Showing posts with label ilukkiya manadu - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label ilukkiya manadu - ashroff shihabdeen. Show all posts

Saturday, May 14, 2011

அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடா? இழிக்கிய மாநாடா?

முன் குறிப்பு-

இந்தப் பதிவு ஏற்கனவே இடப்பட்டுப் பலரால் படிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்குள் சர்வதேச ரீதியாக ப்ளாகரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமல் போயிருந்தது. ப்ளாகரில் பதிவிடும் பலருக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தது. ப்ளாகர் நிறுவனம் அப்பதிவுகளை மீண்டும் தர முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. அது வரும் போது வரட்டும். இப்போதைக்குப் படிக்காதவர்கள் படித்துப் பல்லைக் கடித்து இன்புறட்டும் என்று இதை மீள்பதிவிடுகிறேன்.

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.01

மாலை நேரத் துவக்க நிகழ்ச்சிக்கு நாங்கள் மலேசிய பாரம்பரிய உடையணிந்து சென்று சேர்ந்தோம். எங்கள் நாட்டு அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேலுவும் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அவரோடு இந்திய, இலங்கை அமைச்சர்களும் துவக்க விழாவில் பேசினார்கள்.

மாநாடு எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது என்பதை அழகாக மாநாட்டு மேடையில் எழுதி வைத்திருந்தார்கள். ‘இதயங்களின் இணைப்புக்கு’ இந்த மாநாடு என்ற வரிகள் மேடையில் ஒய்யாரமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இறுதி வரை அங்கு எந்த இணைப்பும் இல்லை, பிணைப்பும் இல்லை என்பதை இங்கு நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துவக்க விழாவிலேயே இந்த மாநாடு எப்படி நடக்கப் போகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் கோடிட்டுக் காட்டி விட்டார்கள். அவர்கள் மேடையில் அடித்த கூத்திற்கு இணை ஏதுமில்லை. எவரை முன்னிறுத்துவது? எவருக்கு முதல் நிலை? யார் அமைச்சர், யார் பிரமுகர் என்ற எந்த விவஸ்தையும் இல்லாமல் அவர்கள் ஆள்மாற்றி, பெயர் மாற்றி அமைச்சர்களின் மரபுகளை மாற்றிக் கூப்பிட்டு பொன்னாடைகள் அணிவித்தார்கள். (இலக்கிய மாநாடு என்பதற்குப் பதில் அனைத்துலக பொன்னாடை போர்த்தும் மாநாடு என்று கூடப் பெயர் வைத்திருக்கலாம். முதலிலிருந்து இறுதி வரை எது நடந்ததோ இல்லையோ போர்வைகள் போர்த்துவது மட்டும் இறுதி நாள்வரை நிறுத்தவே இல்லை. அதைக் கூட ஒழுங்கில்லாமல் சொதப்பி இருந்தார்கள்.)

இந்தியர்கள் என்றால் நேரத்தின் அருமை தெரியாதவர்கள் என்ற வழக்கு வழி உலகெங்கும் நிலவுகிறது. அதை அப்படியே மெய்ப்பித்தார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தரங்கு ஆரம்பமானது. மாலை நான்கு மணியிலிருந்து அரங்கில் அமர்ந்திருப்பவர்களின் நிலைமையைப் பற்றி யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பிறகு நல்ல பேச்சாளர்களை பேச வைத்தாலும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை. ஒரு நல்ல நிகழ்ச்சியை முற்றிலும் அப்படியே வீணடித்தார்கள். மனம் நொந்து போய்த் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் புதுக் கல்லூரிக்குச் சென்றோம். துவக்க நிகழ்ச்சி என்னவோ நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு எந்த ஆய்வரங்கம் எங்கு நடக்கிறது என்ற விபரப் பலகையோ ஒழுங்கான வழிகாட்டுதலோ இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள் பேராளர்கள். கடுமையான வெய்யில் ஒரு புறம். ஆய்வரங்கங்களைத் தேடும் பணி மறுபுறம். வழிகாட்டுவதற்கு ஒரு சில தொண்டூழியர்களைக் கூட அவர்கள் நியமிக்காதது கண்டு வேதனைப்படுவதா அல்லது குற்றம் சுமத்துவதா என்று தெரியவில்லை. கடமைக்காக எதையோ செய்து விட்டுப் போனார்கள்.

விருந்தோம்பல் என்பது மருந்துக்குக் கூட இல்லை. பேராளர்களை ஒரு பொருட்டாகக் கூட அவர்கள் மதிக்கவில்லை. இத்தனைக்கும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் - அவர்கள் அத்தனை பேரையும் பள்ளிப் பிள்ளைகளை விடவும் மோசமாக நடத்தினார்கள். வெப்பம் தகிக்கும் அறைகளில் அடைத்து ஒன்றரை மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து முடிக்க நிர்ப்பந்தித்தார்கள். கேள்வி கேட்கவும் விளக்கம் பெறவும் அறவே வாய்ப்புத் தராமல் முடித்தார்கள்.

மதிய உணவு பற்றிக் கேட்க வேண்டாம். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஆட்டு மந்தைகளைப் போல் அந்தக் கல்லூரியின் தங்கும் விடுதிக் கேன்டீனில் அடைத்து உணவு தர முயன்றார்கள். அங்கிருந்த நிலைமையைப் பார்த்த போது இது சாப்பாட்டுக்குரிய இடமா அல்லது இலவசச் சாப்பாடு பெறும் போர்க்களமா என்று எண்ணத் தோன்றியது. என்னுடைய வாழ்நாளில் பல உள்நாட்டு வெளிநாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். இது போன்ற ஒன்றை நான் பார்த்ததில்லை. உணவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பேராளரும் (ஆண்கள் - பெண்கள்) உட்கார்ந்து உண்ணக் கூட இடமில்லாமல் மரத்துக்கு மரம் தாவி (நிழல் தேடி)க் கொண்டிருந்தார்கள். பலர் நின்று கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.