Samuel Shimon
சென்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஸ்தெப்பன்வூல்ஃப்
- சாமுவெல் ஷிமொன் -
டிஸம்பர் 1999ம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். ஜேர்மன் எழுத்தாளர் ஹேமன் ஹஸ்ஸே எழுதிய ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலின் புதிய நேர்த்தியான பதிப்பு அங்கு விற்பனைக்கிடப்பட்டிருந்தது. பிரதியொன்றின் விலை ஒரு பவுண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த அந்த நாவலின் மூன்று பிரதிகளை நான் வாங்கிக் கொண்டேன்.
விமானத்தில் அதை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்கன் எயார்லைன் வழங்கிய உணவையும் பானத்தையும் அதிகம் உட்கொண்டதால் நித்திரை மயக்கமாக இருந்ததை உணர்ந்தேன். எனவே நாவலை அருகே வைத்துவிட்டு ‘ஐ கொட் மெய்ல்’ என்ற என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அந்தப் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. டொம் ஹென்க்ஸ் போன்ற அதிசிறந்த நடிகர் சலிப்பு ஏற்படுத்தும் அந்தப் படத்தில் நடித்திருப்பதையிட்டுக் கவலையாக இருந்தது.
எனக்கு அருகேயிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பார்வை ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் பதிவதை அவதானித்த நான் ‘அதைப் படிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். ஒரு பெரிய புன்னகையை என்னை நோக்கிச் சிந்திய அப்பெண்மணி சொன்னார்:-
“நிச்சயமாக.... ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ போன்ற நாவலை மீண்டும் படிக்கக் கிடைப்பது மகிழ்ச்சிதானே!”
அந்த நாவலின் பிரதியை அவருக்குக் கொடுத்துச் சொன்னேன்:-
“இதை நீங்கள் எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எனது பிரயாணப் பைக்குள் நான் இன்னும் இரண்டு பிரதிகள் வைத்திருக்கிறேன்.”
“இதே புத்தகமா?”
- அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
“ஆம்... இதே புத்தகம்!”
நிவ்யோர்க் வந்தடைந்ததும் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலஸ்தீனக் கல்வியியலாளரான எனது நண்பரைச் சந்திப்பதற்காக மத்திய ரயில் நிலையத்திலிருந்து நியூஹெவன் செல்லும் ரயிலைப்பிடித்தேன். அது ஒரு தூரப் பயணமல்ல. எனவே வாசிப்பதற்குப் பதிலாக நிவ்யோர்க்கின் புறகர்ப் பகுதிகளைக் கண்டு ரசிப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.
இரண்டு தினங்களுக்குப் பிறகு ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ எனக்கு ஞாபகம் வந்தது. எனது பைக்குள் இருந்த இரண்டு பிரதிகளில் ஒன்றை எடுத்து யேல் பல்கலைக்கழகப் பூங்காவில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு பல்கலைக் கழகத்தின் யூதக் கற்கைகளுக்கான பிரிவுக்குள் நுழைந்து அதன் தலைவரைச் சந்தித்தேன். ஒரு நாளைக்கு முன்னர் எனது பலஸ்தீன் நண்பருடன் அவரைச் சந்தித்த போது என்னை மதிய விருந்துக்கு அவர்அழைத்திருந்தார்.
மாணவர் உணவகத்தில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் மேசை நடுவில் கிடந்த ஹேர்மன் ஹெஸ்ஸேயின் நாவலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது ஒரு மிகச் சிறந்த நாவல் என்றும் அதன் எழுத்து நட்பமும் உத்தியும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் சொன்ன அந்த மாணவன் அந்நாவல் முதலில் 1924ல் வெளியிடப்பட்டதென்றும் 1926ல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்றும் சொன்னான். அவனது ஆர்வத்தை மெச்சிய நான் அப்பிரதியை அவனுக்குக் கொடுத்துச் சொன்னேன்:-
“நான் வீட்டில் இன்னொரு பிரதி வைத்திருக்கிறேன்.”
என்னிடமிருக்கும் பிரதியை யாருக்கும் கொடுப்பதில்லை என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.
நியு ஹெவனில் எனது கடைசி நாள் இரவு நோர்வேஜியக் கல்வியியலாளர் வீட்டில் கழிந்தது. நான் சென்பிரான்ஸிஸ்கோ செல்வதை அறிந்த அப்பெண்மணி, நிவ்யோர்க்கிலிருந்து ரயில் மூலம் சென்பிரான்ஸிஸகோ செல்வது ஒரு ஆனந்தமான பயணமாக இருக்கும் என்று சொன்னார். மூன்று அல்லது நான்கு நாள் பயணமானது கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை போவது என்று என்றார்.
“குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நகரங்கள், கிராமங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். எட்டு மாநிலங்களின் நதிகளைக் கடந்து செல்லும் இன்பமான பயணமாக இருக்கும்.”
மகிழ்ச்சி தரும் தூர ரயில் பயணத்தை நினைத்துக் கொண்டு ‘நிவ்யோர்க்கிலிருந்து சென்பிரான்ஸிஸ்கோ செல்ல நான் வைத்திருக்கும் விமானப் பயணச்சீட்டை நான் என்ன செய்வது?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். சில கணங்கள் தயங்கியபின்னர் பென்சில்வேனியா ரயில் நிலைய பாருக்குள் நுழைந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பாரிலிருந்து வெளியேறிய நான் விமானப் பயணச் சீட்டைக் கிழித்தெறிந்தேன்.
“நான்கு நாட்களில் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ படிப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.”
அப்படித்தான் நான் நினைத்தேன்.
ரயிலில் நான் அமர்ந்ததும் எனக்கேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிப்பது கடினமானது. கடந்த காலங்களில் ஹொலிவூட் படங்களில் மிக நீளமான புகையிரதங்களைக் கண்டு ரசித்திருக்கிறேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தில் பார்ப்பதுபோலவே கண்முன்னால் தெரியும் பென்ஸில்வேனியா புகையிரத நிலையத்தையும் பிரயாணிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளம் பெண் நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் ஆசனத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு லத்தீன் அமெரிக்க முகபாவம் கொண்ட ஒரு பெண் - இளம்பெண்ணின் தாய்- கண்ணீருடன் ஜன்னலூடாக தனது மகளை முத்தமிட்டாள். மகளிடம் அப்பெண் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தாள். அந்த இளம்பெண் விவாகரத்துச் செய்து பிரிந்திருக்கும் தனது தந்தையிடம் செல்கிறாள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.
“கலிபோர்னியாவில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்... நிவ்யோர்க்கில்தான் நான் வளர்ந்தேன்.”
- ஜெனிஃபர் என்னிடம் சொன்னாள்.
“பார்த்து... பார்த்து... கவனமாக...!”
ரயில் நகர ஆரம்பித்ததும் முகத்தை ஜன்னலோடு சேர்த்து வைத்துக்கொண்டிருந்த தனது தாயாரைப் பார்த்துச் சத்தமிட்டு எச்சரித்தாள் அந்த இளம் பெண். பென்ஸில்வேனியா ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்த புகையிரதம் அமெரிக்காவின் நீளிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இடவசதி மிக்க ஆசனத்தில் அமர்ந்தபடி என்னிடமிருந்த ‘ஸ்டெப்பன்வூல்ஃப்’ இறுதிப் பிரதியை எடுத்து விரித்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். ஆபிரிக்க அமெரிக்க இளைஞனொருவன் திடீரென எமது ரயில் பெட்டிக்குள் நுழைந்தான். இருபது வயது மதிக்கத்தக்க அவன் மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தான். ரயில் பெட்டிக்குள் இருப்போரின் முகங்களைப் பார்த்தவாறே திரும்பத் திரும்ப ரயில் பெட்டிக்குள் நடந்தபடி பொதுவில் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்றும் நூல்களை வெளியிடுவது சிரமமான விடயம் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னான்:-
“வெளியீட்டாளர்கள் ஒரே மாதிரியான எழுத்தாளர்களின் மோசமான புத்தகங்களையே அச்சிட்டு வெளியிடுகிறார்கள்.”
நடிகர் Sidney Poitier ரின் இளவயதுத் தோற்றத்தை அவனில் நான் கண்டேன். பயணிகள் விரும்பினால் தனது கதைகளில் சில பகுதிகளைப் படித்துக் காட்டுவதாகவும் அவற்றை நாங்கள் மிகவும் விரும்புவோம் என்றும் சொன்ன அவன் அதற்குப் பகரமாக நாங்கள் விரும்பினால் மட்டும் சிகரட் வாங்குவதற்காக - அதிகமாக இல்லை - சில நாணயங்களைத் தந்தாலே போதும் என்றும் சொன்னான்.
தனது கையில் வைத்திருந்த நூலைத் திறந்து படிக்க ஆரம்பித்தான். முதல் வசனத்திலேயே எமது கவனத்தைக் கவர்வதற்காக நாடகப் பாணியில் அந்த வசனத்தைப் படித்துக் காட்டினான். பயணிகள் கண்களை உறுத்துப் பார்த்தபடி உறுதியான குரலில் அவன் அதைப்படித்துக்காட்டியது உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. அவன் வாசித்துக் காட்டிய வசனங்கள் இவைதாம்:-
“நான் கையில் பிடித்திருந்த குவளையில் வீட்டுச் சொந்தக்காரி மீண்டுமொருமுறை நிரப்ப விரும்பினாள். நான் எழுந்துகொண்டேன். இன்னும் அருந்துவதற்கு எனக்கு வைன் தேவையில்லை. நட்சத்திரங்களினதும் மொஸார்ட்டினதும் தங்கத் தடயம் பிரகாசித்துக் கொண்டிருக்க அழிவற்ற ஒரு நிலையை நான் உணர்ந்தேன். வெட்கமோ, பயமோ சித்திரவதை அவஸ்தையோ இல்லாமல் ஒரு மணிநேரம் என்னால் மூச்சு விட்டு நிலைக்க முடிந்தது.
குளிர்ந்த தென்றல்காற்று மழையைத் துரத்திக் கொண்டிருக்க யாருமற்ற தெருவில் நான் இறங்கினேன். தெருவிளக்குகளில் விழுந்த மழைத்துளிகள் கண்ணாடித் துண்டுகளைப் போல் சிதறி விழுந்து கொண்டிருந்தன. இனி, இப்போது... எங்கே போவது...?”
ஒரு கணத்தில் இந்த வசனங்கள் எனக்குப் பரிச்சயமற்றவையல்ல என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதே போன்ற வரிகளைச் சற்று நேரத்துக்கு முன்னர் எங்கேயோ படித்த்தான உணர்வு. எனது ஆசனத்தில் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தேன். இளைஞன் தொடர்ந்து வாசிப்பதைச் சற்று நிறுத்திவிட்டுத் தனது பெயர் ஹரி ஹொல்லர் என்று சொன்னான். அந்த இளைஞன் வாசித்த வரிகள் ‘ஸ்தெப்பன்வூல்ஃப்’ நாவலில் உள்ளவை என்பது சந்தேகத்துக்கிடமின்றி எனக்குப் புரிந்தது.