Wednesday, December 11, 2013

பெட்டை நாய்


மிருணாள் பாண்டே

நான்கு வயதுப் பெண் பிள்ளைக்கு ஒரு நாயைத் திருமணம் செய்து வைத்ததாகப் பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருந்தது. குடும்ப தோஷத்தைக் கழிப்பதற்காக நடத்தப்பட்ட திருமணம் இது.

ஒரு கையில் இரண்டு தும்புத் தடிகளுடனும் மறுகையில் பேணியொன்றுடனும் வீடு சுத்தம் செய்பவளான கௌரி உள்ளே வந்தாள். பெங்காலிக்காரியான கௌரி சட்டபூர்வமற்ற சேரிப்புறக் குடியிருப்பில் வசிப்பவள். நான்கு பிள்ளைகளின் தாயான அவளை அவளது கணவனான ஹரன் கைவிட்டு விட்டுப் போய்விட்டான். அதிகம் உழைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்யவில்லை. உண்மையில் கௌரியின் மகளான சுமித்ராதான் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து வந்தவள். கணவனால் கைவிடப்பட்ட சுமித்ரா வேறொருவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக யமுனை நதிக் கரையோரத்திலுள்ள சேரிப்புறக் குடிசைப் பகுதிக்குச் சென்று விட்டாள்.

'ரி.வி. மேடம்' வீட்டு வேலையைத் தன்னைப் பொறுப்பெடுக்குமாறும் ஒவ்வொரு அறையாக உனக்குப் பின்னால் வந்து அவங்க பார்த்துக் கொண்டிருக்கமாட்டாங்க என்றும் நீ கொண்டு போகும் பிளாஸ்டிக் பையைச் சந்தேகப்பட்டுச் சோதனை போட மாட்டாங்க என்றும் சுமித்ரா தனக்குச் சொன்னதாக கௌரி என்னிடம் சொன்னாள்.

'ஒதுங்குங்க!'

கௌரி எனக்குக் கட்டளையிட்டாள். நான் எனது கால்களைத் தூக்கி சோபாவில் வைத்தேன். மூங்கிலாலான துடைப்பத்தால் சுத்தப்படுத்தத் தயாரானாள்.

'முதல்ல... இங்க வா!'

அவளை அழைத்துப் பத்திரிகையில் இருந்த சிறிய பெட்டை நாயின் படத்தைச் சுட்டிக் காட்டினேன்.

'பாரு... இவள் உங்க ஏரியாதான்... ஆக நான்கு வயசுதான் ஆகுது இவளுக்கு. இவளுடைய பெற்றோர் இவளுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்காங்க - ஒரு நாயை!'

நாடகப்பாணியில் ஒரு இடை வெளி விட்டு வசனத்தை முடித்தேன்.

'ஓஹோ...!'

என்றவள் தனது வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்:-

'இனியென்ன? அவள் அவங்க மகள். அவங்க அவளை அவங்க விரும்பிமாதிரி யாருக்கு வேணுண்ணாலும் கல்யாணம் முடிச்சுக் கொடுக்கலாம்தானே!'

'ஆனா இது சட்ட விரோதம்னு உனக்குத் தெரியாதா? பொலீஸ்...'

'எந்தப் பொலீஸூ?'

'உள்ளூர் பொலீஸ்தான்....'

'இல்ல.. இல்ல.. பொலீஸ் எதுக்குக்குத் தொந்தரவு செய்யணும்?'

'ஏனென்டா.. ஒரு பெண் பிள்ளை 18 வயசாக முந்திக் கல்யாணம் முடிக்க ஏலாது.. அதுதான் சட்டம்..'

'இனியென்ன... அவள் ஒரு ஆம்பிளையை முடிக்கல்லியே...'

'கௌரி... உனக்குத் தெரியாதா... அவளின் பெற்றோர் இப்பவே சிறைக்குப் போற நிலையிலதான் இருக்காங்க... இந்தக் காரியத்துக்காக....'

'அவங்களுக்கெதிரா யாரு பேசுவாங்க... நாயா...?'

கௌரி சிரிப்புத் தாங்காமல் நிலைகுலைந்தாள்.

'இது சிரிக்கிற விஷயமில்லை...'

நான் சொன்னேன். ஆனால் நானும் சிரித்தேன்.
'ஓ......... ம்மா...  குறைஞ்சது குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து அது அவளை அடிக்காது. ரிஸ்ட் வாட்ச் கேட்டு இல்லாட்டி பைசிக்கிள் வாங்கித் தரச் சொல்லி அவளது கையை முறுக்காது.. எவ்வளவு கெதியா முடியுமோ அவ்வளவு கெதியா அவளைக் கர்ப்பிணியாக்கிப் போட்டு இன்னொருத்தியை இழுத்துட்டு ஓடிப் போகாது. மனிசனின் மகனை விட ஒரு பெட்டை நாயின் மகன் எல்லா நாளும்... ம்மா.. எல்லா நாளும் சிறந்தது...'

'ஆனா அந்தப் பொண்ணு...'

'பொண்ணுக்கு என்ன... அவள் பார்க்கச் சந்தோசமாத்தானே இருக்கிறாள். நிறைய சுவீட்ஸ் சாப்பிட்டிருப்பாள்.. புதிய ஆடை அணிந்திருப்பாள்... இதுக்கு மேல ஒரு பிள்ளைக்கு என்ன வேணும்?'



கௌரி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.

'போன வருசம் அயல் வீட்டுக்காரியோடு எனக்கு என்ன நடந்திச்சுத் தெரியுமா... அவ ஒரு கெட்ட பொம்புளை... கருநாக்குக்காரி. வெளியே விளையாடிக்கிட்டிருந்த என் பிள்ளைகளுக்கு காரணமே இல்லாமல் சாபமிட்டாள். 'அம்மையில் போக... கொள்ளையில போக' என்டு சத்தம் போட்டாள். அவளுக்கு மாப்பிளையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனால் காசுக்குச் சூனியம் செய்வாள். ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி அவங்க யாருன்னு பார்க்காமாட்டாள். அவங்கள வசியம் செய்யணுமெண்டா உங்களுக்கு மந்திரம் சொல்லித் தருவாள். எப்படிப் பார்த்தீங்களா...? சீமாபூரியில இருக்கிற துஷ்டன்ட மகளுக்கிட்ட என் புருஷனை நான் இழந்ததுக்கு வேறென்ன காரணம்? வெறும்பயல் ஒருத்தன் என் மகளைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போனானே அது எப்படி? அன்றிரவே என்ட சின்ன மகனுக்கு நோய் வந்துச்சி. குடலே வெளியே வர்ரமாதிரி; வாந்தி எடுத்தான். கடும் காய்ச்சலும் வந்துச்சி. அதனால மற்றப் பொம்புளைக்கிட்ட, பத்பர்கஞ்ச்ல இருக்கிற அம்மாக்கிட்டப் போனேன்...'

'ஆனா நாம் இப்போ பேசிக்கிட்டிருக்கிறது நாயைக் கல்யாணங்கட்டின பிள்ளையைப் பற்றி....'

'நான் அவட கதவைத் தட்டினேன். நடந்ததெல்லாம் சொன்னேன். ஒரு போத்தல் நாட்டுச் சாராயமும் ஒரு கோழியும் நூறு ரூபாய்க் காசும் கேட்டா... எனக்கிட்ட இருந்த ஐம்பது ரூபாவை அவளுக்கு அடிச்சேன்... வீட்டுக்கு வந்தேனா... பையன் சகோதரிகளோட விளையாடிக்கிட்டிருக்கான்... அயல்வீட்டுச்  சூனியக்காரி...  தப்பாக் கருச்சிதைவு செய்யப் போய்... அடுத்த கிழமையே நோயில விழுந்தாள். பிறகு ஆளையே காணோம்...'

'உங்களில் ஒருத்தராவது டாக்டருக்கிட்டப் போறதைப் பற்றிச் சிந்திக்கவில்லையா?'

'உங்களுக்கென்ன பைத்தியமா? எங்க பகுதியில் இருக்கிற எல்லாருமே போலி டாக்கடருங்க... ஒருத்தனும் உண்மையாப் படிச்சவன் கிடையாது. ஊசியும் குளிசையும் கொடுத்து எப்படி சூனியத்தை இல்லாமலாக்கிறது?'

'செய்யப்பட்ட சூனியத்தை நீ திருப்பி விட்டது பக்கத்து வீட்டுச் சூனியக்காரிக்குத் தெரியுமா?'

'பத்பர்கஞ்ச் அம்மாவை விடத் தனக்குப் பெரிய சக்தி இல்லையென்று தன்னுடைய ஏரியாவுல உள்ளவங்க தெரிஞ்சுக்க அவள் விடுவாளா? அவளின் குடிசைக்குள்ள எல்லா இடத்திலயும் இரத்தம் இருந்துச்சு. அருவருப்பு வர்ர, இரத்தம் பட்ட புடவைத் துண்டுகளை நாங்க பார்த்தோம். அந்த வீட்டுக்குப் புதுசாக் குடிவந்தவங்க எல்லாத்தையும் போட்டு எரிச்சாங்க... தோஷம் கழியப் பூசை செய்தாங்க...'

நீர் உறுஞ்சும் துடைப்பத்தை முறுக்கிப் பிழிந்து விட்டு மீண்டும் துடைக்க ஆரம்பித்தாள்.

'ம்மா... டாக்டர்களால் ஏழைகளுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. அவங்களுக்கு எங்களைப் பற்றி என்னதான் தெரியும்? நல்லாச் சாப்பிடுங்கன்னு சொல்லுவாங்க. மருந்துத் துண்டுல விலையுயர்ந்த விற்றமின் எழுதித் தருவாங்க. எங்களால நல்லாச் சாப்பிட முடியுமென்டா எங்களுக்கு நோய்  வரவா போகிறது? என்ட கடைசிப் பிள்ளை பிறக்கிற விசயத்துல நான் ரொம்பக் கஷ்டப்பட்டன்'

அவள் இன்னொரு கதையைச் சொல்வதற்கு அடித்தளமிட ஆரம்பித்தாள்.

'முதல்ல சீமாப்பூரி துஷ்டன்ட மகளுடைய உடம்பு ரோமத்தை எரிச்சி அதைத் தேத்தண்ணிக்குள்ளே போட்டுத் துப்புக்கெட்ட ஹரனுக்குக் கொடுத்திருக்காங்க...

நான் சிரிக்க ஆரம்பித்தேன்.

'அப்போ அதை வச்சா காதல் வசிய மருந்து தயாரிக்காங்க...?'

'நான் சொல்லுறதைக் கேட்டுச் சிரிக்காதீங்க... பல தொலைக்காட்சி நாடகங்களில் இதைக் காட்டியிருக்காங்க. எப்படி இந்த வசிய மருந்து வேலை செய்யுதுன்னு...'

'அதெல்லாம் சும்மா கதைகள்தானே... அதையெல்லாம் நீ நம்பக்கூடாது...'

'ஏன் அப்படி? தொலைக்காட்சியில நீங்க சொல்லுற செய்திகளை விட எங்களுக்கு இது உண்மையாத்தான்  தெரியுது. சும்மா வெறுங் காத்துல ஏழைகளுக்கு அதைச் செய்வோம், இதைக் கொடுப்போம்னு செய்தியில சொல்லுறாங்க. முடிமெண்டா பிணத்தை மூடியிருக்கிற துணியையும் களவாடிக்குவாங்க...!'

'உன் கடைசிப் பிள்ளைப் பேறு பற்றிச் சொல்லிக்கிட்டிருந்தாய்...'

'ஆமா... ஆமா... மூணாவது பிள்ளை பிறந்ததுக்குப் பிறகு ஹரன் அவருக்கு கர்ப்பத்தடை ஆப்பரேசன் பண்ணிக்கிட்டாரு. நீங்க ரெண்டு பேரும் இன்னொரு பிள்ளை பிறக்குமெண்டு கவலைப்படத் தேவையில்லையென்டு டொக்டர் நோனா சொன்னாங்க... இங்கே கிஷன்கார் ஆறுமாதிரி நான் வாந்தியெடுத்துக்கிட்டிருந்தேன். நான் கர்ப்பமாகிட்டேன் போல இருக்குதுன்னு ஹரனுக்கிட்டச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துச்சு... கையில கிடைச்சதை எடுத்து எனக்கு அடிச்சாரு... பக்கத்துப் பொம்புளைங்க எல்லாம் ஒடிவந்தாங்க... எனக்கும் இன்னொருத்தனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்டு என்ட மூத்த பிள்ளையின் தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணியும் எல்லாரும் சிரிச்சாளுங்க... பிறகு டாக்டருங்க சோதனை செஞ்சு பார்த்தாங்க.. ஏதோ ஒரு தவறு நடந்திருக்குது  இல்லைனெ;டா ஏதோ நடக்காம விட்டிருக்குது... நீ இப்போ பிள்ளை பெத்துக்கக் கூடிய ஆளாத்தான் இருக்கிறாய்ன்னு ஹரனுக்கிட்டச் சொன்னாங்க...'

'அப்போ ஹரன் உன்னிடம் மன்னிப் கேட்டானா?'

'மன்னிப்பா? அந்தாளா? ஹூம்.. பிறகு சீமாப்பூரித் துஷ்டன்ட மகளோட ஓடிப்போனாரு.. அப்புறம் அவள் கல்யாணங் கட்டிக்கிட்டாளாம். இப்போ அவள்ற வயிறு யமுனா நதியருகில் விளையுற  தர்ப்பூசனி மாதிரி இருக்குதாம் என்டு சொன்னாங்க.'

நான் சிரித்தேன். இது சிரிப்புக்குரிய விசயமல்ல என்ற போதும் நான் சிரித்தேன்.

'அதுக்குப் பிறகு என்ட சுமித்ரா அந்த வெறும்பயலோட தேத்தண்ணி குடிச்சாள். அப்புறம் மாப்பிளையைக் கைவிடுற முடிவுக்கு வந்தாள்.'

'சுமித்ராட கணவன் வயசானவனெண்டும் அவன் அவளைப்போட்டு அடிக்கிறதாகவும் கேள்விப்பட்டன். அவள் பிள்ளை வேணும் என்று விரும்பினாளாம்....'

'இல்லையில்லை.. அதெல்லாம் அப்பிடியொன்னும் கிடையாது. எல்லாமே சூனியக்காரிட வசிய மருந்து செய்த வேலை. எங்க ஏரியாவுல பிள்ளைகளால என்ன ஆகிறது. பிள்ளை இருந்தாலும் அடிதான் விழும். இல்லாவிட்டாலும் அடிதான் விழும். எப்படி இருந்தாலும் நரக வேதனைதான்!'

'அப்படியென்றால் சுமித்ரா டாக்டருக்கிட்டப் போயிருக்கலாந்தானே... போயிருந்தா அவளுக்கு....'

'டாக்டருக்கு என்னம்மா தெரியும்? எங்க ஆத்மாவுக்குள்ள இருக்கிறதை அவரால பார்க்க முடியுமா? பிடிச்சிருக்கிற தோஷத்தை அவரால விரட்ட முடியுமா? ஒன்று, உன்ட வயித்துல பிள்ளையிருக்குன்னு சொல்லுவாங்க.. இல்லாட்டி, அதை வெளியே எடுப்பாங்க...  எங்களைப் பீடித்திருக்கிற வலி என்னன்னு அவங்கால பார்க்க ஏலுமா?'

கௌரி புன்னகைத்தாள். தனது பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானாள்.

'இந்தப் பிள்ளை, அவட பெற்றோர் நாய்க் கல்யாணம் செய்தது சரிதான். அவங்களைப் பிடிச்சிருந்த சனியன் இப்போ திசை திரும்பியிருக்கும். இன்னும் கொஞ்ச நாளில எல்லாமே சரியாகிடும். சிலவேளை ஒரு நல்ல பையன் அந்தச் சின்னப் பொண்ணைக் கல்யாணம் முடிப்பான். என்னைவிட அவள் நல்லாயிருப்பாள்... நிச்சயமாக..!'

(யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட “குவார்னிகா” சிறப்பு மலரில் இடம் பெற்ற கதை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்