Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 3, 1990


- கலாநிதி அலவி ஷரீப்தீன் -


அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !

சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம்
எம் இதயங்களைப்  பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக் கலக்கி வைக்கும் !

சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி
கண்ணியக் காவியத்தைக் களங்கப்படுத்தி
குமர் தாத்தாமார்களின்
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின் முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள்  எழுதப்பட்டதை
ஆகஸ்ட் 3
எடுத்துச் சொல்லும் !

ஓந்தாச்சி மடத்தில் ஓங்கி அலறிய
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்;;;;;;
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில்
கண்டதுண்டமாய்  வெட்டி வீசப்பட்ட
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில்
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;..
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின் வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 3
மீண்டும் கிளறி
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !

எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில் சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி
எம் உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !

செல்வராசா மாஸ்டரும் சீனிக் காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன் தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள் உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !

தீபாவளி நாட்களில்
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 3
அமைதியாய்ச் சொல்லும் !

மியான் குளத்தில்  மஹ்மூது சாச்சாவும்
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !

வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற
பக்கத்து வீட்டு அச்சியின் குழந்தைகள் -
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.

எமது -
ஹூஸைனியா மஸ்ஜிதின்  
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் -
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால்
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !

'ஸஜ்தா'விலும்
'ருக்கூ'விலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 3
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 3
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!

இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்....
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்ராவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில்
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்

வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்த
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை
இறைநியதி வந்து
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று
இந்த ஆகஸ்ட் 3
அடித்துக் சொல்லும்

 (1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இரண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இந்தக் கவிதையை எழுதிய கலாநிதி அலவி ஷரீப்தீன் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவத்தில் தனது தந்தை, 5 வயதான தனது சகோதரன், மற்றும் உறவினர்கள் பலரைப் பறிகொடுத்தவர்.)




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: