எழுத்துக்கள் வாசிக்கப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன. எது, எப்படி, யாருக்காக, ஏன் அவ்வெழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்ற கேள்விகளின் அடித்தளத்தில் ஓர் உறுதியான இழையாகப் பின்னி இருக்கிறது செவ்விதாக்கம் என்கின்ற அம்சம். இன்னும் சொல்வதானால் இந்த வினாக்கள்தாம் எழுதப்படுகின்ற அனைத்து எழுத்துக்களதும் செவ்வைப்படுத்தலுக்கான நியாயத்தைக் கோரி நிற்பவை.
மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஓரிடத்தில் இன்ன பொருளுக்கு இவ்வாறு, இன்ன செயலுக்கு இவ்வாறு என்ற சைகை மொழி பரிச்சயமான போது அந்த மொழி செவ்வியதாக இருந்திருக்க வேண்டும். சைகையால் பேசிய நம் முன்னோர் அனாவசிய சைகைகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. செயல்களையும் பொருட்களையும் குறிக்கும் மொழி, பயன்பாட்டுக்கு வந்த போதும் கூட, இந்த நிலையே இருந்திருக்கும். மேலதிக விபரிப்புத் தோன்றி அது ஓர் எல்லையைத் தாண்டிக் கிளை பரப்பியபோது அநாவசியச் சொற்சேர்க்கைகள் மொழிகளில் இணைந்து கொண்டன.
எந்த வார்த்தைகளில் சொன்னால் கவனத்தைப் பெறும் அல்லது எத்தகைய விதமாகச் சொன்னால் மனதில் பதியும் என்பதை அறிந்து அதற்கேயுரிய வார்த்தைகளில் சொல்லுவதில் தெளிவு இருக்குமானால் வெளியிடப்படும் வார்த்தைகளில், எழுதப்படும் எழுத்துக்களில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.
சொல்ல எடுத்துக் கொண்ட விடயத்துக்கு நேரடியாக வராமல் எழுதுவது, சுற்றி வளைத்தும் கூட உரிய விடயத்துக்கு வராமல் தடுமாற்றத்துடன் எழுதுவது, யாருக்கு எதற்காகச் சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையில்லாமல் எழுதுவது, எழுதுபவருக்கு மட்டுமே புரியக் கூடிய விதத்தில் எழுதுவது, பொருத்தமற்ற உதாரணங்கள் பயன்படுத்தப்படுவது, உப்புச் சப்பற்ற வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது, வாசகனைக் குழப்பும் வகையில் எழுதுவது, எதைச் சொல்கிறோம் என்ற தெளிவில்லாமல் எழுதுவது, எழுத்துப் பிழை மலிந்திருப்பதால் கருத்துப் பிழைக்கு வழி கோலுவது, வேண்டுமென்றே தனது பண்டிதத் தனத்தைப் பறைசாற்ற எழுதுவது, அழகு படு;தலுக்காகவும் நயஞ்சேர்ப்பதற்காகவும் மேலதிக சோடனை வார்த்தைகளால் எழுதுவது போன்ற எழுத்துக்கள்தாம் செவ்வைப்படுத்தலுக்கான தேவைக்குள் தம்மை இழுத்துச் செல்கின்றன.
எழுத்துக்களின் வாசிப்பானது - பத்திரிகைகளில், சஞ்சிகைகளில், நூல்களில், வானொலிகளில், தொலைக்காட்சிகளில் இடம்பெறுகின்றன. ஒரு பத்திரிகையில் பயன்படுத்தப்படும் மொழிக்கும் வானொலி, தொலைக் காட்சிகளில் பயன்படுத்தப்படும் மொழிக்கும் வேறுபாடு இருக்கிறது. தத்தமக்குரிய ஊடகத்துக்கு ஏற்றவாறு இவற்றைக் கவனித்துச் செவ்வைப்படுத்துவதற்காகவே எடிட்டர் - என்ற ஆசிரியர் கடமையில் உள்ளார். எழுத்துப் பிழை திருத்துவது செவ்வைப்படுத்தலுக்குள் வராத செயற்பாடாகும். இதற்கென ஒப்பு நோக்குனர்கள் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளனர். இலத்திரனியல் ஊடகங்களில் இதனை அறிவிப்பாளரே செய்து கொள்கிறார். சிறு சஞ்சிகைகளைப் பொறுத்த வரை அதன் ஆசிரியர்களே யாவுமாகி நிற்கிறார்கள்.
கணினியானது அச்சுக் கலையை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்னர் எழுத்துக் கோர்த்து அச்சிடும் முறை வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம். இக்காலப் பிரிவில் படைப்பாளிகள் ஒரு நூலை வெளியிடுவதற்கு ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. அச்சகத்துக்கு ஒரு நூலை ஒப்படைப்பதற்கு முன்னர் அந்த நூல் அந்த நூலாசிரியனை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் மிக்காரிடம் பார்வைக்காக வழங்கப்பட்டது. அவர்கள் அந்த நூலுக்கான முழுமையான செவ்வைப்படுத்தலை மேற்கொண்டார்கள். அதற்கான முழு இணக்கப்பாட்டையும் நூலாசிரியர் அவர்களுக்கு வழங்கி விடுவார். அனுபவமும் ஆற்றலும் மிக்காரை மதிக்கும் பண்பும் பணிவும் அன்றைய படைப்பாளிகளுக்கு இருந்தது. செவ்வைப்படுத்தலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட அனுபவமும் ஆற்றலும் மிக்கார் நேர்மையானவர்களாகவும் படைப்பாளிக்கு உண்மைக்குண்மையாக வழி காட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதனால் ஒரு நூலின் பிறப்புக்கு ஆகக் குறைந்தது ஆறுமாதங்கள் முதல் ஆறு வருடங்கள் வரை தேவைப்பட்டன.
கணினியின் வருகை அச்சுக் கலையில் மட்டுமன்றி எழுத்துலகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முறிந்து முறிந்து கரங்களால் எழுதி மாய்ந்தவர்கள் கணினிக்குத் தாவினார்கள். ஒரு படைப்பைத் தாளில் எழுதி விட்டு மீண்டும் மீண்டும் சுய செவ்வைப்படுத்தலுக்காக்கித் திருப்பி எழுதுவது, அனுபவமும் ஆற்றலும் மிக்கோரால் விதந்துரைக்கப்படும் விதத்தில் மீண்டும் மீண்டும் எழுத நேர்வது போன்ற நூலாசிரியரின் துயரம் முடிவுக்கு வந்தது. தனது படைப்பைக் கணினியிலேயே பதிவு செய்து வைத்து விட்டுச் சில நாட்களில் அவசியப்பட்ட இடங்களில் மீண்டும் செவ்வைப்படுத்தலுக்குள்ளாக்குவது படைப்பாளிகளுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். ஆயினும் இந்த வரப்பிரசாதம் எல்லாப் படைப்பாளிகளுக்கும் கிடைக்கவில்லை. கணினிக்கு வருவதைப் பாக்கு நீரிiணையை அல்லது ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடப்பதற்கொப்பானது என்று கருதும் பழம்பெரும் எழுத்தாளர்கள் இன்னும் அதே இடத்தில் நிற்கிறார்கள்.
கடந்த காலங்களில் எழுதப்பட்ட பிரதி, படைப்பாளியின் திருப்திக்கு வரும் வரையிலும் மற்றும் தகைமையுள்ளோரின் செவ்வைப் படுத்தலுக்கும் உள்ளாகிய பின்னர் பத்திரிகைக்கோ சஞ்சிகைக்கோ அனுப்பப்பட்டது. அந்தப் படைப்புப் பிரசுரமாவதைக் காண படைப்பாளி மாதக் கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. அவ்வாறான பிரதியை அச்சில் பார்க்கும் போது படைப்பாளிக்கு ஏற்படும் மகிழ்ச்சி எல்லையற்றது. கணினி இந்தப் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்து வைத்தது. அடுத்தவர் படிக்கிறாரா இல்லையா என்பதற்கப்பால் தனது பிரதியை எழுதி முடிந்த உடனேயே அச்சில் பார்த்துவிடும் வாய்ப்பைக் கணினி கொடுத்தது. அச்சில் தனது பிரதியைக் காணும் அவசரமும் பார்த்தபின் வடிந்து விடும் ஆவலும் செவ்வைப் படுத்தலைப் பின்னோக்கித் தள்ளி விட்டது எனலாம். தனது பிரதி சரியானதா, பொருத்தமானதா, அது பேசும் செய்தி என்ன, அது எதைப் பேசுகிறது, யாருக்காகப் பேசுகிறது, அதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் பொருத்தமானவையா என்பன போன்ற செவ்வைப்படுத்தலுக்குரிய அனைத்துக் கேள்விகளையும் புறந்தள்ளிவிட்டு ‘அச்சில் அழகாக இருக்கிறது, ஆகவே இது ஒரு முழுமையான பிரதியே’ என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வந்து விட்டது.
தனது பிரதி சரியானதா என்பதை மற்றொருவரின் பார்வைக்குத் தந்து கருத்தைப் பெற்றுக் கொள்ளும் அல்லது செவ்வைப்படுத்தலை மேற்கொள்ளும் பண்பு இன்று அருகிப் போய் விட்டதாக நான் குறிப்பிட முன்வரவில்லை. வெகு அபூர்வமாகச் சில படைப்பாளிகள் இதனை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப நிலைப் படைப்பாளிகள் தாங்கள் எழுதுவதைக் கணினியிலிருந்து வெளியேற்றியதும் அது மிகச் சரியானது என்று முடிவுக்கு வந்து விடுவதன் மூலம் செவ்வைப்படுத்தலைப் புறக்கணித்து விடுகிறார்கள். இந்தத் தீர்மானத்துடன் வெளியிடப்படும் நூல்கள் சீந்துவாரற்று எதிர்கால இருட் கிடங்குக்குள் சென்று சேர்ந்து விடுகின்றன. இவ்வாறு நூல்களை வெளியிட்டவர்களில் ஒரு சிலர் பிற்காலத்தில் எழுத்துலகில் சற்றுப் பிரகாசிக்க நேர்ந்தால் தமது முன்னைய நூல்களைப் பற்றிப் பேசவும் எடுத்துச் சொல்லவும் கூச்சமடையும் நிலை ஏற்படுகிறது. இது செவ்வைப்படுத்தலைப் புறக்கணிப்பதனால் ஏற்படும் முக்கியமான பின்னடைவும் அவமான நிலையுமாகும்.
மற்றொரு சாரார் இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். பழம்பெரும் எழுத்தாளர்கள் புதுமையை வரவேற்காத காரணத்தால் செவ்விதாக்கம் என்ற பெயரில் தமது பிரதியின் முதுகெலும்பையே உடைத்து நொறுக்கி விடுகிறார்கள் என்று கருதுகின்றனர். இதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியவில்லை. புதுமைகளை ஏற்க மறுக்கும் தலைமுறை இடைவெளி மனோ பாவம், வித்தியாசமான போக்கில் புதியவர்கள் எழுதப் புகுவதால் தனது கிரீடம் கழன்று விழுந்து விடும் என்ற பதட்டம், புதிய மாறுதல்களைத் தெரிந்து கொள்ள முடியாத அல்லது தெரிந்து கொள்ள முயலாத இயலாமையை மறைத்தல் ஆதியாம் காரணிகளால் பழையவர்கள் செவ்விதாக்கம் என்ற பெயரில் ஒரு நல்ல பிரதியின் இழைகளைப் பிடித்து இழுத்துச் சிதைத்து விடுவதுமுண்டு. இந்த அச்சமே மூத்த படைப்பாளிகளை இளைய தலைமுறை நெருங்காமல் இருப்பதற்குக் காரமாகிறது.
ஒரு அனுபவத்துக்காக எனத் பத்திகள் இரண்டை சற்று விவரமறிந்தவர் என்று நான் கருதிய நபரிடம் செவ்வைப்படுத்தலுக்காகக் கொடுத்திருந்தேன். அந்தப் பத்திகள் இரண்டும் என்னால் மீண்டும் செவ்வைப்படுத்தப் படாமல் எழுதியவுடன் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டுப் பிரசுரம் கண்டவை.
“சில ஓவியங்களை வழிகாட்டிகள் ‘டோர்ச் லைட்’ வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகிறார்கள். தங்க முலாம் கலந்து அவை வரையப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.” இந்த வசனங்களை அந்த நபர் ஒரே வசனத்தில் பின்வருமாறு செவ்வைப்படுத்தினார். “தங்க முலாம் கலந்து வரையப்பட்டுள்ள சில ஓவியங்களை வழிகாட்டிகள் ‘டோர்ச்லைட்’ வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகிறார்கள்.” நான் முதலில் எழுதிய இரண்டு வசனங்களை விடச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இந்தச் செவ்வைப்படுத்தப்பட்ட வசனம் அமைந்திருக்கிறது என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.
“என்னைப் பொறுத்தவரை தாஜ்மஹல் பற்றிச் சொல்லும் வார்த்தைகள் என்னிடம் இல்லை. அழகிய ஒரு கவிதையை உணர்வது போல் அதை உணர மாத்திரமே முடியும் என்று நினைக்கிறேன்.” தாஜ்மஹலைப் பார்த்து விட்டு வந்து நான் எழுதிய குறிப்பில் இடம் பெற்ற வசனங்கள் இவை. செவ்வைப்படுத்தலுக்கு இதை எடுத்துக் கொண்ட நபர், “தாஜ்மஹல் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்பேன்.” என்று முதல் வரியைச் செவ்வைப்படுத்திவிட்டு, எனது அடுத்த வரிக்குப் பதிலாக அவர் தனது வரி ஒன்றை எழுதியிருந்தார். அது பின்வருமாறு அமைந்திருந்தது. “அது ஒரு கவிதை. அழகை உணர்த்தி வியக்க வைத்த அற்புதப் படைப்பு,”
முதலாவது செவ்வைப்படுத்தலை ஏற்றுக் கொண்ட என்னால் தாஜ்மஹல் பற்றிய செவ்வைப்படுத்தலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மற்றொருவரின் வரிகள் அதற்குள் செருகப்படும் போது அதற்குள் நான் இருக்க மாட்டேன் - அதாவது கருத்துக்குரியவன் இருக்கமாட்டான் என்பதால் அதை நான் நிராகரித்து விட்டேன். செவ்வைப்படுத்தலில் அத்து மீறல்கள் நடவாமல் இருப்பின் மேலை நாடுகளில் போல் தமிழிலும் செவ்விதாக்கத்துக்கென்று சில விற்பன்னர்கள் தோன்றியிருக்கக் கூடும். அவர்கள் அதையே தொழிலாகச் செய்து புகழும் பெருமையும் கொண்டு வாழ்ந்திருக்கவும் முடியும்.
எடிட்டிங் - செவ்விதாக்கம் என்பது வெட்டியெறிதல் என்று ஒரு தப்பான புரிதல் இன்று நமக்கிடையே நிலவுவதாக நான் நினைக்கிறேன். நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பிரதியை மூன்று பக்கங்களுக்குக் கொண்டு வருவது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஒரு பிரதி பேசும் செய்தி அது விவரிக்கும் அம்சம் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றை ஆழ்ந்த கவனத்திற் கொண்டே அந்தப் பிரதியில் மற்றொருவர் கரம் பதிக்க வேண்டும். ஒரு பிரதியைச் சுருக்கும் போது அது பேசும் விடயம் அதன் கலை நயம் அதனுள் அடங்கியுள்ள தகவல்கள் எவையும் சிதைவுறாமல் செம்மைப்படுத்துவதே சிறந்த செவ்விதாக்கமாகும். நாம் இந்த அம்சங்களில் கவனம் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய உண்மை.
இதன் காரணமாக எழுத்தின் கணக்கில் பெறுமதியற்றதும் கனதியற்றதும் ஓர் ஆவணமாகவோ பெறுமானமுள்ள ஒன்றாகவோ கருதமுடியாதவையுமான வெற்றெழுத்துக்கள் உலகத்தில் முதுகில் ஏற்றப்படுகின்றன. கைக்குள் சுருங்கிப் போன உலகின் பார்வையில் இவையாவும் வெறும் காகிதக் கற்றைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்தக் குப்பைகள் சேர்வதற்குப் புதிய தலைமுறை மட்டுமே பொறுப்பு அல்ல. மூத்த படைப்பாளிகள் என்று அழைக்கப்படுகின்ற புதிய வாசிப்பையும் கணினியையும் இணையத்தையும் மறுதலிப்பவர்களும் கூட ஜவாப்தாரிகளே.
ஒரு நல்ல பிரதியைப் படைக்க கணினி அவசியமில்லைத்தான். புதிய வாசிப்பையும் புதிய போக்கையும் இவர்கள் புரிந்து கொள்ள முன்வராத காரணத்தால் இன்னமுமே ‘மேற்கு மலைச் சாரலில் ஆதவன் இறங்கிக் கொண்டிருந்தான்’ என்றுதான் தமது பிரதியை ஆரம்பம் செய்கின்றனர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் யாவும் ஏற்கனவே சொல்லப்பட்ட விதிமுறைகளுக்குள் அமைந்திருந்தால் மட்டுமே அது இலக்கியமாகும் என்றும் அதற்கப்பால் எதை யார் எப்படி எழுதினாலும் அதை நாம் அங்கீகரிக்கமாட்டோம் என்கிற போக்கிலும் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இந்தச் சட்டங்கள் எவையும் வேதவாக்கியங்கள் அல்ல. மனிதனின் இரசிப்புக்குத் தகுந்ததாக நாம்; சொல்ல நினைப்பதை எந்த ஒரு வடிவத்திலும் சொல்ல முடியும் என்று இன்று நவீன வடிவங்களோடு வரும் பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் மறுவாசிப்புக்குட்படுத்துவதும், அது நமக்கும் நமது வாழ்வுக்கும் நமது கருத்துக்கும் ஒவ்வாத பட்சத்தில் அதைத் தூக்கி வீசிவிட்டு நகர்ந்து போவதும் இன்று வெகு சாதாரணமாக இடம்பெற்று வருகிறது. வித்தியாசமான எழுத்துக் கோலங்களை இன்று நாம் பார்க்கிறோம். ஒரு சிறு கதை வடிவத்துக்குள் பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிறு சம்பவத்தை வைத்துக் கொண்டு விபரிக்கப்படும் எழுத்துக்கள் விவரணமா, கதையா, கட்டுரையா, நெடுங்கவிதையா என்ற தீர்மானத்துக்கு வரமுடியாத ஆனால் ரசித்துப் படிக்கத் தக்கதான பல பிரதிகளை நாம் காண்கின்றோம்.
எதிர்காலத்தில் இவ்விலக்கியப் பிரதிகளுக்குச் சூத்திரங்கள் வகுக்கப்படப் போவதில்லை. ஏனெனில் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருந்து இது இப்படித்தான் என்று என்று எழுத யாருக்கும் நேரம் இல்லை. அப்படியே எழுதினாலும் உனக்கு யார் இதற்கான அதிகாரத்தைத் தந்தார்கள், எதற்காக நீ இதைச் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு முதலில் அவர் விடைசொல்லத் தயாராக இருக்க வேண்டும். நடையிலேயே ஒரு குச்சி ஐஸ்கிறீமை நக்கிவிட்டுக் குச்சியை வீசுவது போன்ற நிலை இப்போது உருவாகி விட்டது.
இந்த வகை எழுத்துக்களும் செவ்விதாக்கத்தைக் கோரி நிற்கின்றனவா என்று கேட்டால் நான் ஆம் என்ற பதிலைத்தான் சொல்லுவேன். புதிதாக உருவாக்கப்படும் ஒரு சிற்பம் குரங்கு முகமும் மனிதக் கரங்களும் கோழிக் கால்களும் கொண்டதாவோ கையை நிலத்தில் ஊன்றிக் காலை நீட்டிப் பிச்சையெடுக்கும் மனித உருவமாகவோ செதுக்கப்படலாம். ஆனால் அது சிற்பமாக இருக்க வேண்டும். அது சிற்பமாக இருக்க வேண்டுமானால் செதுக்கப்பட்டே ஆக வேண்டும். செப்பமற்ற எந்தவொன்றும் சிந்தையைக் கவருவதில்லை. ஆசையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே எந்தவொரு பிரதியும் செவ்வைப்படுத்தலுக் குள்ளாக்கப்படுவதன் மூலம் அந்தப் பிரதி சிறந்த சிலும்பலற்ற ஒரு படைப்பாக மாறும் என்பது தெளிவானது.
நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை ஆறு முறைகள் செவ்வைப்படுத்தினேன். இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் இது மீண்டும் மீண்டும் செவ்வைப்படுத்தலுக்குள்ளாகலாம். இதை மற்றொரு அனுபவஸ்தர் இன்னும் சிறப்பாகச் செவ்வைப்படுத்தித் தர முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
ஊடகங்களில் சிலவேளை படைப்புகளுக்கு நேரும் கதியானது படைப்பாளியின் ஆத்மாவின் மீது ஒரு புல்டோஸரை விடுவது போல் அமைந்திருக்கும். மிக நேர்த்தியாகச் செவ்வைப் படுத்தப்பட்டு அனுப்பப்படும் ஒரு படைப்பு பத்திரிகையில் அங்கக் குறைபாட்டுடன் பிரசுரமாகும் சந்தர்ப்பம் உள்ளது. பத்திரிகைக் காரியாலயத்தில் உண்மையில் அது மீண்டும் ஒரு செவ்வைப்படுத்தலுக்குள்ளாவதால் அவ்வாறு நேர்வதில்லை. பத்திரிகையில் இடம்பெற்றாக வேண்டிய பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்படும் போது அல்லது கட்டாயம் இடம்பெற்றாக வேண்டிய ஓர் அம்சம் வலுக் கட்டாயமாகத் திணிக்கப்படும் போது வேறு வழியில்லாம் இவ்வாறு நேர்ந்து விடுகிறது. பத்திரிகையாளர் செவ்வைப்படுத்தல் எனும் பெயரில் தனது பிரதியைச் சின்னாபின்னப்படுத்தி விட்டார் என்று பத்திரிகையாளரின் பரிதாபத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் ஓலமிடுவதும் உண்டு. அதே வேளை வாசகருக்குப் புரியாது என்று எண்ணி அதை இலகுபடுத்துவதற்காகச் செய்யப்படும் திருத்தங்களும் ஒரு பிரதியின் செழுமையைச் சிதைப்பதுண்டு.
“ரினிடாடும் டுபாகோவும் கரீபியன் தீவுகள் ஒரு நாடு!” இந்த வசனம் பத்திரிகையில் பிரசுரமான போது இப்படியிருந்தது:- “ரினிடாடும் டுபாகோவும் கரீபியன் தீவுகளில் ஒரு நாடு.”
அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த பேராசிரியர் அமீர் அலி அவர்களுடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது அவர் எனக்குச் சொன்ன ஒரு தகவல் இந்த இடத்தில் குறிப்பிடப்படுவதற்கு மிகவும் பொருத்தமானது. “சிந்தனைத் தேக்கமும் மந்தைப் போக்கும் - உலக முஸ்லிம்கள் உறங்கிய வரலாறு” என்ற தலைப்பில் தேசியப் பத்திரிகையொன்றுக்கு அவர் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். இந்தக் கட்டுரை “இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பிடப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கலாநிதி அமீர் அலி இட்டிருந்த தலைப்பில் அக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் அழகு அந்தக் கட்டுரையைப் பரந்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும். ஆனால் பத்திரிகை ஆசிரியரின் செவ்விதாக்கத்தின் கொடுமையால் க.பொ.த.உயர்தரத்தில் கற்கின்ற, பத்திரிகை படிக்கின்ற, இஸ்லாமிய நாகரிகத்தை ஒரு பாடமாக எடுக்கின்ற மாணாக்கரின் கவனத்துக்குள் மட்டுமே அது சென்றடைந்திருக்கும்.
அது ஒருபுறமிருக்க, மிக அருமையான விடயங்களை, புதிய அம்சங்களை உள்ளடக்கி எழுதப்படும் ஒரு பிரதி வாசிக்கப்படாமல் வாசகர் கவனத்தை ஈர்க்காமல் போய்விடுவதும் நிகழ்ந்து வருகிறது. ஒரு பிரதியைப் படைப்பாளி எப்படித் தொடங்குகிறார் என்பதிலும் அதை எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்பதிலுமே அதன் வெற்றியின் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. ‘சப்பை’ வார்த்தைகளில் பிரதி ஆரம்பிக்கும் போது அதை வாசிக்கும் ஆர்வம் யாருக்குமே ஏற்படுவதில்லை.
மிக அண்மையில் நான் படித்த என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறுகதை பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதை ஒரு போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் எழுதப்பட்ட கதை இது. வடக்கில் தான் படித்த பாடசாலையில் தற்போது படிக்கும் மாணவர்கள் உண்ண உணவின்றி மயங்கி விழுந்து கொண்டிருப்பதால் அப்பாடசாலையின் அதிபர் கொழும்பிலுள்ள பழைய மாணவர் சங்கத்திடம் உதவி கோருகிறார். தலை நகரில் உயர் அந்தஸ்தில் வாழும் பழைய மாணவர்கள் பணம் சேகரிப்பதற்காக ஒரு கிறிஸ்மஸ் விருந்தை ஏற்பாடு செய்கிறார்கள். சேரும் பணத்தில் குடியும் கும்மாளமுமான பெரு விருந்துக்குப்; போன செலவு கழிய மிகுதியான ஆயிரத்துச் சொச்சம் ரூபாவை பாடசாலைக்கு அனுப்ப முடிவு செய்யும் அற்பத்தனத்தைச் சொல்லும் கதை.
ஆழமானதும் ஆத்மாவைத் தொடுவதுமான இந்தக் கதை, “மேல் வானம் சிவந்திருந்தது. கதிரவன் கடலினுள் துயில் கொள்ளச் சென்று கொண்டிருந்தான்” என்று மிகவும் சப்பையாக ஆரம்பமாகிறது என்பதுதான் பெரும் சோகம். இந்தச் சூரியன் மேற்கில் மறையும் அதிசயத்தைச் சொல்லிக் கதை ஆரம்பிக்கும் வழக்கத்தை என்றைக்கு நமது படைப்பாளிகள் கைவிடுவார்கள் என்று தெரியவில்லை. ஒரு தேர்ந்த படைப்பாளியினால் செவ்வைப் படுத்தலுக்கு உட்பட்டிருந்தால் இக்கதைக்கு முதற் பரிசு கிடைத்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். இலக்கிய உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும் என்பதும் நிச்சயம்!
பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய ‘லுங்கி’ என்று ஒரு கதை இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அக்கதையின் முதல் வசனமும் முதற் பந்தியும் கதையில் நம்மை ஒன்ற வைக்கும் அழகை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
“அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிற போது தெருவை மறைத்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்த போது சித்தீக் பாய்தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால் அப்பா மல்லுக்கு நிற்பார் அல்லது அப்போதைக்கு மௌனமாக இருந்து விட்டுத் தனது ஆட்களிடம் சொல்லி நியாயம் கேட்ட ஆளை ஒரு வழி பண்ணிவிடுவார். சித்திக் பாய் அப்படி எதுவும் செய்ய இயலாத தோற்றத்தில் இருந்தார். அவரது உடையும் தாடியும் வெண்மையில் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டது. இளஞ்சிவப்பு நிறமும் கருணை ததும்பும் கண்களும் கன்னங்கரிய கூட்டுப் புருவங்களும் நெற்றியில் தொழுகை தந்த தடமும் அப்பாவை அடக்கி விட்டது. தொழுகை செய்த தடம் பிறை போல இருந்தது பேரழகு. இதையெல்லாம் விட, சித்தீக் பாய் அப்பாவை விடப் பணக்காரர் என்கிற காரணமே அப்பா அடங்கி விடப் போதுமானதாக இருந்தது.”
‘சொல் ஒன்று வேண்டும் என்றான்’ பாரதி. அந்தச் சொல்தான் மந்திரச் சொல். அந்தச் சொல் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு ஆரம்பமாகும் படைப்பு அல்லது அதை ஆதாரமாகக் கொண்டு உருவாகும் படைப்பு மிக உன்னதமானதாக இருக்கும். வேண்டும் என்று பாரதி சொல்லும் அந்தச் சொல் எங்கிருந்து கிடைக்கும். அதை மலையாள எழுத்தாளர் பி.கே. பாறக்கடவு எழுதிய - கவிஞர் அல் அஸ_மத் மொழிபெயர்த்த ‘வாக்கு’ என்கிற சின்னஞ்சிறு கதை, ஆனால் விசாலமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் கதை - விளக்குகிறது.
“கவிதை எழுதிக் கொண்டிருப்பதற்கிடையில் பொருத்தமான ஒரு சொல்லுக்காகக் கவிஞன் நிறையவே சிந்தித்தான். ஒரு சொல்லுக்காக வேண்டி மௌனம் கொண்டு அவன் தவம் மேற்கொண்டான். பொருத்தமான ஒரு சொல்! பகலிரவுகள் அவனைக் கடந்து போயின. அவ்வாறாக உறக்கம் அவனைக் கைவிட்ட ஓர் அதிகாலையில் அவன் எழுதும் தாளில் ஆகாயத்திலிருந்து ஒரு நட்சத்திரம் அடர்ந்து வீழ்ந்தது.”
இப்படித்தான் அந்தச் சொல் வரும். ஆகாயத்திலிருந்தோ அந்தரத்திலிருந்தோ அது வரும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அது நினையாப் புறத்திலிருந்து கிடைக்கும். அதைச் சில வேளைகளில் தேவதைகள் கொண்டு வந்து படைப்பாளியின் மடியின் மீது வீசி விட்டுச் செல்வார்கள். அந்தச் சொல் மட்டும் கிடைத்துவிட்டால் உருவாகும் படைப்புக்குச் செவ்விதாக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் அப்படியொரு சொல் இருக்கிறதென்று நம்மில் பலர் அறிய மாட்டார்கள். அறிந்தவர்கள் கூட அந்தச் சொல் வரும் வரை பொறுமை காப்பதில்லை. அதற்காகத் தவம் இயற்றுவதில்லை. எழுத்தை யாகமாகச் செய்வதில்லை.
நமது பேராசிரியப் பெருந்தகைகள் முதற் கொண்டு இன்றைய படைப்பாளி வரை எழுதியதை மீண்டும் ஒரு முறையேனும் படித்துப் பார்க்காத நிலை தெரிகிறது. ஆகக் குறைந்தது எழுத்துப் பிழைகளைக் கூடத் திருத்தாமல் அனுப்பி விடுகின்ற நிலைதான் நமது தமிழ் மொழிச் சூழலில் இலக்கியச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருப்பாகப்படுகிறது. எனவேதான் நமது எழுத்துக்கள் நிச்சயமாகவும் கட்டாயமாகவும் செவ்வைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேயாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
“உனது கவிதை ஐந்து பக்கங்களில் எழுதப்பட்டுள்ளதா? மூன்று பக்கங்களைக் கிழித்து எறிந்து விடு! ஏனெனில் ஐந்து பக்கங்களில் எழுதப்பட்டதில் இரண்டு பக்கங்களில் மாத்திரமே கவிதை இருக்கிறது” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை குறிப்பிட்டார்.
வானொலியில் ஒரு சிறந்த அறிவிப்பாளராக, ஒரு தயாரிப்பாளராகக் கடமையாற்றிய எழுத்தாளர் அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரனின் ‘வானொலியும் நானும்’ என்ற நூலில் 127ம் பக்கத்தில் ‘லாம்பெண்ணெய் விலை’ என்று ஓர் அத்தியாயம் உள்ளது. 1973ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட காலத்தில் ஒலிபரப்பான ஒரு செய்தியறிக்கை பற்றி அந்த அத்தியாயத்தில் அவர் எழுதியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கும் சாத்தியம் உண்டு எனப் பலரும் எதிர் பார்த்தது போலவே நடந்தது. அதன் விபரம் அறிவதற்காக அன்று ஒரு தேனீர்க் கடையோரம் செய்தியறிக்கைக்குக் காது தாழ்த்தியபடி பலர் நிற்கிறார்கள். ஜோர்ஜூம் அவர்களுடன் நின்று செய்தியறிக்கையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு நின்றிருந்தோர் எவரும் ஜோர்ஜை ஒரு செய்தியறிவிப்பாளர் என்று அறியமாட்டார்கள். வழமை போல் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பைச் சொல்லும் செய்தியறிக்கை பீப்பாய்க்கு இவ்வளவு தொகை அதிகரித்துள்ளது என்று ஐந்து நிமிடங்களாகச் சொல்லிக் கொண்டே போனது. அங்கிருந்த ஒரு சாதாரண மனிதன் வாசித்துக் கொண்டிருந்த செய்தியறிவிப்பாளருக்கு, “டேய்... என்று ஆரம்பித்து தூஷண வார்த்தையில் விளித்து, ‘போத்தலுக்கு எவ்வளவு அதிகரித்துள்ளது என்று சொல்லுடா!’ என்கிறான்.
இந்தச் சம்பவத்துக்குள் செவ்விதாக்கத்துக்கான வரைவிலக்கணம் ஒளிந்து கிடப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
(உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ‘செவ்விதாக்கம்” ஆய்வரங்கில் இன்று (09.01.2011)படிக்கப்பட்ட கட்டுரை)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2 comments:
சேர்......... எனக்கு எதுவுமே சொல்வதற்கு வருதில்லை...எப்படி சேர் இப்படியெல்லாம்..?
”ஒரு பிரதியைப் படைப்பாளி எப்படித் தொடங்குகிறார் என்பதிலும் அதை எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்பதிலுமே அதன் வெற்றியின் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. ‘சப்பை’ வார்த்தைகளில் பிரதி ஆரம்பிக்கும் போது அதை வாசிக்கும் ஆர்வம் யாருக்குமே ஏற்படுவதில்லை”
உங்களுக்கு இது மிகப் பொருந்தும்...எவ்வளவு அழகான நகர்த்தல்.. சொல்ல வந்த விடயத்ததை நீங்கள் சொன்ன விதம்..அபாரம் சேர்..
இவ்வளவு கவர்ச்சிகரமாக, எழுத்து ஆளுமையுடன் , வாசிக்கும் வாசகரை நகரவிடாமல் வாசிக்கப் பண்ணும் உங்கள் எழுத்தின் மந்திரம் தான் என்ன..? ( மாஷா அல்லாஹ்) ... வெறும் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை..நீங்கள் சொல்ல வந்ததை சக்கையாக பிழிந்து சொன்னவிதம்
மிகத் தொட்டு கொண்டது..
செவ்விதாக்கம் தேவை ஆனால் தேவையில்ல.... இரண்டு பக்கமான நிலமைகளையும் உள்வாங்கிக்கொண்டோம்..ஆழமான ஒரு தேடலுக்குள் எங்களையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்..இன்னுமே இதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை....
”செப்பமற்ற எந்தவொன்றும் சிந்தையைக் கவருவதில்லை. ஆசையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே எந்தவொரு பிரதியும் செவ்வைப்படுத்தலுக் குள்ளாக்கப்படுவதன் மூலம் அந்தப் பிரதி சிறந்த சிலும்பலற்ற ஒரு படைப்பாக மாறும் என்பது தெளிவானது.”
தொடருங்கள் சேர்..........
Face book comments
Vj Yogesh
I've already read this Sir.
Thanks for reminding again. It's such a great article...
23 hours ago
Lareena Abdul Haq
ஆஹா! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் மிக அற்புதமான பதிவு. நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. மனம் நிறைந்த நன்றிகள் Sir.
Munas Kalden
Prof. came for a translation class, organised by Vibasha and i translated 'aquaculture' as 'neeriyam'; he did not agree and said 'neerkalacharam', to which I could not agree, becouse simply does not reflect anything of 'culture'..! At that time, I worked for the Ministry of Fisheries and Aqutic Resources..!
20 hours ago ·
Post a Comment