Saturday, May 14, 2011

அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடா? இழிக்கிய மாநாடா?

முன் குறிப்பு-

இந்தப் பதிவு ஏற்கனவே இடப்பட்டுப் பலரால் படிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்குள் சர்வதேச ரீதியாக ப்ளாகரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமல் போயிருந்தது. ப்ளாகரில் பதிவிடும் பலருக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தது. ப்ளாகர் நிறுவனம் அப்பதிவுகளை மீண்டும் தர முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. அது வரும் போது வரட்டும். இப்போதைக்குப் படிக்காதவர்கள் படித்துப் பல்லைக் கடித்து இன்புறட்டும் என்று இதை மீள்பதிவிடுகிறேன்.

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.01

மாலை நேரத் துவக்க நிகழ்ச்சிக்கு நாங்கள் மலேசிய பாரம்பரிய உடையணிந்து சென்று சேர்ந்தோம். எங்கள் நாட்டு அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேலுவும் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அவரோடு இந்திய, இலங்கை அமைச்சர்களும் துவக்க விழாவில் பேசினார்கள்.

மாநாடு எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது என்பதை அழகாக மாநாட்டு மேடையில் எழுதி வைத்திருந்தார்கள். ‘இதயங்களின் இணைப்புக்கு’ இந்த மாநாடு என்ற வரிகள் மேடையில் ஒய்யாரமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இறுதி வரை அங்கு எந்த இணைப்பும் இல்லை, பிணைப்பும் இல்லை என்பதை இங்கு நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துவக்க விழாவிலேயே இந்த மாநாடு எப்படி நடக்கப் போகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் கோடிட்டுக் காட்டி விட்டார்கள். அவர்கள் மேடையில் அடித்த கூத்திற்கு இணை ஏதுமில்லை. எவரை முன்னிறுத்துவது? எவருக்கு முதல் நிலை? யார் அமைச்சர், யார் பிரமுகர் என்ற எந்த விவஸ்தையும் இல்லாமல் அவர்கள் ஆள்மாற்றி, பெயர் மாற்றி அமைச்சர்களின் மரபுகளை மாற்றிக் கூப்பிட்டு பொன்னாடைகள் அணிவித்தார்கள். (இலக்கிய மாநாடு என்பதற்குப் பதில் அனைத்துலக பொன்னாடை போர்த்தும் மாநாடு என்று கூடப் பெயர் வைத்திருக்கலாம். முதலிலிருந்து இறுதி வரை எது நடந்ததோ இல்லையோ போர்வைகள் போர்த்துவது மட்டும் இறுதி நாள்வரை நிறுத்தவே இல்லை. அதைக் கூட ஒழுங்கில்லாமல் சொதப்பி இருந்தார்கள்.)

இந்தியர்கள் என்றால் நேரத்தின் அருமை தெரியாதவர்கள் என்ற வழக்கு வழி உலகெங்கும் நிலவுகிறது. அதை அப்படியே மெய்ப்பித்தார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தரங்கு ஆரம்பமானது. மாலை நான்கு மணியிலிருந்து அரங்கில் அமர்ந்திருப்பவர்களின் நிலைமையைப் பற்றி யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பிறகு நல்ல பேச்சாளர்களை பேச வைத்தாலும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை. ஒரு நல்ல நிகழ்ச்சியை முற்றிலும் அப்படியே வீணடித்தார்கள். மனம் நொந்து போய்த் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் புதுக் கல்லூரிக்குச் சென்றோம். துவக்க நிகழ்ச்சி என்னவோ நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு எந்த ஆய்வரங்கம் எங்கு நடக்கிறது என்ற விபரப் பலகையோ ஒழுங்கான வழிகாட்டுதலோ இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள் பேராளர்கள். கடுமையான வெய்யில் ஒரு புறம். ஆய்வரங்கங்களைத் தேடும் பணி மறுபுறம். வழிகாட்டுவதற்கு ஒரு சில தொண்டூழியர்களைக் கூட அவர்கள் நியமிக்காதது கண்டு வேதனைப்படுவதா அல்லது குற்றம் சுமத்துவதா என்று தெரியவில்லை. கடமைக்காக எதையோ செய்து விட்டுப் போனார்கள்.

விருந்தோம்பல் என்பது மருந்துக்குக் கூட இல்லை. பேராளர்களை ஒரு பொருட்டாகக் கூட அவர்கள் மதிக்கவில்லை. இத்தனைக்கும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் - அவர்கள் அத்தனை பேரையும் பள்ளிப் பிள்ளைகளை விடவும் மோசமாக நடத்தினார்கள். வெப்பம் தகிக்கும் அறைகளில் அடைத்து ஒன்றரை மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து முடிக்க நிர்ப்பந்தித்தார்கள். கேள்வி கேட்கவும் விளக்கம் பெறவும் அறவே வாய்ப்புத் தராமல் முடித்தார்கள்.

மதிய உணவு பற்றிக் கேட்க வேண்டாம். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஆட்டு மந்தைகளைப் போல் அந்தக் கல்லூரியின் தங்கும் விடுதிக் கேன்டீனில் அடைத்து உணவு தர முயன்றார்கள். அங்கிருந்த நிலைமையைப் பார்த்த போது இது சாப்பாட்டுக்குரிய இடமா அல்லது இலவசச் சாப்பாடு பெறும் போர்க்களமா என்று எண்ணத் தோன்றியது. என்னுடைய வாழ்நாளில் பல உள்நாட்டு வெளிநாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். இது போன்ற ஒன்றை நான் பார்த்ததில்லை. உணவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பேராளரும் (ஆண்கள் - பெண்கள்) உட்கார்ந்து உண்ணக் கூட இடமில்லாமல் மரத்துக்கு மரம் தாவி (நிழல் தேடி)க் கொண்டிருந்தார்கள். பலர் நின்று கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

முகம்மது (ஸல்) “உணவோ பானமோ நின்று கொண்டு அருந்தாதீர்கள். அமர்ந்து நிதானமாகச் சாப்பிடுங்கள்” என்று கூறியிருப்பதை நினைத்துப் பார்த்தேன். மாநாட்டை நடத்தும் முஸ்லிம்களான இவர்களுக்கு இந்த அடிப்படை கூடத் தெரியாதா? என்று எண்ணினேன். முஸ்லில்லாத எனக்கே இது அருவருப்பாக இருந்தது.

எங்கள் நாட்டைச் சேர்ந்த ஒட்டு மொத்தப் பேராளர்களும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள். எங்கள் பேராளர்களில் பெண்களும் இருந்தார்கள்.(சார்ட்டட் பேங்க்) இக்பால் எனும் எங்கள் மலேசியப் பேராளர் தனது மனைவியான எழுத்தாளர் உம்மு சல்மாவுடன் இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்து உடனடியாக அங்கிருந்த மலேசியர்களில் தனது காரில் எத்தனை பேரை அழைத்துச் செல்ல முடியுமோ அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். பெரஸ்மாவின் துணைத் தலைவரும் பெர்மிமின் தலைவருமான கமருல் ஜமான் பத்துக்கும் மேற்பட்டவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியில் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டு விட்டார். இதற்கு மேல் இவர்களை நம்ப முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு நாங்கள் வந்து விட்டோம்.

உணவுக்குப் பின்னர் அமைந்த ஆய்வரங்குகளும் கந்தர் கோலமாகத்தான் அமைந்திருந்தன. சரி வந்து விட்டோம். ஏதாவது விஷங்களை அறிவோம் என்று மாய்ந்து மாய்ந்து அரங்கங்களுக்குச் சென்றால் பெரிய பிரயோசனம் ஏதுமின்றி ஏமாற்றப்பட்டோம்.

மாலையில் நடந்த பொதுக் கூட்டமும் புஸ்வானம். மார்க்க அறிஞர்கள் என்று அழைத்தவர்கள் யாருமே இந்த மாநாட்டில் கலந்த கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்களாம். உள்ரூர் மக்களும் இந்த மாநாட்டை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை அங்கு பேசிப் பார்த்ததில் தெரிந்து கொண்டோம்.

அன்றிரவு உணவுக்கு பேர்மிம் பேரவைத் தலைவர் டாக்டர் சையித் இப்றாஹீம் பொறுப்பு எடுத்துக் கொண்டு எங்கள் அனைவரையும் தி.நகரில் உள்ள பெலிட்டா உணவகத்தில் இரவு உணவு வழங்கினார். அது சற்றே எங்களுக்கு ஆறுதலைத் தந்தது.

இறுதி நாள் நிகழ்ச்சி வழமைபோல் சொன்ன நேரத்துக்குத் துவங்காமல் இழுத்தடித்தார்கள்.

ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் ஒன்று கூடவா நன்றாக இல்லை என்று நீங்கள் கேட்கலாம். கவியரங்கம் தாமதமாகத் துவங்கினாலும் சுவையாக இருந்தது. வாலி, மேத்தா போன்றோர் அலங்கரித்தார்கள். இளம் கவிஞர்களும் சுவை படக் கவிதை வாசித்தார்கள்.

மொத்தத்தில் இலக்கியம் என்றிருந்தது 30 வீதம்தான். புகழ் மாலைகளும் துதி பாடல்களும்தான் அதிகம் கேட்டன. இலக்கிய மாநாடா அல்லது பிச்சைக் காரர் மாநாடா என்று கலைஞர் கலந்த கொண்ட இறுதி நிகழ்ச்சியைப் பார்த்த போது கேட்கத் தோன்றியது. மாநாட்டுச் செயலாளர் இதாயத்துல்லா கூனிக் குறுகி திருவோடு ஏந்திக் கலைஞரிடம் பிச்சை கேட்டது எங்களை மட்டுமல்ல, உள்@ர் முஸ்லிம்களையும் முகம் சுழிக்க வைத்தது.

இதில் எவராலும் ஜீரணிக்க முடியாத விஷயம், புதுக்கவிதையின் பிதா மகன் என்று உலகமெல்hம் போற்றிப் புகழும் கவிக்கோ அப்துல் ரகுமான் முஸ்லிம்கள் தங்கள் சின்னமாகக் கருதும் பிறையைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்தி நின்றது இன்றளவும் நினைத்துப் பார்க்கவே கூசுகிறது. நீங்கள் அந்த நாட்டுக் குடி மக்கள். உங்களுக்கு வாழ்வு தராத ஒரு கட்சியைத் தூக்கி எறிவது உங்கள் கடமையல்லவா?

இறுதி நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இதயத்துல்லாஹ்விற்கும் கவிக்கோவிற்கும் அருமையான பதிலடியை ஒருவர் தந்தார் என்றால் அவர் ராஜய சபை துணைத் தலைவர் ரகுமான் கான்தான். அவரது ஒவ்வொரு வாக்கியமும் செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது. அவரது ஆங்கில உரையில் இந்திய முஸ்லிம்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. பிறருக்கு ஓட்டுப் பிச்சை போடும் நிலையில் இருப்பதையும் தமது உரிமையை கேட்க எந்தத் தயக்கமும் இல்லை என்று பொட்டில் அறைந்தாற்போல் கூறினார். அவரது பேச்சில் ஆண்மை தெரிந்தது.

ஓர் அனைத்துலக மாநாட்டில் வெளிநாட்டு மந்திரிகள், பேராளர்கள் பிரமுகர்களின் எதிரில் இவ்வளவு கீழிறங்கிக் கேவலப்பட வேண்டுமா? இது இலக்கிய மாநாடா? இழுக்கிய மாநாடா? இங்கு இலக்கியம் இல்லை. அரசியல்தான் தெரிந்தது. மொத்த மாநாடும் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக நடத்தப்பட்டது தௌ;ளத் தெளிவாகத் தெரிந்தது.


நான் இலங்கையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அதன் அருகில் இந்த மாநாடு நெருங்கவே முடியாத தூரத்தில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. இலக்கிய மாநாட்டை இலக்கியம் வளர்க்கப் பயனபடுத்துங்கள். உங்கள் வளர்ச்சிக்காகப் பயன் படுத்திக் கொண்டு வரலாற்றில் அவப் பெயரைப் பதிந்து கொள்ளாதீர்கள்.

மிகுந்த மன வேதனையுடன்
எல்லா நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி முடிக்கிறேன்.
மலையாண்டி, கோலாலம்பூர், மலேசியா.


குறிப்பு: - 01
நீங்கள் படித்த சமநிலைச் சமுதாயம் இதழில் பிரசுரமாகியிருந்த இந்தக் கட்டுரையில் இந்தியா வந்திறங்கிய அன்று மலேசியர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத நிலையில் தங்குமிடத்தில் 8000 செலவில் ஹாஜி முகம்மது இக்பால் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டிருந்தார். கட்டுரையின் ஆரம்பப் பகுதி அவசியமின்மை கருதித் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பு - 2
மலேசியக் குழுவுக்கு அந்த மாநாட்டில் நடந்ததை விபரித்துள்ளார் கட்டுரையாளர். ஆனால் யார் எல்லாம் அதற்குப் பொறுப்பானவர்களோ அவர்களையே மலேசியர்கள் இன்று தமது விழாவுக்கு முன்னோடிகளாகக் கொண்டுள்ளனர் என்பதும் அவதானிப்புக்குரியது.

----------------------------------------------------------------------------------------

கவிக்கோவின் காதல்

நண்பர் எம்.ஏ.எம். நிலாமின் கட்டுரை வெளிவந்த அதே தினம் நவமணி பத்திரிகையில் ஒரு குறிப்பு வந்திருக்கிறது. இக்குறிப்பை மறைந்த மூத்த பத்திரிகையாளர் எம்.பி.எம். அஸ்ஹர் எழுதியிருந்தார். கவிக்கோவுக்குக் கம்பன் மீது காதல் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த அந்தக் குறிப்பு இதோ:

கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கம்பன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் நடந்த கம்பன் விழாவில் அவரே இதனை அறிவித்தார்.

கம்பன் மீது எனக்குக் காதல். அவரை மணமுடிக்கவும் ஆசைதான்.

இப்படிக் கூறினார் கவிக்கோ.

தமிழகத்தில் நடந்து முடிந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த கம்பன் விழாவில் கலந்து கொண்டார் கவிக்கோ.

அவருக்கு இங்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. வசதிகளும் குறைவின்றிச் செய்யயப்பட்டது.

ஆனால் தமிழக தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு இலங்கை முஸ்லிம் இலக்கியவாதிகள் முஸ்லிம் பிரமுகர்கள் சென்ற போது அவர்களது வசதிகள் தேவைகள் குறித்து கவிக்கோ கரிசனையே காட்டவில்லை.

----------------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பேராளர்களும் அறிஞர்களும் அவமானப்படுத்தப்பட்ட விடயம் தமிழ் மாநாடு முழுவதும் ஓர் அதிர்ச்சி அலையைத் தோற்றுவித்திருந்ததை நாம் அங்கிருக்கும் போதும் அங்கிருந்து வந்த போதும் பல நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

இந்த நிலையில் சமரசம் சஞ்சிகை மாநாட்டு ஏற்பாட்டாளர்களை (கவிக்கோ, கெப்டன் அமீர் அலி, இதாயத்துல்லா, சாஜஹான்)ப் பேட்டி கண்டது. அந்தப் பேட்டியில் அவர்கள் குற்றச் சாட்டுக்களை மறுத்திருந்தார்கள். அதில் கழகத்தின் பொருளாளரையும் குற்றம் சுமத்தியிருந்தார்கள். அந்தப் பேட்டியோடு சேர்த்து கழகப் பொருளாளராகவிருந்த ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனிடமும் கருத்தைப் பெற்றுப் பிரசுரித்திருந்தார்கள். (16 - 30 ஜூன் 2007)

ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் தெரிவித்திருந்த கருத்து:

திட்டமிட்டே என்னை ஓரங் கட்டினார்கள்

இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் கூறியிருப்பது போல் நான் மேடையில் அமர்ந்திருக்கவேயில்லை. பார்வையாளர் பகுதியில்தான் அமர்ந்திருந்தேன். மைக்கில் அவர்கள் என்னை அழைக்கவுமில்லை. இது எல்லோருக்கும் தெரியும். இடையில் யாரோ ஒருவர் என்னை மேடைக்கு அழைத்தார். நான் மறுத்து விட்டேன்.

மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு உள்நாட்டு பேராளர்களை நிர்வாகிகள் சரியாக உபசரிக்கவும் இல்லை. விருந்தோம்பல் செய்யவும் இல்லை. முஸ்லிம்களின் மிகச் சிறந்த பண்பே விருந்தோம்பல்தான். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

மாநாட்டு வேலைகளைத் துவங்கும் முன்பே வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அமைச்சர்கள் உள்ளிட்ட பேராளர்களை நாம் சரியான முறையில் வரவேற்க வேண்டும். பொறுப்பாளர்களான தலைவரோ செயலாளரோ அதைச் செய்திருக்க வேண்டும். மலேசியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்த அமைச்சர்கள் மற்றும் பேராளர்களை விமான நிலையம் சென்றோ அல்லது அவர்கள் தங்கும் ஓடடல்களில் சென்றோ பொறுப்பாளர்கள் யாரும் பார்க்கவில்லை.

எனவே நான் விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று அவர்களைத் தங்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்தேன். முன்னாள் சட்ட மன்றி உறுப்பினர் நிஜாமுத்தீன் மட்டும்தான் நான் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்கிணங்க விமான நிலையம் வந்து ஒத்துழைத்தார்.

சென்னையில் மாநாடு என்று முடிவான நேரத்திலே திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் கவிக்கோ அவர்களோ தனக்குப் பின்னால் ஒரு படையே இருக்கிறது, அவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் என்றார். ஆனால் அன்றைக்கு நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட வெளிநாட்டு உள்நாட்டுப் பேராளர்களையும் அமைச்சர் பெருமக்களையும் நாம் உரிய முறையில் வரவேற்று விருந்தோம்பல் செய்திருக்க வேண்டும். ஆனால் அத்தனை பேராளர்களும் மனம் வெதும்பிப் போய் நின்றனர். அவர்களுக்கான தங்குமிடம் சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை. இவ்வாறு வந்திருந்தோர் மனம் நொந்து கொண்டிருக்கும் போது நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் தரும் கௌரவத்தை ஏற்றுக் கொள்வது? எப்படி மகிழ்வுடன் வரவேற்புரை ஆற்றியிருக்க முடியும்?

ஒரு கட்டத்தில் திட்டமிட்டே நான் ஓரங்கட்டப்பட்டேன். காரணம், நிர்வாகிகளிடம் பொருhளர் என்ற முறையில் மாநாட்டுக்கு வரக் கூடிய பண விபரங்களை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். பேராளர் கட்டணத் தொகை மற்றும் விளம்பரத்திற்காகக் கிடைத்த தொகை மட்டுமே வங்கியில் இருந்தது. புரவலர்களிடமிருந்து வந்த தொகைக்கான விவரங்களை அவர்கள் எனக்குத் தெரிவிக்கத் தயாரில்லை. இந்நிலையில் செக்கில் கையெழுத்துப் போட்டு மொத்த செக் புக்கையும் எங்களிடம் தந்து விடுங்கள். நீங்கள் கணக்கை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் நான் ஒரேயடியாக எல்லா ஆவணங்களையும் செக் புக்கையும் தலைவரிடம் ஒப்படைத்து விட்டு வெளிவந்து விட்டேன். அதன் பிறகு அவர்கள் என்ன வசூல் செய்தார்கள், என்ன செலவு செய்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. நான் பெயருக்குத்தான் பொருளாளர்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்களிடையே ஆணவம்தான் தலை தூக்கி நின்றது. மாநாடுகளில் ஆணவம் தேவையில்லை. மரியாதையும் கண்ணியமும்தான் தேவை. தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்று ஒரு சிலரின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்தன. அநாகரிகமான அரசியல் விளம்பரம் அங்கு வெளிப்படையாகத் தெரிந்தது.


எனக்கிருக்கும் ஒரே வருத்தம் நீதியரசர் முமு.இஸ்மாயில் அவர்களாலும் பெரும்புலவர் சி.நெய்னார் முகம்மது அவர்களாலும் துவக்கப்பட்டு செய்யது முகம்மது ஹஸன் அவர்களால் வளர்க்கப்பட்டு பல மாநாடுகள் கண்ட “இலக்கியத்திற்காகவே அமைக்கப்பட்ட ஒரு கழகம்” ஓர் அரசியல்வாதியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே என்பதுதான்!

குறிப்பு: 1
அரசியல்வாதி என்று ஹாஜி ஏவி.எம். குறிப்பிடுவது இதாயத்துல்லாவை.

குறிப்பு: 2
ஆறாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தியவர்களுள் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீனும் ஒருவர். இந்த மாநாட்டுக்குப் போன போதுதான் இலங்கையில் ஒரு மாநாட்டை நடத்தும் ஆர்வமும் ஆசையும் நமக்கு உண்டானது.

குறிப்பு: 3
கெப்டன் அமீர் அலி இராணுவத்தில் சேவை செய்தவராம். நீங்கள் அவரை விஜயகாந்த் மாதிரி கெப்டன் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது!

குறிப்பு - 4 (புதியது)
கெப்டன் அமீர் அலி இராணுவத்தில் சேவை செய்தவர் இல்லையாம். கல்லூரி ஒன்றில் கடற்குழுவின் கெப்டனாக இருந்தவராம். இது விஜயகாந்த் விடயத்தை விட மோசமாக அல்லவா இருக்கிறது? இதுக்கெல்லாம் போய் தள்ளாத வயதிலுமா கெப்டன்னு சொல்லிக்குவாய்ங்க... நல்லாவா இருக்குது?
-----------------------------------------------------------------------------------------------

இலங்கையரின் அதிருப்திக் கட்டுரைகள் வருவதற்கு முன்னரே இலங்கையரைக் குறை சொல்லி இதாயத்துல்லாஹ் ஒரு கட்டுரையை ஜூன் 14 - 2007 அன்று சுடர் ஒளி பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார். இக்கட்டுரைக்கு டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் கொடுத்த பதில் அடுத்து இடம் பெறும். டாக்டர் ஜின்னாஹ்வின் கட்டுரையைப் படிக்கும் போதே இதாயத்துல்லாஹ் எதை எழுதியிருந்தார் என்பது புரிந்து விடும்.இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: