Showing posts with label காணாமல் போனவர்கள். Show all posts
Showing posts with label காணாமல் போனவர்கள். Show all posts

Wednesday, May 8, 2013

நெருடும் நினைவுகள்!

எத்தனை தூரம்
அன்பாய் இருந்தோம்!

முன்பு இந்தச்
சின்னஞ்சிறிய வீட்டில் நாங்கள்
எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்!

ஒரு பாய்த்துண்டில்
ஒன்றாய் உறங்கினோம்
ஒரே கலயத்தில் ஒன்றாய் உண்டோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீட்டைச்
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்தோம்!
இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்தோம்...!

பனிமழை தூவும் பகல் நிலவிரவில்
பண்பொடு ஒன்றாய்ப் படுத்துக் கிடந்து
சின்னஞ சிறிய எங்கள் வீட்டின்
சிறப்பை உயர்வைச் சிந்தனை செய்தோம்...!

இருந்தாற் போலொரு இரவுப் பொழுதில்
விண் மீன் கூட விழிக்கவும் இல்லை -
எங்களில் ஒருவன் படுத்த இடத்தில்
தீ நாக்கொன்று திடீரென் றெழுந்தது!

நெருப்புச் சுட்ட நண்பன் தனது
குரல்வளை நரம்பு தெறிக்கக் கத்தினான்...
அருகே படுத்தவன் நெருப்பின் புகையில்
கண்களைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டான்..!
ஒன்றாய் இருசரும் ஒரே மூச்சுடனே
வீட்டிலிருந்து வெளியே பாய்ந்தனர்!

நெருப்புச் சுட்டவன் உடம்பிற் சிற்சில
இரத்தக் காயம் விழித்துப் பார்த்தது..
அருகே படுத்தவன் கைகளிலி கூட
இரத்தம் கசிந்தது... துடைத்துக் கொண்டான்...!

கூக்குரல் வீட்டை விட்டும் வெளியே
வந்தது... பலரை வியக்கச் செய்தது..
ஆச்சரியத்தால் அதிர்ந்து நின்றோம்!

எப்படி நடந்தது...?
இஃது நடந்தது எப்படி என்று
ஆய்வுகள் செய்தோம்!

விளைவாய் நாங்கள்
எங்களுக்குள்ளே எதிரிகளாயினோம்!

சின்னஞ் சிறிய எங்கள் வீடு
போர்க்களமானது... அடிக்கடி புகைந்தது...

எத்தனை தூரம் அன்பாய் இருந்தோம்...

சின்னஞ்சிறிய எங்கள் வீட்டை
சிதைக்க யாரும் சேர்ந்து வந்தால்
உதைப்பது என்று உறுதிகள் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்..

இயலாமையால் இடர்பட நேர்கையில்
சாவது என்று சத்தியம் செய்த
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில்...

ஆத்மா கிடந்து அடித்துக் கொள்ள
அழுகை கண்ணைக் கீறித் துளும்பும்!

சாத்தியமில்லா நினைவுகள் அவைகள்!

இனிமேல்.. இனிமேல்...
கனவுகள் அவைகள்!

(21.07.1985ல் எழுதப்பட்ட இக்கவிதை “காணாமல் போனவர்கள்” என்ற எனது முதலாவது கவிதைத் தொகுதியில் முதற்கவிதையாக இடம்பெற்றுள்ளது)