Tuesday, April 17, 2012

உள்ளந் திறந்து...

அன்பிற்கினிய வாசகர்களுக்கும்


இலக்கிய நெஞ்சங்களுக்கும்.....
எல்லாமே மாறும் என்பது மட்டுமே மாறாத விதி என்பதற்கொப்ப 'யாத்ரா"வும் மாற்றம் பெற்றிருக்கிறது. 21வது இதழிலிருந்தே மாற்றம் இடம் பெறும் என்று நாம் அறிவித்த போதும் இந்த 20ம் இதழிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டோம். மாற்றம் குறித்து ஒட்டியும் வெட்டியும் பலர் கருத்துத் தெரிவித்த போதும் மாற்றம்தான் விசாலமாக இயங்க வழிசெய்யும் என்று நினைத்தோம்.

கவிதைக்கென இப்போது பல இதழ்கள் வர ஆரம்பித்து விட்டன. எதிர்காலத்தில் இன்னும் பல இதழ்கள் வருவதற்கான சூழலும் சாத்தியமும் இருக்கின்றன. 'யாத்ரா" மாற்றமடைந்தாலும் கூடக் கவிதைக்கான முன்னுரி மையை அது எப்போதும் வழங்கி வரும்.

'யாத்ரா'வின் வருகை தடைப்பட்ட பிறகுதான் அதன் இடைவெளி பெரியது என்பது பலராலும் எமக்கு உணர்த்தப் பட்டது. ‘யாத்ரா’ 15வது இதழுக்குப் பிறகு அதன் வருகைக்காக நண்பர்கள் பலர் அவ்வப்போது பொருளாதார ரீதியாக உதவி வந்துள்ளனர். கவிஞர்களான டாக்டர் தாஸிம் அகமது, பொறியியலாளர் நியாஸ் ஏ சமத், பொத்துவில் பைஸால் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

‘யாத்ரா’வைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து அவ்வப்போது கூடிப் பேசுவதும் வெளியே சொல்ல முடியாத சில காரணங்களால் முயற்சி தடைப்படுவதுமாகவே காலம் கழிந்தது. இவ்வாறான ஒரு சூழலில் பொருளாதார ரீதியாக ‘யாத்ரா’வுக்கு உதவுவதற்காக ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க சகோதரர் நாச்சியாதீவு பர்வீன் முன்வந்தார். ‘யாத்ரா’ வெளிவரத் தொடங்கிய காலம் முதல் ஓர் ஆத்மார்த்த தொடர்பை அவர் ‘யாத்ரா’வுடன் பேணிவந்துள்ளார். எனவே அவரது முயற்சிக்கு நான் வழிவிட்டதோடு மாத்திரமன்றி சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இயங்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். பல இளைய இலக்கிய இதயங்களை ஒன்றிணைத்துக் கொண்டு சஞ்சிகையை முன் கொண்டு செல்வதற்கான அவரது முயற்சி முதலாவது மைல் கல்லைத் தொட்டது. அதன் விளைவாகவே ‘யாத்ரா’ 20வது இதழ் உங்கள் கைகளை அடைந்திருக்கிறது.

‘யாத்ரா’வை மீண்டும் கொண்டு வருவதில் சில நல்லுள்ளங் கொண்டவர்கள் தங்கள் சக்திக்கு மீறிய பண உதவியைச் செய்துள்ளனர். அவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் வசிக்கும் இந்த நல்லுள்ளங்களின் உதவி கொண்டுதான் இந்த ஆண்டில் வெளிவரப்போகும் இதழ்கள் வெளிவரவுள்ளன.

‘யாத்ரா’ 17வது இதழ் வெளிவந்த பிறகு சஞ்சிகை ஆரம்பித்தது முதல் கடைசி வரை பெறப்பட்ட அனுபவங்களை அவ்வப்போது எழுதி வருமாறு ‘யாத்ரா’வின் இணையாசிரியர்களுள் ஒருவராக இருந்த கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா என்னை வலியுறுத்தி வந்துள்ளார். அதன் மூலம் ‘யாத்ரா’ பற்றிய தகவல்களை ஒருவர் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பது மட்டு மன்றி ‘யாத்ரா’வின் பின்னணியில் எவற்றைச் சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி எழுதிக் கொண்டு வரும் போது சஞ்சிகையின் வாழ்வும் சாதனையும் பதியப் பட்டு விடும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அத்துடன் அதுவரை தமிழ்க் கவிதை இதழ் என்ற வகையில் ஒரு சஞ்சிகை அளவில் எச்சஞ்சிகையும் 17 இதழ்களைத் தொட்டிருக்கவும் இல்லை என்பதும் அவதானிக்கத் தக்கது. ஒரு கூட்டத்தைக் கூட்டி நான்கைந்து பொன்னாடைகளைப் போர்த்திப் படம் எடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்குப் போதுமான காரணிகள் நிறைய இருந்தன. இனிப்பானதும் கசப்பானதுமான பல அனுபவங்கள் இருந்த போதும் குறிப்பிட்ட சில இதழ்கள் வெளியிடப் பட்ட நிலையில் பெரிதாகச் சாதித்து விட்டதாகப் பேசச் சங்கோஜமாக இருந்தது.

கவிஞர் ஸதக்கா இன்று எம்முடன் இல்லை!

இந்தச் சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு புத்தாயிரத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழ் என்ற பெருமையுடன் ஆரம்பிக்கப் பெரிதும் உந்துதலாக இருந்தவர் கவிஞர் எஸ்.நளீம். இதழை வெளிக்கொணர்வதா இல்லையா என்ற மனப் போராட்டத்தில் நான் இருந்த போது ‘வெளியிடவே வேண்டும்’ என்று உரிமையோடு உற்சாகம் தந்தவர் அவர்தான்.

சகோதரர் ஏ.பி.எம். இத்ரீஸ் அவர்களின் உதவியால் வெளியிடப் பட்ட கவிஞர் ஏ.ஜி.எம்.ஸதக்காவின் ‘போர்க்காலப் பாடல்கள்’ தொகுதி ‘யாத்ரா’ வெளியீடு என்ற பெயரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதே பெயரைச் சஞ்சிகைக்குச் சூட்ட வேண்டும் என்று கவிஞர் ஸதக்கா பெரிதும் விரும்பினார். அவர் விருப்பப்படியே பெயர் சூட்டப்பட்டு முதலாவது இதழ் வெளிவந்தது. பின்னர் ‘யாத்ரா’வைப் பதிவு செய்து கொண்டோம்.

'யாத்ரா"வின் பின்னணியில்; இயங்கிய கவிதைத் துறை சார்ந்த அனைவரும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தோம். கொழும்பிலிருந்து சஞ்சிகை வெளிவந்த போதும் அதன் அடிவேர் அங்கேதான் இருந்தது.

‘யாத்ரா’ இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் குறித்த பிரக்ஞையை ஒரு நூல் இழையாகப் பற்றிக் கொண்டே முதலாவது இதழ் தொடக்கம் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அந்த முயற்சியானது 2002ல் அரச அனுசர ணையுடன் ஓர் உலகளாவிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தனது உச்சத்தை எட்டியது. இதுதான் ‘யாத்ரா’வின் எண்ணக் கருவின் பிரதான அடைவு ஆகும். தேசிய ரீதியாக நடத்தப்படுவ தற்குத் திட்டமிடப்பட்ட இந்த மாநாட்டை அரச விழாவாக ஏற்று நடத்தத் துணை புரிந்த கௌரவ. ரவ+ப் ஹக்கீம் அவர்களை இந்த இடத்தில் குறிப்பிட் டேயாக வேண்டும். கவிஞர் ஏ.ஜி.எம்.ஸதக்காவும் இந்த விபரங்களைப் பதிவதற்கே எனது அனுபவங்களை எழுதக் கோரியிருக்கலாம் என்று நம்புகிறேன்.


கவிதை இதழ் என்ற நிலையிலிருந்து கலை, இலக்கிய இதழாக ‘யாத்ரா’வைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களைச் செய்த போது ஸதக்கா சிறுவர் உளவியல் பற்றிய கட்டுரை ஒன்றைத் தந்திருந்தார். அந்தக் கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. ஸதக்காவின் ஆளுமை குறித்த எழுத்துக்களை யாரும் இன்னும் எழுதவில்லை. வரவுள்ள இதழ்கள் ஒன்றில் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

‘யாத்ரா’வில் வந்த கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட வேண்டும் என்று நண்பர் அருள் சத்தியநாதன் ஒரு முறை தினகரனில் எழுதியிருந்தார். அத்துடன் என்னைத் தூண்டிக் கொண்டுமிருந்தார். சமகாலத்தில் வெளிவந்த நல்ல கவிதைகளின் தொகுப்பாக அது இருக்கும் என்று பல அன்பர்கள் கருத்துத்தெரிவித்துமிருந்தனர். இணை ஆசிரியர்களான வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம்.ஸதக்கா ஆகியோர் இந்நூலுக்கென எல்லா இதழ்களிலுமிருந்தும் தெரிவு செய்த கவிதைகளின் பட்டியலை எனக்குத் தந்திருந்தார்கள். இன்றைய நிலையில் அத்தொகுதியை வெளியிடுவதானால் ஒரு லட்சம் ரூபாய்களாவது தேவைப்படும். அந்தத் தொகை இருக்குமாயின் குறைந்தது ஐந்து ‘யாத்ரா’ இதழ்களையாவது கொண்டுவந்துவிடலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. இருந்தும் என்றைக்காவது ஒரு நாள் அது சாத்தியப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

இது தவிர, அறபுக் கவிதைகள் பற்றி மூன்று பெரும் கட்டுரைகள் (இவ்விதழில் உள்ளதுடன் சேர்த்து) ‘யாத்ரா’வில் வெளிவந்துள்ளன. அம்மூன்று கட்டுரைகளையும் ஒரு நூலாக வெளியிடுவது பற்றி மரியா தைக்குரிய பண்ணாமத்துக் கவிராயர் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நூலுக்கும் அதே வார்த்தைகளைத்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடிகிறது.

‘யாத்ரா’வின் பயணப்பாதையில் குறிப்பிட்டேயாக வேண்டிய சிலர் உள்ளனர். அவர்களுள் மாத்தளை பீர் முகம்மது, பண்ணாமத்துக் கவிராயர், இப்னு அஸ_மத் ஆகியோரை மறக்க முடியாது. ‘யாத்ரா’ சர்வதேச ரீதியாக ஒரு கவிதைப் போட்டியை நடத்திய போது அதற்குரிய பரிசுகளாக, தங்க, வெள்ளி, வெண்கல ரோஜாக்களை அறிவித்திருந்தோம். இவற்றைத் தனது சொந்தச் செலவில் இந்தியாவிலிருந்து வடிவமைத்துச் சுமந்து வந்தவர் பீர்முகம்மத்;. அத்துடன் ‘யாத்ரா’ முதலாவது ஆண்டு மலருக்குப் பிரம்மாண்ட அறிமுக விழாவொன்றையும் அவர் மாத்தளையில் நடத்தினார்.

‘யாத்ரா’ தனது பதினான்காவது இதழை ஃபைஸ் அகமத் ஃபைஸ் சிறப்பிதழாகவும் பதினாறாவது இதழை நஸ்ருல் இஸ்லாம் சிறப்பிதழாகவும் வெளியிட்டது. அக்கவிப் பெருந்தகைகள் பற்றிய கட்டுரைகளையும் அவர்களது கவிதைகளையும் மொழிமாற்றம் செய்து தந்தவர் பண்ணாமத்துக் கவிராயர் அவர்கள். அதேபோல அநேகமான எல்லா ‘யாத்ரா’ இதழ்களிலும் குறைந்தது ஒரு சிங்கள மொழிக் கவிதையைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அக்கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்தவர் இப்னு அஸ_மத் அவர்கள்.

அவ்வப்போது சஞ்சிகையை வெளியிட ஆயத்தங்கள் செய்வதும் ஆக்கங்களைச் சேகரிப்பதும் பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் பின்போடப்படுவதுமாக இருந்ததில் ஆக்கங்களைத் தந்த பலர் அவற்றை மீளப் பெற்றுக் கொண்டார்கள். இந்த இதழுக்கும் ஆக்கங்களைக் கோரியிருந்தோம். அநேகர் இந்த இதழ் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.

ஒரு சிறு சஞ்சிகையை நடத்துவதென்பது எழுத்துக் கோவை செய்து அச்சகத்தில் ஒப்படைத்துப் பெறுவதோடு முடிந்து விடும் விடயமல்ல. வடிவமைப்பது, அச்சான பின் மடிப்பது, முகவரி எழுதுவது, ஸ்டாம்ப் ஒட்டுவது, தபாலிடுவது என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும் பணியாகும். லாபந் தரவில்லையென்றாலும் பரவாயில்லை, பிரதிகளுக்குரிய பணமாவது வந்து சேருமாக இருந்தால் நமக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும்.

இந்தச் சஞ்சிகை தொடர்ந்து வரவேண்டும் என்று பலர் ஆவல் கொண்டுள்ளனர். முதலில் தாங்கள் சந்தாதாரராகச் சேர்வதன் மூலமும் தங்கள் நண்பர்கள் மற்றும் பிரதேச இலக்கிய ஆர்வமுள்ளவர்களைச் சந்தாதாரராக்கித் தருவதன் மூலமும் சஞ்சிகையின் தொடர் வருகைக்கு உறுதுணை புரிய முடியும். அத்துடன் சற்றுக் கரிசனையெடுத்துப் பிரதேச வர்த்தக நிறுவனங்களிடம் விளம்பரங்களைப் பெற்றுத் தருவதன் மூலமும் உதவி புரியலாம்.

பிராந்திய ரீதியாக ‘யாத்ரா’ வாசகர் வட்டங்களை ஏற்படுத்துவது பற்றியும் அதன் மூலம் ‘யாத்ரா’வை வளர்த்தெடுப்பது மட்டுமன்றித் தலைவர், செயலாளர் என்ற பிரச்சினை களைந்து வேறு சில இலக்கியச் செயற்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றியும் ஆலோசனை செய்து வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்துமாறு கோருகிறோம்.

‘யாத்ரா’ இதழுக்கான படைப்புக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவது விரும்பத் தக்கது. தாளில் எழுதி அனுப்பி, அதைத் தட்டச்சுச் செய்வது இன்றைய கால நெருக்கடியில் சிரமமாக இருக்கும் என்பதைப் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறோம்.

‘யாத்ரா’வின் வளர்ச்சிப் படிகளில் உதவிய யாருடையவாவது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அப்படி நிகழ்ந்திருந்தால் அது திட்ட மிட்டுச் செய்யப்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஞாபகப்படுத்தப் பட்டால் அல்லது ஞாபகம் வருகின்ற போது அவர்கள் பற்றிய குறிப்புக்களைத் தருவதில் நாம் பின்னிற்கமாட்டோம் என்பதை உளச் சுத்தியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இதழ் 'யாத்ரா"வின் இன்னொரு புத்துயிர்ப்பு. இதுவரை பலருக்கு நாம் இதழ்களை இலவசமாகவே அனுப்பி வந்துள்ளோம். இந்த இதழும் அவர்களுக்கு இலவசம்தான். அவர்கள் அடுத்த இதழை இலவசமாக எதிர்பார்க்கக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

(யாத்ரா - 20 இதழ்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

யாத்ராவின் பயணம் இனித் தங்குதடையின்றி இனிது தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! :)

M.K.M.Shakeeb said...

யாத்ராவின் மீள்வருகை உவகையளிக்கிறது..ஓர் அவசர மருத்துவ விடுமுறையில் வந்துள்ள என்னால் வெளியீட்டு நிகழ்விலும்..உங்கள் திருமலைப் பிரதேச வருகை நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாமற் போனது கவலையளிக்கிறது. மேலும் சதக்கா பற்றிய நினைவுகள் அவாின் போர்க்காலப் பாடல்கள் அட்டைவடிவமைப்பு மற்றும் யாத்ரா இலட்சினை வடிவமைப்பு என்று இன்னும் பல நண்பர்களையும் ஞாபகப்படுத்திக்கொண்டு சுழல்கிறது. மீண்டும் ஓர் இயங்குதளத்தில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கைகளுடனும் வாழ்த்துக்களுடனும்..