Friday, July 11, 2014

ஹைஃபாவுக்குத் திரும்புதல்


(1948ல் துரத்தப்பட்ட பலஸ்தீனர்கள்)

அலா அபூதீர்

மேற்குக் கரை நகரான நப்லஸில் உள்ள அயற்புறத்தில் மிக நீண்ட காலமாக நாங்கள் வசித்து வந்தோம். அன்பும், எளிமையும், வறுமையும் கொண்ட வாழ்க்கை. இருந்த போதும் எமது நிலத்தின் மீதிருந்த நேசமும் அங்கு வாழ்ந்த மக்களுக்கிடையிலான உறவும் மிகவும் ஆழ வேரூன்றியிருந்தது. பாரம்பரியப் பண்புகளையும் கலாசாரத்தையும் எந்தவொரு நிலையிலும் இழந்து விடாமல் அங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர்.

நான் பிறந்து வளர்ந்தது மற்றும் எனது சிறுபராயம் கழிந்தது எல்லாம் ஷெய்க் முஸல்லம் என்ற இந்தப் பழம்பெருங் குடியிருப்பில்தான். அந்தப் பிரதேசத்தின் வாழ்வின் ஞாபகங்களும் கதைகளும் மரணிக்கும் வரை நினைவை விட்டு அகலாதவை. குறிப்பாக எமது அயலில் வசித்த அபபூஅலாபத்தின் கதை எனது நெஞ்சைத் தொட்ட ஒரு கதையாகும்.

அபூ அலாபத் அங்கே ஓர் அகதியாகத்தான் வாழ்ந்தார். ஏனென்றால் அவரது சொந்த நகரான ஹைஃபாவிலிருந்து அவரைத் துரத்தி விட்டிருந்தார்கள். ஹைஃபாவைப் பற்றிப் பேசுவதை அவரால் ஒரு போதும் நிறுத்த முடியவில்லை. அழகு மிக்க ஹைஃபா நகரில் பிறந்து வளர்ந்த ஒருவரால் அவரது இளமை நினைவுகளை மீட்டாமல் எப்படித்தான் இருக்க முடியும்?

எமது அயலில் உள்ள ஓர் அறை கொண்ட வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் அபூ அலாபத் வாழ்ந்து வந்தார். பலஸ்தீனின் சிரமம் மிக்க வாழ்நிலை பற்றி அவர் அடிக்கடி எங்களுடன் கதைத்துக் கொண்டிருப்பார். 1948ம் ஆண்டு அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்படு முன்னர் மளிகைக் கடையாளராக வாழ்ந்திருந்தார்.

70களில் என்று நினைக்கிறேன். பல்வேறு சிறு பொருட்கள் கொண்ட ஒரு பழைய தள்ளுவண்டியைக் குறுகலான ஒழுங்கைகளுடாக அவர் மிகவும் சிரமப்பட்டுத் தள்ளிச் சென்று வியாபாரம் செய்து கிடைப்பவற்றில் தனது பிள்ளைகளுக்கு ரொட்டி வாங்கிச் செல்வது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவர் வயது முதிர்ந்தவர் மட்டுமன்றித் தீராத நோயாளியாகவும் இருந்தார்.

அக்கைவண்டியை அவரும் அவரது பிள்ளைகளும் தள்ளிக் கொண்டு பாதைகளுடாகச் செல்கையில் அவரது உற்சாகத்தையும் வாய் நிறைந்த சிரிப்பையும் கண்டிருக்கிறேன். அவரது குடும்ப வராலற்றில் அது ஒரு முக்கியமான திருப்பம்தான். அவர் ஹைஃபாவுக்குத் திரும்பிச் செல்லும் கனவில் அவ்வப்போது ஆழ்ந்து விடுவார்.

‘ஹைஃபா’தான் உலகத்திலேயே மிக அழகான நகரம் என்று தனது பேச்சுக்கிடையே அவர் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் ஹைஃபாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு முப்பதாண்டு கழிந்த போதிலும் தனது அயலவர்கள், வீதிகள், சந்தைகள் என்று சகல விபரங்களும் அவருக்கு ஞாபகம் இருந்தது. அவரால் ஒரு போதும் மறக்க முடியாதிருந்தது ஹைஃபாவில் அமைந்திருந்த அல்ஹம்றா சினிமாக் கொட்டகைதான். அது மட்டுமன்றி அக்காலத்தில் மிக முக்கியமான பலஸ்தீன நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஹைஃபாவும் அதன் கலாசார அம்சங்களும் அவர் நினைவில் இருந்தன.

அடிக்கடி எமது சிறிய கடைக்கு வந்திருந்து தனது நினைவுகளை மீட்டிக் கொண்டிருப்பார் அபூ அலாபத்.  யாஃபாவில் பிறந்த எனது தந்தையும் அபூ அலாபத்தைப் போல துரத்தியடிக்கப்பட்டவர்தான். இருவரும் தமது நினைவுகளை மீட்டிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல் ஹம்றா சினிமாக் கொட்டகையில் பரீட் அல் அத்ராஸ், முகம்மத் அப்துல் வஹாப் போன்ற எகிப்தியக் கலைஞர்களின் படங்களைப் பார்த்து ரசித்ததை அவரால் மறக்க முடியாதிருந்தது. அயலவர்கள் அவர் சொல்லும் சினிமாக் கதைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, அதனால் அலுப்புக் கொண்டதில்லை. காரணம் அவருக்கு அங்கு மிக்க கண்ணியம் இருந்தது. மக்கள் அவரை மிகவும் கனம் பண்ணினார்கள்.

அபூஅலாபத் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரம் தனது வீட்டில் உள்ள அனைவரையும் அமைதி காக்கக் கோருவார். அதுதான் அவர் லண்டன் பிபிசியின் செய்திகளைக்கேட்கும் நேரம். எந்த இக்கட்டுக்குள்ளும் இந்த நேரத்தை ஒரு புனிதமான நேரம் போல் அவர் கருதுவதுண்டு. செய்தித் தகவல்களை அவரிடமிருந்து அனைவரும் அறிந்து கொள்வார்கள். 1967ல் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவது பற்றிய பேச்சுவார்த்தை, சர்வதேச அமைதிக்கான மாநாடு, ஹென்றி கீசிங்கருக்கும் அமெரிக்க முக்கியஸ்தருக்குமிடையிலாக கலந்துரையாடல், லெபனானின் மீதான ஆக்கிரமிப்பு என்று பல்வேறு தகவல்களை அவரிடமிருந்து அறிய முடியும்.

செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் தனக்குள்ளே பேசிக் கொள்வதும் யாருக்கோ திட்டுவதுமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஹைஃபாவுக்கு மீண்டும் செல்லும் தனது கனவு நனவாகும் வகையில் ஒரு செய்தி வராதா என்ற எதிர்பார்ப்பு அவரை முழுக்க ஆட்கொண்டிருந்தது. அப்படி வாய்க்குமானால் அங்கு நின்று பரந்த கடலை ரசிக்க அவரால் முடியும். அல்கார்மல் மலைகளைப் பார்க்க முடியும். அல்ஹதார் குடியிருப்புப் பிரதேசத்துக்கும் அல்ஹம்றா சினிமாக் கொட்டகைக்கும் செல்ல முடியும். அவரது பால்ய காலத்தை மீட்டியபடி தனது சொந்தச் சுவர்க்கத்தில் நுழைய முடியும்.


ஹைஃபா

தினமும் செய்திகள் முடிந்ததும் எனக்குமிகவும் நிம்மதியாக இருக்கும். காரணம் செய்தி வாசிப்பவர் பழைய செய்திகளையே இழுத்து இழுத்து வாசிப்பதுதான். ஒரு நாள் அபூ அலாபத்திடம் கேட்டேன்:- “நீங்கள் ஏன் ஹைஃபாவுக்குப் போகக் கூடாது? நகரிலிருந்து டெல் அவிவுக்கும் ஹைஃபாவுக்கும் வாகனங்கள் போகத்தானே செய்கின்றன?”

அந்த வாகனங்களை இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அந்த நாட்களில் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு எவ்வித அனுமதியும் தேவைப்படவில்லை. வாகனச் சாரதிகள் “ஹைஃபா... டெல் அவிவ்... யாஃபா...!” என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருப்பார்கள். நப்லஸக்கும் இஸரேலிய நகரங்களுக்குமிடையில் இஸ்ரவேலர்களின் சோதனைச் சாவடிகளும் அப்போது கிடையாது.

அபூ அலாபத் சொன்னார்:- “அங்கு போவது சிரமமானது!”

என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதைகள் திறந்திருக்கின்றன, வாகனங்கள் சென்று வருகின்றன, நப்லஸிலிருந்து ஹைஃபாவுக்கு இரண்டே இரண்டு மணித்தியாலப் பயணத் தூரம்தான், அப்படியிருக்கும் போது இவரால் ஏன் செல்ல முடியாது? வாய் திறந்தால் ஹைஃபா பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்குத் தனது சொந்த நகரைப் பல ஆண்டுகளுக்குப் பின் சென்று பார்த்து வர முடியுமல்லவா?

அடிக்கடி மனிதர்கள் கனவுகளில் திழைக்கிறார்கள். நிதர்சனத்திலிருந்து விலகிக் கனவில் வாழ்வதையே விரும்புகிறார்கள். கனவுகள் மெய்யாவதிலிருந்து விலகி நிற்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள். தங்களது ஞாபகங்களை நினைவுகளாக இதயத்தில் சேர்த்து வைக்க விரும்புகிறார்களே ஒழிய பூமியில் பதிக்க விரும்புவதில்லை. பூமியில் பதித்து விட்டால் அதன் கீர்த்தி அழிந்து விடும்.

இனிமேலும் பலஸ்தீனுக்குச் சொந்தமில்லாமல் போய்விட்ட, தனக்குச் சொந்தமற்றதாக ஆகிவிட்ட நகரைக் காணும் போது தனது கனவு சிதைந்து விடும் என்று அவர் பயப்பட்டார். அந்த உண்மையும் வேதனையும் அவரைக் கொன்று விடும் என்று அவர் கலக்கமடைந்தார். எனவே ஹைஃபாவின் அழகு அன்று எப்படியிருந்ததோ அதே போல் மாறாமல் நினைவில் இருக்கட்டும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.

ஆண்டுகள் கழிந்தன... மறக்கப்பட்ட எங்கள் பிரதேசத்தில் எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு நாள் அபூ அலாபத்தின் மகன் தனது தந்தையைத் தேடி எமது கடைக்கு வந்தான். காலையிலிருந்து தந்தையாரைக் காணவில்லை என்றான். நாங்களும் அவரை எங்கும் தேடினோம். ஆனால் ஆள் அகப்படவேயில்லை.

மூன்றாம் நாள் நப்லஸ் பொலிஸ் நினையத்திலிருந்து ஒரு பொலிஸ்காரன் எமது பகுதிக்கு வந்தான். ஒரு அடையாள அட்டையை எனது தந்தையாரிடம் காண்பித்து, “இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆம்! எமது அயலவர்தான்.. எனது நண்பரும் கூட! மூன்று தினங்களாக அவரை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று எனது தந்தை அவனிடம் சொன்னார்.

“அவருடைய மகனை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள்!” - பொலிஸ்காரன் சொல்லிவிட்டுச் சென்றான்.

பொலிஸ் நிலையத்தில் அபூ அலாபத்தின் புதல்வர்களிடம் பொலிஸார் சொன்னார்கள்:-

“இது உங்கள் தந்தையாரின் அடையான அட்டை. நீங்கள் ரம்பாம் வைத்தியசாலைக்குச் சென்று அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்!”

வைத்திய அறிக்கைக் குறிப்பில் பின்வருமாறு காணப்பட்டது...

“இந்த அடையாள அட்டைக்குரிய நபர் ஹைஃபா வீதியில் நடந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் காலமானார்!”

பல ஆண்டுகள் நப்லஸில் வித்தியாசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அபூ அலாபத் தனது பால்ய நினைவுகளும் ஞாபகங்களும் ததும்பி வழியும் ஹைஃபாவைக் காணச் சென்றிருக்கிறார். ஹைஃபாவைப் பற்றியே சதாவும் எண்ணிக் கொண்டிருந்த இம்மனிதன் பிறந்த ஊரிலேயே மரணிக்கட்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருக்கலாம்.

ஹைஃபாவை அவரால் மரணம் வரை மறக்க முடியவில்லை. ஒருவரின் ஆத்மாவிலும் இதயத்திலும் ஒன்றிப் போன ஒன்றை எப்படி மறக்க முடியும்? தனது கூட்டுக்குத் திரும்ப விரும்பும் புறாவைப் போலச் சிறகடித்து ஹைஃபாவையே எண்ணித் துடித்த அவரது இதயம் இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: