நெருப்புச் சிரித்போது
நீரில் மிதந்தது மற்றொரு கூட்டம்
அது-
கண்ணீர்!
நெருப்பு வாழ்க்கை முழுவதும்
நெருங்கியே இருக்கிறது
நெருப்பு
பயமாகப் பரவி வருகிறது
இன ஒதுக்கலாய் எழுந்து நிற்கிறது
வறுமையாய் வடிவம் எடுக்கிறது
யுத்தங்களாய்
யுகங்கள் தாண்டி வருகிறது
00
புத்தாயிரம் வந்து விட்டதில்
புதுமை என்ன இருக்கிறது
புத்தாயிரம் -
காலம்!
காலத்துக:கு வரவு சொல்லும்
கவியரங்கு இது!
காலம் -
ஒருபோதும் வருவதில்லை
அது -
செல்கிறது!
காலம் என்பது ஒரு கனவு
அது தொடர்வதே இல்லை
காலம் என்பது ஓர் அரிதட்டு
அதில் எதுவும் எஞ்சுவதில்லை
காலம் என்பது
ஓர் ஓட்டைப் பாத்திரம்
அது எப்போதுமே நிரம்புவதில்லை
நாளை என்றொரு நாள்
நம்மைத் தேடி
வருவதேயில்லை!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment