Monday, August 8, 2011

இருட்டுக்குள் வெளிச்சம்!


சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா

இது ஒருவகை இலக்கியம், இதுதான் இலக்கியம், இதுவும் இலக்கியந்தான், இதுதான் இன்றைக்குத் தேவையான இலக்கியம் என்று பலவகையான வார்த்தைகள் சிலவற்றைப் படிக்கும்போது தோன்றும்.

ஒருகுடம் கண்ணீர் - இதுதான் இன்றைக்குத் தேவையான இலக்கியம் எனும் வகையறாவைச் சார்ந்தது. நாவல்களாய், சிறுகதைகளாய், நவீன கவிதைகளாய் புத்தம் புதிய இலக்கிய நுட்பங்களோடு சமகால இலக்கிய உலகம் பயணிக்கும்போது அஷ்ரப் ஷிஹாப்தீன் போன்ற அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் இது போன்ற குடங்களை ஏந்திவந்து இலக்கிய தானம் தர முன்வந்தமை இளம் பரீட்சார்த்த இலக்கியப் படைப்பாளிகளுக்குச் சொகுசாகக் கிடைத்த அடித்தளமாகவே எனக்குப்படுகிறது. ஏனெனில் இலக்கியம் படைக்கப்படுவதைவிட அது இலக்கியமாக அங்கீகரிக்கப்படுவதில்தான் சவால்கள் காத்திருக்கின்றன.

ஒரு குடம் கண்ணீர் ஒடுக்குமுறையின் அடையாளங்களை திரவ வடிவில் குறியீடாக்கி அடுத்த சந்ததிக்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியினை செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றது. வுhனம்பாடிக் கவிஞர்களை மானுடம் பாடிகளாக மாறிவிடுங்கள் என்று அறம்பாட அறைகூவும் தொனி அஷ்ரப் ஷிஹாப்தீனின் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் ஒலிப்பதை உணர முடிகிறது.

தமிழில் உரைநடை இலக்கியம் பிரித்தானியர் காலத்திலேயே தோற்றம் பெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு. பிரித்தானிய காலனித்துவம் உலக ஒழுங்கியலை மாற்ற வழிகோலிய போது தமிழ் இலக்கியம் தன்னை புனர்நிர்மாணம் செய்துகொள்ள முற்பட்டமை சரியானதாகவே தோன்றுகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்தினால் இலக்கியமாகப் பார்க்க முடியாமல்போன ராமாயணம் வேதாந்த அரசியலாய் பார்க்கப் படுமளவுக்கு இந்த நூற்றாண்டில் இலக்கியம் பற்றிய புரிதல் தர்மத்திற்கு முரணாக நகரும் என்றால் பாமரனையும் சென்றடையக்கூடிய இயல்பான இலக்கிய வடிவமான உரைநடை இலக்கியங்கள் கருக்கொள்ளவேண்டும் என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

ஒருகுடம் கண்ணீர் அவ்வாறான சிந்தனையின் வெளிப்பாடாக இலக்கிய உலகின் இதயங்களில் கசிவுகளை எற்படுத்தும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

இக்குடத்தின் கண்ணீர்த் துளிகள் பலஸ்தீனின் பாலைவனங்களுடே பயணித்து வந்திருக்கிறது. பொஸ்னியாவின் ரத்தச் சகதிகளுக்குள் ஊடுருவி எம்மை அடைந்திருக்கிறது. ஆபிரிக்காவின் மீது முதலாளித்துவம் சுரண்டிய மேற்றோல்களின் செதில்களுடன் உரையாடி விட்டு வந்திருக்கிறது, காஷ்மீரின் சிவப்பு ரோஜாக்களுக்கு குருதிச் சிவப்பு நிறம் வழங்கிவிட்டு இமயமலையின் அடிவாரத்தில் தவம் செய்து மோட்சம் பெற்று வந்திருக்கிறது ஈராக்கில் அமெரிக்கக் காமுகனால் கருகிப்போன ஒரு மணிப்புறா அபீர் ஹம்ஸாவின் பிஞ்சுத் துளிகளைக் கோர்த்து வந்திருக்கிறது. சங்கைக்குரிய பிக்குவே, மேலிடத்து உத்தரவின் பேரில்தான் உங்களைக் கொடுமைப்படுத்துகிறோம் எனும் கொடுமையாளனின் ஈரநெஞ்சோடு தோழமை கொண்ட பிக்குவின் கண்ணீர்த் துளிகளும் இதில் அடங்கியிருக்கிறது.

 இஸ்லாம் பற்றி அறிய ஆசைப்பட்ட பாவத்திற்காய் பாகிஸ்தானுக்கு சென்றதற்காய் பயங்கரவாதி எனும் பெயர் பெற்ற ஜெர்மனியப் பிரஜை முராத் குர்னாஸின் உறைந்து போன திண்மத் துளிகளும் இதில் அடக்கம் சி.ஐ.ஏ இன் துன்புறுத்தல் மன்னர்களால் சீரழிக்கப்பட்ட லோரன்ஸோ ஸெலாயா எனும் கம்யூனிஸ அமைப்பின் சகோதரி முரில்லோவின் பேச முடியாதவர்களுக்காகப் பேச முனையும் தழுதழுத்த கண்ணீர்த் துளிகளும் இக்குடத்தில் குடிகொள்கிறது.

பாகிஸ்தானின் பாழாய்ப்போன கட்டைப் பஞ்சாயத்தின் பண்ணையார் களால் மயிர்க்கூச்செறியும் ஆக்கினைக்கு ஆளான முக்தார்மயி எனும் அபலைப் பெண்ணின் முக்காடுகளுடன் நனைந்து கிடந்த கண்ணீர்த் துளிகளும் இங்கிருக்கிறது.


புள்ளிவாசலுக்குச் சென்ற குற்றத்திற்காக தண்டனையனுபவித்த அபூஹூதைஃபாவின் நிர்வாண அவலத்தின்போது உதிர்க்கப்பட்ட சோகத்துளிகளும் இக்குடத்தில் வாழ்கின்றன. லூஸியா எனும் கிறிஸ்தவப்பெண் - ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் பெத்லஹேம் எனும் இயேசுவின் நகரத்தைச் சேர்ந்த பெண்ணின் வரண்ட சோகத்துளிகள் சிலவைகளைத் தரிசித்துவிட்டு வந்திருக்கிறது.

இப்படி இன மத வேறுபாடுகளுக்கப்பால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவன் வடித்த கண்ணீர்த்துளிகளும் அவர்களுக்காய் பிறர் வடித்த கண்ணீரும் அஷ்ரப் ஷிகாப்தீனின் நூலின் வழியே பயணிக்கிறது. தான் சார்ந்த சமூகத்தவர்கள் இழைத்த கொடுமைகளையும் வஞ்சனை ஏதுமின்றி இலக்கிய தர்மத்துடன் பதிவு செய்துள்ள நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.

முகம்மத் எனும் பாலஸ்தீனத்து இருள் வானத்தின் சிறு நட்சத்திரம் ஒலிம்பிக் கனவுகளோடு சிதறுண்ட காவியம் கோரமுக இஸ்ரேலின் துப்பாக்கித் திருவிழாவில் கொலையுண்ட பரிதாபம், அஷ்ரப் சிஹாப்தீனின் முதல்கதையாய் அமைகிறது இந்நூலில் ஒட்டுமொத்த உலகினையே காடைத்தனத்தால் குத்தகைக்கெடுத்து வக்கிரத்தின் புத்திரரை பூமியெங்கும் பரத்துவதே இந்த ஸியோனிசம்தான் என்பதில் தெளிவாக இருப்பதுதான் இந்நூலைத் தொகுப்பதற்கு இவரிடம் நான் கண்ட பிரதான அருகதை.

செரப்ரெனிகா எனும் பொஸ்னியாவின் அகதிகள் சந்தித்த சனசங்காரச் சகதியின் ரத்தவாடையை நுகரச் செய்திருக்கிறார் நூலாசிரியர். இந்நூலில் இரண்டாவது பதிவு இது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்த இனசங்காரம் என்பதை ஹஸன் நுஹானோ எனும் மொழிபெயர்ப்பாளனின் சாட்சியத்தின் மூலம் ஒரு ஒப்பீட்டு ஆய்வுக்கான தேடு களத்தின் வாயில்களைத் திறந்து விட்டிருக்கிறார் இவர். ர்ழடழஉயரளவ நிகழ்வுகள் இடம்பெற்ற ஜேர்மனையும் இறந்தும் இறவாமல் சதா வில்லனாக வாழும் ஹிட்லரையும் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து ஸியோனிஸ யூதர்களுக்கு ஐரோப்பா பாதகாப்பற்றது என்பதனை நிறுவும் இலக்கே வரலாற்றுக் கடமையென்று பாடநூல்களில் பறையடித்து வைத்திருக்கிறது உலக ஆதிக்க சக்தி.

இரண்டாம் உலகப்போர் மூட்டிய புகை மண்டலத்திற்குள் ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் 21ம் நூற்றாண்டுவரை குண்டு மழை பொழியும் மேற்குலகம் கண்டிக்கப் படவேண்டியது என்பதை பொஸ்னியாவின் அகதிகளின் அழுகுரல்களூடு முரசு கொட்டுகிறது இந்நூல்.

Under the UN Flag: The international Community and Genocide in Serebrenica எனும் இந்த கதையின் நாயகன் ஹஸன் நூஹானோ எழுதிய நூலை ஒரு அவலக் கருவினூடாக அறிமகம் செய்திருப்பது தனிப்பெருஞ் சிறப்புமட்டுமல்ல Investigative Journalism எனும் நவீன ஊடகப் பலனாய்வு பற்றிய எண்ணக் கருவினையும் வலியுறுத்தி நிற்கிறது.

ஐ.நாவின் நேட்டோவின் மௌன அங்கீகாரத்தின் முன்னிலையில் நேர்ந்த சித்திரவதை படங்களை வலிகளின் சந்தங்களோடு காதுகளுடன் ரகசியம் பேசுகிறது இக்கதை.

பிஞ்சுகளும் பிசாசுகளும் எனும் ஆபிரிக்காவின் களிமண் நிறத்துப் பெண் ரீட்டா கொமுண்டாவின் இனப்பிரச்சினை பற்றிய முனகல் என்னை வியப்பிலாழ்த்தியது. புpணமாகக் கண்ட அப்பாவின் உடலைத் தூக்கிச் செல்லவோ அஞ்சலி செலுத்தவோ அவகாசம் இல்லையென்பதைச் சடுதியாக உணர்ந்த அவளது அம்மா சுதாகரித்துக் கொண்டாள் என்று கதை சொல்லும் பாங்கு அதீத கற்பனாவாத இலக்கியவாதிகளின் சட்டைகளைப் பிடித்து உலுக்கி யதார்த்த உலகின் காகித நிலங்களின் மீது உனது பேணாவைப் பிடித்து உழுதுகொள் என்று சொல்வதுபோல் இருக்கிறது.

காத்தாண்குடிப் பள்ளிவாசல்களில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தாய் மாமன் செய்யது ஷரிபுத்தினுக்கும் அவரது புதல்வருக்கும் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக நூற்றொரு பேருக்கும் இந்நூலை அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் சமர்ப்பணம் செய்திருப்பது இன்றைய காலகட்டத்தின் அரசியல் இலக்கியப் பதிவுகள் தொடர்பாக பாரிய கவனத்தை ஈர்ந்திருக்கிறதென்றே கூறலாம். நாங்கள் எல்லோரும் மலரஞ்சலிகளைப் பார்த்திருக்கிறோம்.மெளனாஞ்சலி செலுத்தியிருக்கி றோம். ஏன் கவிதாஞ்சலியும் பாடியிருக்கிறோம். ஆனால் ஒரு குடம் கண்ணீர் அவலாஞ்சலி எனும் புதிய வகையினைச் சாரும்.

மண்ணள்ளி வீசி திட்டித் திமிறும் தாய்மார்களை எனது கிராமியத்தில் நான் பார்த்திருக்கிறேன். அவலங்களை அடுக்கி அடுக்கி ஒடுங்கிய கண்ணீர்த் துளிகளை குடத்தில் ஏந்தி வந்து இடுப்பு வலிக்க வலிக்க கால்கள் கடுக்க விறைக்க தமிழ்ச் சங்கத்தின் மேடையின் மீதேறி நின்று தழும்புகளைக் காட்டுகிறார் அஷ்ரப் சிஹாப்தீன். அறம்பாடிய வள்ளுவனையும் அச்சம் தவிர்த்த பாரதியையும் ஞாபகம் செய்யும் இந்த மண்டபத்தில் அவலங்களை விற்க வந்திருக்கும் இந்த அங்காடிப் படைப்பாளியைப் பார்த்து யார்தான் கண்ணீர்வடிக்காமல் இருக்கமுடியும்.

ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஒடுக்கியதாக இது பார்க்கப் படுவதைவிட ஒரு பாஸிஸ இயக்கம் தனது இலக்கினை மறந்து சர்வதேச ஆயுத வினியோகஸ்தர்களின் வலையில் வீழ்ந்து தனது இளம் போராளி களையும் சமூகத்தையும் அடகுவைத்து சர்வதேச ஆக்கிரமிப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகி மாண்டுபோனது மட்டுமன்றி மற்றொரு சகோதர இனத்தையும் படுகொலை செய்து தனது வரலாற்றுப் பக்கங்களை நிரந்தரமாக கறை படியவைத்து விட்டதே எனும் ஏக்கத்தில் உதிரம் எனது கண்ணீர்த் துளிகளை தமிழ்ச் சங்கத்தின் சான்றோர்கள் முன்னிலையில் உதிர்த்து விடுகிறேன்.

தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம், தனித்துவம், அடையாளம், தனித்தரப்பு, தடாலடி அறிக்கைகள், சங்கு தப்பினால் கணபதிப்பிள்ளை என்று அரசியல் பிழைப்பு நடாத்தும் சிறுபான்மை அரசியல் கேலிச் சித்திரங்களை இன்னும் இன்னும் நம்பி வாழ்வதா என்பதை எமது மக்களும் மாண்புற்றோர்களும் சிந்திப்பதே நன்று.

வடக்கும் கிழக்கும் - இணைந்த வடகிழக்கு எனும் பதங்கள் எல்லாம் வடக்கின் காய்ந்துபோன ஒடியற் கிழங்குகளைப் போலவும் கிழக்கின் துருத்திக் கொண்டிருக்கும் முந்திரிக் கொட்டைகள் போலவும் அரசியல்வாதிகளின் சட்டைப் பைகளுக்குள் கொறி தீன்களாய் பயன்படுத்தப்படுகின்றன. ஓலிவாங்கிகளின் உரப்பினைப் பொறுத்த அவற்றின் “நறுக்” சத்தம் எம்மையெல்லாம் உசுப்பேற்றிய காலம் முற்றுப் பெறவேண்டும் என்று அஷ்ரப் சிஹாப்தீனின் அறைபட்ட ஆத்மா அழுதுகொண்டிருப்பது எனக்கு மட்டும் நன்றாய்க் கேட்கிறது.

நூலாசிரியர் தனது சுய படைப்புக்களை கடந்த காலங்களைப் போன்று வெளியிடத் தெரியாதவரல்ல. உன்னை வாசிக்கும் எழுத்து எனும் 2007 இல் வெளிவந்த அவரது மொழி பெயர்ப்புப் படைப்பின் போதே அவர் காலத்தின் போக்கினை வாசிக்கும் எழுத்துக்களை மாத்திரம் அடையாளம் காணும் கலையில் தேர்ச்சி கண்டிருப்பார் என்பது தெளிவாகிறது.

பொன்னாடைகளின் ஜெகஜோதியில் தங்கள் நிறங்களைத் தொலைத்து விட்டு இளமையையும் காலத்தையும் தாம் சம்பாதித்து வைத்த இலக்கியத்தின் இருட்டறைகளில் தேடும் அப்பாவிகள் வரிசையில் தானும் இடம் பெற்றுவிடக்கூடாது என்று தெளிவாக உணர்ந்த துணிவினை இந்த நூல் வெளியீடு எமக்கெல்லாம் விளக்கடித்துக் காட்டுகிறது.

அணிந்துரையும் என்னுரையும் என்றில்லாது ஆன்மாவின் முகத்தில் கலாநிதி அனஸ் அவர்களை அறைய வைத்து அதிர்ச்சி வைத்தியம் வழங்கி முன்னரைக்குப் பகரமாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தினை பதிவு செய்து நம்மையெல்லாம் ஒரு சிறைக்கூடத்திற்குள் அழைத்துச ;செல்லும் உளவியலுக்கு ஆளாக்கிவிட்டு ஒவ்வொரு கைதியிடமும் கதை கேட்க வைத்திருக்கிறார் அஷ்ரப் ஷிஹாப்தீன்.

சில மரபுகள் மீறப்படுவது தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்கு அல்ல நாம் போட்டுக்கொண்டிருக்கும் சில திரைகளை நாமாகவே கிழித்தக் கொள்ளவேண்டும் எனும் நிஜங்களை அங்குரார்ப்பணம் செய்துவைப்ப தற்காக. இத்தகைய நவீன படைப்பிலக்கிய உத்திகளைப் பிரயோகித்து சட்டப்படி கலகம் செய்ய முற்பட்டிருக்கிறார் இவர். தமிழில் இத்தகைய முயற்சி முதல் தடவை என்று ஆய்வுக்கு எட்டிய வரையில் வஞ்சனை ஏதுமின்றி என்னால் கூறமுடியும்.

சதாம் ஹூஸைனின் தூக்குத்தண்டனை என்னுள் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்லேடனின் பிந்திய மரணச் சேதிக்கு எனது கண்ணீர்த் துவாரங்களை பீறிடச் செய்யும் சக்தி இருக்கவில்லை. கடாபியின் தேசம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அவரது புதல்வர்கள் கொல்லப்பட்ட சங்கதி என்னை வியப்பிலாழ்த்தவில்லை. ஏனெனில் அவர்கள் விதைத்ததை அறுவடை செய்துகொண்டார்கள். அவர்களது வாழ்வும் மரணமும் சமூகத்தின் அவலங்களின் பிணக் குவியல்களோடே சமாதியும் கண்டிருந்தன. தமது ஆணவங்களை ஆன்மீகமயப்படுத்தி வீர புருஷர்களாகச் சித்தரித்துக் கொண்டார்கள். மக்களுக்காக சமரசம் செய்யாத தங்களது ஏகபோக உளவியலை மானுடவியல் ராஜதந்திரத்துடன் ஆராய்ந்து பார்க்க அவகாசமில்லாத சட்டாம்பிள்ளைகளாக மாண்டு மரித்துவிட்டார்கள்.

16ம் நூற்றாண்டிலிருந்து காலனித்துவ மனோபாவத்திலிருந்து கிஞ்சித்தும் பிசகாத மேற்குலகின் அரசியலை விஞ்ஞானப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமல் 21ம் நூற்றாண்டில் மானுடத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கான புதிய அணுமுறைகளையும் கருத்தியல்களையும் வடிவமைக்காமல் பூமியின் ஆரத்தில் புதையுண்டுபோன மௌட்டீகம் என்றுதான் வரலாறு இவர்களை ஆவணப்படுத்தும். இத்தகைய கார்டூன் போராளிகளை விட அஷ்ரப் ஷிஹாப்தீன் அடையாளப்படுத்தம் கதாநாயகர்கள் நிஜமான வீரர்கள், மனச்சாட்சிக்குப் பதில் சொல்லக்கூடிய அருகதை கொண்டவர்கள், அப்பாவி இதயங்களின் தப்பாத துடிப்புகள், சடங்குகளின் துணையின்றியே மோட்சடைந்த ஜீவாத்மாக்கள்.

பான்கீமுனின் மதில்மேல் பதுங்கியிருக்கும் பூனை இந்திய கறுப்புப் பூனைகளூடு கல்யாணம் செய்துகொள்ளலாம்: அமெரிக்க வெள்ளெலி களோடு ஒரே வளையில் குடும்பமும் நடாத்தலாம். சர்வதேச நாணய நிதியத்தை வழிநடாத்தும் வல்லமை கொண்ட பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்படங்களில் தோன்றி ஒரே இரவில் உலகப் புகழும் பெற்று விடலாம். இப் பூனைகளின் மீசைகளுக்கு அதர்மத்தைத் தட்டிக்கேட்கும் ஆண்மை எதுவும் கிடையாது. ஓபாமாவின் பிஜாமாவிற்குள் ஒழிந்து உறவாடும் ஒட்டுக்குடித்தனம் நடாத்தும் மானங்கெட்ட பிழைப்பு எதற்கு?

முரட்டுக் குதிரைகளில் வந்து அதட்டி அலறிவிட்டு கப்பம் வாங்கியவுடன் சாதுவாகப் போய்விடுகின்ற கோமாளி ஜீவன்களை விட, கதை கதையாய்ச் சொல்லிவிட்டு கூடிப்பாடி ஓலமிட்டு நேர்மையாகக் கண்ணீர்சொட்டி குடம் குடமாய் சுமந்து செல்லும் அஷ்ரப் சிஹாப்தீன் போன்ற தொகுப்பாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

ஸியோனிஸத்தின் அகண்ட இஸ்ரேல் கோட்பாடும் பார்ப்பனவாதத்தின் அகண்ட பாரதக் கருத்தியலும் இந்த பூமிப்பந்தின் மேற்குப் பாதியையும் கிழக்குப் பாதியையும் பிடித்திருக்கும் வினோதமான நோய்கள் என்பதை சபையோருக்கு உணர்த்த விரும்புகிறேன். ஐ.நாவின் காதுகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓலங்கள் கேட்பதாய்த் தெரியவில்லை. இந்தப் பின்னணிகளை வைத்து இந்த நூலை வாசியுங்கள்.

The World Political Order எனும் உலக ஒழுங்கியலின் சமகால நகர்வினை மனதிற்கொண்டு இந்நூலை ஆராய்க.

செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் மும்பையில் இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களுக்குமிடையே இருப்பது ஒரேவகையான அரசியல் தாக்கம்தான் என்பதை மனதில் இருத்திக் கொண்டு இந்த நூலை வாசியுங்கள்.

ஒரே பிழையான ஒடுக்குமுறையின் கோரமுகத்திலிருந்து தன்னைக்காத்துக் கொள்ள, ஒரு சரியான கருத்தியல் தளம் கூட மற்றுமொரு ஒடுக்குமுறையை அரங்கேற்றிவிடக்கூடும் எனும் ஊகங்களையும் இந்த நூலின் வாசிப்பு உங்களுக்கு உணர்த்திவிடக் கூடும்.

ஒரு சமூகவியல் பாசறையில் பயிற்சிபெற்று அதனை சட்டத்துறை அம்சங்களுக்குப் பிரயோகித்து சர்வதேச அரசியலோடு ஆராயச் செய்து இலக்கியப் பூச்செண்டு வைத்து அவலங்களுக்கு அஞ்சலி செலுத்தும் பன்முக அறிவியலை இந்நூல் எமக்கெல்லாம் அறிமுகம் செய்கிறது.

இக்குடத்தின் கண்ணீர்த்துளிகள் மானுட எச்சங்களின்மீது தெளிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறதென் கண்களுக்கு… காருண்ய நாற்றுக்கள் பசுமையின் நிறங்கொண்டு பருவம் அடைவதும் புரிகிறது ஏனக்கு.

ஒன்றுமட்டும் சொல்கிறேன்.. இக்குடத்தின் பானையைக் குடைந்தவன் குயவனே அல்ல…. புவிமீட்க வரவிருக்கும் இயேசுவின் சீடன் மஹ்தியின் மாணவன்….

---------------------------------------------------------------------------------------------------
28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட நயவுரை.

நன்றி - விடிவெள்ளி -  சமநிலைச் சமுதாயம் - ஆகஸ்ட் 2011


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

அட தூள் பறக்குது........இப்படியொரு விறுவிறுப்பான உரையை நான் இப்போது தான் வாசிக்கிறேன்.
குடம் கண்ணீருக்குள் மூழ்கி...முத்தெடுத்து எங்களையும் நீந்தச் செய்துவிட்டார் சட்டத்தரணி மர்ஸும் மௌலானா அவர்கள்... இதில் ஒரு விஷேசம் என்ன வெனில், பல பக்கமாக சிந்தனையைப் பறக்க விட்டு ,படிபப்வர்களின் ஆவலை மேலும் குடம் கண்ணீரின் பக்கமாகத் தூண்டியிருக்கிறார்...

உரையின் பல இடங்கள் மனதைத் தொட்டுக் கொண்டது...
”நாங்கள் எல்லோரும் மலரஞ்சலிகளைப் பார்த்திருக்கிறோம்.மெளனாஞ்சலி செலுத்தியிருக்கி றோம். ஏன் கவிதாஞ்சலியும் பாடியிருக்கிறோம். ஆனால் ஒரு குடம் கண்ணீர், அவலாஞ்சலி எனும் புதிய வகையினைச் சாரும்.”

மொத்தமாக வரிக்கு வரி புதுமையாகவே எனக்குத் தெரிந்தது..
”முரட்டுக் குதிரைகளில் வந்து அதட்டி அலறிவிட்டு கப்பம் வாங்கியவுடன் சாதுவாகப் போய்விடுகின்ற கோமாளி ஜீவன்களை விட, கதை கதையாய்ச் சொல்லிவிட்டு கூடிப்பாடி ஓலமிட்டு நேர்மையாகக் கண்ணீர்சொட்டி குடம் குடமாய் சுமந்து செல்லும் அஷ்ரப் சிஹாப்தீன் போன்ற தொகுப்பாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.”

எழுதுவதற்கு வார்த்தைகள் வரமாட்டேங்குது...

நன்றிகள்...