Friday, October 7, 2011

நீதியும் நெட்டாங்குகளும்!




குறுந்தூரப் பயணங்களுக்கு என்னிடம் ஒரு ஸ்கூட்டர் உண்டு.

முன்னைய காலத்தில் மோட்டார் சைக்கிள் வரிசையில் மேலதிகச் சில்லுடன் வரும் வாகனம் ஸ்கூட்டர் மட்டும்தான். வழியில் பஞ்சராகி விட்டால் ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் மேலதிகச் சில்லைப் பொருத்திக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இப்போது பல்வேறு கம்பனிகள் ஸ்கூட்டர் வகைகளைத் தயாரிக்கின்றன. அவற்றுக்கு ‘ஸ்கூட்டி’ என்று சுருக்கமாகச் செல்லப் பெயரைச் சூட்டி விட்டு மேலதிகச் சில்லை எடுத்து விட்டார்கள்.

மேலதிகச் சில்லு இல்லாத காரணத்தால் வழியில் பஞ்சராகி விட்டால் பயணம் செய்பவர் மூச்சுப் பிடித்துக் கொண்டு வாயில் நுரை தள்ள, ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு டயர் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கும். டயர் கடை எல்லாத் தெருக்களிலும் இருப்பதில்லை. இதனால் தள்ளிச் செல்வதிலேயே அவரும் பஞ்சரான டயரின் நிலைக்கு வந்து விடுவார்.

எனக்கும் இந்த அவல நிலை பல முறை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்கூட்டி கம்பனியில் ஒரு மேலதிகச் சில்லை நான் வாங்கிக் கொண்டேன். வாங்கிக் கொண்டேனே தவிர அதைப் பொருத்திக் கொள்வதற்கு ஸ்கூட்டியில் இடம் கிடையாது. அந்த மேலதிகச் சில்லு எப்போதும் தயாரான நிலையில் வீட்டில் இருக்கும். எந்த இடத்தில் ஸ்கூட்டி பஞ்சரானாலும் அதே இடத்தில் அதை நிறுத்தி விட்டு ஒன்றில் வீட்டிலிருந்து மேலதிகச் சில்லை அழைப்பித்து அல்லது நானே சென்று எடுத்து வந்து பொருத்திக் கொண்டு டயர் கடைக்குச் செல்வேன். ஸ்கூட்டியைத் தள்ளி மாய்வதை விட இது ஒரு வகையில் ஆறுதலான விடயம்.

எனக்குப் பழக்கப்பட்ட டயர் கடை இருவழிப் போக்குவரத்து நடைபெறும் பெருந்தெருவில் அமைந்திருக்கிறது. அதாவது நான் ஒரு பக்கத்தால் சென்று அடுத்த பக்கத்துக்குத் திரும்ப வேண்டும். பெருந்தெரு என்பதால் கண்ட கண்ட இடத்திலெல்லாம் வாகனத்தைத் திருப்ப முடியாது. பாதைக்கு நடுவில் உயரமான கொங்க்றீட் கற்களாலான தடுப்பு. அதன் மேலால் கம்பித் தடுப்பு. இந்தத் தடுப்பு ரயில்வே பாதை குறுக்கறுக்குமிடத்தில் முடிவடைகிறது. சட்டப்படி அந்த இடத்தில் வாகனத்தைத் திருப்ப முடியாது.

அடுத்த பாதைக்குத் திரும்ப வேண்டுமாயின் அதிலிருந்து 300 மீற்றர் அளவில் சென்று - திருப்புவதற்கென்று சட்டப்படி பிரிக்கப்பட்ட இடத்தால்தான் திரும்ப வேண்டும். ரயில்வே கடவைப் பிரிப்பினால் திரும்பினால் டயர்கடை நடைத் தூரம். ஆனால் நான் என்றைக்குமே அவ்விடத்தால் வாகனம் திருப்பியது கிடையாது. பொதுவாகவே ரயில் கடவை விபத்துக்கள் பற்றிய பயம் அதற்கு முக்கிய காரணம். ரயில் வரும்போது பாதை மூடப்படும் என்று அறிந்திருந்த போதும் கூட மூடப்படாத, எதிர்பாராத நிலையிலும் ரயில் வரக் கூடும் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். பாதை மூடும் தொழிலாளி அசட்டையாகவே, தவிர்க்க முடியாத காரணத்தாலோ பாதையை மூடாமலிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறான நிலைகளில் ஆங்காங்கே விபத்துக்கள் இடம் பெறுவதை நாம் அறிவோம்.

மற்றொரு காரணம் நகரப் போக்குவரத்துப் பொலீஸார். அவர்கள் எங்காவது ஓரிடத்தில் நின்று நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கக் கூடும். ரயில் கடவையால் வாகனத்தைத் திருப்பும் போது பிடித்தார்கள் என்றால் கருணையே காட்டமாட்டார்கள். தீட்டி விடுவார்கள். நீதி மன்றத்துக்குச் செல்லாமல் அபராதம் கட்டுவதற்கே அரை மணி நேரத்துக்கு மேல் கெஞ்ச வேண்டும். பிறகு அபராதச் சிட்டையை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் போக வேண்டும். அங்கு தண்டனைப் பணத்துக்குரிய சிட்டையைப் பெற்றுக் கொண்டு தபால் நிலையம் போய் பணத்தைச் செலுத்தி விட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும். பல்வேறு வேலைகளுக்குள்ளும் தொல்லைகளுக்குள்ளும் வாழுகையில் இந்த விடயங்களில் ஒரே நாளில் ஈடுபட முடிவதுமில்லை. ஒருவாறு நான்கைந்து தினங்களுக்குள் பணத்தைக் கட்டிவிட்டுச் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறப் பொலிஸ் நிலையம் சென்றால் சில வேளை உரிய ‘மஹத்தயா’ இருக்க மாட்டார்.

பொலிஸார் கருணை காட்ட மறுத்து நீதிமன்றுக்கே போக வேண்டி வந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று பலருக்கும் தெரியும். ஒரு பகல் பொழுது அதிலேயே போய்விடும். தண்டப் பணம் செலுத்தும் வரை கூட்டுக்குள் வேறு இருக்க வேண்டும். எனவே பணம் செலுத்துவதற்கு மற்றொருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். சட்டத்தரணிக்கான பணம், தண்டப்பணம், தேநீர்ச் செலவு, போக்குவரத்துச் செலவு எல்லாம் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு செகன்ஹான்ட் மோட்டார் சைக்கிள் வாங்கும் தொகையை எட்டும்.

எவ்வளவுதான் சட்டக் கட்டுப்பாட்டை மதித்து வண்டிகளைச் செலுத்தினாலும் கூட சில வேளைகளில் நம்மையறியாமல் மீறல்கள் நடைபெற்று விடுவதுண்டு. வண்டிகளைச் செலுத்துவோரைக் கேட்டால் பலநூறு சம்பவங்களைச் சொல்வார்கள். அவற்றில் பல வெகு சுவாரஸ்யமானவையாகக் கூட இருக்கும்.

ஒரு முறை நானும் அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீரும் ஊரிலிருந்து புறப்பட்டுக் கொழும்பு நோக்கிக் காரில் வந்து கொண்டிருந்தோம். இருவரும் சேர்ந்தால் ஒலிபரப்புத் துறை பற்றிய சுவையான சம்பவங்களை ஞாபகப்படுத்தி மனம் விட்டுக் கதைத்துச் சிரித்து மகிழ்வோம். அது பயணமாக வாய்த்து விட்டால் பழம் நழுவிப் பாலில் விழ அது நழுவி வாயில் விழுந்த கதையாக இருக்கும்.

தம்புள்ளையைத் தாண்டி வரும் வழியில் ஓரிடத்தில் போக்குவரத்துப் பொலிசார் காரை நிறுத்தச் சொன்னார்கள். அவர்கள் தெருவோரத்தில் யாருமற்ற ஒரு கொட்டிலடியில் நின்றிருந்தார்கள். காரிலிருந்து இறங்கியதும் பயங்கரமான ஒரு சாராய நெடியினால் நான் தாக்குண்டேன். அந்தப் பிரதேசத்திலேயே ஒரு சாராய ஆறு ஓடுவது போல் ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தப் பாதையில் 70 கி.மீ வேகத்தில் வாகனம் செலுத்த முடியும். நான் ஏறக்குறைய 60 - 65 கி.மீ வேகத்தில் வந்திருந்தேன் என்பது எனக்கு நிச்சயம். இறங்கியவுடன் “நான் குறித்த வேகத்தை விட அதிகமாக வரவில்லையே” என்றேன். ஆனால் பிரச்சினை அதுவல்ல.

அங்கு இரண்டு பொலிஸ்காரர்கள் நின்றிருந்தனர். இருவரும் மலர்ந்து போயிருந்தார்கள். போதை உச்சத்தை நெருங்கும் நிலையை எனது நண்பர் ஒருவர் ‘கிளிப் பருவம்’ என்று வர்ணிப்பது வழக்கம். இதோ பழுத்துவிட்டது என்ற பருவத்தில் கிளிகள் பழங்களைச் சாப்பிட வருமாம். போதையில் மனிதர்கள் அந்நிலைக்கு வருவதைப் பழங்களைக் கொண்டு நண்பர் கிண்டலாக அப்படிச் சொல்வார். அந்த நிலையில்தான் அவர்கள் இருவரும் நின்றிருந்தார்கள்.

அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஏறக்குறைய 500 மீற்றர்களுக்கு முன்னால் நான் ஒரு லாரியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஓவர்டேக் செய்யக் கூடாது என்று தெருவில் ஒற்றை நெடுங்கோடு இடப்பட்ட இடம் அது. இதுதான் பிரச்சினை. இதுதான் குற்றம்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அடையாள அட்டைகளைக் காட்டினோம். ஜபீர் 5.45க்குக் கடமைக்குத் திரும்ப வேண்டும் என்று சொன்னோம். காருக்குள் இருந்த மைக்ரபோன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் காட்டினோம். தண்டப் பணம் செலுத்த மிகத் தூரம் சென்று திரும்ப வேண்டியிருந்ததைச் சொன்னோம். சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேறு ஒரு தினத்துக்குக் கொழும்பில் இருந்து வரும் சிரமத்தைப் புரிய வைக்க முயன்றோம். அரை மணி நேரத்துக்கும் மேலாக நான் மிகப் பணிவுடன் வாதாடினேன்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களில் ஒருவருக்குக் கருணை பிறந்திருக்க வேண்டும். அமைதியாகி விட்டார். மற்றைய நபரோ கீறல் விழுந்த இசைத் தட்டுப் போல் இரண்டொரு வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது. பணத்தைக் கொடுத்து விட்டாவது சென்று விடுவோம் என்று தீர்மானித்து பேர்ஸை உருவினேன். அதற்குள் 2000.00 தாள்கள் இருந்தன. ஜபீரிடம் 1000 ரூபாய் இருக்கிறதா? என்று கேட்டேன். அவர் தன்னிடம் இல்லை என்று சொன்னதுடன் ஐந்து சதம் கூடக் கொடுக்க வேண்டாம் என்று எனக்குக் கடுமையாகச் சொன்னார்.

என்னிடம் 2000 ரூபாய்த் தாளே இருப்பதையும் ஜபீர் 1000 ரூபாய் இல்லை என்று சொன்னதும் பொலிஸ்காரருக்குப் புரிந்திருக்க வேண்டும். “இதற்கு மேல் நான் உன்னுடன் பேச விரும்பவில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் உன்னிடம் இருக்கும் என்று நினைத்தேன். அது கூட இல்லாதவனாக இருக்கிறாய்... நான் எவ்வளவு நேரமாக உன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்...” என்று அமைதியாகச் சொன்னேன். சரியாக நாற்பத்தைந்தாவது நிமிடம் போக அனுமதித்தார். காருக்குள் ஏறி அமர்ந்து கொஞ்சத் தூரம் கடக்கும் வரை சாராய நெடி கூடவே வந்தது.

இங்கே நான் எழுப்பும் பிரச்சினை வேறு. நமது பெருந்தெருக்கள் யாவும் சிறந்த முறையில் செப்பனிடப்பட்டுள்ளன. மிக வேகமாகவும் சௌகரியமாகவும் பயணம் செய்வதற்கு ஏற்ற முறையில் அவை திருத்தியமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பாராட்டவும் தக்கது. ஆனால் பெரும்பாலும் நமது பெருந்தெருக்களில் ஒரு பக்கப் பயணத்தில் ஒரு வாகனம் மட்டுமே பயணிக்கும் முறைதான் உள்ளது. அதற்குக் காரணம் பாதைகள் மிக ஒடுக்கமானவை. எனவே ஒரு பெரிய வாகனம் - அது பஸ்ஸாகவோ, லாரியாகவோ, கண்டெய்னராகவோ இருக்கலாம் - பயணம் செய்யும் போது மற்றைய வாகனம் அதன் பின்னாலேயே செல்ல வேண்டிய அவலம்தான் தொடர்கிறது.

முன்னால் செல்லும் பாரிய வாகனம் மிகக் குறைந்த வேகத்திலேயே பயணம் செய்கிறது. அதிகூடிய பாரத்தைச் சுமந்து கொண்டு முக்கி, முனங்கி ஊர்ந்து செல்கிறது. இப்படியான வாகனத்துக்குப் பின்னால் வேகமாகச் செல்ல வேண்டி பல நூறு வாகனங்களும் ஊர்ந்தே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சில வேளைகளில் ஒற்றை லாரியின் பின்னால் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக ஊர்ந்து செல்லும் நிலை ஒரு சிறிய வாகனத்துக்கு ஏற்பட்டு விடுகிறது.


நமது நாட்டின் நில அமைப்பில் ஏற்ற இறக்கங்கள் மிக அதிகம். எனவே அநேக இடங்களில் ஒரு வாகனத்தை முந்துவது ஆபத்தானது. ஆபத்தான அந்த இடங்களில் ஒற்றை நெடுங்கோடுகளும் மிக ஆபத்து என்று கருதப்படும் இடங்களில் இரட்டை நெடுங்கோடுகளும் இடப்பட்டிருக்கின்றன. பொதுவாக தமது பயணங்களை விரைவாக முடித்துக் கொள்வதற்கே யாரும் விரும்புவார்கள். இந்த நிலையில் ஓர் அவசரப் பயணியின் நிலை என்ன.

முன்னால் வாகனங்கள் இல்லை என்று தெரிந்து கொண்டு ஊர்ந்து செல்லும் லாரியை ஒற்றை நெடுங்கோட்டில் முந்திச் செல்வதைப் பிழை என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும். பயணிப்போருக்கான வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெறுமனே சட்டங்களால் மக்களைத் தண்டிப்பதாக அல்லவா இது படுகிறது? பாதைகள் விசாலமாக அமைக்கப்பட்டால் இந்தக் கோட்டுப் பிரச்சினைக்கே இடம் இருக்காது. இதைப் பிடிப்பதற்காக தெருத் தெருவாகப் பொலிஸார் நின்று கொண்டிருக்கும் அவசியமும் இல்லை.

இனி டயர் கடைக்கு வருவோம்.

மிக அண்மையில் எனது ஸ்கூட்டி டயருக்குப் பஞ்சர் ஒட்டுவதற்காக டயர் கடைக்கு வந்த போது டயர்க் கடைக்குப் பக்கத்தில் உள்ள வெற்றுக் கட்டடத்துக்குள் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். சக்கரத்தைப் பஞ்சர் ஒட்டுவதற்காகக் கடைப் பையனிடம் ஒப்படைத்து விட்டுப் பொலிஸ்காரர் நிற்பதை கடை நண்பரிடம் விசாரித்தேன்.

“புடிக்கிறானுங்க...” என்றார்.

“இந்த இடத்தில்....” என்று இழுத்தேன்.

“அதான்... ரயில்வேக் கடவைக்குள்ளால திருப்புறவங்களைப் புடிச்சி எழுதுறானுங்க...” என்றார்.

பஞ்சர் ஒட்டி விட்டு சக்கரத்தை எடுத்துக் கொண்டு வெளிக்கிடும் போது நண்பர் கேட்டார்:-

“இது சரியான வேலையென்று நினைக்கிறீங்களா...?”

“எது...”

“இப்பிடி ஒளிச்சி நின்று புடிக்கிறது...?”

எனக்கு எதுவோ புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

07.10.2011
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

பி.அமல்ராஜ் said...

ஹா ஹா... எனக்கு கொஞ்சம் புரிஞ்சு கொண்டது.. அது புரிஞ்சு கொள்ள டயர் கடைய விட்டு கொஞ்சம் வெளிய வரணும்.. அப்பிடித்தானே அண்ணா...

shenbagam said...

அன்றாடம் இலங்கையிலுள்ள சாலைகளில் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள சாலைகளில் நடக்கும் நிகழ்வுகளையும் போக்குவரத்துப் பொலீஸார் வாகன சாரதிகளிடத்திலும், வாகன உரிமையாளர்களிடத்திலும் சட்டத்தின் பெயரினை முன்னிறுத்தி நடந்து கொள்ளும் அநாகரீகமான நடத்தைகளையும் அட்டூழியங்களையும், போக்குவரத்து (சாலை) விதிகளிலுள்ள ஓட்டைகளையும், சாலைகள் ஆண்டாண்டு காலமாக விரிவாக்கம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் அவலங்களையும் மிக தத்ரூபமாக விளக்கியது நீதியும் நெட்டாங்குகளும் கட்டுரை. கட்டுரையைத் துவக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் கொண்டு சென்றிருக்கும் எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்கட்கு எனது பாராட்டுக்கள். மேலும் டயர் என்பதற்கு ”சில்லு” என்ற தமிழ்ச் சொல்லை அறியத்தந்தமைக்கும் பல இடங்களில் அச்சொல்லைப் பாவித்ததற்கும் விசேஷப் பாராட்டுக்கள் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே.....!
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார். (இலங்கை வானொலி நேயர்)