Monday, May 7, 2012

முடிவுக்கு வாரீர்! - புரட்சிக்கமால் கவிதை


இலங்கையின் புகழ்பூத்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் ‘புரட்சிக் கமால்’ எம்.எம்.சாலிஹ் அவர்கள். இறுக்கமும் அழகும் கொண்ட அவரது கவிதைகள் சமூக ஒருமைப்பாட்டைப் பேசுவதுடன் சமூகக் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுவன. எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கவிதைகளை அலுப்பில்லாமல் அவ்வப்போது திரும்பத் திரும்பப் படிப்பதுண்டு.

அவரது கவிதைகளில் முஸ்லிம் சமுதாயத்தின் பேச்சு வழக்கில் இழையோடும் அறபுச் சொற்கள் இயல்பாகவே இணைந்திருப்பதைக் காணலாம்.

 (முஸ்லிம் அல்லாத வாசக உள்ளங்களுக்காக கவிதையில் உள்ள அறபுச் சொற்களும் பொருளும்: துஆ - பிரார்த்தனை, ஈமான் - இறை நம்பிக்கை, ஹாமான் - இஸ்லாமிய வரலாற்றில் வரும் ஒரு பெரும் செல்வந்தர், ஜூம்ஆ - வெள்ளியன்று மதியம் நடைபெறும் கூட்டுத் தொழுகை, பக்கீர் - ஏழை, பிர்தௌஸ் - சுவர்க்கம், கபூல் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல், இபாதத் - வணக்க வழிபாடு)

கவிதையென்றால் பெண்ணில் காதலாகிக் கசசிந்துருகிக் கண்ணீர் விடுவது என்று மட்டுமே நினைத்தெழுதும் இளைய கவிராயர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

தொழில் வளம் துறைதோறும் கண்டு,
தோதுகள் பெருகிட வேண்டும்!
பழி தரும் யாசகம், வறுமை,
பசி, பிணி, பலாத்காரக் கொடுமை,
ஒளிபடும் முயற்சியில் செல்வர்
உறுபொருள் வெள்ளமாய் ஓடி
குழிபடும் பள்ளங்கள் பாய்ந்தே
குதூகலஞ் சூழ்ந்திட வேண்டும்!


சமுதாய தாகமே, சுவனம்
சமைத்திடும் துஆவென்று தேர்ந்து
இமையா துழைத்திடல் ஒன்றே
ஈமானின் செயற்பாடு என்பேன்!
சுமையான தன்னலச் சேற்றின்
சுரிதின்னும் சுகபோகம் விட்டு:
அமைவான நற்பணி பூண்டு
ஆன்மீக சுகம்பெற வேண்டும்!

Saturday, May 5, 2012

புதிய பாலங்கள் - கிண்ணியா ஒன்றுகூடல்


ஏப்ரல் விடுமுறையில் திருமலை மாட்டத்தில் இரண்டு தினங்கள் கழி(ளி)ப்பது என்று எனது குடும்பம் ஏகமனதாக முடிவெடுத்தது. இந்தப் பயணத்தில் முக்கியமான அம்சம் கிண்ணியாவுக்குச் செல்வது.

கிண்ணியா எனக்கும் பாரம்பரிய பூமி. எனது தாய்வழிப் பாட்டனாரான அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் கிண்ணியா நாச்சிக்குடாவில் பிறந்தவர். எனது இரத்த உறவுகள் வாழும் நிலம் அது.

நாளை அதிகாலை பயணம் என்றிருந்த நிலையில் பிற்பல் இந்தோனேசிய நில அதிர்வும் சுனாமி எச்சரிக்கையும் என்ற உயிரை அச்சுறுத்தும் செய்தி ஒலி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நில அதிர்வு இலங்கையையும் ஒரு முறை அசைத்துவிட்டுப் போயிருந்தது. ‘சுனாமி’ நிச்சயம் என்ற முடிவில் கரையோரத்தவர் தங்களிடங்களிலிருந்து அகன்றும் அகற்றப்பட்டும் கொண்டிருந்தனர்.

ஆசியப் பிராந்தியமே கலங்கிப் போயிருக்க நான் வெளிநாட்டுச் செய்தி அலைவரிசைகளில் மூழ்கியிருந்தேன். ‘சுனாமி’ தாக்கவில்லையென்றால் திட்டமிட்ட பயணத்தைத் தொடர்வது என்று நான் உறுதியாக இருந்தேன். பி.ப. 5.00 மணிக்கு இந்தியா ‘சுனாமி’ எச்சரிகையை மீளப் பெற்றுக் கொண்டது. எனக்குத் திருப்தி! ஆனால் இலங்கைத் தொலைக் காட்சிகளின் அறிவிப்பாளர்கள் முன்னிரவு வரையும் ‘கோர்ட் சூட்’ சகிதம் நாற்காலி போட்டு அமர்ந்து மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு இலங்கை ஊடகங்களுக்கு “பிறேக்கிங் நியூஸ்” கிடையாது. இப்படியொரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது அதை விடலாமா... என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

‘யாத்ரா’ கவிதை இதழின் முதலாவது அறிமுக ஒன்று கூடலைக் கிண்ணியாவில் நடத்துவதற்கு நானும் ‘யாத்ரா’ நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீனும் திட்டமிட்டிருந்தோம். ஆயினும் அத்திட்டம் நிறைவேறியிருக்கவில்லை. எனது குடும்பப் பயணம் பற்றித் தெரிந்து கொண்ட பர்வீன் ‘யாத்ரா’ ஒன்றுகூடலையும் இத்துடன் நடத்தி விடுவோம், நானும் கிண்ணியா வருகிறேன் என்று எனக்கு உற்சாகம் தந்தார்.

12. 04. 2012 அன்று பி.ப. 1.00 மணிக்குக் கிண்ணியாவை அடைந்தோம். சகோதரர் பத்தீஸ் அவர்களின் சகோதரி பிர்தௌஸியா வீட்டில் பகல் விருந்து. சகோதரர் பத்தீஸ் கிண்ணியாவிலிருந்து நாம் திரும்பும் வரை உறுதுணையாக எம் கூடவே இருந்ததை மறக்க முடியவில்லை. நாம் அங்கு வந்தது அறிந்ததும் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களும் கவிஞர் நஸ்புல்லாஹ்வும் நேரே வந்து சந்தித்ததுடன் மாலை கிண்ணியா கடற்கரையில் ‘யாத்ரா’ ஒன்று கூடலை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள்.


அஸர் தொழுகைக்குப் பின்னர் எமது ஒன்றுகூடல் ஆரம்பமாயிற்று. கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். குறுகிய அழைப்பின் பேரில் நேயம் நியாஸ், எம்.எம். அலி அக்பர், எம்.ஈ.எச். தௌபீக், ஏ.நஸ் புள்ளா, நாஸிக் மஜீத், ஜே.பிரோஸ்கான், ஐ.இர்ஷாத், எச்.எம். ஹலால்தீன், பி.ரி. அஸீஸ், ஏ.கே. முஜாரத், எம்.ரி. சஜாத், ஹஸன்ஜி, சத்தார், நிஸார் முகமட், எப். பதீஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கடற்கரையில் சதுர வடிவில் பாய்களை விரித்து அமர்ந்துகொண்டோம்.

Wednesday, May 2, 2012

மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்


இலங்கையின் கடந்த கால உள்நாட்டுப் போரின் காரணமாகவும் பெரும்பான்மைச் சமூகங்களின் மேலாதிக்கம் காரணமாகவும் உண்டான நெருக்குவாரங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்து எதிர்க்குலாகவும் துயரக் குரலாகவும் வெளிப்பட்ட கவிதைகளும் அநீதிக்கு எதிரான குரல் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான பரிவில் ஏனைய இனக் கவிஞர்களினால் எழுதப்பட்ட கவிதைகளும் ‘மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாநாட்டுப் பேராளர்களுக்கும் வளவாளர்களுக்கும் வழங்கப்பட்ட இத்தொகுதி பரவலான எல்லைகளைச் சென்றடையவில்லை என்ற காரணத்தாலும் இத்தொகுதியை ஏதாவது ஒரு தேவை கருதிப் பெற விரும்புமொருவர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதாலும் இக்கவிதைத் தொகுதியை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஒரு சமூகாபிமானியின் நிதியுதவி கொண்டு மீள்பிரசுரம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இத்தொகுதியில் சேர்த்துக் கொள்வதற்கு உரிய வேளை கிடைக்கப் பெறாத பொருத்தமான கவிதைகளையும் 2009 வரை படைக்கப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்து இக்கவிதைத் தொகுதி வெளியிடப்படள்ளது.

தம்மாலோ மற்றவொரு நபராலோ எழுதப்பட்ட இத்தொகுதிக்குப் பொருத்தமான கவிதைகள் கைவசமிருப்பவர்கள் அக்கவிதை வெளிவந்த பத்திரிகை அல்லது சஞ்சிகையை உறுதிப்படுத்தும் விதத்தில் புகைப்படப் பிரதியெடுத்துப் பிரதான தொகுப்பாளரின் பின்வரும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ASHROFF SHIHABDEEN
37, Sri Sidhartha Mawatha,
(Dhankanatta Road)
MABOLA,
WATTALA,
SRI LANKA.

Friday, April 27, 2012

ராஜ ராஜேஸ்வரி!


ஜீரணமாகாத உணவு வயிற்றில் அவஸ்தையை ஏற்படுத்துவது போல சிந்தையின் நிம்மதியை அவ்வப்போது கலைத்துப் போட்டுக் கொண்டேயிருக்கிறது ராஜேஸ்வரி அக்காவின் இழப்பு.

ராஜேஸ்வரி அக்காவுடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியது மட்டுமல்ல, புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

அக்காவிடம் பல விசேட தன்மைகள் இருந்தன. நல்ல முன்மாதிரியான பண்புகள் இருந்தன. இவையும் அக்காவை உறவுகளில் ஒன்றாக மனது வரித்துக் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.

அக்காவிடம் எப்போதும் ஒரு Perfection ஐப் பார்த்து வந்திருக்கிறேன். அவரது அறிவிப்பு, நடிப்பு, உடை, உணவு, மற்றோருடனான உறவு - இவையெல்லாவற்றிலுமே அந்த முழு நிறைவு இருந்து வந்திருக்கிறது. இதை இன்னும் சொல்லப் போனால் அவரது எல்லா நடவடிக்கைகளிலுமே ஒரு நறுவிசுத் தன்மையும் அழகும் இருந்திருக்கிறது.
 


நல்லதை மனந்திறந்து பாராட்டுவது அவரது நற்பண்புகளில் ஒன்று. சிறப்பான ஒரு செயலை ஒரு சிறியவர், இளையவர் செய்தால் பெரியவர்கள் பெரும்பாலும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவ்வாறு பாராட்டுவதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். அது அக்காவிடம் இருந்தது. பாராட்டுவதோடு மட்டும் அவர் நின்று விடுவதில்லை. அதை மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வது அந்நற்பண்பின் உச்சம்.

ஓர் இரவுச் செய்திக்குப் பிறகு நான் வாசித்த மரண அறிவித்தலில் ‘அழகு மீனாள்’ என்றொரு பெயர் வந்தது. அடுத்த நாள் என்னைக் கண்ட வேளை, “அழகு மீனாள் எப்படியிருப்போளோ தெரியவில்லை... ஆனால் நீ அதை உச்சரித்த விதத்தில் அவள் பேரழகியாக என் மனதில் பதிந்து விட்டாள்” என்று சொன்னார். இதை ஒரு முறை சொன்னதோடு அவர் நிறுத்தி விடவில்லை. அவ்வப்போது சொல்லி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். இதுதான் எங்கள் அன்பான ராஜேஸ்வரி அக்கா!

Monday, April 23, 2012

“யாத்ரா” ஒன்றுகூடல் - கொழும்பு


ஏ.பி. மதன்
ஆசிரியர் - தமிழ் மிரர்

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் பற்றி மும்முரமாக பேசப்படுகின்ற இத்தருணத்திலே, யாத்ரா - 20 கவிதை, இலக்கிய சஞ்சிகை பற்றிப் பேசக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இலக்கிய உலகின் ஜாம்பவான்களினால் வெளியிடப்படுகின்ற சில சஞ்சிகைகள் உலகளாவியில் குறிப்பிட்ட சில வாசகர் மட்டத்தில் மட்டும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே.

இருப்பினும், இலக்கிய முன்னோடிகளின் வழிகாட்டல்களுடன் இலக்கிய நுகர்வோர்க்கு வழிகாட்டியாக இருக்கின்ற சில சஞ்சிகைகளும் பல வாசகர்களின் இலக்கியப் பசி ஆற்றி வருகின்றமை சிறப்பானதாகும்.

யாத்ரா சஞ்சிகை, இவ்வளவு காலமும் பல்வேறுபட்ட கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகையூடாக கவியாற்றலுள்ள பல கவிஞர்களின் கைவண்ணங்களுக்கு களம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

கவி உணர்வுள்ள வரிகளை யாத்ராவின் ஆசிரியர் குழாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற போது தேர்ச்சிமிக்க கவிஞர்களால் அக்கவிதை புடம்போடப்பட்டு புத்துயிர் பெறுகின்றபோது கவியாத்த கவிஞர்களெல்லாம் மனங்குளிர்ந்து மகிழ்ந்ததினை மறந்துவிட முடியாது.

அஷ்ரப் சிகாப்தீனை நான் ஊடகப் பணிக்கு வந்த ஆரம்பக் காலங்களிலேயே அறிவேன். இலக்கிய பாண்டித்தியம் இல்லாத போதிலும் இலக்கிய நுகர்வோர் என்ற ரீதியில் அஷ்ரப் சிகாப்தீனின் படைப்புகளின் உயிரோட்டம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அப்படிப்பட்ட மொழியை வசப்படுத்தும் ஆற்றல்மிக்க ஓர் எழுத்தாளனால் யாத்ரா செதுக்கியெடுக்கப்பட்டமை சிறப்பானது.

கவிதைச் சஞ்சிகையாக மட்டும் இருந்த யாத்ரா இப்பொழுது இலக்கியச் சுவையுள்ள பல விடயங்களையும் உள்தாங்கி மீள்வருகை தந்திருக்கின்றமை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

பல சஞ்சிகைகளுடன்; சம்பந்தப்பட்டிருந்தவன் என்ற ரீதியில் ஒரு சஞ்சிகையின் பிரசவ வலி எனக்கும் நன்கு தெரியும். முதலீட்டு முதலாளிகள் முன்வரிசையில் காத்திருந்த போதிலும் முழுமையாக சஞ்சிகைகள் வெளிவராமல் போன வரலாறும் நன்கறிவேன்.

சுவையுள்ள சஞ்சிகை ஒன்று வருகின்ற சந்தோஷத்திலும் பார்க்க அச்சஞ்சிகை தொடர்ந்து வெளிவராமல் நிற்கின்ற போது சந்தோஷப்படுபவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் யாத்ரா சஞ்சிகை மீள் பிரசவமடைந்திருக்கின்றமை மன மகிழ்வைத் தருகின்றது. எனக்கு மட்டுமல்ல, இலக்கிய நுகர்வுக்காய் நொந்துபோய் காத்திருக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் இது இனிப்பான ஒரு விடயமே.

யாத்ரா 20 சஞ்சிகையின் உள்ளோட்டங்களை பார்க்கின்ற போது இந்நாட்டில் மேலும் பல இலக்கியவாதிகள் உருவாவது நிச்சயம் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது. தங்களுடைய புலமைகளை வெளிக்காட்டுவதிலும் பார்க்கப் பொத்திவைத்த ஆசைகளை கொட்டித் தீர்க்க இடமின்றி புழுங்கித் தவிக்கின்ற ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு யாத்ரா சஞ்சிகையின் மீள் வருகை நிச்சயமாய் புண்ணியமாகும்.

எழுத்து நுகர்வாளர்களை எழுத்துலகில் எழுந்துநிற்கத் தூண்டுபவர் கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன். அவரோடு கைகோர்த்திருக்கின்ற இளம் கவிஞர்களும் புது யுகத்தில் புன்னகைப் பூக்களாய்த் திகழுபவர்கள். அதிகரித்த தொழில்நுட்ப அவசரத் தேவையில் ஆற அமர்ந்து அலாதியாய்ப் பயணிக்கும் ஆற்றல்மிக்க இளைஞர் கூட்டம் இப்போது யாத்ராவோடு கைகோர்த்துள்ளது.

எனவே இம்முயற்சி, இலங்கை இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடமொன்றினை வகுத்துக்கொள்ளுமென்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கிருக்கின்றது. திறமையுள்ளவர்களை இனங்கண்டு அத்திறமைகளுக்கு களம் கொடுத்து அவர்கள் ஆழ்மனதின் அழுத்தங்களை நிவர்த்திசெய்து பக்குவமடைந்த இலக்கியவாதிகளால் மிளிருவதற்கு அழகான, உறுதியான அச்சாரமாக யாத்ரா விளங்கியிருக்கின்றது, விளங்கும்.

நன்றி,

இப்படிக்கு என்றென்றும் அன்புடன்,
ஏ.பி.மதன்

“யாத்ரா” ஒன்றுகூடற் காட்சிகள்”


“யாத்ரா” இதழை பிரதம அதிதி வழங்க புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.



தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத், அறிமுக உரை திரு. அந்தனி ஜீவா

Tuesday, April 17, 2012

உள்ளந் திறந்து...

அன்பிற்கினிய வாசகர்களுக்கும்


இலக்கிய நெஞ்சங்களுக்கும்.....
எல்லாமே மாறும் என்பது மட்டுமே மாறாத விதி என்பதற்கொப்ப 'யாத்ரா"வும் மாற்றம் பெற்றிருக்கிறது. 21வது இதழிலிருந்தே மாற்றம் இடம் பெறும் என்று நாம் அறிவித்த போதும் இந்த 20ம் இதழிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டோம். மாற்றம் குறித்து ஒட்டியும் வெட்டியும் பலர் கருத்துத் தெரிவித்த போதும் மாற்றம்தான் விசாலமாக இயங்க வழிசெய்யும் என்று நினைத்தோம்.

கவிதைக்கென இப்போது பல இதழ்கள் வர ஆரம்பித்து விட்டன. எதிர்காலத்தில் இன்னும் பல இதழ்கள் வருவதற்கான சூழலும் சாத்தியமும் இருக்கின்றன. 'யாத்ரா" மாற்றமடைந்தாலும் கூடக் கவிதைக்கான முன்னுரி மையை அது எப்போதும் வழங்கி வரும்.

'யாத்ரா'வின் வருகை தடைப்பட்ட பிறகுதான் அதன் இடைவெளி பெரியது என்பது பலராலும் எமக்கு உணர்த்தப் பட்டது. ‘யாத்ரா’ 15வது இதழுக்குப் பிறகு அதன் வருகைக்காக நண்பர்கள் பலர் அவ்வப்போது பொருளாதார ரீதியாக உதவி வந்துள்ளனர். கவிஞர்களான டாக்டர் தாஸிம் அகமது, பொறியியலாளர் நியாஸ் ஏ சமத், பொத்துவில் பைஸால் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

‘யாத்ரா’வைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து அவ்வப்போது கூடிப் பேசுவதும் வெளியே சொல்ல முடியாத சில காரணங்களால் முயற்சி தடைப்படுவதுமாகவே காலம் கழிந்தது. இவ்வாறான ஒரு சூழலில் பொருளாதார ரீதியாக ‘யாத்ரா’வுக்கு உதவுவதற்காக ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க சகோதரர் நாச்சியாதீவு பர்வீன் முன்வந்தார். ‘யாத்ரா’ வெளிவரத் தொடங்கிய காலம் முதல் ஓர் ஆத்மார்த்த தொடர்பை அவர் ‘யாத்ரா’வுடன் பேணிவந்துள்ளார். எனவே அவரது முயற்சிக்கு நான் வழிவிட்டதோடு மாத்திரமன்றி சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இயங்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். பல இளைய இலக்கிய இதயங்களை ஒன்றிணைத்துக் கொண்டு சஞ்சிகையை முன் கொண்டு செல்வதற்கான அவரது முயற்சி முதலாவது மைல் கல்லைத் தொட்டது. அதன் விளைவாகவே ‘யாத்ரா’ 20வது இதழ் உங்கள் கைகளை அடைந்திருக்கிறது.

‘யாத்ரா’வை மீண்டும் கொண்டு வருவதில் சில நல்லுள்ளங் கொண்டவர்கள் தங்கள் சக்திக்கு மீறிய பண உதவியைச் செய்துள்ளனர். அவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் வசிக்கும் இந்த நல்லுள்ளங்களின் உதவி கொண்டுதான் இந்த ஆண்டில் வெளிவரப்போகும் இதழ்கள் வெளிவரவுள்ளன.

‘யாத்ரா’ 17வது இதழ் வெளிவந்த பிறகு சஞ்சிகை ஆரம்பித்தது முதல் கடைசி வரை பெறப்பட்ட அனுபவங்களை அவ்வப்போது எழுதி வருமாறு ‘யாத்ரா’வின் இணையாசிரியர்களுள் ஒருவராக இருந்த கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா என்னை வலியுறுத்தி வந்துள்ளார். அதன் மூலம் ‘யாத்ரா’ பற்றிய தகவல்களை ஒருவர் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பது மட்டு மன்றி ‘யாத்ரா’வின் பின்னணியில் எவற்றைச் சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி எழுதிக் கொண்டு வரும் போது சஞ்சிகையின் வாழ்வும் சாதனையும் பதியப் பட்டு விடும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அத்துடன் அதுவரை தமிழ்க் கவிதை இதழ் என்ற வகையில் ஒரு சஞ்சிகை அளவில் எச்சஞ்சிகையும் 17 இதழ்களைத் தொட்டிருக்கவும் இல்லை என்பதும் அவதானிக்கத் தக்கது. ஒரு கூட்டத்தைக் கூட்டி நான்கைந்து பொன்னாடைகளைப் போர்த்திப் படம் எடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்குப் போதுமான காரணிகள் நிறைய இருந்தன. இனிப்பானதும் கசப்பானதுமான பல அனுபவங்கள் இருந்த போதும் குறிப்பிட்ட சில இதழ்கள் வெளியிடப் பட்ட நிலையில் பெரிதாகச் சாதித்து விட்டதாகப் பேசச் சங்கோஜமாக இருந்தது.

கவிஞர் ஸதக்கா இன்று எம்முடன் இல்லை!

Tuesday, April 3, 2012

எனது குளியற் கோப்பை


அது ஒரு பெரிய அலுமினியக் கோப்பை. காலையில் குளியல றைக்குள் நுழைந்ததும் அந்தக் கோப்பை எனது சிந்தனையைப் பல்வேறு கோணங்களுக்கு இழுத்துக் கொண்டு செல்லும்.

பெரிய பிளாஸ்டிக் வாளியில் நீர் நிறைத்து அள்ளிக் குளிப்பது எனது வழக்கம். அந்தக் காலத்தில் ஊரில் கிணற்று நீரைத் துலாவில் உள்ள வாளியினால் இறைத்துக் குளித்துப் பழகியவன் நான். என் வய தொத்த கிராமப்புறங்களில் பிறந்த ஜீவன்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். என்னதான் ‘மழைப் பைப்பு’ (shower)வில் மிருதுவாக நீர் உடலில் இறங்கினாலும் அள்ளிக் குளிக்கும் சுகத்தை அது தருவதில்லை. இளைய வயதில் இறைத்துக் குளித்துப் பழகியவர்கள் அந்த சிலிர்ப்பு மிக்க அனுபவங்களை இன்னும் வாயோயாமல் கதைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அந்தக் கோப்பையில் நீர் அள்ளி ஒற்றைக் கையினால் தூக்க முடியாது. பாரம் ஒரு காரணமாக இருந்த போதும் அந்தக் கோப்பையின் விளிம்பில் சுற்றி வரப் பத்து இடங்களில் உடைந்து அடிப்பகுதி நோக்கி அரை அங்குலம் , ஒரு அங்கும், ஒன்றை அங்குலம் எனக் கிழிந்து போயிருக்கிறது. மிக மென்மையான கனம் கொண்டதாகத் தயாரிக் கப்பட்டுள்ள அந்தக் கோப்பையை இருகரங்களாலும் பிடித்து நீரை அள்ளி ஒரு சிறு வயதுப் பிள்ளை குளிப்பது போல் நான் குளிப்பேன். அந்தக் கோப்பையின் கிழிசல்களின் நீளம் அதிகரித்தால் கோப்பை ஒரு கணத்தில் இரண்டு துண்டுகளாகி விடும்.

எனவே குனிந்து குனிந்து வாளிக்குள் இருக்கும் நீரை அள்ளுவேன். குனிந்து நிமிரவேண்டியேற்படுவதால் அது ஒரு நல்ல பயிற்சி என்று நினைப்பேன். தவிரக் குனிந்து பழகாவிட்டால் இக்காலத் தில் பிழைப்பதும் கஷ்டமாகி விடும். குனிய மறுப்பதால்தான் நாட்டில் நிறையப் பிரச்சினைகள். குனிந்து நடக்கத் தெரிந்தவர்கள் மிகப் பெரும் வெற்றி பெற்றவர்களாகவும் செயற்றிறன் மிக்கவர்களாகவும் உலா வருகிறார்கள். குனிந்து நடந்து பழகி அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமக்கு முன்னால் மற்றவர்கள் குனிந்து நடக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் என்ன தப்பு இருக்கிறது?

அந்தக் கோப்பையை மாற்ற வேண்டும் என்று நீர் அள்ளிக் குளிக்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. ஆனால் குளியலறை யிலிருந்து வெளியே வந்தால் அந்த விடயம் மறந்து போய்விடுகிது. இந்த மறதி பொல்லாதது. கூடிய விரைவில் அந்தக் கோப்பையைப் பத்திரப்படுத்தும் ஏற்பாட்டை நான் மேற்கொள்ள வேண்டும். அப்படி வேறு ஒரு கோப்பையைக் குளிப்பதற்கு நான் பயன்படுத்தினாலும் இந்த அலுமினியக் கோப்பையைப் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

Saturday, March 17, 2012

ஒற்றையடிப்பாதை - சில கணங்கள்


பஸ்லி ஹமீத் வெளியிட்ட “ஒற்றையடிப்பாதை” கவிதை நூல் வெளியீட்டு விழாவின் போது நூலாசிரியர் பஸ்லி ஹமீத், அஷ்ரஃப் சிஹாப்தீன், கவிஞர்களான ஏ.இக்பால், அல் அஸூமத்


உரை நிகழ்த்தும் கவிஞர் மேமன் கவி



சிறப்புப் பிரதி பெறும் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்

Monday, March 12, 2012

ஒற்றையடிப் பாதை - முகநூலில் முகிழ்ந்த மலர்

ஓர் அழகிய ஏழைச் சிறுமியைப் போல தமிழ் இலக்கியப் பரப்புக்குள் நுழைந்திருக்கிறது, பஸ்லி ஹமீதின் ‘ஒற்றையடிப் பாதை.’

இந்த நூலுக்கு அணிந்துரையை வழங்கியிருப்பதும் நான்தான். அத்தோடு பஸ்லி ஹமீத் என்னை விட்டு விடுவார் என்றுதான் நம்பியிருந்தேன். சில வாரங்களுக்கு முன்னர் தர்ஹா நகர் வந்திருந்த போது நூல் வெளியீட்டு விழாவிலும் நீங்கள் வந்து பேச வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். பஸ்லி ஹமீத் எனது கவனத்தைப் பெற்றவர் என்ற போதும் என்னில் மிகுந்த அபிமானம் கொண்டவர் என்ற போதும் அவ்வேண்டுகோளை நிராகரிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஒரு நூலைப் பற்றி ஒன்றில் எழுத வேண்டும் அல்லது பேச வேண்டும். தொடர்ந்தேர்ச்சையான இரண்டாவது செயற்பாடு அலுப்புத்தரும் விடயமாக ஆகிவிடும் என்பது அதற்கான காரணம்.

ஆனால், எனது மரியாதைக்குரிய கவிஞர் ஏ.இக்பால் அவர்கள், “எங்களது காலம் முடிந்து விட்டது. இனிமேல் வளரும் தலைமுறையை நீங்கள்தான் வழி நடத்த வேண்டும். நீங்கள் கட்டாயம் விழாவில் கலந்து கொண்டு பேச வேண்டும்” என்று இட்ட கட்டளையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

பஸ்லி ஹமீத் இணையத்தில் முகப்புத்தகத்தில் என் நண்பர் வட்டத்துள் இருக்கும் ஒரு முக்கிய நபர். அவரை அவரது சின்னச் சின்னக் கவிதைகளே எனக்கு அடையாளம் காட்டின. தொடர்ச்சியாக அவர் இடும் கவித்துளிகளை நான் படிக்கிறேன். அவற்றில் என்னைக் கவர்ந்தவற்றை இரசிக்கிறேன்.

முகப்புத்தகம் இன்று உலகளாவிய அதிவேகத் தொடர்பு சாதனமாகியிருக்கிறது.  முகப்புத்தகத் தொடர்பில் இருக்கும் அனைவரும் - அவரவருக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு வட்டத்துக்குள் தம்மையும் அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். அவரவர் ஏற்படுத்திக் கொள்ளும் வட்டம் ஐம்பது, நூறு முதற்கொண்டு ஐயாயிரம் பேர்வரை நீண்டு செல்கிறது. முகப்புத்தகத்தில் டீலந என்ற ஆங்கிலச் சொல்லைக் கூடச் சரியாகப் பதியத்தெரியாதவர்கள் முதற் கொண்டு மிகப் பெரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள் வரை தமக்கென ஒரு கணக்கைத் திறந்து ஒரு பக்கத்தை வைத்திருக்கிறார்கள். அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப அதில் தம்மை இனங்காட்டிக் கொள்கிறார்கள். சிலர் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சிலர் சமயங்கள், கோட்பாடுகள், அரசியல் பற்றிச் சமர் செய்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களில் ஒரு சாரார் சமயப் பிரசாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை இயக்கச் சண்டைகளையும் பிடித்துக் கொள்கிறார்கள். இவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாதவர்களும் அவற்றில் விருப்பமற்றவர்களும் தனது பிள்ளையின் படங்களை அல்லது தனது வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ அண்மையில் ஈனப்பட்ட ஒரு நாய்க் குட்டியின் அல்லது பூனைக்குட்டியின் படத்தைக் கூட இட்டு மகிழ்கிறார்கள்.

படைப்பாளிகள், இலக்கியவாதிகள் தமது இலக்கியத் தகவல்களையும் தமது படைப்புக் களையும் பதிவிடுகிறார்கள். தாம் எழுதிய, படித்த, தம்மைக் கவர்ந்த கவிதைகள், கதைகள், அவை பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றையும் தருகிறார்கள். இவ்வாறு பல நூறு பேர் கவிதைகளையும் எழுதுகிறார்கள், அவர்களுள் அதிகம் பேர் கவிதை என்று நினைத்துக் கொண்டு சில வார்த்தைகளையும் எழுதுகிறார்கள்.

இங்குதான் பஸ்லி ஹமீத் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொள்கிறார். ஒரு படத்தை முதலில் தெரிவு செய்கிறார். பிறகு அந்தப் படத்தின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் கவித்துவமிக்க வசனங்களை இரண்டடி அல்லது நான்கடிகளில் பதிவு செய்கிறார். அப்படமும் அக்கவித்துவமிக்க வரிகளும் அவருக்கு ஒரு பெரும் இரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவிட்டு வந்த படங்களோடிணைந்த கவித் துளிகளிலிருந்து இருநூறு படங்களும் கவித்துளிகளும் இன்று வெளியாகும் 112 பக்க ‘ஒற்றையடிப்பாதை’ என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

அவற்றிலிருந்து படங்களினூடான அவரது சிந்தனை, வார்த்தைகளால் எவ்வாறு செதுக்கப்பட்டிருக்கிறது என்பதற்குப் பதச் சோறுகளாக இரண்டு பருக்கைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு படத்தில் மூன்று எறும்புகள் நகருகின்றன. எறும்பை யாராவது ஆராய்ந்து கொண்டா இருப்பார்கள். ஆனால் கவிஞன் அதை அவதானிப்பான். அதில் ஓர் அர்த்தத்தைக் காண்பான். பஸ்லி சொல்கிறார்:-

“தனியாய் நின்றால் எறும்பு - ஓர்
அணியாய் நின்றால் இரும்பு!”

‘இங்கே பாதரட்சைகளைக் கழற்றவும்’ என்ற அறிவிப்புக்குக் கீழே இரண்டு சோடிச் சப்பாத்துக்கள் கழற்றப்பட்டிருக்கின்றன. பஸ்லி அந்தச் சப்பாத்துக்களுக்குச் சொல்கிறார்:-

“நீ வாசலோடு நின்று கொள்
பளிங்குத் தரையைப்
பாதங்கள் மிதிக்கட்டும்!”

இவ்வார்த்தைகள் வெறுமனே படங்களுக்கு அர்த்தம் தருவனவாக மட்டும் அமையவில்லை. அவ்வார்த்தைகளின் பின்னணியில் பல அர்த்தங்கள் தொனித்து நிற்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது பஸ்லியின் சிந்தனையில் ஊறும் கற்பனையினதும் அவருக்கு வாலாய்ப்பட்டு நிற்கும் அவரது மொழியினதும் அழகு. எதை வைத்து எதைச் சொல்லலாம் என்பதையும் அதை எப்படிச் சொல்லலாம் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் அவை நமது கவனத்தையும் சிந்தனையையும் கவர்ந்து செல்கின்றன. ஒன்றை எப்படி கவனத்தை ஈர்க்குமாறு வெளிப்படுத்துவது என்பதையும் ஒன்றை வைத்து இன்னொன்றை எப்படிப் புரிய வைப்பது என்பதையும் கையாளும் ரசவித்தை கைவரப் பெறுவது ஒரு பெரிய வரமாகும். ஓர் ஆரம்ப இலக்கிய மாணவனாக பஸ்லி வெற்றி பெற்றிருக்கிறார். இதையே ஒரு முழுக் கவிதையூடாகவோ ஒரு சிறுகதையூடாகவோ ஒரு நாவலூடாகவோ வெளிப்படுத்தும் திறன் பெற்றவன் ஒரு முழுமையான இலக்கியவாதியாக, வெற்றி பெற்ற படைப்பாளியாக மாறிவிடுவான்.

முகப்புத்தகத்தில் ஓர் இலக்கிய உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஓர் இளைய இலக்கியத் தலைமுறை அங்கு முளை விட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா மனங்களுக்குள்ளும் இருக்கும் இரசனை என்பது படங்கள் சார்ந்ததாக, வார்த்தைகள் சார்ந்ததாக அங்கு வெளிப்படுத்தப்படுகிறது. வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவர் முகப்புத்தகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு உலகியல் நிகழ்வுகளையும் நண்பர்களது வாழ்க்கை வட்டத்தையும் அறிந்து கொள்வதுடன் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள், அழகிய வசனங்கள், கவிதைகள், கதைகள், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்ட நகைச்சுவைகள் ஆகியவற்றையும் படிக்க ஆரம்பிக்கிறார். இது அவருக்குள் இருக்கும் இரசனை உணர்வைத் தட்டி எழுப்பி விடுகிறது. தான் படித்தவற்றையும் தனக்குத் தோன்றியவற்றையும் சிறியதாகவோ பெரியதாகவோ எழுதிப் பதிவிட ஆரம்பிக்கிறார்.

நமது பத்திரிகைகளில் வெகு அபூர்வமாகவே வாசகர் கடிதங்கள் வெளிவருகின்றன. சஞ்சிகையில் வாசகர் கடிதம் எழுதும் ஒருவர் நமது படைப்பைப் பற்றியும் ஒரு வார்த்தை சொன்னால்தான் உண்டு. அதற்காக நாம் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினை முகப்புத்தகத்தில் கிடையாது. பதிவை இட்டு முடிய, நமது நண்பர்கள் ‘ஒன் லைனில்’ இருந்து, அது அவர்களைக் கவர்ந்தால் உடனே அதன் பிரதிபலிப்பு நமக்குத் தெரிந்து விடுகிறது. இது ஒரு போதை போல நம்மைக் கவர்ந்திழுக்கிறது. நமது பதிவை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரவேற்பதும் பாராட்டுவதும் உண்மையாகவே நம்மை அதிகம் குளிர்விக்கிறது.

இங்கேதான் ஒரு முக்கியமான பிரச்சினை தோன்றுகிறது. புதிதாக இலக்கியத் துறைக்குள் நுழையும் இளசுகள் தாம் இடும் பதிவுகளை - அவை அநேகமாகவும் கவிதை என நினைத்துக் கொண்டு எழுதப்பட்ட வசனங்களாகவே இருக்கும் - யாரும் கண்டு கொள்ளாத பட்சத்தில் அல்லது போதிய வரவேற்புக் கிடைக்காத போது வேறு ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களது நட்புப் பட்டியலில் இருக்கும் ஓரளவு மூத்த படைப்பாளிகளின் இலக்கியவாதிகளின் பக்கங்களில் தமது பதிவுகளைப் பலாத்காரமாக இணைத்து விடுகின்றனர்.

இங்கு பலாத்காரமாக என்ற சொல் பொருந்தாத போதும் மூத்த படைப்பாளியின் அனுமதியின்றி அப்பதிவுகள் இடப்படுகின்றன என்பதால் அச்சொல்லை நான் பயன்படுத்த விரும்புகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. மூத்த இலக்கியவாதியின் பக்கத்துக்கு அதிக இலக்கிய ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது தனது பதிவு அவர்களது கவனத்துக்குள்ளாகும் என்பது முதலாவது காரணம். ‘இதோ பாருங்கள்... நானும் கவிதை எழுதியிருக்கிறேனாக்கும்... நீங்கள் பார்த்து உங்களது கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்ற மறைமுக வேண்டுகோளை மூத்த படைப்பாளிக்கு முன் வைத்து அவரது அங்கீகாரத்தைப் பெற முயல்வது இரண்டாவது காரணம்.

ஒரு படைப்பை, ஒரு பதிவை நான் இட்டிருக்கும் போது அதற்கு மேலால் எனது பக்கத்தில் இன்னொருவர் தனது அரை அவியல் பதிவை எனது அனுமதியின்றி இணைப்பதானது வேறொருவர் எனது முகத்தில் பசையைப் பூசித் தனது போஸ்டரை ஒட்டிவிட்டுப் போவதற்கு ஒப்பானது.

இவ்வாறு தமது அரைகுறைப் பிரசவங்களையும் எந்தப் பெறுமானமும் அற்ற - வெறுமனே மற்றவரின் கவனத்தைக் கவருவதற்காக இடும் பதிவுகளையும் எனது பக்கத்திலிருந்து நான் நீக்கியமைக்காகப் பலர் என்னுடன் கோபித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘நான் பல கவிதைகளை இணைத்திருந்தேன். நீங்கள் கண்டு கொள்வதும் இல்லை, கருத்துச் சொல்வதும் இல்லை’ என்று சிலர் முறைப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அவற்றுக்கு நான் சொல்ல நினைத்துச் சொல்லாமல் போன கருத்துக்களை விட, அவற்றை அகற்றி விடுவதன் மூலமும் கண்டு கொள்ளாததன் மூலமும் உணர்த்தப்படும் செய்திதான் முக்கியமானது. ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை.

அவர்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் ஒன்றுதான். தங்களது எழுத்துக்களை அவை எப்படியிருந்தாலும் ‘அருமை’ என்றோ ‘சிறப்பாக இருக்கிறது’ என்றோ ‘நல்லவொரு படைப்பு’ என்றோ அல்லது நான்கைந்து வசனங்களில் பாராட்டுவதை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் அதை நம்மால் செய்ய முடிவதில்லை. செய்யவும் முடியாது. எனவே, ‘இளைய தலைமுறையை மூத்தவர்கள் கண்டு கொள்வதும் இல்லை, தட்டிக் கொடுப்பதும் இல்லை’ என்று கோபப்படுகிறார்கள். குமுறி எழுகிறார்கள். குறிப்புப் போடுகிறார்கள்.

இதற்குள் இன்னொரு கிளைப்பாதையும் செல்கிறது. அதுதான் இஸ்லாமிய உணர்வு இலக்கியம். அது முஸ்லிம் சமூகம், இஸ்லாம், சர்வதேச முஸ்லிம் உம்மத், ஏகாதிபத்திய மற்றும் ஸியோனிச எதிர்ப்புக் கவிதைகள் என்று பரவலான ஓர் எல்லையை அது கொண்டுள்ளது. (குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவிடுவது பற்றி நான் பேசவில்லை.) இவ்வாறு எழுதப்படும் பதிவுகள் பெரும்பாலும் உண்மையான இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து எழுதுபவர் இஸ்லாமிய உம்மத் மீதும் இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் பெரும் பற்றுதல் வைத்துள்ளதையும் அதற்கு எதிரான அனைத்துச் சக்திகளுக்கெதிராகவும் கடும் ஆவேசத்துடனிருப்பதையும் பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. ஆக இஸ்லாம் என்ற மார்க்கத்தையும் சர்வதேச இஸ்லாமிய உம்மத்தையும் வைத்துத் தம்மை மேம்பட்ட ஒரு பிரகிருதியாக, தனித்துவம் மிக்க ஒரு புள்ளியாகக் கட்டமைக்கும் முயற்சியாகவே இப்பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறான பதிவுகளை இடுவோரும் கூட, தமது பதிவைப் பாராட்டவேண்டும் என்றும் மூத்த படைப்பாளிகள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களது எதிர்பார்ப்புப் பலிக்காதவிடத்து இவர்களும் அதே இடத்தில் அதாவது - ‘மூத்த படைப்பாளிகள் தம்மைக் கண்டு கொள்வதில்லை’ என்கிற புள்ளியில் இணைந்து விடுகிறார்கள். அதை அவர்கள் எப்படி முன்வைக்கிறார்கள் என்றால் - ‘மூத்த படைப்பாளிகள் நாம் வளர்வதற்கு வழிகாட்டுகிறார்கள் இல்லை’ என்று ஒரே போடாய்ப் போட்டு விடுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை மறுதலையாகவும் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மூத்த படைப்பாளிகளை நோக்கிக் குற்ற விரல் நீட்டும் இளம் தலைமுறை தமது மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களை நூறு வீதம் இல்லையென்றாலும் ஐம்பது வீதமாவது படித்துள்ளதா என்பது ஒரு முக்கியமான கேள்வி. நீண்ட காலமாக எழுத்துப் பயிற்சி செய்து ஓர் இலக்கியப் படைப்பாளியாகப் பெயர் பெற்ற ஒருவரின் ஆகக் குறைந்தது ஒரு நூலையாவது படிக்காமல் தமது ஆரம்ப அரைகுறைப் பிரசவங்களை அவர்கள் முன் வைத்து அதை அங்கீகரிக்கச் சொல்வதும் பாராட்டை எதிர்பார்ப்பதும் எங்ஙனம் நியாயமாகும்?

முகப்புத்தகக் கணக்கில் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட தகவல்களுக்கென்று ஒரு பக்கம் உண்டு. அங்கே விருப்பமானால் நமக்குப் பிடித்த நூல்களை அல்லது எழுத்தாளர்களைப் பற்றியும் கவர்ந்த பிரபலமான நபர்களைப் பற்றியும் குறிப்பிட முடியும். மூத்த எழுத்தாளர்கள் மீது குற்றம் சுமத்தும் நபர்களின் தனிப்பட்ட தகவல் பக்கங்களில் ஏ.ஆர். ரகுமான் இருக்கிறார். இளையராஜா இருக்கிறார். பாடகிகள் மெடோனா, ஷாகிறா, பிரிட்னி, ஷரேயா கோஷல் என்று பலர் இருக்கிறார்கள். உப்புக்குக் கூட பிடித்த ஓர் எழுத்தாளர் பெயர் கிடையாது. பிடித்த ஓர் நூலின் பெயர் கிடையாது. அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் எழுத்தாளர்கள் இளந்தலைமுறையினரால் கொண்டாடத் தகுந்தவர்களாக இல்லை என்பதுதான். நூல்கள் எவையும் கொண்டாடத் தகுந்தவை இல்லை என்பதைத்தான். முகப்புத்தகத்தில் எனது தனிப்பட்ட விபரப் பக்கத்துக்கு நீங்கள் சென்றால் எனக்குப் பிடித்த எழுத்தாளர் பட்டியலில் சிலர் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.

இலக்கிய இளந் தலைமுறையினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்கள் எண்ணமும் நோக்கமும் என்னவாக இருக்கிறது என்பதை நமது மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் ஞானம் 142வது இதழில் எழுதியுள்ள ஒரு சிறு குறிப்பின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். அவர் சொல்கிறார்...

“.....இன்னும் இரண்டு சம்பவங்கள் பற்றி சொல்வது, இளந்தலைமுறை எழுத்தாளர்களின், வெற்றுத்தனமான, தம்மை முதன்மைப்படுத்த எதையும் செய்வர் என்பதற்கு நல்ல உதாரணங்களாக அமையும் என நினைக்கிறேன். 2007 காலப் பகுதியில் ஒரு பெண் கவிஞர் என்னை அடிக்கடி வந்து சந்தித்தார். தனது கவிதைகளைத் தந்து எனதுஅபிப்பிராயத்தை அறிய முற்பட்டார். நான் அவருக்கு இரண்டொரு கவிதை நூல்களைக் கொடுத்ததோடு மேலும் அவரை பல நல்ல கவிதை நூல்களைப் படித்து தன்னை வளப்படுத்திக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினேன். ஒரு தொகுப்பு வெளியிடப்போவதாகவும் அதற்கொரு முன்னுரை தருமாறும் வற்புறுத்தினார். இப்போது தொகுப்பை வெளியிடாது முதிர்ச்சியான கவிதைகளை எழுதும் நிலைக்கு உயர்ந்ததற்குப் பின்னர் தொகுதியை வெளியிடும்படி சொன்னேன். ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. தம் போன்ற இளந் தலைமுறையினர்க்கு மூத்த எழுத்தாளர்கள் உதவ வேண்டும் என்ற பாணியில் அவர் கதை இருந்தது.

எனவே அவருக்கொரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள முன்னுரையை எழுதிக் கொடுத்தேன். இதன் பின்னர் ஒரு நாள் மேற்படி கவிதைத் தொகுப்பு எனது ஆக்கங்களை வெளியிடும் வுநுஊர்Nழு PசுஐNவு அலுவலகத்தில் அநாதரவாகக் கிடக்கக் கண்டேன். அதைத்தட்டிப் பார்த்தபோது என்னுடைய முன்னுரைக்கு பதிலாக ஓட்டமாவடி அரபாத்தின் முன்னுரை இருந்தது. இதற்குச் சிறிது காலத்திற்கு பின்னர் இதே கவிதைத் தொகுப்பு நீர்வைப் பொன்னையன் அவர்களின் அனுசரணையால் வெளிவந்தது. இப்போது அதன் முன்னுரையாக இருந்தது அரபாத்தினது அல்ல, கவிஞர் இக்பாலுடையதாகும்!

இன்னொரு இளங்கவிஞர் என்னை இரண்டொரு முறை சந்தி;த்து, தனது கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நானும் கொடுத்தேன். அவரின் தொகுப்பு வெளிவந்தபோது அதில் என்னுடைய முன்னுரைக்குப் பதிலாக கவிஞரும் பேராசிரியருமான ஒருவருடைய முன்னுரை இருந்தது! பின்னர் ஒரு நாள் எதிர்பாராத விதமாக மேற்படி இளங்கவிஞரைச் சந்தித்த போது “உங்களுடைய முன்னுரை மிக அருமையாக இருந்தது சேர். ஆனால் பேராசிரியருடைய முன்னுரையைத் தொகுப்புக்கு போட வேண்டியதாயிற்று” என்றார் அசடுவழிய. இதுதான் இன்றைய இலக்கியத் தற்குறிகளான ஒருசில இளந் தலைமுறை எழுத்தாளர்களின் “இலக்கியப் போக்காக” உள்ளது. நாம் இவர்களின் இந்த இலக்கியப் பரிசோதனைகளின் களமாக இல்லாது பார்த்துக்கொண்டால் சரி.”

இது மு.பொ. அவர்களது அனுபவம். அணிந்துரை தமக்குப் பிடித்தமானதாக வரும் வரை இலக்கியப் புதிய தலைமுறையில் சிலர் ஆளை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். மு.பொவையும் ஓட்டமாவடி அறபாத்தையும் அப்பெண் ஒரு வகையில் அவமானப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை ஏ.இக்பால் அவர்களது அணிந்துரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர் கருதியிருந்தால் அவரையும் அப்பெண் அவமானப்படுத்தியிருக்கக் கூடும். இதே போன்ற அனுபவங்கள் பல மூத்த படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கின்றன. இளம் படைப்பாளிகளுடனான பல கசந்த அனுபவங்கள் ஒரு பெரும் கட்டுரைக்குரிய அளவில் எனக்கும் உண்டு. அவற்றை இந்த இடத்தில் சொன்னால் விரிவாகி விடும். ஆனாலும் ஒரு நாள் அவற்றை எழுதிப் பதிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

பொதுவாகவே இலக்கிய உலகில் மூப்பும் இளமையும் வயது அடிப்படை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு புத்தகம் கூட வெளியிடாத மூத்த படைப்பாளிகள் நம்மிடையே இருக்கிறார்கள். நான்கைந்து நூல்களை வெளியிட்ட இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். எனது அன்புக்குரிய நண்பர் நல்ல கவிஞரும் நாவலாசிரியருமான என்.ஏ.தீரன் என்று அறியப்பட்ட ஆர்.எம்.நௌஷாத் அவர்கள் “வளர்ந்து வரும் மூத்த எழுத்தாளர்” என்ற ஒரு வகையினரையும் தமாசாகக் குறிப்பிடுவார். இந்த நபர்கள் வயதால் முதிர்ந்தாலும் தமது எழுத்தால் முதிர்வை எய்தாதவர்கள். இருந்த போதும் ஒரு பெரும் எழுத்தாளனுக்குரிய பெருமையோடும் பகட்டோடும் அவர்கள் உலா வருவதைப் பார்த்து இரண்டு அல்லது மூன்று நூல்களை வெளியிட்ட இளந் தலைமுறைப் படைப்பாளிக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. அவர் வெளியிட்ட இரண்டு அல்லது மூன்று நூல்களும் நூல்களாக வெளியிடத் தகுந்தவையா இல்லையா என்பது வேறு விடயம்.

இலக்கிய உலகு விசித்திரமானது. நேர்மையாக இதற்குள் வாழ்வதற்கும் தாக்குப் பிடிப்பதற்கும் அசாத்தியத் துணிச்சல் தேவைப்படுகிறது. ஒரேயொரு புத்தகத்தை ஓசியில் வெளியிட்டு விட்டு உலகத்தில் எழுதப்படும் தமிழ்க் கவிதைகள் யாவும் அர்த்தமற்றவை, என்னுடைய கவிதைகள் மட்டுமே சிறந்த கவிதைகள், அல்லது தான் சிபார்சு செய்பவை மட்டுமே சிறந்த கவிதைகள் என்று உளறித் திரியும் அரைக் கிறுக்குகள், எங்கு யார் ஒரு விருது கொடுத்தாலும் தனக்குத் தரவில்லை என்றால் கொடுக்கப்பட்டவன் தகுதியற்றவன் என்றும் கொடுத்தவன் பைத்தியக்காரன் என்றும் எழுதும் கலைப் பதர்கள், இலக்கியப் போட்டிகள் நடத்தும் அமைப்புகளுக்குள் நுழைந்து தனக்கு வேண்டப்பட்டவனுக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டப்படாதவனின் புத்தகம் வந்தால் ‘கெற்றகரியை” மாற்றி அறிவிக்கவும் சிபார்சு செய்யும் அண்டகிறவுண்ட் ஆசாமிகள், எங்கு ஒரு விழா நடந்தாலும் தனக்கும் ஒரு சால்வை போர்த்தமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஒரு சால்வையைத் தானே வாங்கிக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு அதைப் போர்த்துவிக்கவும் விழாக்குழுவுக்குள் நுழைந்து சிபார்சு செய்யவும் ஆள் தேடி அலையும் அண்டங்காக்கைகள், சமகாலத்து அல்லது தனக்குப் பிறகு தோன்றிய படைப்பாளி ஒருவரின் படைப்புப் பற்றி விதந்துரைக்கப்படும் போது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இன்றி அப்படைப்பையும் படைப்பாளியையும் எள்ளி நகையாடிக் குறைத்துப் பேசும் கோமாளிகள்... என்று பலநூறு வேடிக்கை மனிதர்கள் நிறைந்த உலகம் இது.


இந்த விசித்திர உலகத்துக்குள் நுழையும் ஒரு நேர்மையான இளம் படைப்பாளி பல முறைகளில் பல்வேறு அதிர்ச்சிக்குள்ளாகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்களை நோண்டிச் செல்வது போல் சில விடயங்கள் நடப்பதைக் கண்டு விக்கித்துப் போகிறான். இவ்வாறான ஒரு பயங்கரவாதத்தைக் கண்டு பயந்து ஓடிப் போய் ஒதுங்கி நின்று எழுதும் நம்பிக்கை தரும் இளைஞர்களை நான் அறிவேன்.
தாம் இடுகிற எல்லாப் பதிகளும் இலக்கியத் தரம் வாய்ந்தவை, கவிதை எனத் தாம் எழுதுகிற வசனங்கள் அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்ற எண்ணத்துடன் இளைய தலைமுறை தம்மை முன் நகர்த்தி ஓர் அற்பப் பிரபல்யம் பெற நினைக்கும் எல்லா உள்ளோட்டச் செயற்பாடுகளும் அவர்களை வேடிக்கை மனிதர் குழாத்துள் கொண்டு சேர்க்குமே தவிர, சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் கடைசி இடத்துக்காவது வந்து சேர்வதற்கு இடமளிக்காது.


இலக்கிய உலகில் எழுத்துக்களால் அறியப்படுபவர்கள், பெயர்கள் கொண்டு அறியப்படுபவர்கள் என இரண்டு வகையான எழுத்தாளர்கள் உள்ளனர் என்று கவிஞர் அல் அஸ_மத் குறிப்பிடுவார். இவர்களில் பெயர்கள் கொண்டு அறியப்படுபவர்கள் யாரெனில் உப்பும் புளிப்பும் இல்லாத சமையலைப் பெருமளவில் சமைப்பவர்கள். பெயர் வந்தால் போதும் என்ற நோக்குடன் எல்லாப் பத்திரிகைகளிலும் எதையாவது தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள். எந்தவொரு படைப்பாளி தனது படைப்பைக் கொண்டு பேசப்படுகிறானோ அவனே மிகச் சிறந்த படைப்பாளியாவான். அவனால் மட்டுமே காலத்தை வென்று வாழும் பாக்கியத்தைப் பெற முடியும். படைப்புக்களைக் கொண்டு பார்ப்போமானால் நமது கடந்த காலச் சிறந்த எழுத்தாளர்கள் யார் எவர் என்பது புரிய வரும். யார், எவர் பம்மாத்துக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வரும்.

இதைப் புரிந்து கொள்ளாத வரை, உணர்ந்து கொள்ளாதவரை ஆயிரம் பொன்னாடைகளைப் போர்த்திக் கொண்ட போதும் அண்டர் கிரவுண்டில் ஓடியாடி விருதுகளைப் பெற்று ஆயிரம் புகைப்படங்களை எடுத்துப் பிரசுரித்த போதும் தனக்குப் பொருத்தமான, தன்னைப் பாராட்டித் திகட்டுமளவு அணிந்துரைகளை எழுதச் செய்து நூல்களை வெளியிட்ட போதும் அவர்களால் ஒரு போதும் வாசகர் நெஞ்சங்களை அடையவும் முடியாது. காலத்தை வென்று வாழவும் முடியாது.

இன்று வெளியாகும் நூல் முகப்புத்தகத்தில் உருவானது. எனவே புதிய தலைமுறையும் அது முகப்புத்தகத்தில் நடத்தும் இலக்கிய விளையாட்டுக்களும் பற்றியதாக என் உரை அமைந்திருந்தது. அப்படியாயின் முகப்புத்தகத்தில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் இல்லையா என்ற ஒரு கேள்வி எழுவது நியாயமானது.

இருக்கிறார்கள் என்பதுதான் எனது பதில். நம்பிக்கை தரும் பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று வெளியிடப்படும் ‘ஒற்றையடிப் பாதை’ நூலின் ஆசிரியர் பஸ்லி ஹமீத்.

பஸ்லி ஹமீதுக்கு நான் சொல்லி வைக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது.

எல்லா ஒற்றையடிப் பாதைகளும் பத்து அடிப் பாதையியோ இருபது அடிப்பாதையிவோ எந்நேரமும் இருவழிப் போக்குவரத்து நடக்கும் நாற்பது அடிப் பாதையிலோதான் சென்று சேர்கின்றன. அடுத்த முறை அவரை நான் ஒற்றையடிப் பாதையில் சந்திக்காமல் நான் மேலே குறிப்பிட்ட ஏனைய மூன்று பாதைகளில் ஒன்றில் சந்திக்கவே ஆசைப்படுகிறேன்.

Monday, March 5, 2012

இலங்கைக் கிரிக்கற் - தேவை புதிய இரத்தம்!


நேற்று அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண கிரிக்கட் முதலாம் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிற்று. இத்தொடரில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து ஏற்கனவே மூன்று ஆட்டங்களில் வென்றதால் இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றி வாகை சூடும் என்ற இலங்கை இரசிகர்களின் பெரும் நம்பிக்கை வெறும் பதினைந்து ஓட்டங்களில் சரிந்து விழுந்தது பெரும் துரதிர்ஷ்டமாகும்.


‘கிரிக்கட் பை சான்ட்ஸ்’ என்று ஒரு வார்த்தை வழக்கில் உண்டு. உண்மையும்தான்!

ஆனால், இலங்கைக்கு எதிராக ஆடும் ஏனைய நாட்டு அணி வீரர்கள் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசித் தள்ளும் ஒரே ஆட்டத்தில் அதே மைதானத்தில் நம்மவர் எவ்வளதான் பலம் சேர்த்து அடிக்க முயன்றாலும் பல வேளைகளில் பந்து பவுண்டரிக் கோட்டைத் தாண்டுவதில்லை. சில வேளை ஒரு சிக்ஸர் இல்லாமல் வெற்றி பெற்று விடுவது வேறு விசயம்.

கிரிக்கற் ஆடும் பல முன்னணி நாடுகளின் அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய முகங்கள் வந்து கொண்டேயிருப்பதைக் காண்கிறோம். நமது நாட்டு அணியில் இடம்பெற்று ஒரு வீரர் ஒரு சதத்தைப் பெற்று விட்டால் முழு நம்பிக்கையையும் அவரிலேயே வைக்கத் தொடங்கி விடுகிறோம். அவர் பின்னால் வரும் ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவரது அரசியல் பின்னணி அவரை அவரது பென்சன் வயது வரை அணியில் வைத்திருக்க உதவும். அவர் மிகச் சிறந்த வீரராக வளர்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் ஒரு வீரரோ அல்லது அவரது குடும்பமோ மாற்று அரசில் காரணத்தால் விரைவில் காணாமல் போய்விடுவதும் உண்டு.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வந்த நமது அணி இரண்டு மூன்று முறை சொதப்பி விட்டு வந்ததை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் ஆட்டக்காரராக வரும் ஒரு வேற்று நாட்டுக் கிரிக்கட் வீரர் கடைசி வரை நின்று துடுப்பாடும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் கடைசிப் பந்து வரை உடற்பலம் இழக்காமல் ஆடுவார். நமது அணி வீரர் அவ்வாறு நின்று ஆட நேரும் போது இறுதியில் அவரைக் கைத்தாங்கலாக இருவர் பிடித்தத் தூக்கி வர வேண்டியிருக்கும்.

நமது நாட்டின் அதிசிறந்த பந்து வீச்சாளரை எதிர் கொள்ளும் எதிரணியின் கடைசி ஆட்டக்காரரின் முகக் குறிப்பு, ‘சரிதான் போடய்யா... இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்!’ என்பது போல் இருக்கும். நமது அணியின் கடைசித் துடுப்பாட்ட வீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். நாமாகவே நமக்குத் தெரிந்த எல்லாப் பிரார்த்தனைகளையும் செய்ய ஆரம்பித்து விடுவோம்.